நகைச்சுவை என்ன விலை?: ‘பிரின்ஸ்’ திரைப்பட விமர்சனம்

தீபாவளிப் பண்டிகையையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘பிரின்ஸ்’.
நகைச்சுவை என்ன விலை?: ‘பிரின்ஸ்’ திரைப்பட விமர்சனம்
Published on
Updated on
2 min read

தீபாவளிப் பண்டிகையையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘பிரின்ஸ்’.

பாண்டிச்சேரி பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் கதாநாயகன் அன்பு(சிவகார்த்திகேயன்). அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இணைகிறார் ஜெசிக்கா எனும் கதாநாயகி. இருவேறு தேச பின்னணி கொண்டு இவர்களின் காதலை அவர்களது பெற்றோர்கள் எப்படி ஏற்றுக்கொள்கின்றனர் என்பதே பிரின்ஸ் திரைப்படத்தின் கதை. 

தெலுங்கில் ஜதி ரத்னாலு என்ற நகைச்சுவை வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் அனுதீப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா நடித்துள்ளார். இவர்களைத் தவிர சிவகார்த்திகேயனின் தந்தையாக நடிகர் சத்யராஜ், காவல்துறை அதிகாரியாக ஆனந்த்ராஜ், நடிகர் பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூரி கெளரவ வேடத்தில் தோன்றியுள்ளார். 

முழுநீள நகைச்சுவைத் திரைப்படத்தை படக்குழுவினர் முயற்சித்துள்ளனர். ஆனால் அது திரைக்கதையாக கைகொடுத்ததா என்பதுதான் ஆகப்பெரும் கேள்வி. பள்ளி ஆசிரியராக வரும் சிவகார்த்திகேயன் ஒரு குறும்புக்கார ஆசிரியராக தோன்ற முயற்சித்துள்ளார். அதற்காக வடிவமைக்கப்பட்ட காட்சிகள் நம்பும்படியாகவும், தரமாகவும் இல்லை என்றே கூற வேண்டும்.

சொந்த நாட்டுக்கு செல்லத் துடிக்கும் கதாநாயகியின் அப்பா, சொந்த நாட்டு பற்றுடன் இருக்கும் கதாநாயகனின் அப்பா என வெறும் அப்பாக்களுக்குண்டான சண்டையாகவே இருக்கிறது பிரின்ஸ். சாதி, மதத்தைக் கடந்து வாழ நினைக்கும் சத்யராஜ் தனது மகன் வேறு நாட்டு பெண்ணை காதலிப்பதை திடீரென எதிர்க்கிறார். அதற்காக அவர் சொல்லும் காரணங்களும் அவரை சமாதானம் செய்யும் சிவகார்த்திகேயனின் முயற்சிகளும் என படம் நகர்கிறது.

நகைச்சுவை திரைப்படம் என்பதால் காட்சிக்கு காட்சி காமெடி செய்ய படக்குழு விரும்பியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கான எந்தவொரு ரியாக்‌ஷன்களும் பார்வையாளர்கள் முகத்தில் ஏற்படவே இல்லை. இதோ காமெடி வருகிறது...இல்லை இல்லை அடுத்த காட்சியில் காமெடி வருகிறது...என காமெடி காட்டியே ஆக வேண்டும் என செய்ததெல்லாம் பார்வையாளர்களை பரிதாபத்திற்குள்ளாக்கியுள்ளது. அதிலும் சோகமான காட்சிகளும் வரும்போது அதிலும் காமெடி செய்வதெல்லாம் கைகொடுக்கவில்லை.

திரைப்படத்தில் பல கதாபாத்திரங்கள் எதற்காக வருகிறது என்பதே தெரியவில்லை. எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயனின் நண்பர்களாக வருபவர்களுக்கு படத்தில் என்ன வேலை என கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல் நடிகர் சூரி. எதற்காக அவர் திரைக்குள் வந்தார்? ஏன் திடீரென காணாமல் போகிறார் என விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. நடிகர் பிரேம்ஜியை வில்லனாகக் காட்ட சொன்னபோதே இயக்குநரை சிவகார்த்திகேயன் தடுத்திருக்க வேண்டாமா? அதிலும் கிளைமாக்ஸ் காட்சிகளில் வழக்கம்போல சிவகார்த்திகேயன் பேசியே அனைவரது மனதையும் மாற்றுவதெல்லாம் பார்த்து பார்த்து புளித்துப் போன பழைய கதை.

படத்தின் ஒரே ஆறுதலான விசயம் பாடல்கள். குறிப்பாக ‘ஜெசிகா’. இதைத் தவிர ஜெசிகாவாக நடித்திருக்கும் மரியா. வெளிநாட்டுப் பெண் என்னும் கதாபாத்திரத்திற்கு வெளிநாட்டுப் பெண்ணையே தேர்ந்தெடுத்தது மட்டுமே படத்திற்கு பொருத்தமாக இருக்கிறது.

நடிகர் ஆனந்தராஜ் வரும் காவல்நிலையக் காட்சிகள் மற்ற காட்சிகளுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை என இருக்கிறது. தேசபக்தியா? மனிதநேயமா? எனும் போட்டியில் பார்வையாளர்களை பந்தாடியிருக்கிறது பிரின்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com