Enable Javscript for better performance
who killed arushi?|ஆருஷியைக் கொன்றது யார்?- Dinamani

சுடச்சுட

  

  ஆருஷியைக் கொன்றது யார்? ஊடகச் செய்திகள், தல்வார் திரைப்படம், நீதிமன்றத் தீர்ப்பு... பின்பும் நீடிக்கும் மர்மங்கள்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 17th October 2017 03:31 PM  |   அ+அ அ-   |    |  

  0000_arushi_in_tour

   

  ஆருஷி கொலையைப் பற்றி அலசி ஆராயும் முன் ஆருஷியின் நெருங்கிய தோழி, தனது வலைத்தளத்தில் ஆருஷி குறித்து பதிவு செய்துள்ள விஷயங்களைப் பற்றி பார்த்து விடலாம்.

  ‘ஆருஷியின் பெற்றோருக்கு விடுதலை கிடைத்து விட்டது’

  ஆருஷியை அவளது 5 வயதிலிருந்து நான் அறிவேன். நானும் அவளும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்தோம் என்பதிலிருந்து, ஒரே இடத்தில் டான்ஸ் கற்றுக் கொண்டோம், ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசித்தோம், ஒத்த வயதுடைய நெருங்கிய தோழிகளாக இருந்தோம் என்பது வரை எங்கள் இருவருக்கிடையே பல விஷயங்கள் நெருக்கமானதாக இருந்தன. ஆருஷி கொலையாவதற்கு முதல்நாள் மாலையில், என் வீட்டிற்கு வந்திருந்தாள். அப்போது பார்க்க வேண்டுமே அவளது உற்சாகத்தை! அன்று முழுதும் அவள், வார இறுதியில் வரவிருந்த தனது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த சந்தோஷக் கனவுகளில் இருந்தாள். அன்று, அவளிடம் நான் கண்ட கவலைக்குரிய ஒரே விஷயம் கடுமையான சளித்தொல்லையால் அவள் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தாள் என்பது மட்டுமே! மற்றபடி ஒரு 14 வயதுப் பெண்ணுக்குரிய துள்ளலிலும், கொண்டாட்டத்திலும் எந்தக் குறையுமில்லாதவளாகவே அவள் இருந்தாள். அன்று நாங்கள், எங்களது பள்ளி புராஜெக்ட் ஒன்றை இருவருமாகச் சேர்ந்து பேச்சும், சிரிப்புமாகச் செய்து கொண்டிருந்தோம். பின்னர் அவள் தூக்கம் வருகிறதென்று வீட்டுக்குச் சென்று விட்டாள்., மறுநாள் அதாவது ஆருஷி கொல்லப்பட்ட தினத்தில் நான் அவளைச் சந்திக்கவில்லை, என்றாலும் மாலையில் அவள் என்னிடம் தொலைபேசியில் பேசினாள். அப்போதும் நான் அவளிடம் எந்தவிதமான மாற்றத்தையும் உணரவில்லை.

  மறுநாள் காலையில் நான் கண் விழித்ததே, ஆருஷி கொலைச்செய்தியைக் கேட்டுக் கொண்டு தான். உச்சந்தலையில் இடி இறங்கியதைப் போலிருந்தது. எங்கள் குடியிருப்பு வளாகமே மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டது. ஆருஷியின் வீட்டைச் சுற்றிலும் பொதுமக்கள், காவல்துறையினர், மீடியா ஆட்கள், ஆருஷியின் உறவினர்கள், அவளது பெற்றோரின் நண்பர்கள், உடன் பணிபுரிந்தவர்கள் என்று பலரும் குழுமியிருந்தனர். வீட்டுக்கு உள்ளும், புறமும், ஏன் ஆருஷி கொலையுண்டு கிடந்த அறைக்குள்ளும் கூட அப்போது எல்லோரும் சர்வ சாதாரணமாகச் சென்று பார்த்து விட்டு வந்து கொண்டிருந்தனர். உண்மையில் தொலைக்காட்சி செய்திகளில் சொல்லப்பட்டவற்றில் ஆருஷியின் அறைச்சுவர்களில் ரத்தம் விசிறித் தெறித்திருந்ததைத் தவிர மற்றதெல்லாம் ஊடகங்கள் சித்தரித்தவையே!

