மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பணம், பசி, துரோகம்! குபேரா - திரை விமர்சனம்

தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் சேகர் கமுலா இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் குபேரா எப்படி இருக்கிறது?

News image
குபேரா பட போஸ்டர்
Updated On :20 ஜூன் 2025, 10:21 am

குபேரா

2.5/5

Dharmarajaguru.K

தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் சேகர் கமுலா இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் குபேரா எப்படி இருக்கிறது?

படத்தின் கதைக்களம் என்னவென்றால், இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் 15 ஆண்டுகளுக்குத் தேவையான எரிபொருள் தேவையை உள்ளடக்கிய எண்ணெய் கிணறு ஒன்றை தொழிலதிபர் ஒருவர் கைப்பற்ற நினைக்கிறார். அதற்காக அரசாங்கத்திற்கு பல லட்சம் கோடி லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது! அதைக் கருப்புப் பணமாக, எந்தப் பிரச்னையிலும் சிக்காமல் கைமாற்ற நம்பகமான பிணாமிகளை நாகர்ஜூனா மூலம் தேடுகிறார்கள். பணத்திற்கு ஆசைப்படாத, லட்சம், கோடிகளுக்கு எத்தனை பூஜ்ஜியம் என்றோ, எழுதப் படிக்கவோ கூட தெரியாத 4 பிச்சைக்காரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை பிணாமி நிறுவனங்களாக உருவாக்க முயற்சிக்கிறார்கள், இந்த திட்டத்தால் அவர்கள் நினைத்த காரியம் கை கூடியதா? ஆயிரம் ஆயிரம் கோடிகளை பிணாமிகளாக தன் பெயரில் வைத்திருக்கும் இந்தப் பிச்சைக்காரர்கள் என்ன செய்கிறார்கள்? லட்சம் கோடிகளுக்கு மத்தியில் மூன்று வேளை சோறுக்கு ஆசைப்பட்டு வந்த இவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் இந்தக் குபேரா படத்தின் விரிவான கதைக்களம்!

குபேரா படத்தில் தனுஷ்

குபேரா படத்தில் தனுஷ்

அதிக முடியுடன், அழுக்கு உடையுடன் வெறும் காலில் திருப்பதி கோயிலுக்கு கீழே தனுஷ் ஓடும் அந்த ஒரு காட்சிக்கே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. ஆனாலும் முழு டிரைலர் வெளியான பிறகு, என்னதான், தனுஷ், நாசர், பாக்யராஜ், பகவதி பெருமாள், சுனைனா உள்ளிட்டோர் நடித்திருந்தாலும், ஒரு தெலுங்கு படம்தானே என்ற பார்வை பரவலாக உருவானது. உண்மையில் இது தெலுங்கு படம்தான்! அதை தனுஷே சொல்லியிருக்கிறார். ஆனாலும் தனுஷால், இந்தப் படத்தை தமிழ் ரசிகர்கள் தமிழ் படமாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற பார்வை விநியோகிஸ்தர்களிடமும் சினிமா விமர்சகர்களிடம் காணப்பட்டது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை! 

முதலில் இந்தப் படத்தில் பேச வேண்டியது, தனுஷைப் பற்றிதான். இதற்குமேல் நடிப்பில் நம்மை ஆச்சரியப்படுத்த எதுவும் இல்லை எனச் சொல்லும் அளவுக்கு தன்னை நிரூபித்துக்கொண்டார். இருந்தாலும் தன்னை புதிய, கடினமான கதாப்பாத்திரங்களில் புகுத்தி அடுத்த கட்டத்திற்கு செல்ல முயன்றிருக்கிறார். ஏற்று நடித்திருக்கும் கதாப்பாத்திரத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல், சிறப்பாக நடித்திருக்கிறார். அவ்வப்போது ஹீரோவாக களமிறங்கினாலும், இதுபோன்ற கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து தனது திறமைக்கும் தீனி போட்டுக்கொள்கிறார் போல. நாகர்ஜூனாவிற்கு மெனக்கெட்டு நடிக்கும் அளவில் காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். ராஷ்மிகா பாதி நேரம் அழுதுகொண்டே இருந்தாலும், இதில் புதுமையாக எதுவும் இல்லாதது அவரது தவறு இல்லை. இயக்குநர் கேட்டதை, கதை கேட்டதை சரியாக வழங்கியிருக்கிறார். அடுத்ததாக பெரிய வில்லனாக வரும் ஜிம் சர்ப்பும், சின்ன வில்லனாக வரும் சௌரவ் குரானாவும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். 

