திறந்தவெளியில் மலம் கழித்தால், வீட்டுக்கு மின்சாரம் ரத்து... ஸ்வச் பாரத் மிரட்டல்!

ஜஹஸ்பூரில், திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்திய மக்களில் 6 பேர் இந்திய தண்டனைச் சட்டம் 151 ஆவது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு மாலையே பெயிலில் விடுவிக்கப் பட்டனர்.
திறந்தவெளியில் மலம் கழித்தால், வீட்டுக்கு மின்சாரம் ரத்து... ஸ்வச் பாரத் மிரட்டல்!

ராஜஸ்தான், பில்வாரா மாவட்டத்திலுள்ள ஜஹஸ்பூர் கிராமத்தில், மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தை மதிக்காமல் மக்கள் இப்போதும் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்துவதால் கோபமான ஸ்வச் பாரத் செயல் திட்ட அதிகாரி ஒருவர் அதிரடியாக, இனி, இந்தக் கிராமத்தில் யாரேனும் திறந்த வெளியில் மலம் கழித்தால் உடனடியாக அவர்களது வீடுகளில் மின்சார இணைப்பு ரத்து செய்யப்படும், என்பதோடு சம்ம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் உத்தரவு பிறப்பித்து விட்டார். குறிப்பிட்ட அந்தக் கிராமத்தில் இதுவரை அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தை பயன்படுத்தி, தங்களது வீடுகளில் கழிப்பிட வசதி செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 19 % மட்டுமே. அங்கு வசிக்கும் கிராமத்தார் சிலர், இப்போதும் அரசின் இந்த நலத்திட்டத்தின் அவசியத்தை உணரக்கூடியவர்களாக இல்லை. அவர்கள் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்கருத்து கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

திறந்தவெளிக் கழிப்பிடங்களே இல்லாத நிலை வேண்டும் எனும் மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் வெற்றியை சீர்குலைப்பதாக இருக்கிறது அவர்களது செயல்பாடு. அதனால் தான் ஜஹஸ்பூர் SDO வான கர்தர் சிங் இப்படி ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். அவரது உத்தரவின் பேரில், இன்னும் 15 நாட்களுக்குள்ளாக எஞ்சியுள்ள கிராமத்தார் அத்தனை பேரும் ஸ்வட் பாரத் திட்டத்தின் படி அவரவர் வீடுகளுக்குள் சுகாதாரமான கழிப்பிடம் கட்டிக் கொண்டு, நாள் தோறும் அதைப் பயன்படுத்தா விட்டால், குறிப்பிட்ட அந்த வீடுகளில் மின்சார இணைப்பு ரத்து செய்யப்படும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இப்படி ஒரு உத்தரவை அடுத்து, கடந்த ஞாயிறு அன்று, ஜஹஸ்பூரில், திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்திய மக்களில் 6 பேர் இந்திய தண்டனைச் சட்டம் 151 ஆவது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு மாலையே பெயிலில் விடுவிக்கப் பட்டனர். இந்தத் தகவலை அறிந்த பில்வாரா மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஸ்வச் பாரத் செயல்திட்ட அதிகாரியின் உத்திரவை ரத்து செய்து உத்தரவிட்டதோடு; மக்களை சுகாதாரமான முறையில் கழிப்பிட வசதிகளைச் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துவது மட்டுமே அரசின் கடமையே தவிர, அவர்களை அச்சுறுத்துவது அல்ல! அச்சுறுத்தலின் மூலம் பொதுமக்களை ஒரு வேலையைச் செய்து முடிக்குமாறு பணிக்க முடியாது. மக்கள் தாங்களே உணர்ந்தாக வேண்டும். அப்போது தான், இது போன்ற விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த இயலும் என்றும் கூறி இருந்தார்.

இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய ஜஹஸ்பூர் கிராமத்தைச் சார்ந்த உள்ளூர் சமூகப் போராளி ஒருவர் பக்ர்ந்து கொண்ட விஷயம் யோசனையைத் தூண்டும் விதமாக இருந்தது, அதாவது இங்கே பில்வாராவில் அனேக கிராமங்களில் இப்போதும் குடி நீர் பிரச்னை இருக்கிறது. அரசால் அதைத் தீர்க்க இயலவில்லை. இந்த லட்சணத்தில் ஸ்வச் பாரத்தின் பெயரில் வீட்டுக்குள் கழிப்பிடமும் கட்டிக் கொண்டால், அதைச் சுத்தம் செய்வதற்கு தன்ணீருக்கு எங்கே போவார்கள். இங்கே குடிநீருக்காக பெண்களும், ஆண்களும் காலிக் குடங்களுடன் நெடுந்தூரம் வெயிலி நடந்து சென்றாக வேண்டிய நிலையில் இருக்கும் போது, அரசு அதிகாரிகள், கிராம மக்களை அச்சுறுத்தும் விதமாக இப்படிப் பட்ட கட்டளைகள் எல்லாம் போடாமலிருப்பதே நல்லது. என்கிறார்.

அவர் சொல்வதும் சரி தானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com