அழகு.. ஆக்ரோஷம்... நயன்தாராவும் கோலமாவு கோகிலாவும்!

நயன்தாராவின் சினிமா வாழ்வில் சொல்லத்தகுந்த சில படங்களில் தவிர்க்க முடியாத ஒன்று கோலமாவு கோகிலா.
அழகு.. ஆக்ரோஷம்... நயன்தாராவும் கோலமாவு கோகிலாவும்!


நயன்தாராவின் சினிமா வாழ்வில் சொல்லத்தகுந்த சில படங்களில் தவிர்க்க முடியாத ஒன்று கோலமாவு கோகிலா. நல்ல நடிகை, கவர்ச்சியானவர் என்கிற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு நாயகிகள் நீண்ட நாள்கள் திரைத்துறையில் நீடிக்க முடியாது. அதே உடலை, அழகை பார்த்துக்கொண்டே இருப்பது ஒருகட்டத்தில் சலிப்பை உருவாக்கும் என்பதைத் தாண்டி மாறுபட்ட கதைக்களத்தில் தங்களுக்கு முன்னுரிமை இல்லாத ‘கதை மட்டும் உள்ள’ படங்களில் பெரும்பாலான உச்ச நடிகைகள் நடிப்பதில்லை.

நயன்தாரா இங்குதான் முற்றிலும் வேறுபடுகிறார். அந்த வேறுப்பாட்டை துல்லியமாக வெளிப்படுத்திய திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’.

நானும் ரவுடிதான் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆனது. விஜய் சேதுபதியின் நடிப்பு, நல்ல இயக்கம் என்பவை சில காரணங்களாக இருந்தாலும் அப்படத்தில் நாயகியான நயன்தாரா (காதம்பரி) காது கேட்காத பெண்ணாக நடித்து தன் உடல்மொழியின் மூலமாகவே சில நல்ல நகைச்சுவைகளை வெளிப்படுத்தியிருப்பார். ‘கோடாம்பாக்க ஏரியா’வில் குத்தாட்டம் போட்ட நயனா இது? என்கிற அளவுக்கு சாந்தமான கதாபாத்திரம். ஆனால், காதம்பரி வரும் காட்சிகள் விசில் பறந்தன.

நயனின் இந்தத் தோற்றத்தை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார் இயக்குநர் நெல்சன். அதே காதம்பரிதான். கொஞ்சம் வாயைத் திறந்து சோகமாகவே சுற்ற வேண்டும். சரி ... ஒரு ஆடைதான். அதுவும் பாவடை சட்டை. சரி.. நாயகன் யோகிபாபு.. இதற்கும் ஓகே சொல்லி களத்தில் குதித்தார் நயன்.

இது சரியாக வருமா என இயக்குநருக்கே சந்தேகம் வந்திருக்கலாம். ஆனால், நயன்தாரா திரையில் வந்தது முதல் இறுதிவரை ‘அந்த’ நயன்தாராவை ரசிக்காதவர்களே இல்லை என்கிற அளவிற்கு படம் மிகப்பெரிய ஹிட்.

தமிழின் உச்ச நடிகையாகவும் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கும் நயன்தாரா நினைத்தால் மேலோட்டமாக கதாநாயகனை காதலித்துவிட்டு பெயருக்கு சில காட்சிகளில் தலையைக் காட்டியபடி இரண்டு பாடல்களுக்கு ஆடினாலே போதும். ஆனால், நயன் தன்னை மாற்றிக்கொண்டதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம்.

குறிப்பாக, ’கோலமாவு கோகிலா’வில் போதைப்பொருளைக் கடத்திச் செல்லும்போதும் பிடிபட்டுக்கொண்டு அடிகளை வாங்கும் நயன்தாராவில் பழைய நயன் வெளிப்படவில்லை என்பது ஆச்சரியமானது.

தன் தங்கையான சோபியைப் பெண் கேட்டு வரும் காட்சியில் அனைவரும் பேசிக்கொண்டிருக்க ஏதோ பிரமை பிடித்ததுபோல் முகபாவனையை வெளிப்படுத்தியிருப்பார் நயன். அத்தனை அழகான நயன்தாரா! 

மேலும், படத்தில் நயனுக்கு நிறைய குளோஸ் அப் காட்சிகள். துப்பாக்கியை எடுக்கும் சாந்தமான நயன் ஆக்ரோஷமாக மாறுவதில் இருக்கும் பாவனைகளைப் பார்க்கும்போது ஒருகணம் பிரமிக்காமல் இருக்க முடியாது. உண்மையில், அவர் தன் நடிப்பை முழுமையாக வெளிப்படுத்திய திரைப்படம் என்றால் கோலமாவு கோகிலாதான்!

அனைத்தையும்விட நயனின் திரைவாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் என பல இருந்தும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ரசிகர்களின் மனநிலைக்கேற்ப தன் கதைத் தேர்வுகளை மாற்றியபடி இருக்கிறார். 

'அறம்’ , 'நெற்றிக்கண்’, ‘மாயா’, ‘கொலையுதிர் காலம்’, ஓ2’ உள்ளிட்ட படங்கள் வித்தியாசமான கதைகளங்களைக் கொண்டவை. இனி வரும் காலங்களில் அவர் கலைப்படங்களில் நடித்தாலும் ஆச்சரியம் இல்லை.  

சினிமாவில் தன்னால் இயன்ற அளவு ஹீரோயின் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் சேர்த்துக்கொண்டிருக்கும் நயன்தாராவிற்கு வாழ்த்துகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com