2017-ம் ஆண்டின் டாப் 10 நடிகர்கள் யார் தெரியுமா?

தமிழ் சினிமா நீண்ட பாரம்பரியத்தை உடையது. அதில் கதாநாயகர்களாக நடிப்பவர்களை
2017-ம் ஆண்டின் டாப் 10 நடிகர்கள் யார் தெரியுமா?

தமிழ் சினிமா நீண்ட பாரம்பரியத்தை உடையது. அதில் கதாநாயகர்களாக நடிப்பவர்களை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டு மிகுந்த அன்பு செலுத்தி வருபவர்கள் ரசிகர்கள். கோலிவுட்டை வாழ வைப்பது இத்தகைய ரசிகர்கள்தான். 2017-ம் ஆண்டில் டாப் 10 நடிகர்கள் யார் என்று ஒரு சர்வே எடுக்கப்பட்ட போது, சில நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை எனிலும் அவர்களின் இடம் அவர்களுக்கு மட்டும் தான் என்கிறது கோலிவுட் அகராதி. அவ்வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றென்றும் நம்பர் ஒன் இடத்திலும், உலக நாயகன் கமல் ஹாசன் மக்கள் மனதில் நீங்காத இடத்திலும், சூப்பர் ஆக்டர் சீயான் விக்ரம் அனைவரும் விரும்பக் கூடிய நடிகருமாக இருக்கின்றனர்.

10) விஷால்

இயற்பெயர் விஷால் கிருஷ்ணா. பிறந்த தினம் ஆகஸ்ட் 29, 1977. தமிழ் கதாநாயகர்களில் இன்னும் மணமாகாதவர்.

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு சங்கங்களிலும் முக்கிய பொறுப்புகளை வகித்து வருபவர். தற்போது வரை 29 படங்களில் நடித்துள்ளார். விஷாலிடம் ரசிகர்கள் பெரிதும் விரும்புவது அவரது வேகம் மற்றும் சண்டை காட்சிகளில் அவர் காட்டும் தீவிரம். அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் சண்டகோழி 2-வை பெரிதும் எதிர்ப்பார்க்கிறார் இந்த ஆக்‌ஷன் ஹீரோ. 2017-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்த துப்பறிவாளன் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. 2018-ல் விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் படங்கள் :

காவல் கோட்டம்
சண்டகோழி 2 
கருப்புராஜா வெள்ளைரஜா
நாளை நமதே
இரும்பு திரை
மத கஜ ராஜா

9) கார்த்தி

இயற்பெயர் கார்த்திக் சிவகுமார். பிறந்த தினம் மே 25 1977.

தமிழ் திரையுலகில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இயக்குநர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராக சேர்ந்து, பின்னர் நடிப்புக்கு திரும்பியவர். 2017-ம் ஆண்டின் முற்பகுதியில் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை, என்றாலும் ஆண்டு இறுதியில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. 2018-ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படங்கள் கருப்புராஜா வெள்ளைராஜா மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படம்.

கார்திக்கு பலம் அவரது நடிப்பு மற்றும் கதாபாத்திரத் தேர்வு. தனது கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்க நிறைய ஹோம்வொர்க் செய்பவர். முதல் படம் முதல் இன்று வரை கார்த்தி அர்ப்பணிப்புணர்வுடன் நடிப்பதே அவரது வெற்றிக்கான முதன்மைக் காரணம் எனலாம்.

8) சிவ கார்த்திகேயன்

பிறந்த தினம் பிப்ரவரி 17, 1985.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து தரப்பு ரசிகர்கள் மனதிலும் இடம்பெற்ற நடிகர் சிவ கார்த்திகேயன். காமெடி ஹீரோவாக களம் இறங்கியவர் இந்த ஆண்டு வெளியான 'வேலைக்காரன்' படம் மூலம் மாஸ் ஹீரோவாக முன்னெடுத்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் அவர் தனது பாதையாக எந்தப் பக்கத்தை தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதைப் பொருத்து அவரது அடுத்த கட்ட முன்னேற்றம் இருக்கும்.

சிவகார்த்திகேயன் 2018-ல் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படமும், ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். சிவ கார்த்திகேயனுக்கு அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் ரசிகர்கள் இருப்பதால் அவரது வெற்றி நிலையாகிக் கொண்டிருப்பது உண்மை.

