'பிறப்பின் ரகசியத்தில்' கதையின் போக்கையே மாற்றிய செம்பருத்தி: இழந்த ரசிகர்களை மீட்குமா?

இழந்த ரசிகர்களை மீண்டும் பெறும் நோக்கில் கதாபாத்திரங்களின் தன்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செம்பருத்தி
செம்பருத்தி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடர் கதையின் போக்கையே மாற்றியமைத்து வருகிறது. இழந்த ரசிகர்களை மீண்டும் பெறும் நோக்கில் கதாபாத்திரங்களின் தன்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு செம்பருத்தி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 1100 எபிஸோடுகளைத் தாண்டி ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடர் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களின் அதிக டிஆர்பி பெற்றிருந்த தொடர்களின் பட்டியலிலும் செம்பருத்தி முதன்மையாக இருந்தது.

ஆனால் காட்சிகளை அதிகரிக்கும் நோக்கில் கதையில் சுவாரசியமே இல்லாமல் தொடரின் திரைக்கதை கொண்டுசெல்லப்பட்டது மிகப்பெரிய பின்னடைவாகவே அமைந்தது. இதனால், கடந்த சில மாதங்களாக செம்பருத்தி தொடர் ரசிகர்களின் ஆதரவை இழந்தது. அரைத்த மாவையே அரைப்பதாக ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். ஒவ்வொரு முன்னோட்டங்களிலும் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பையே யூடியூபில் பதிவு செய்து வந்தனர். 

திரையில் நாள்தோறும் தோன்றும் முதன்மை கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டது தொடரின் மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. முக்கியமாக கதையின் நாயகன் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மாற்றப்பட்டிருந்தாலும், அவருக்கு பதிலாக நடித்து வரும் அக்னியுடனான பார்வதியின் காதல் காட்சிகள் குறைவாக இருந்தது. செம்பருத்தி  தொடரில் ஆதி - பார்வதி காதல் காட்சிகளுக்கு கல்லூரி மாணவர்கள் உள்பட குடும்பத் தலைவிகள் பலர் ரசிகர்களாக இருந்தனர்.

ஆனால் புதிய ஆதி மாற்றப்பட்ட பிறகு கதையின் போக்கு காதல் காட்சிகளைத் தவிர்த்து குடும்பப் பிரச்னை, தொழில் போட்டி, குடும்ப உறுப்பினர்களுடனான முரண்பாட்டைக் களைவது என கதை நகரத் தொடங்கியது. இதனால் பல இடங்களில் செம்பருத்தி தொடர் முடியப்போகிறது என்ற எண்ணமே மக்களிடம் உருவாகியது. 

ஆனால், ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டி கதை நகர்ந்தது. இது மக்களிடம் ஒருவித சலிப்பையே ஏற்படுத்தியது. சின்னத் திரை தொடர்களை ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் நோக்கில் இயக்குநர் குழு மிகுந்த சிரத்தையோடு செயல்படும். கதையை மையப்படுத்தாமல், ஒவ்வொரு வாரத்தின் டிஆர்பியை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் தொடர்களும் உண்டு. 

செம்பருத்தி தொடர் ஆரம்பகாலகட்டத்தில் அவ்வாறுதான் ஒளிபரப்பாகியது. கிராமத்திலிருந்து வரும் அப்பாவி இளம்பெண் மிகப்பெரிய குடும்பப் பின்னணி கொண்ட குடும்பத்தில் வேலைக்காரியாக பணிபுரிந்து அந்த வீட்டு மகனை மணம் புரிகிறார் என்ற ஒற்றை வரியை மையமாகக் கொண்டு இளைஞர்களைக் கவரும் வகையில் வாராவாரம் திரைக்கதை நகர்ந்தது.

