இந்திய தபால் தினத்தை முன்னிட்டு தினமணி.காம் அறிவித்த கடிதப் போட்டியில் தேர்வான சிறந்த கடிதங்கள் வாசகர்கள் பார்வைக்கு!

ஆவடியில் இருக்கும் தம்பி விடுமுறையில் ஊருக்கு வரவிருக்கும் தன் மனைவியிடம் மீன் குழம்பும், காய்கறிகளும் கொடுத்து விடச் சொல்லி அக்காவுக்கு அன்புக் கட்டளையிடுவதில் தான் நமது குடும்பங்களின் பந்தக் கயிறு
இந்திய தபால் தினத்தை முன்னிட்டு தினமணி.காம் அறிவித்த கடிதப் போட்டியில் தேர்வான சிறந்த கடிதங்கள் வாசகர்கள் பார்வைக்கு!

இந்திய தபால் தினத்தை முன்னிட்டு கடந்த வாரத்தில் தினமணி வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு செய்திருந்தோம். அருகி வரும் கடிதம் எழுதும் பழக்கத்தை மீட்டெடுக்கும் நோக்கில், வாசகர்கள் தங்களது உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, மரியாதைக்குரியவர்களுக்கோ, மனம் கவர்ந்தவர்களுக்கோ... அவரவர் சொந்தக் கையெழுத்தில் ஒரு கடிதம் எழுதி, மூலத்தை உரியவர்களுக்கு அனுப்பிவிட்டு, பிரதியை தினமணி.காம் முகவரிக்கு அனுப்பினால் அப்படியான சொந்தக் கையெழுத்துக் கடிதங்களை தினமணி.காம் சிறப்புக் கட்டுரைப் பிரிவில் வெளியிடுவதாக அறிவித்திருந்தோம். எங்களது விண்ணப்பத்தை மதித்து சில வாசகர்கள் கடிதப் பிரதி அனுப்பி இருக்கிறார்கள். என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சியால் கணினியில் எளிதில் கடிதத்தை டைப் செய்துவிட முடிந்தாலும் நமது உறவுகளின் சொந்தக் கையெழுத்தில் நமக்கு வந்து சேரும் கடிதங்களின் மீதான உள்ளார்ந்த பாசப்பிணைப்பும், பந்தமும் கணினியின் கீ போர்டு எழுத்துக்களால் உருவாக்கப்படும் கடிதங்களின் மீது நமக்கு வருவதில்லை என்பது சென்ட்டிமெண்டல்வாதமாக இருப்பினும் அதுதானே உண்மை!

நீங்களே இந்தக் கடிதப் பிரதிகளைப் பாருங்கள் -

சென்னை ஆவடியில் வசிக்கும் ராஜூ, திருநெல்வேலி, கீரமங்கலத்தில் இருக்கும் தனது அக்கா மாரி செல்விக்கு எழுதிய கடிதம்.


சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் முகவரி குறிப்பிடாமல் தமிழக கிராமமொன்றில் வசிக்கும் தனது பெற்றோர் மற்றும் சகோதரருக்கு எழுதிய பாச மடல் ஒன்று;

திருச்சி லால்குடியைச் சேர்ந்த A.மாதவன் என்பவர் சென்னை கெளரிவாக்கத்தில் வசிக்கும் தனது நண்பரும், ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டருமான டி.பி. ஜெயராமனுக்கு எழுதிய கடிதம் ஒன்று.


புது டெல்லியிலிருந்து ரஞ்சித் M.S என்பவர் காலம் சென்ற தனது பாட்டியாரான சீரங்காத்தாவுக்கு எழுதிய ஒரு நெகிழ்ச்சியான மடல்.


பெங்களூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ஒருவர், இந்திய தபால் தினத்தைப் பற்றித் தனது தந்தைக்கு எழுதிய கடிதம்,

சிங்கப்பூர் மீனாள் தேவராஜன் தனது கல்லூரித் தோழி சந்திரலேகா தேவதாஸுக்கு எழுதிய பிரியம் பொங்கிப் பிரவகிக்கத் தங்களது இளமைக்காலங்களை மீட்டெடுக்க முயன்ற ஆதங்கக் கடிதம்...

இந்தக் கடிதங்கள் ஒவ்வொன்றும் அவற்றை எழுதியவர்களைப் பொருத்தவரை அவரவர் நினைவின் பெட்டகங்கள்.

கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தினமணி.காமின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இதைக் கருதுகிறோம்.

கடிதம் எழுதி, பிரதி எடுத்து அனுப்பிய தினமணி வாசகர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி கலந்த வாழ்த்துக்கள்!

இனி கடிதப் பிரதிகளைப் பார்வையிடுவோமா -

ஆவடி ராஜூவின் கடிதம்

தாம்பரம் ராஜசேகரனின் கடிதம்

திருச்சி லால்குடி மாதவனின் கடிதம்

புது டெல்லி ரஞ்சித், தன் பாட்டிக்கு எழுதிய கடிதம்

ஓய்வுபெற்ற துணை ஆட்சியர், தன் தந்தைக்கு எழுதிய கடிதம்

சிங்கப்பூர் மீனாள் தேவராஜன் தன் தோழிக்கு எழுதிய கடிதம்...

மேலே உள்ள கடிதப் பிரதிகளில் உறவின் பிணைப்பு மட்டுமல்ல அந்தந்த வாசகர்களின் வாழ்வியல் முறைகளும்கூட பிரதிபலிக்கின்றன. கிராமத்து வாழ்வில் புழக்கடை வெண்டைக்கும், கத்தரிக்கும், பீர்க்கைக்கும், சுரைக்கும் நிச்சயம் பிரதான இடமுண்டு. அது மட்டுமல்ல, ஆவடியில் இருக்கும் தம்பி விடுமுறையில் ஊருக்கு வரவிருக்கும் தன் மனைவியிடம் மீன் குழம்பும், காய்கறிகளும் கொடுத்துவிடச் சொல்லி அக்காவுக்கு அன்புக் கட்டளையிடுவதில்தான் நமது குடும்பங்களின் பந்தக் கயிறுகள் இறுகுகின்றன.

மற்றொரு கடிதத்தில் ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டரான தன் நண்பருக்கு அன்று வெளிநாடு வாழ் இந்தியராக இருந்த மாதவன் எழுதிய கடிதம் கொஞ்சம் சோகம், கொஞ்சம் ஹாஸ்யம் என நண்பர்களுக்கிடையிலான கடிதங்களின் சாராம்சத்துக்கு சற்றும் குறையாத இன்பம் தரத்தக்கது. ஓய்வுபெற்ற துணை ஆட்சியரின் கடிதக் கையெழுத்து வாசிப்பதற்குச் சிரமமாக இருந்தாலும்கூட இப்படியான கையெழுத்துடன் கூடிய உறவினர்களின் நேசத்தை நினைவு மீட்க மற்றொரு வாய்ப்பு கிடைத்ததே என்ற உணர்வையே அது தருகிறது.

மொத்தத்தில், அடுத்தவர் கடிதங்களைப் படிக்கக்கூடாது என்பதுதான் கடிதங்களுக்கான பொதுவான நெறி. ஆனால் மேற்கண்ட கடிதங்களில் உலக ரகசியங்கள் எதுவும் இல்லாத காரணத்தாலும், அவற்றின் சுவாரஸ்யங்கள் மேலும் பலரை இம்மாதிரியான கடிதங்களைத் தங்களது உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் எழுத வேண்டும் எனும் உணர்வை வாசகர்களிடையே தூண்டலாம் என்பதாலும் அந்தக் கடிதங்கள் உங்கள் முன் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நன்றி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com