வீட்டுக்குள் அத்துமீறிய  கயவனை, தனி ஆளாக ஹாக்கி ஸ்டிக்கால் அடித்துத் துவைத்து போலீஸிடம் ஒப்படைத்த வீரப்பெண்!

இந்த இடத்தில் தான், எல்லாப் பெண்களையும் போல பூஜாவும் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினால் மிரண்டு போவார் என்று எதிர்பார்த்த அந்தப் அந்நியனின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.
வீட்டுக்குள் அத்துமீறிய  கயவனை, தனி ஆளாக ஹாக்கி ஸ்டிக்கால் அடித்துத் துவைத்து போலீஸிடம் ஒப்படைத்த வீரப்பெண்!

மகாராஷ்டிர மாநிலத்தின் கொங்கன் சரகத்திலிருக்கிறது வாசாய் நகரம். இங்கே கடந்த புதனன்று மாலையில் நிகழ்ந்த சம்பவம் வசாய் நகர், வசந்த நகரியின் குல்மோஹர் அபார்ட்மெண்ட்டைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் பூஜாவுக்கு பாராட்டுக்களை அள்ளிக் குவித்துள்ளது. பூஜா அப்படி என்ன செய்து விட்டார்?

கடந்த புதன் மாலையில் பூஜாவும், அவரது மகனும் குல்மோஹர் சொசைட்டி அபார்ட்மெண்ட் இரண்டாவது தளத்தில் இருக்கும் தங்களது வீட்டில் வீட்டிலிருந்தனர். அப்போது அவர்களுடன் பூஜாவின் கணவர் பிரேந்திர குமார் இல்லை. ஒரு அலுவல் காரணமாக அவர் வெளியில் சென்றிருந்தார். பிரேந்திர குமார் வசாய் நகர பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா அமைப்பின் தலைவராக இருப்பதால் அடிக்கடி தனது மனைவியையும், மகனையும் விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழல் வழக்கமானதே. அப்படியான ஒரு சூழலில் தான் புதன்கிழமை மாலை 7 மணி அளவில் முன் பின் தெரியாத அந்நிய ஆண் ஒருவன், பூஜா வீட்டில் காலிங் பெல் அடித்துள்ளார். மேஜிக் ஐ வழியாக யாரென்று பார்த்து விட்டு கதவைத் திறந்து பாதுகாப்பு கேட்டின் உள்ளே இருந்தவாறு யார்? என விவரம் கேட்டுள்ளார் பூஜாவின் மகன் குஷ். வந்தவன் யாரோ  ‘சிண்டே’  என்பவரவது வீடா இது? என வினவ, அட்ரஸ் மாறி வந்து பெல் அடித்திருக்கிறீர்கள், நீங்கள் சொல்லும் பெயரில் இங்கே யாரும் இல்லை என பதில் சொல்லி விட்டு சிறுவன் கதவை மூடி இருக்கிறான். 

அடுத்து சில விநாடிகளில் மீண்டும் காலிங் பெல் சத்தம் கேட்டது. குஷ் கதவைத் திறந்து யாரென்று பார்த்தால், முன்பு வந்த அதே மனிதன்.

இந்த முறை அவன் அட்ரஸ் எதுவும் கேட்கவில்லை. நேரடியாக, சிறுவன் என்றும் பாராமல் குஷ்ஷுடன் வாக்குவாதத்தில் இறங்கி, அவனை இடித்துத் தள்ளிக் கொண்டு அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து விட்டான். உள்ளே வந்தவன் நேராகப் பூஜாவை அணுகி அவரது வாயை இறுக மூடி மிரட்டி அச்சுறுத்தும் வண்ணம் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தியிருக்கிறான்.