குபேரா படத்தில் தனுஷ்

குபேரா படத்தில் தனுஷ்

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இசை படத்தோடு பொருந்திப்போனாலும் சில இடங்களில் வரும், பின்னணி இசை பழைய Template உணர்வை படத்தில் சேர்த்துவிடுகிறது. பாடல்களும் மனதில் நிற்கும்படி இல்லை! ஒருவேளை தெலுங்கில் பாடல்கள் நன்றாக இருக்கலாம்! வழக்கமான டப்பிங் பாடல்களால் கூட அந்த நிலை ஏற்பட்டிருக்கலாம்!

ஒளிப்பதிவு நிக்கெத் பொம்மி செய்துள்ளார். நல்ல முறையில் படத்திற்கு அழகு சேர்க்கும்விதமாக ஒளிப்பதிவு வேலைகள் நடந்துள்ளன. ஆனாலும் இருட்டில் நடக்கும் சேசிங்கில் மட்டும் ஊதா நிற விளக்குகள் வெளிப்படையாக தெரியும்படி இருந்ததைக் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. 

குபேரா படத்தில் நாகார்ஜூனா மற்றும் சுனைனா

குபேரா படத்தில் நாகார்ஜூனா மற்றும் சுனைனா

எழுத்து எனப் பார்க்கையில் அங்குதான் கொஞ்சம் இடிக்கிறது. கதை ஓக்கேவான கதையாக இருந்தாலும், திரைக்கதை கச்சிதமாக அமைந்தால் இந்தப் படத்தை மிக உயரத்தில் கூட தூக்கி நிறுத்தியிருக்கலாம். ஆனால் படத்தில் காட்சிகளாக பார்க்கையில் பல இடங்கள் அழுத்தமான பதிப்பைக் கொடுக்கத் தவறிவிடுகின்றன. தனுஷின் அம்மா பற்றிய கதையாக இருக்கட்டும், அல்லது ராஷ்மிகாவின் கதையாக இருக்கட்டும் எதுவுமே உணர்வுப்பூர்வமான காட்சிகளாக இல்லாதது, அந்தக் கதாப்பாதிரங்களைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களுக்காக பார்வையாளர்கள் பரிவு காட்டுவதற்கும் உதவியாக இல்லை. ஆனாலும் பிச்சைக்காரர்கள் இறந்தால் அவர்களைக் கண்டிப்பாக எரிக்க வேண்டும், இல்லையேல் அவர்கள் அடுத்த ஜென்மத்திலும் பிச்சைக்காரர்களாகவே பிறப்பார்கள் என அம்மாஞ்சி தனுஷ் உறுதியாக நம்புவதும் அதற்காக அவர் செய்யும் சில செயல்களும், காட்சிகளாகப் பார்க்கையில் அவரது கதாப்பாத்திரத்தைப் புரிந்துகொள்ள உதவியதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அதைப் போன்ற மேலும் 2 காட்சிகள் கூட படத்தோடு ஒன்றுவதற்கு கூடுதல் உதவி செய்திருக்கும்!

குபேரா படத்தில் தனுஷ்

குபேரா படத்தில் தனுஷ்

வசனங்கள் சில இடங்களில் ரசிக்க வைத்தாலும், பல இடங்களில் மிகவும் இயல்பாகவே உள்ளன. அதுவும் கூட இந்த தமிழாக்கத்தில் வரும் வழக்கமான குறையாகத் தெரியலாம். அதனால் மொத்த படமுமே இது தமிழ் படமில்லை என்ற உணர்வை நொடிக்கு நொடி உணர்த்திவிடுகின்றன.

மொத்தமாக சொல்லப்போனால் தனுஷின் நடிப்பு படத்தில் மிக முக்கியமான ஒன்று! அந்தக் கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்ட விதமும் மிகச்சிறப்பான ஒன்றாகவே கருதப்பட வேண்டும்! எந்த வித ஹீரோயிசமும் சேர்க்கப்படாமல், கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் உண்மையாக இருந்ததற்கு பாராட்டுகளைத் தெரிவித்தே ஆகவேண்டும்!

வெறும் கமெர்சியலைத் தாண்டி சில விஷியங்களை இயக்குநர் பேச முயன்றிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று, ஆனாலும் தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படம் கொடுக்க வேண்டிய அழுத்தத்தைத் தருமா என்பது சந்தேகம்தான்!

படத்தின் நீளமும், வேகமும் சிலருக்கு தொய்வைத் தந்தாலும் ஓவராலாக “Good Watch” எனச் சொல்லும் அளவிலேயே உள்ளது தனுஷின் குபேரா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.