தலைவா திரைப்படத்திலிருந்து ஜன நாயகன் வரை தன் திரைப்படங்களில் அரசியல் அம்சங்களைச் சேர்த்த விஜய்...
தலைவா! விஜய்யின் திரைப்பயணத்தில் அவராலும் அவரின் ரசிகர்களாலும் மறக்க முடியாத திரைப்படம். படத்தைத் திரையிட்டால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடும் என அன்றைய அரசு, படத்தை வெளியிடத் தடை விதித்தது. தொடர்ந்து நடைபெற்ற பல பேச்சுவார்த்தைகளின் முடிவில், உலகம் முழுவதும் வெளியான தலைவா தாமதமாக 11 நாள்கள் கழித்து தமிழகத்தில் திரையிடப்பட்டது. கூடவே, time to lead வாசகம் நீக்கப்பட்டது.
அப்படத்தின் இறுதிக்காட்சியில் வந்த வாசகத்தை அன்றைய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டது என்றுதான் பேச்சுகள் இருந்தன. சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்களின் பலம் அப்படி! ’தலைமை ஏற்க வேண்டிய நேரம்’ என நேரடியாகவே குறிப்பிட்டதால் விஜய்யும் ஒரு சக்தியாக மாறிவிடுவாரா என்கிற எதிர்கால அரசியல் பதற்றங்களும் பிற கட்சியினரிடம் இருந்தன. இதனால், தலைவா திரைப்படம் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி அரசியலாகவும் பார்க்கப்பட, விஜய் அதனைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு தன் அடுத்தடுத்த படங்களின் கதையில் அரசியல் அம்சங்களைச் சேர்க்கத் தொடங்கினார்.
தலைவா வெளியான அடுத்த ஆண்டே 2014-ல் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெறுகிறது. முதல்முறையாக கம்யூனிசம், விவசாயிகளின் உரிமை, தண்ணீர் பிரச்னை என நேரடியாக அதிகார வர்கத்தை உலுக்கிப் பார்க்கும் வசனங்களும் ஏழைகளின் நிலையும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. கத்தியை வலுவாகப் பிடித்த மக்கள் இயக்க நிர்வாகிகளும் ரசிகர்களும் விஜய் இனி வெறும் நடிகர் மட்டுமல்ல என்கிற நம்பிக்கைக்குச் சென்றனர். இவ்வளவு காலம் ரசிகர்களை நோக்கி சென்றுகொண்டிருந்த விஜய், தலைவாவுக்குப் பிறகு மக்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் முதல் விளைச்சல் கத்தி.
கத்தி விஜய்யின் அரசியலுக்கும் நல்ல துவக்கமாக அமைந்தது. வெளிப்படையாகக் கட்சியையோ அதற்கான விஷயங்களையோ ஆரம்பிக்கவில்லை என்றாலும் மறுபுறம் தன் மக்கள் இயக்கச் செயலாளர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்துக்கொண்டே இருந்தார். விஜய் மக்கள் இயக்கத்திலிருந்த அனைவருக்கும் விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார் என 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்திருக்கிறது என்பதையே தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

