யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள்: நினைத்து நினைத்துப் பார்க்கும் பாடல்கள்

2000-ம் ஆண்டுக்குப் பிறகு யுவனின் வளர்ச்சி நம்பமுடியாத வகையில் இருந்தது.
யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள்: நினைத்து நினைத்துப் பார்க்கும் பாடல்கள்

இளையராஜாவின் வாரிசாக இருந்து ரசிகர்களை இசையால் மயக்குவது அவ்வளவு எளிதல்ல. 

தனக்கு விடப்பட்ட சவாலை எளிதாகக் கடந்து தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இன்றைக்கும் உள்ளார் யுவன் சங்கர் ராஜா.

1997-ல் அரவிந்த் படத்தில் அறிமுகமான யுவன், 1999-ல் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் ரசிகர்களை அள்ளிக்கொள்ள ஆரம்பித்தார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் அதன் பாடல்கள் இன்றைக்கும் கேட்கப்படுகின்றன. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு யுவனின் வளர்ச்சி நம்பமுடியாத வகையில் இருந்தது. பல வெற்றிப் படங்களுக்கு இவருடைய பாடல்கள் பக்கபலமாக அமைந்தன.

*

சமீபத்தில் யுவனுக்கு ஒரு பெருமை கிடைத்தது.

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவான படம் - மாரி 2. இசை - யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடலின் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றது. 

2019 ஏப்ரல் மாதம், பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்து அசத்தியது. இதனால் சர்வதேச அளவில் இப்பாடலின் விடியோவுக்குக் கவனம் கிடைத்தது. மேலும் யூடியூப் தளத்தில், தமிழ்ப் பாடல்களில் அதிகப் பார்வைகள் பெற்ற பாடல் என்கிற சாதனையையும் அடைந்தது. 2019-ல் யூடியூபில் அதிக டிரெண்டிங் ஆன விடியோக்களில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது ரெளடி பேபி பாடல். இதுதவிர உலகளவில் அதிகம் பேர் பார்த்த விடியோக்களில் ரெளடி பேபிக்கு 7-ம் இடம் கிடைத்தது. 

கடந்த நவம்பர் மாதம் 1 பில்லியன் பார்வைகள் என்கிற மகத்தான எண்ணிக்கையைத் தொட்டது. இந்த எண்ணிக்கையைத் தொட்ட முதல் தென்னிந்தியப் பாடல் இதுவே. 

ரெளடி பேபி பாடலின் சாதனைகள் இன்னும் தொடர்கின்றன. யூடியூபில் 122 கோடி பார்வைகள் இதுவரை கிடைத்துள்ளன. 

*

யுவன் இசையமைப்பில் அற்புதமான பாடல்களைக் கொண்ட சில படங்களின் தொகுப்பு: 

பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)

ஒரு தோல்விப்படத்தில் பாடல்கள் வெற்றி பெறுவது தான் இசையமைப்பாளருக்கு மேலும் கெளரவமாக இருக்கும். யுவனின் திறமை முதலில் வெளிப்பட்ட படம் இது எனலாம். சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே, இரவா பகலா, பூவ பூவ...., சென்யோரீட்டா எனத் திரையரங்கில் கொண்டாட்ட மனநிலையைத் தந்த பாடல்களை இன்றைக்கும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

துள்ளுவதோ இளமை (2001)

செல்வராகவன் - யுவன் கூட்டணின் ஆரம்பம். புதுமுகங்கள், புதிய இயக்குநர். இருந்தும் முதல் நாளில் படத்துக்குத் திரையரங்குகளில் எக்கசக்கக் கூட்டம். காரணம், யுவனின் பாடல்கள். யுவனால் தான் படத்தின் வெற்றி சாத்தியமானதாகப் பல பேட்டிகளில் செல்வராகவன் கூறியுள்ளார். கண் முன்னே இத்தனை நிலவு, இது காதலா, வயது வா வா, நெருப்பு கூத்தடிக்குது, தீண்ட தீண்ட, காற்றுக்கு காற்றுக்கு என அத்தனை பாடல்களும் ஹிட் அடித்தன. 

காதல் கொண்டேன் (2003)

செல்வராகவனும் யுவனும் ரகளை செய்த படம். இந்தப் படத்தின் பாடல்களும் படம் வெளிவருவதற்கு முன்பு ஹிட் ஆகின. வித்தியாசமான காதல் கதைக்கு அழகான பாடல்களை அளித்து மேலும் சுவை கூட்டியிருந்தார் யுவன். காதல் காதல், தேவதையைக் கண்டேன், தொட்டு தொட்டு, நெஞ்சோடு என யுவன் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியது.

7ஜி ரெயின்போ காலனி (2004)

ஒரு காதல் படத்துக்கு அருமையான காதல் பாடல்கள் அமைந்துவிட்டால் அதை விட கொண்டாட்டம் வேறு என்ன இருக்க முடியும்? நினைத்து நினைத்து பார்த்தேன் பாடலைப் பார்க்க ரசிகர்கள் ஏங்கினார்கள். கனா காணும் காலங்கள், கண் பேசும் வார்த்தைகள் பாடல்கள் எல்லாம் பார்க்கவும் கேட்கவும் இதமாக அமைந்தன. யுவன் - நா. முத்துக்குமார் கூட்டணி ஜொலித்த இன்னொரு படம் இது.

ஒரு இசையமைப்பாளர், பாடல்களால் ரசிகர்களை ஈர்க்க முடியும். பின்னணி இசையால்? தன் தந்தையால் மட்டுமல்ல தன்னாலும் முடியும் என்பதை யுவன் நிரூபித்த படம் இது. இன்றைக்கும் இப்படத்தின் பின்னணி இசையைத் தனியாகக் கேட்பவர்கள் உண்டு.

பருத்தி வீரன் (2006)

யுவன் இசையமைப்பில் வெளிவந்த 50-வது படம். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் ஏராளமான ஹிட் பாடல்களைக் கொடுத்து தீவிரமாக இயங்கி வந்த காலக்கட்டம் இது. யுவன் இசையமைத்த முழுமையான முதல் கிராமத்துப் படம் என்றுகூட இதைச் சொல்லலாம். சிநேகன் எழுதிய அனைத்து பாடல்களும் வெற்றியடைந்து யுவனின் புகழை மேலும் உயரத்துக்குக் கொண்டு சென்றன. அறியாத வயசு, அய்யய்யோ, சரிகமபதநி, ஊரோரம் புளியமரம் பாடல்கள் எல்லாம் திரையரங்குகளில் கொண்டாட்டமாக அமைந்தன. யுவனால் மட்டுமல்ல அவருடைய ரசிகர்களாலும் மறக்க முடியாத படம் இது.

சென்னை 28 (2007)

துள்ளுவதோ இளமை போல யுவனின் இசையால் ஆரம்பத்தில் அதிகப் பலனை அடைந்த மற்றொரு சிறிய படம்.  புதிய முகங்கள், வெங்கட் பிரபுவின் முதல் படம் என்பதைத் தாண்டி பாடல்களின் அட்டகாசமான வெற்றியால் ரசிகர்கள் திரையரங்குக்குப் படையெடுத்தார்கள். ஜல்சா, சரோஜா சாமான் நிக்காலோ, உன் பார்வை என அத்தனை பாடல்களும் அமிர்தமாக இருந்தன.

பையா (2009)

காதல் படம் என்றாலே யுவனின் இசைக்குச் சிறகுகள் முளைத்துவிடும். அடடா மழைடா பாடல் பலமுறை எஃப்.எம்.களில் ஒலிபரப்பாகி சாதனை படைத்தது. என் காதல் சொல்ல, துளிதுளி, பூங்காற்றே பூங்காற்றே, சுத்துதே சுத்துதே பூமி என லட்டு லட்டாகப் பாடல்கள் அமைந்தன.

தர்மதுரை (2016)

யுவன் சங்கர் ராஜா - வைரமுத்து கூட்டணி இடம்பொருள் ஏவல் படத்தில் முதல்முறையாகப் பணியாற்றினார்கள். அந்தப் படம் இன்றுவரை வெளிவரவில்லை. அதே கூட்டணி தர்மதுரையிலும் கைகோத்து அருமையான பாடல்களை வழங்கியது. எந்தப் பக்கம் பாடலுக்காக வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்தது. ஆண்டிபட்டி பாடல் இன்னும் 100 வருடங்கள் கழித்தும் கேட்கப்படும் என்கிற அளவுக்கு ரசிகர்களை அள்ளியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com