ஆனால் எதற்குமே சலிப்புதட்டும் அல்லது மற்றொரு தொடரை நினைவுபடுத்தும் என்பதற்கு ஏற்ப அது சிறிதுகாலத்திற்கே கைகொடுத்தது. ஆதி - பார்வதி திருமணத்திற்கு பிறகு அவர்களை குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, பிறகு பார்வதியின் நடத்தையால் ஈர்க்கப்பட்டு பின்னர் ஏற்றுக்கொள்வது என குடும்ப பின்னணியில் கதை நகர்ந்தது. அப்போதும் செம்பருத்திக்கு ரசிகர்கள் வரவேற்பு இருந்தது. 

ஆனால், கொலைக்குற்றத்திற்காக ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி சிறைக்குச் செல்வது, அதன் பிறகு மூத்த மற்றும் இளைய மருமகள்கள் இடையே நடைபெறும் அதிகாரப்போட்டி, சிறைக்குச் சென்ற அகிலாண்டேஸ்வரியை மீட்க பார்வதி நாயகனுடன் சேர்ந்து படும் பாடு என கதையின் சுவாரஸ்யம் வேறுபக்கம் நகர்ந்தது. இது செம்பருத்தி தொடருக்கு பின்னடவை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனிடையே கதையில் அடிக்கடி வந்து மிரட்டல் விடுக்கும் மர்ம ஆசாமி யார்?, பார்வதியின் தம்பி என்ன ஆனார்? என கதையில் பாதியில் விடுபட்டவர்களையும் ரசிகர்கள் மறக்கவில்லை. இது செம்பருத்தி தொடரின் பலவீனத்தையே காட்டுகிறது.

எனினும் தற்போது கார் ஓட்டுநரின் மகள் பார்வதி அல்ல, கோடீஸ்வரன் அகிலாண்டேஸ்வரியின் அண்ணன் பரமேஸ்வரன் மகள் தான் பார்வதி என்ற ஒன்றை பிரம்மஸ்திரமாக இயக்குநர் கையாள்கிறார். அதனையொட்டி அமைக்கப்பட்டு வரும் திரைக்கதை ஓரளவிற்கு ரசிகர்களை திருப்திப் படுத்துவதாகவே உள்ளது. 

கடந்த வாரம் முழுக்க பார்வதியின் அப்பா யார் என்பது குறித்து சந்தேகம் எழுந்து அகிலாண்டேஸ்வரி அதற்கான விசாரணையில் இறங்குகிறார். அதன் உச்சபட்சமாக கார் ஓட்டுநர் சுந்தரத்திடமும், பார்வதியிடமும் இது குறித்து நேரடியாக கேள்வி எழுப்புகிறார். இதில் எதிர்பாராத விதமாக அகிலாண்டேஸ்வரியை முதல்முறையாக பார்வதி எதிர்க்கிறார். 

அதுவரை அத்தை என்று மரியாதையுடனும், பணிவுடனும் நடந்துகொள்ளும் பார்வதி ''என் பிறப்பு பற்றி தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்'' என்று கேள்வி எழுப்புவது ரசிகர்களையும் கவனிக்கவைத்துள்ளது. ''சாதாரண கார் ஓட்டுநரின் மகளாக என்னை ஏற்றுக்கொள்ளாத நீங்கள் கோடீஸ்வரனின் மகள் நான் என்று தெரிந்த பிறகு மருமகளாக ஏற்றுக்கொள்வீர்களா?'' என்று அடுத்தடுத்து பார்வதி கேள்வி எழுப்புகிறார்.

ஒருகட்டத்தில் நான் கார் ஓட்டுநர் சுந்தரத்தின் மகள் இல்லை என்று பார்வதியே சொல்கிறார். இதனை இத்தனை நாள்களாக மறைத்ததற்காக கணவர் ஆதியும் அதிர்ச்சி அடைகிறார். இதனால் ஆதிக்கும் பார்வதி மீது அதிருப்தி ஏற்படுகிறது. அகிலாண்டேஸ்வரியை நேரடியாக எதிர்ப்பதால், பார்வதியில் நிலை இனி என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. 

இது அடுத்த வார காட்சிகளுக்கு மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும் என்று நம்பலாம். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை தக்க வகையில் கையாண்டு இழந்த ரசிகர்களை செம்பருத்தி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com