சீமைக்கருவேலத்தில் தீமையைக் காட்டிலும் நன்மை அதிகம் எனும் வாதத்தில் நிஜம் உண்டா?

சீமைக்கருவேல மரங்கள், சூழல் சங்கிலியில் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்த மரங்களை ஒட்டுமொத்தமாக வெட்டி அழித்தால் மாபெரும் சூழலியல் பாதிப்பு வந்து சேரும் என்ற எதிர்ப்பலையின் பேரோசை
சீமைக்கருவேலத்தில் தீமையைக் காட்டிலும் நன்மை அதிகம் எனும் வாதத்தில் நிஜம் உண்டா?

இந்த ஆண்டின் துவக்கத்தில் சீமைக் கருவேல மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் சேர்த்து தமிழ்நாட்டின் நிலப்பரப்பிலிருந்து முற்றிலுமாக அழித்தே தீர வேண்டும் என்ற கோஷம் மாநிலம் முழுக்கவே உரக்க ஒலித்துக் கொண்டிருந்தது. மக்களிடமும் சீமைக்கருவேலம் குறித்த வெறுப்புணர்வு நிறையவே இருந்தது. கிராம மக்களிடையே சீமைக்கருவேல மரங்கள் தான் அவர்களது குடிநீர் பிரச்னைக்கு ஒட்டுமொத்த காரணம் என வலியுறுத்தப்பட்டு அவற்றை நீக்குவதின் அவசியம் உணர்த்தப்பட்டது. சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீரை ஒட்டுமொத்தமாக உறிஞ்ச வல்லவை எனவே அவற்றை நீக்கினால் ஒழிய தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் உயராது என்றொரு வாதம் பல சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களால் முன் வைக்கப்பட்டது. தன்னார்வப் போராளிகளில் மதிமுக தலைவர் வை.கோவின் போராட்டம் அரசு அதிகாரிகளையும், நீதிமன்றங்களையும் கூட அசைத்துப் பார்த்து சீமைக்கருவேல மரங்களுக்கு எதிரான அறிக்கைகளையும், உத்தரவுகளையும் இட வைத்தது. ஒரு சமயத்தில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் தங்களுக்கு கீழிருந்த அதிகாரிகளை முடுக்கி விட்டு கிராமங்கள் தோறும் சீமைக்கருவேல மரங்களை இல்லாமலாக்க ஆணைகளைப் பிறப்பித்தனர்/ திடீரென அந்த அலை ஓய்ந்து... தற்போது சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு எதுவுமில்லை, மாறாக சீமைக்கருவேல மரங்கள், சூழல் சங்கிலியில் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்த மரங்களை ஒட்டுமொத்தமாக வெட்டி அழித்தால் மாபெரும் சூழலியல் பாதிப்பு வந்து சேரும் என்ற எதிர்ப்பலையின் பேரோசை காதுச் சவ்வுகளை கிழிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டில் எது நிஜம்? 

இவ்விஷயம் குறித்து ஆராய்ந்து வரும் சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒன்று, ‘பொது மக்கள் அஞ்சுவது போல சீமைக்கருவேலத்தால் நிலத்தடி நீருக்கு பாதிப்புகள் இல்லை, மாறாக அம்மரங்களை ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்க நினைத்தால் சுற்றுச்சூழலில் மாபெரும் பாதிப்பு ஏற்படும்’  என நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களது அறிக்கையைச் சமர்பித்துள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களாவன;

சீமைக்கருவேல மரங்கள் தொடர்ந்து 6 மாதங்களுக்கு தண்ணீரில் மூழ்கி இருந்தால் தானாகவே மடியக்கூடிய மரங்கள். மேலும் அம்மரத்தின் வேர்களுக்கு நிலத்தடியில் பெரும் தொலைவுக்கு ஊடுருவிச் செல்லும் தன்மை இல்லை. அது மட்டுமல்ல சீமைக்கருவேல மரங்கள் கிராமப்புற மக்களுக்கு மிகச்சிறந்த எரிபொருளாகப் பயன்பட்டு வருகிறது. வறண்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கு, மழை தப்பிய வறட்சி காலங்களில் சிறந்த வாழ்வாதாரமாகவும் இம்மரம் விளங்குகிறது. பெரும்பாலான கிராமப்புற மக்கள் வருமானத்திற்கு சீமைக்கருவேல மரத்தை நம்பி வாழும் நிலைமையும் பல இடங்களில் நிலவுகிறது. எனவே, சீமைக்கருவேல மரங்களை முற்றாக ஒழிக்கும் உத்தரவை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும், என வனத்துறை முதன்மை ஆலோகரின் தலைமையிலான நிபுணர் குழு அறிவித்துள்ளது. 

அந்தக் குழு தங்களது அறிக்கையை மதிமுக தலைவர் வைகோ, சீமைக்கருவேல மரங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் பிரஸ்தாபித்திருந்த மனுவுக்கு எதிர் வாதமாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜீ, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், நீதிபதி எம். சுந்தர் உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச்சில் சமர்பித்தனர்.

இதையொட்டி, சீமைக்கருவேல மரங்களால் பாதிப்புகளை விட நன்மைகள் அதிகமிருப்பதால், இவ்வழக்கின் மீதான விசாரணை நவம்பர் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com