‘அக்டோபர் 9’ இன்று தேசிய தபால் தினம்... சொந்தக் கையெழுத்தில் உங்கள் உறவுகளுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்!

அருகி வரும் கடிதம் எழுதும் பழக்கத்தை மீட்டெடுக்கும் நோக்கில், வாசகர்கள் தங்களது உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, மரியாதைக்குரியவர்களுக்கோ கடிதம் எழுதி அனுப்புங்கள்.
‘அக்டோபர் 9’ இன்று தேசிய தபால் தினம்... சொந்தக் கையெழுத்தில் உங்கள் உறவுகளுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள்!
Published on
Updated on
2 min read

இன்று தேசிய தபால் தினம். கணினி யுகம் வரும் முன் இந்தியா மற்றும் உலக நாடுகளில் தகவல் பரிமாற்ற விஷயத்தில் கடிதங்களே பிரதான இடம் வகித்தன. இன்றும் கூட அரசியல் ரீதியான முக்கியகோப்புகளில் ரகசியம் காக்க கடிதப் பரிமாற்றங்களும் பிரதான இடம் வகித்தாலும் கூட முந்தைய காலங்களைப் போல வெகுஜனப் புழக்கத்தில் கடிதங்கள் அருகி கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமலே போய்விட்டன என்று கூட சொல்லலாம். ஆனாலும் உங்களில் எவருக்கேனும் எழுதப்படாத காகிதங்களையும், புத்தம் புது அழகுப் பேனாவையும் கண்டதுமே அதில் எதையாவது எழுதும் பேராவல் கிளர்ந்து எழுந்தால் நீங்கள் நிச்சயம் கடிதம் எழுதுவதில் ஆர்வம் மிக்கவர் என்று அர்த்தம். என்ன ஒரு கஷ்டமெனில் நமக்கு அதற்கான வாய்ப்புகள் குறைவு. இப்போது அனைத்து கடிதப் பரிவர்த்தனைகளையும் மின்னஞ்சல், வாட்ஸ் அப், என்று முடித்துக் கொள்கிறோம். புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கவே இருக்கிறது இன்ஸ்டாகிராம், ஃப்ளிக்கர். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக முளைத்த இவை எத்தனை இருந்த போதும் நமக்கே நமக்கென யாராவது மனதுக்கு நெருக்கமான நண்பர்களோ, உறவினர்களோ கடிதம் எழுதி அதைத் தபாலில் அனுப்பி அது நம் முகவரியை வந்தடைந்தால் நிச்சயம் அந்தக் கடிதத்தைப் பிரித்து வாசித்து முடிப்பதற்குள் நாம் ஆர்வத்தின் உச்சத்தில் இருப்போம் தானே?!

எனவே தேசிய தபால் தினத்தை முன்னிட்டு தினமணி வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு. 

அருகி வரும் கடிதம் எழுதும் பழக்கத்தை மீட்டெடுக்கும் நோக்கில், வாசகர்கள் தங்களது உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, மரியாதைக்குரியவர்களுக்கோ, மனம் கவர்ந்தவர்களுக்கோ... அவ்வளவு ஏன் உங்களது சொந்தக் குழந்தைகளுக்கோ, கணவருக்கோ கூட அவரவர் சொந்தக் கையெழுத்தில் ஒரு கடிதம் எழுதி, மூலத்தை உரியவர்களுக்கு அனுப்பிவிட்டு, பிரதியை தினமணி.காம் முகவரிக்கு அனுப்பினால் அப்படியான சொந்தக் கையெழுத்துக் கடிதங்களை தினமணி.காம் சிறப்புக் கட்டுரைப் பிரிவில் வெளியிட்டுச் சிறப்பிக்கிறோம். எங்களது விண்ணப்பத்தை மதித்து கடந்த ஆண்டு எண்ணற்ற வாசகர்கள் கடிதப் பிரதி அனுப்பி இருந்தார்கள். அவற்றில் சிறந்த கடிதப் பிரதிகளைப் பிரசுரித்திருந்தோம். என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சியால் கணினியில் எளிதில் கடிதத்தை டைப் செய்துவிட முடிந்தாலும் நமது உறவுகளின் சொந்தக் கையெழுத்தில் நமக்கு வந்து சேரும் கடிதங்களின் மீதான உள்ளார்ந்த பாசப்பிணைப்பும், பந்தமும் கணினியின் கீ போர்டு எழுத்துக்களால் உருவாக்கப்படும் கடிதங்களின் மீது நமக்கு வருவதில்லை என்ற உண்மையை அப்போது நீங்கள் நிஜமாக ஒப்புக் கொள்வீர்கள்.

கடிதப் பிரதிகளை அனுப்ப வேண்டிய முகவரி...

தினமணி .காம்

எக்ஸ்பிரஸ் கார்டன்,
29, 2 - வது பிரதான சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,

சென்னை - 600058.


நிபந்தனை

* கடிதப் பிரதிகளை மின்னஞ்சலில்   அனுப்பக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com