7) தனுஷ்

இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு. பிறந்த தினம் ஜூலை 28, 1982 

தனுஷுன் வெற்றிக் கதை ஊரறியும். இளம் வயதில் சிகரம் தொட்டவர். கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் கால் பதித்து அதிலும் வெற்றியை சுவைத்தவர். நடிப்புத் தவிர்த்து பாடலாசிரியர், படத் தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என சினிமாவில் பல அவதாரங்களை அனாயசமாக எடுப்பவர்.

2017-ம் ஆண்டு அவர் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான ப.பாண்டி பரவலான கவனத்தைப் பெற்றது. விஐபி படத்தின் இரண்டாம் பாகமான விழிபி 2 படமும் எதிர்பார்த்தபடி வசூல் வெற்றியைப் பெற்றுத் தந்தது. 2018-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் படங்கள் :

வட சென்னை 
காலா 
சினிமா வீரன் 
மாரியப்பன் 

6) விஜய் சேதுபதி

இயற்பெயர் விஜய குருநாத சேதுபதி. பிறந்த தினம் ஜனவரி 16, 1978.  

'கூத்துப்பட்டறை’மேடை நாடகக் குழுவிலிருந்து, சின்னத் திரைக்கு முன்னேறி அதன்பின் குறும்படங்களில் நடித்து, கோலிவுட்டில் சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த பின் முன்னணிக்கு வந்தவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இவர், இயல்பான நடிப்புக்குப் பெயர் பெற்றவர். எந்த கதாபாத்திரத்திலும் கச்சிதமாக தன்னைப் பொருத்திக் கொள்ளக் கூடியவர். மனத்தில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேசும் தன்மை இவரிடம் உண்டு.

அயராத உழைப்பும், கதாபாத்திரத் தேர்வுகளும் இவரது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் காரணம். 2017-ம் ஆண்டு இவர் நடித்த நான்கு படங்களில் நடித்துள்ளார். அதில் புரியாத புதிர் மற்றும் கருப்பன் ரசிகர்களை கவர்ந்தது ஆனால் அதிகம் வசூலிக்கவில்லை. மற்ற இரண்டு படங்களான கவண் மற்றும் விக்ரம் வேதா பெறும் வெற்றிப் பெற்றது. ரசிகர்கள் திரை ஆர்வலர்கள் என அனைவரின் பாராட்டுதல்களைப் பெற்று வசூலிலும் நிறைவைத் தந்தது. 2018-ல் அவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் படங்கள் :

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்
வசந்த குமாரன்
மேற்குத் தொடர்சி மலை
சங்குத் தேவன்
காத்துவாக்குல ரெண்டு காதல்
இடம் பொருள் ஏவல்
அநீதிக் கதைகள்

என்றென்றும் சீயான் விக்ரம்

இயற்பெயர் கென்னடி. பிறந்த தினம் ஏப்ரல் 17, 1966 

சீயான் என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுபவர். தான் நேசிக்கும் சினிமாவுக்காக உடல் உழைப்பை அதிகமாகத் தருபவர். உடல் எடை அதிகரிப்பது, குறைப்பது, சிக்ஸ் பேக்ஸ் வைப்பது என கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப தன்னை செதுக்கிக் கொள்பவர் விக்ரம். க்ரேஸ்ஃபுல் ஸ்டைல் என்பது விக்ரமுக்கு இயல்பாக வந்துள்ளது. தனது நடிப்பாற்றலால் அதை மெருகேற்றிக் கொண்டவர் அவர். 

இந்திய நடிகர்களில் எல்லா வகையிலும் ஹீரோ என்று சொல்லும்படியான பத்து பேரை பட்டியலிடச் சொன்னால் அதில் முதல் மூன்று இடத்தில் இருக்கத் தகுதியான தமிழ் நடிகர் விக்ரம்தான். இந்த ஆண்டு அவர் நடிப்பில் ஸ்கெட்ச் திரைப்படம் வெளிவரத் தாமதமானதால் அவரது ரசிகர்களுக்கு அது ஏமாற்றத்தை அளித்தது. ஜனவரி 2018-ல் பொங்கல் வெளியீடாக அப்படம் வெளிவரும் என்று அறிவித்துள்ளனர் படக்குழுவினர். 2018-ம் ஆண்டை பொருத்தவரையில் விக்ரம் நடிப்பில் வெளியாகவிருக்கும் படங்கள் :

