அழகா? ஆபத்தா? எப்படி இருக்கிறது இம்மார்டல்? திரைப்பட விமர்சனம்!
நடிகர் ஜிவி பிரகாஷ் குமாரின் இம்மார்டல் திரைப்படம் பற்றி...

இம்மார்டல் போஸ்டர் - x
அழகா? ஆபத்தா? எப்படி இருக்கிறது இம்மார்டல்? திரைப்பட விமர்சனம்!
வாலிப மயக்கத்தில் அழகுக்கு ஆசைப்பட்டு ஆபத்தில் சிக்கிக் கொண்ட கதாநாயகன் அதிலிருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே இம்மார்டல் திரைப்படத்தின் கதை.
ஏகே பிலிம் பேக்டரி தயாரிப்பில் சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டுள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். கதாநாயகனாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார், மகி எனும் கதாப்பாத்திரத்திலும், கயாது லோகர் சிந்து எனும் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் லொள்ளுசபா மாறன், கார்த்திக், குமார் நடராஜன், ஆதித்யா கதிர் என சிலர் நடித்துள்ளனர்.
சென்னையில் பிரிண்டிங் பிரேஸில் வேலை செய்யும் இளைஞனான ஜிவி பிரகாஷ் தனது வீட்டு உரிமையாளரின் வற்புறுத்தலால் புதிய வீடு தேடி அலைகிறார். அப்போது அவருக்கு அறிமுகம் ஆகிறார் கதாநாயகி கயாது லோகர். மிகப்பெரிய நட்சத்திர விடுதி போல இருக்கும் தனது வீட்டில் ஒரு அறையை ஜிவி பிரகாஷ் குமாருக்கு வாடகைக்கு விடுகிறார் அவர். அழகான, கவர்ச்சிகரமான பெண்ணாக இருக்கும் கயாதுவால் ஈர்க்கப்பட்ட ஜிவி பிரகாஷ் எந்தவித முன்யோசனையும் இன்றி அவருடன் தங்குகிறார்.

இந்நிலையில் சில மர்மமான நிகழ்வுகள் இந்த இல்லத்தில் நடக்கின்றன. அது ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஒரு சந்தேகத்தை கொடுக்கிறது. தொடர் அச்சமூட்டும் சம்பவங்களைத் தொடர்ந்து கதாநாயகி ஏற்படுத்தி வைத்திருக்கும் மாய உலகத்தில் சிக்கிக் கொண்டதை தாமதமாக உணர்கிறார் ஜிவி பிரகாஷ் குமார். அந்த மாய உலகத்தில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் திரைப்படத்தின் கதை.
மகி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார். பெண்களின் மீது ஆர்வம் கொண்ட நடுத்தர வயது இளைஞனாக அவருடைய நடிப்பு வழக்கமானதாக இருந்தாலும் சலிப்பை ஏற்படுத்தாமல் கொடுத்து இருக்கிறார். கையடூ மீது அவர் ஆசை கொள்ளும் இடங்கள் தொடங்கி அந்த ஆசை நிறைவேறும் சந்தர்ப்பங்களில் அச்சத்தில் நடுங்கி ஒதுங்கும் வரை கதைக்கேற்ற, பரபரப்புக்கு பஞ்சமில்லாத அவரின் நடிப்பு பலன் கொடுத்துள்ளது. ஜிவி பிரகாஷ் குமாரை தாண்டி ஸ்கோர் செய்கிறார் கதாநாயகியாக வரும் கயாது லோகர். அழகின் பின் ஒளிந்திருக்கும் ஆபத்து என்னும் சொல்லுக்கு பார்வைகளிலேயே அர்த்தத்தை கொடுக்கிறார் கையடூ. தமிழில் அவர் ஒப்பந்தமான முதல் திரைப்படம் இது எனும் நிலையில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் அடித்து தூள் கிளப்பி இருக்கிறார். இரண்டாம் பாதியில் அச்சமூட்டும் அவரின் வில்லி பார்வை ஸ்கோர் செய்கிறது. முதல் பாதி கவர்ச்சியும் இரண்டாம் பாதியில் திகிலும் தரும் அவரது நடிப்பு படத்திற்கு பலம்.
சாம் சி எஸ் -ன் பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. குறிப்பாக இம்மார்டல் பாடல் வரும் இடங்களில் அவரது பின்னணி இசை திகில் கதைக்கான ஆன்மாவைத் தாங்கி நிற்கிறது. காதல் பிரசவிக்கும் இடங்களிலும் கவர்ச்சி ஒட்டிக் கொள்ளும் காட்சிகளிலும் இசை வித்தை செய்திருக்கிறார் அவர். ஒளிப்பதிவாளருக்கு சவாலான காட்சிகள். பெரும்பாலும் ஒரே இடத்தில் நடக்கும் காட்சிகள் என்பதால் அதை அலுப்பு தட்டாமல் கொடுப்பதற்கு பிரயதனப்பட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர். சில காட்சிகள் வெளிப்புறங்களில் நடந்தாலும் அதற்கான வேறுபாட்டை காட்டுவதில் சரியாக வேலை செய்திருக்கிறது அவரது கேமரா.
படம் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக அமைந்திருக்கிறது. குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் கொல்லப்படும் கிராபிக் காட்சிகள் இந்த படத்தில் தப்பித்து இருக்கின்றன. கோரமான விலங்கு வரும் இடங்கள் சரியாக அமைக்கப்பட்டிருப்பது படத்தை தப்பி பிழைக்க வைத்திருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் சொதப்பி இருந்தால் படம் பாதாளத்திற்கு சென்றிருக்கலாம். அதை சரியாக உயிர் பிடித்து காப்பாற்றி இருக்கிறது தொழில்நுட்பக் குழு.
அதேசமயம் சின்ன சின்ன லாஜிக் காட்சிகள் சந்தேகத்தை கொடுக்கின்றன. குறிப்பாக ஐந்தாயிரம் ரூபாய்க்காக நட்சத்திர விடுதி போல அறையில் தங்கும் ஜிவி பிரகாஷ் குமார் ஆரம்பத்திலேயே லாஜிக் தடுமாற்றத்திற்கு வழி கொடுக்கிறார். எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் கயாது லோகர் ஏற்கெனவே இதேபோல் தன்னிடம் அகப்பட்டுக் கொண்டவனுடன் ஜிவி பிரகாஷ் குமார் பேசுவதை ஏன் தடுக்க முடியவில்லை என தெரியவில்லை. முழு கதையையும் ஜிவி பிரகாஷ் தெரிந்து கொள்ளும் வரை ஒரே வீட்டிற்குள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது போல இருக்கிறார் கயாது லோகர். முதல் பாதியில் இருக்கும் சஸ்பென்ஸ் இரண்டாம் பாதியில் சற்று மந்தமாகி விடுவதை தவிர்க்க முடியவில்லை. கதையை முடிக்க வேண்டுமே என பொறி வைத்து முடித்தது போல அமைக்கப்பட்டிருக்கும் சண்டை காட்சி பெரிதாக ஒட்டவில்லை.
எனினும் ஒரு ஹாரர் திரில்லர் வகையிலான சஸ்பென்ஸ் படம் விருப்பமானதெனில் உங்களுக்கு இத்திரைப்படம் ஏமாற்றம் அளிக்காது.
Summary
Beautiful or dangerous? How is Immortal? Movie Review!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






