வெங்கட் பிரபுவின் 'மன்மத லீலை' - திரை விமர்சனம்: திருமணத்தை மீறிய உறவினால் மாட்டிக்கொண்டால்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள மன்மத லீலை பட விமர்சனம்
வெங்கட் பிரபுவின் 'மன்மத லீலை' - திரை விமர்சனம்: திருமணத்தை மீறிய உறவினால் மாட்டிக்கொண்டால்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மன்மத லீலை'. ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. 

திருமணத்தை மீறிய உறவினால் ஏற்படும் சிக்கல்களை திரில்லர் பாணியில் பேசியிருக்கிறது மன்மத லீலை. 2010 மற்றும் 2020 என இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை. 

'மாநாடு' படத்தில் டைம் லூப் போல இந்தப் படத்தில் இரண்டு காலங்களில் நடக்கும் சம்பவங்களை நான் லீனியர் முறையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. இதன் காரணமாக நம் கவனம் முழுவதும் படத்திலேயே இருக்கிறது. 

மிக எளிமையான கதை. அதனை முடிந்தவரை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். இரண்டு வெவ்வேறு காலங்களில் நடக்கும் சம்பவங்களுக்கும் இடையேயான தொடர்பு என விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். முதல் பாதி மெதுவாகவே நகர்கின்றன.

அதற்கேற்றார்போல இரண்டாம் பாதி திடீர் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக செல்கின்றன. ஒரு சில திருப்பங்கள் முன்பே யூகிக்கக் கூடியதாக இருந்தாலும் பெரிய குறையாக தெரியவில்லை. 

திருமணத்தை மீறிய உறவு என விவாதிக்கக் கூடிய கதை என்றாலும் அதனை கமர்ஷியல் முறையில் பொழுதுபோக்கு படமாக மட்டுமே அனுகியிருக்கிறார் இயக்குநர்.

சத்யா என்ற வேடத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன், பத்து ஆண்டுகளுக்கு பின் என தோற்றத்தில் மட்டும் மாறுபாடு காட்டாமல் நடிப்பிலும் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார் அசோக் செல்வன். சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமனுக்கு கவர்ச்சிகரமான வேடம். இதில் ஒப்பீட்டளவில் சம்யுக்தா நன்றாக நடித்திருக்கிறார். ஸ்மிருதி வெங்கட்டுக்கு சிறிய வேடம். நடிகர் ஜெயபிரகாஷ் முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார். 

ஒரு அடல்ட் காமெடி படத்துக்கு பிரேம்ஜியின் இசை கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இறுதிக் காட்சியில் பிரம்ஜியின் படத்தின் விறுவிறுப்புக்கு உதவியது. மேலும் பெரும்பாலும் இரண்டு வீடுகளில் மட்டுமே நடக்கும் கதையை வித்தியாசமான கோணங்கள் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ அழகன். 

இளைஞர்கள் ரசிக்கக்கூடிய வகையில் இந்தப் படம் இருக்கிறது. ஒரு சிறிய கதையை முடிந்தவரை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com