சாமி 2 
துருவ நட்சத்திரம் 
கருடா 

5) சூர்யா

இயற்பெயர் சரவணன். பிறந்த தினம் ஜூலை 23, 1975 

பெண்களுக்கு பிடித்த நடிகர் யாரென்று கேட்டால் சூர்யா என்றுதான் சொல்வார்கள். ஹோம்லி ஹீரோயின்களை ஆண்களுக்குப் பிடிப்பது போல இவர் ஹோம்லி ஹீரோ. தவிர திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் தான் சார்ந்த சமூகத்துக்காக அவர் இயங்கி வருவது அனைவரும் அறிந்த செய்திதான். மேலும் சூர்யா தன் காதல் மனைவி ஜோதிகாவின் வளர்ச்சியிலும் அக்கறை காட்டுவதால் பெண்களின் ஓட்டு அவருக்கு எப்போதும் உள்ளது. 

நடிப்பாற்றலும் தோற்றப் பொலிவும் உடையவர் சூர்யா. 2017-ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான படங்கள் கடுகு, சிங்கம் 3, மகளிர் மட்டும் ஆகியவை. வெளிவரவிருந்த 'தானா சேர்ந்த கூட்டம்' சில காரணங்களுக்காக தாமதம் ஆன நிலையில், 2018 பொங்கல் வெளியீடாக வரவிருக்கிறது. 2018-ல் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார். 

4) அஜித்

இயற்பெயர் அஜித் குமார். பிறந்த தினம் மே 1, 1971 

உழைப்பாளர் தினத்தில் பிறந்த அஜித் உண்மையில் சிறந்த உழைப்பாளர். தன்னை நம்பிய தயாரிப்பாளரை ஒருபோதும் அஜித் கைகொடுக்கத் தவறுவதில்லை. தொடர்ந்து இயக்குநர் சிவாவின் நடிப்பில் வெளிவந்து கொண்டிருக்கும் வி வரிசைப் படங்களே இதற்கு சாட்சி. 2017-ஆண்டு வெளியான விவேகம் பரவலான விமரிசனத்தை எதிர்கொண்டாலும், வசூலில் சாதனை படைத்தது.

அடுத்து 2018-ம் ஆண்டிலும் சிவா இயக்கத்தில் விசுவாசம் என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார். சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்திலும் அழகன் என்று சதா 'தல’புராணம் பாடும் அளவுக்கு தென்னிந்தியாவில் அஜித்துக்கு மிக அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அஜித் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுதை விரும்புகின்றவர்.  

3) விஜய்

இயற்பெயர் ஜோசப் விஜய். பிறந்த தினம் ஜூன் 22, 1974. விஜய் டயலாக் பேசும் விதம் அழகு. தெளிவான உச்சரிப்புடனும், ஏற்ற இறக்கங்களுடன் அவர் பேசும் பன்ச் வசனங்கள் அனைவரையும் கவர்ந்துவிடும். வேகமும் சுறுசுறுப்புமான அவரது வெற்றியின் ரகசியங்கள். தமிழ் நடிகர்களில் சிறப்பான நடனம் ஆடக் கூடியவர் விஜய்தான். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அவரது ரசிகர்கள்.

விஜய் படம் வெளியான முதல் நாள் முதல் காட்சிக்கு போனால் அரங்கத்தில் விசில் சத்தம் தவிர வேறு எதையும் கேட்க முடியாது. அந்த அளவிற்கு அதகளப்படுத்திவிடுவார்கள் அவரது ரசிகர்கள். அவரது நடிப்பில் 2017-ல் வெளியான பைரவா ரசிகர்கள் விரும்பிய படமாக இருந்தது. இதே ஆண்டில் வெளியான மெர்சல் திரைப்படம் எல்லா சாதனைகளையும் முறியடித்துவிட்டது. கடுமையான விமரிசனங்களை எதிர்நோக்கியும் ரசிகர்களின் அமோக ஆதரவை அடைந்த படம் அது. 2018-ம் ஆண்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-62 என்று இப்போதைக்கு அழைக்கப்படும் படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.

2) கமல் ஹாசன்

பிறந்த தினம் அக்டோபர் 07, 1964 

Legend என்ற சொல்லுக்கு தமிழ் சினிமாவில் வாழும் உதாரண நாயகன், உலக நாயகன் கமல் ஹாசன் மட்டுமே. எல்லா வயதுப் பெண்களும் விரும்பும் நடிகர் இவர். கமல் ஹாசனின் திறமைகளை பட்டியலிட முற்பட்டால், அது ஒருபோதும் முற்றும் பெறாது. காரணம் அதற்குள் ஒரு புதுத் திறமையை வளர்த்தெடுத்துக் கொள்வார் இந்த மாயாவி. தனது ரசிகர்களால் மட்டுமின்றி சக நடிகர்களால் பெரிதும் விரும்பப்படும் நடிகர் அவர். திரை உலகில் பலர் தயங்கி செய்ய முடியாத விஷயங்களை எல்லாம் சர்வ சாதாரணமாக செய்து முடித்துவிடுபவர்.