இந்த இடத்தில் தான், எல்லாப் பெண்களையும் போல பூஜாவும் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினால் மிரண்டு போவார் என்று எதிர்பார்த்த அந்தப் அந்நியனின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. அவர் எதிர்த்துப் போராடத் துவங்கினார். கூடவே தன் மகன் குஷ்ஷிடம், ஓடிப்போய் வேறொரு அறைக்குள் நுழைந்து கதவை இறுகச் மூடிக் கொண்டு உள்ளேயே இரு’ என்று அறிவுரை வேறு சொல்லி இருக்கிறார். வந்தவன் சிறுவனைப் பகடைக்காயாக்கி தன்னை மிரட்டக் கூடாது என்ற சமயோசித புத்தியால், மகனிடம் அப்படி உத்தரவிட்டார் பூஜா.

அவனும் ஓடிப்போய் ஒரு அறைக்குள் நுழைந்து கதவை மூடிக் கொள்ளவே, பூஜா, இப்போது தன் வீட்டுக் கதவின் பின்புறம் சாற்றி வைக்கப்பட்டிருந்த ஹாக்கி ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தவனை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். என்ன தான் எதிர்த்துப் போராடும் தைரியமிருந்தாலும் ஒரு பெண்ணால் எத்தனை மணி நேரம் இம்மாதிரியான கயவனை எதிர்த்து தொடர்ந்து சமாளிக்க முடியும். 15 நிமிடங்களாக அவனுடன் போராடித் தோற்று பூஜா, அக்கம்பக்கத்தினரின் உதவிக்காக கத்தத் தொடங்கவே விரைவிலேயே அண்டை வீட்டுக்காரர்கள் ஓடி வந்து அவனை நையப்புடைத்து ஒரு அறையில் வைத்துப் பூட்டி விட்டு காவல்துறையிடம் தெரிவித்து விட்டு அவர்களது வருகைக்காக காத்திருக்கத் தொடங்கினர்.

வந்தவனின் நோக்கம் திருட்டு அல்ல, பூஜாவின் கணவர் அரசியல் வாதி என்பதால், இது ஏதோ உள்நோக்கத்திற்காக நடந்த சம்பவம் தான். இதற்கு முன்பும் பிரேந்திர நாத்துக்கு தனிப்பட்ட முறையில் சில தாக்குதல்கள் நிகழ்ந்திருந்தாலும் இப்படி  குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அந்த தாக்குதல்கள் இருந்திருக்கவில்லை. ஆனாலும், எதற்கும் பாதுகாப்புக்கு இருக்கட்டும் என்ற எண்ணத்தில் தான் வீட்டில் கதவு மூலையில் எப்போதும் ஹாக்கி ஸ்டிக்குகளை சாற்றி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த ஹாக்கி ஸ்டிக்கும், பூஜாவின் தைரியமும், சம்யோசிதமும் தான் அவரை அன்று மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியிருந்தது. இல்லாவிட்டால், அன்று அவர்களது வீட்டில் உயிர்ப்பலி நிகழவும் வாய்ப்புகள் இருந்ததாக பூஜாவின் கணவன் பிரேந்திர நாத் பின்னர் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

பிரேந்த்திர நாத்தின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து , பிரச்னையில் ஈடுபட்டவனது பெயர் ரசூல் என்று பின்னர் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. தற்போது கைது செய்யப்பட்டு வசாய் காவல்நிலையத்தில் ரிமாண்டில் வைக்கப்பட்டிருக்கும் ரசூலின் மீது கொலைமுயற்சி மற்றும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றமை என இருவழக்குகள் பதியப்பட்டுள்ளன.

வந்தவனது நோக்கம் திருட்டில்லை, அவன் திட்டமிட்டே பூஜாவின் வீட்டை மையமாக வைத்தே அபார்மெண்ட்டுக்குள் நுழைந்திருக்கிறான் என்பதற்கு சிசிடிவி வீடியோ பதிவுகள் சாட்சியாகியுள்ளன.

எது எப்படியோ பூஜாவின் வீட்டில் அந்நாளில் அசம்பாவிதம் எதுவும் நடக்காது தப்பியதற்கு அவரது தைரியம் தான் முதல் காரணம் என அபார்ட்மெண்ட் வாசிகள் பெரிதும் மெச்சிக்கொள்கிறார்கள்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com