கத்தியில் விஜய்!
அடுத்தடுத்து தெறி, பைரவா, மெர்சல் என கதைகள் வேறாக இருந்தாலும் அனைத்திலும், ’ஒரு தலைவன் இருக்கிறான்!’ பாணியை மட்டும் விஜய் விடவில்லை. தலைவா, கத்தியில் செய்ததைவிட பெரிய செய்தியைச் சொல்ல வேண்டுமென்பதற்காவே மீண்டும் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்தார். வெளிப்படையாகவே ஆட்சி மாற்றத்தை விரும்பும் ஆளாகவும் அரசியலில் இளைஞர்கள் சக்தி எவ்வளவு முக்கியம் என்பதை, ‘ஒரு விரல் புரட்சி’ பாடலில் தன்னுடைய அரசியல் வருகை விரைவில்... என உறுதி செய்தார். அதுகுறித்து கேள்விகள் எழுந்தால் எந்தச் சலனமும் இல்லாமல், மென்மையாக அதனைக் கடந்து சென்றாலும் இன்னொரு பக்கம், சாதாரண ஆள், மக்களின் நாயகனாக மாறும் இக்கதைகளில் விஜய்யின் கவனம் இருந்துகொண்டே இருந்தன. ஒரு மேடையில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் ‘ஆளப்போறான் தமிழன்’ என்றார். மெர்சலில் இடம்பெற்ற இப்பாடல் கிட்டதட்ட விஜய் அரசியலுக்குத் தயாராகிவிட்டார் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம் என்பதை உறுதிபடுத்தியது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே மக்கள் இயக்கம் தன் பணிகளில் தீவிரம் காட்ட, அடுத்தடுத்த அடிகளை மிக கவனமாக வைத்தார் விஜய். எஸ். ஏ. சந்திரசேகர் மக்கள் இயக்கத்தின் பெயரை அரசியல் ரீதியாகப் பயன்படுத்த முயன்றதால்தான் அவருக்கும் விஜய்க்கும் உரசல் ஏற்பட்டது என்றும் கூறப்படுவதுண்டு. அந்த அளவு அரசியல் வருகையையும் அதற்கான தன் திரைப்படங்களையும் கறாராக திட்டமிட்டிருக்கிறார்.
ஒருபடி மேலே சென்று, தன் திரைப்பட விழாக்களில் ‘குட்டி கதை’களைச் சொல்ல ஆரம்பித்தார். சினிமாவிலும் அரசியலிலும் சிலர் அங்கே இங்கே என மறைமுகமாகத் தாக்கப்பட்டார்கள். சில அரசியல் மாறுதல்கள், கரோனாவுக்குப் பின்பான அதீத சமூக வலைதள பயன்பாடுகள், இன்ஸ்டாகிராம் தாக்கம் என புதிய தலைமுறைக்கான தளங்கள் மாறின. விஜய் ரசிகர்கள் அதனைக் கச்சிதமாகப் பயன்படுத்த ஆரம்பிக்க, அதுவே பெரிய தாக்கங்களை ஏற்படுத்தவும் செய்தது.
தலைவா திரைப்படத்தில் எந்த அரசியல் காரணங்கள் வெளியிடாமல் செய்தனவோ அதே போல் விஜய்யின் இறுதிப்படமான ஜன நாயகனும் வெளியீட்டில் இன்றுவரை சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. ஒரு திரைப்படத்தைப் பார்த்து தணிக்கை சான்றிதழை வழங்க வேண்டிய ஒரு அமைப்பு, அதனைச் செய்யாமல் இழுத்தடிப்பதற்கு அரசியலைத் தாண்டி வேறென்ன பெரிய காரணங்கள் இருந்துவிட முடியும்? தலைவா பிரச்னையின் போது விஜய்க்கு பெரிய அடையாளங்கள் இல்லை. இன்றும், ஏதோ ஒரு அரசியலால் வேறு வகையில் ஜன நாயகன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது தலைவா விஜய் இல்லை. தமிழக முதல்வர் விஜய்! தலைவாவிலிருந்து ஜன நாயகன் வரையிலான இந்த இடைப்பட்ட 13 ஆண்டுகளில் நீண்டகால நோக்கத்தின் விளைவாகவே தன் திரைப்படங்கள் அமைய வேண்டும் என்பதில் விஜய் தனிக்கவனம் வைத்திருந்திருக்கிறார். தலைவாவிலிருந்து ஜன நாயகன் வரை, ஜன நாயகனிலிருந்து முதல்வர் வரை என விஜய்யைச் சுற்றி தசாப்த காலமாக அரசியல் இருந்துகொண்டேதான் இருந்திருக்கிறது அல்லது அந்த அரசியலைத் திட்டமிட்டே விஜய் உருவாக்கினார்!
From the movie Thalaivaa to Jana Nayagan, Vijay has incorporated political elements into his films...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரசிகர்களை நோக்கி விஜய்... நாளைய தீர்ப்பிலிருந்து தலைவா வரை!

துள்ளாத மனமும் துள்ளும்! விஜய் - சிம்ரன் ஜோடியின் வெற்றிப் படங்கள்!

விஜய், நல்ல நடிகர் மட்டுமல்ல, ரசிகர்களுக்கு நல்ல தலைவன், நல்ல மனிதனும்கூட!
டாக்டர் பட்டம் பெற்ற நற்பணி நாயகன் விஜய்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies





