பீஸ்ட்: விஜய் படம்தான், கொஞ்சம் முன்னே பின்னே ஆகிவிட்டது

நடிகர் விஜய்க்கு சின்னக் குழந்தை ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது வாஸ்தவம்தான். அதற்காக, அவருடைய ரசிகர்கள் எல்லாருமே சின்னக் குழந்தைகள் என்று நினைத்துக்கொண்டால் என்ன சார் நியாயம்?
பீஸ்ட்: விஜய் படம்தான், கொஞ்சம் முன்னே பின்னே ஆகிவிட்டது

தெறி படத்தோட குளோசிங்ல இருந்து இந்தப் படம் ஓபன் ஆகிற மாதிரி ஒரு ஃபீலிங். அந்தக் குழந்தை கான்செப்ட் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. படம் நெடுகிலும் வருகிற இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் மனதில் தைக்கிற மாதிரி செய்திருக்கலாம்.

எடுத்தவுடனே, அதெல்லாம், நான் யார் சொல்வதைக் கேட்க மாட்டேன் என்று கட்டளைக்குப் பணிவதற்கு மறுத்து ரா அலுவலர் தாக்குதல் நடத்துவதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்றாலும் அந்த சண்டை விஜய் ஸ்பெஷல்.

நடிகர் விஜய்க்கு சின்னக் குழந்தை ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது வாஸ்தவம்தான். அதற்காக, அவருடைய ரசிகர்கள் எல்லாருமே சின்னக் குழந்தைகள் என்று நினைத்துக்கொண்டால் என்ன சார் நியாயம்?

அந்தக் கடைசி 10, 15 நிமிஷ விடியோ கேம் அபாரம்தான் போங்கள். ஆமாம், அது எதற்காக? விஜய் பற்றித் தெரியவில்லை என்று செய்தியில் கூறிக்கொண்டு, ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் காட்டும்போதே பார்ட் - 2 வேறு இருக்கும் போல என்றார் பக்கத்து இருக்கைக்காரர்.

திருமண வீட்டில் விஜய்யும் டாக்டரும் பூஜா ஹெக்டேவைப் பார்ப்பதைத் தொடரும் காட்சிகள் எல்லாம் ஏதோ படம் ஜாலியாகப் போகப் போகிறதுபோல என்று நம்பிக்கை தருகின்றன. ஆனால், பிறகு?

இரண்டு பாடல்களும் நடனங்களும் பூஜா ஹெக்டேவும் (இன்னா ஃபாஸ்ட்?) தான் ஆறுதல். ஆனால், அவற்றிலும் ஒரு பாட்டை நாம் தியேட்டரைவிட்டு வெளியேறுவதற்காக எழுந்த பிறகு போடுகிறார்கள்.

அந்த பூஜாவா இந்த பூஜா என்று பத்து வருஷங்களுக்கு முன்னர் வந்த முகமூடியைத் தேடிப் பார்க்கவைக்கும் ஆச்சரியம் பூஜா ஹெக்டே. அநியாயத்துக்கு வீணாக்கிவிட்டார்கள். பூஜாவையும் ஐபிஎஸ் பயிற்சிக்காகக் காத்திருக்கும் அமைச்சர் மகளையும் வைத்து இன்னும் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்காக ஏதாவது செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

தொடக்கத்தில் கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும் போகப்போகப் படத்தில் முக்கியமான புள்ளியாக மாறிவிடுகிறார் செல்வராகவன். பேசாமல் இனி இவர் நடிக்கிற வேலையை முழுதாகப் பார்த்தால் சிறப்பு. நிறைய தயாரிப்பாளர்களும் ரசிகர்களும் தப்பிப் பிழைப்பார்கள். அந்தா, அந்தப் படத்தை எடுத்தவருதான் இவரு என்றபோது அருகேயிருந்தவருக்குக் கோபம் வந்துவிட்டது.

சில காட்சிகள் மட்டுமே வருகிற அந்த டாக்டர், படம் நெடுகிலும் வரும் பூஜா ஹெக்டேவுக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளை, விடிவி கணேஷ் குழுவினர் எல்லாரும் சிறப்பு.

தீவிரவாதிகளை முஸ்லிம்களாகக் காட்டியதற்காக பேலன்ஸ் செய்ய வேண்டும் எனப் படத்தில் நிறைய நல்ல காட்சிகள் வைத்திருக்கிறார்கள். ஆனால் என்ன, அவற்றையெல்லாம் யாராவது ஒருவர் எடுத்துச் சொல்ல வேண்டியிருப்பதுதான் சோகம்.

டார்க் காமெடியெல்லாம்கூட ஓகே. மால் ஹைஜாக் காட்சிகள் கோர்வையாக செட்டாகாமல் துண்டுதுண்டாக நின்றுகொண்டிருக்க அவையும் விழலுக்கு இறைத்த நீராகிவிடுகின்றன.

தொடக்கத்தில், நாலாவது நாள் பார்க்கப் போகிறோமே, அதுவும் இப்படி ஆளாளுக்கு எழுதிக் கொண்டிருக்கும்போது, என்னவாகுமோ என்று தோன்றியது. ஆனால், அப்படியெல்லாம் இல்லை. விஜய் படம் அப்படித்தான் இருக்கும். எங்கேயோ கொஞ்சம் எதுவோ பத்தல, அல்லது அதிகம், அவ்வளவுதான். சொல்லப் போனால் 'வாத்தியாரை'விட எவ்வளவோ தேவலாம் என்றுகூட சொல்லலாம். (போனாப் போவுது, இனிமேல படங்களுக்குத்  தமிழ்லேயே பேர் வையுங்கப்பா - பீஸ்ட்டுன்னா என்ன, மிருகம், படத்துல எங்க மிருகம், விஜய்தான் அது, ஏன் அப்படி?... சாமி, தாங்க முடியல).

100 கோடி சூப்பர் ஸ்டார்களுக்குப் படமெடுக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் நெல்சன்! அடுத்த படம், ரஜினியுடன் என்கிறார்கள், ரொம்பவே கவனம்.

அப்புறம் படத்துக்கு சம்பந்தம் இல்லாத - இல்லை, இல்லை, இந்தப் படத்துக்கு சம்பந்தம் இருக்கிறது - ஒரு விஷயம், தேச பக்தியை ஊட்டுவதற்குத் திரையரங்குகளில் தேசிய கீதத்தை ஒளிபரப்பி எல்லாரும் எழுந்து நின்றால்தான் ஆச்சா? கொஞ்சம் மாத்தி யோசிங்கப்பா, அவ்வளவு பேரும் எழுந்து அமைதியாக நின்றுகொண்டிருப்பதும் இடையில் சில குழந்தைகள் அழுவதும் (நல்லவேளை, நம்ம விஜய்க்குக் கேட்காது!) பாவமா இருக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com