திரைஞானி என்று அவரை கூறுவது சாலப் பொருத்தமானது. முற்போக்குச் சிந்தனையுடன் காலம் தாண்டி சிந்திக்கும் ஆற்றல் அவருக்கு உள்ளது. அதிசயங்கள் எப்போதாவது தான் உலகில் நிகழும். நிகழ்ந்து கொண்டே இருக்கும் ஓர் அதிசயம் தான் கமல். 2017-ம் ஆண்டில் உடல் நலக் குறைவு, அரசியல் பங்கேற்பு போன்ற சில காரணங்களால் அவர் எதிர்ப்பார்த்த படம் விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு முடிக்கப் பெறவில்லை. 2018-ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் படங்கள் :

விஸ்வரூபம் 2 
சபாஷ் நாயுடு
ஒரே இரவு 
தலைவன் இருகின்றான் 
அப்பா அம்மா விளையாட்டு 
மருதநாயகம் 

1) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இயற்பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட். பிறந்த தினம் டிசம்பர் 12, 1950 

'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’என்ற பாடலை சற்று மாற்றி பிறந்த குழந்தையும் சொல்லும் என்று சொன்னாலும் கூட மிகையாகாது. அந்தளவுக்கு தமிழ் நாடும் ரஜினிகாந்தும் ஒன்று கலந்தவர்கள். அவரது கரிஷ்மா மற்றும் ஸ்டைல் உலகறிந்த ஒன்று. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஜப்பானிலும் ரஜினிக்கு ரசிகர்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்த செய்தி. 67 வயதில் Most Wanted Actor ஆக இருப்பது எத்தகையே பேறு. தனக்குக் கிடைத்த புகழ் மற்றும் அங்கீகாரத்தைத் தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் எப்போதும் பணிவுடன் இருப்பதுதான் அவரது இமாலய வெற்றிக்கு முக்கிய காரணம்.

அன்பும் அமைதி ஆன்மிகம் என்று நிஜ வாழ்க்கையில் இருப்பவர் திரையில் தோன்றிவிட்டால் போதும், மின்னல் வேகம் எனும்ப சுழல்பவர். அவரது கண் அசைவிலிருந்து சட்டை பாக்கெட்டுக்குள் கைவிட்டு நிற்பது முதல் அவரது ஒவ்வொரு அசைவையும் ரசிக்க கோடானு கோடி ரசிகர்கள் உள்ளனர். ஒருவரின் அன்புக்குப் பாத்திரமாகவே கடினமாக இருக்கும் வாழ்வியல் சூழலில்,  வருடக்கணக்கில் பல்லாயிரக்கணக்கானவர்களின் நேசத்துக்கு உரியவராக ரஜினிகாந்த் விளங்கி வருகிறார். அவரே நினைத்தாலும் அவருக்கு நடிப்பிலிருந்து ஓய்வு கொடுக்க அவரது ரசிகர்கள் விரும்புவதில்லை. காரணம் அவர்கள் நேசிக்கும் அந்த சூப்பர் ஸ்டார் ஒரு சூப்பர் ஹுமன் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். 2017-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கரின் 2.0 வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் அது சில காரணங்களால் அவ்வெளியீடு தள்ளிப் போனது. 2018-ல் அவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் படங்கள் 2.0 மற்றும் காலா!

இந்தப் பட்டியல் முடிவானது அல்ல. உண்மையில் எந்தப் பட்டியலும் முழுமையானவை அல்ல, இது அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் அவர்களது விருப்பத்துக்கேற்றபடி நம்பர்களை மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடியதுதான்.  திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி இங்கு மக்களின் அன்றாட வாழ்வியலுடன் கலந்துவிட்ட ஒன்றாக இருப்பதால் இதுபோன்ற பட்டியல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருப்பதும் இயல்பே. எனவே ரசிகர்கள் விரும்பும் நடிகர்கள் இவர்கள் மட்டுமே என்று அருதியிட்டுக் கூற முடியாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com