  ஆருஷியின் பெற்றோர்கள் எனது உறவினர்களோ, குடும்ப நண்பர்களோ அல்ல, அவர்களைப் பற்றி நல்ல விதமாகக் கூற வேண்டும், அல்லது கெட்டவிதமாகக் கூற வேண்டும் என்ற எந்தவிதமான அவசியமும் எனக்கில்லை. ஆனால் எனக்குத் தெரிந்தததெல்லாம் எனக்குத் தெரிந்த உண்மைகளாக இருப்பதால் அதை நான் சொல்லித்தானே ஆக வேண்டும். ஆருஷியின் பெற்றோரும் எல்லாப் பெற்றோரையும் போலவே தங்களது ஒரே மகளின் மீது அளவற்ற பாசம் கொண்டவர்களாகவே இருந்தனர். நானறிந்த வரையில் ஆருஷியின் பெற்றோர் இக்கொலை விவகாரத்தில் அப்பாவிகளே! எனது நெருங்கிய தோழியின் பெற்றோர் என்பதைக் காட்டிலும் அவர்களது அப்பாவித்தனத்துக்காகவே என் போன்ற ஆருஷியின் தோழிகளுக்கு அவர்களைப் பிடித்திருந்தது.

  ஆனால் ஊடகத்தினருக்கு ஒரு விஷயத்தை அதன் உண்மைத் தன்மையுடன் வெளியிடுவதிலிருக்கும் பரபரப்பைக் காட்டிலும், உலகமே ஆவென வாய் பிளந்து செய்கையற்றுப் பார்த்து நிற்கத்தக்க ஒரு செய்தி தேவைப்பட்டது. அதனால் தான் நாங்கள் அறிந்திருந்த ஆருஷியையும், அவளது அப்பாவிப் பெற்றோரையும் பற்றி எங்களுக்குத் தெரிந்தே இராத, முற்றிலும் உண்மைக்குப் புறம்பான சித்தரிப்புகளை அவர்கள் மீதேற்றித் தலைப்புச் செய்திகளில் இடம் பெற வைத்தனர். எனக்குப் பயமாக இருந்தது, எனக்கும் ஆருஷியின் வயது தான், ஒருவேளை நாளை எனக்கே ஏதாவது ஆனாலும் கூட, நான் விளையாட்டுத்தனமாக எழுதிக் கொண்டிருக்கும் எனது டைரியை வாசித்து விட்டு காவல்துறையும், ஊடகங்களும் என்னைப் பற்றியும், எனது பெற்றோரைப் பற்றியும் இதே விதமாகத் தான் செய்திகளை இட்டுக் கட்டுமோ என்று.

  உண்மையிலேயே எனக்கு அப்போது ஆச்சர்யமாக இருந்த மற்றொரு விஷயம், காவல்துறையினரின் விசாரணையையொட்டி ஊடகங்களில் ஆருஷி கொலை வழக்குச் செய்திகள் வெளியாகின்றனவா? அல்லது ஊடகங்களின் பரபரப்புச் செய்திகளை மையமாக வைத்து காவல்துறை தன் விசாரணையின் போக்கை அமைத்துக் கொள்கிறதா? என்று. நிகழ்ந்தது ஒரு அப்பட்டமான கொலை, ஆருஷியின் டைரி, ஆருஷியின் பெற்றோர் பணிபுரிந்த மருத்துவமனை பணியாளர்கள், வீட்டு வேலைக்காரர்கள் அளித்த சாட்சியங்கள், இதை மட்டுமே அடிப்படியாகக் கொண்டு கொலை செய்தது ஆருஷியின் பெற்றோர்கள் தான் எனக் காவல்துறை ஒரு முடிவுக்கு வந்தது எப்படி? என்று தான் எனக்குப் புரியவில்லை. டீனேஜ் பெண்கள், தங்களது பெற்றோரைப் பற்றியோ, நண்பர்களைப் பற்றியோ கோபமாக இருக்கும் தருணத்தில் எதையோ கிறுக்கி வைக்கலாம், அவையெல்லாம் நிஜமாகி விட முடியுமா?

  அவிரூக்கின் (ஆருஷி) புத்தகத்துக்காக என்னிடம் ஒரு நேர்காணல் நடத்தப் பட்டது, அதில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றில்; பாய் ஃப்ரெண்ட் வைத்துக் கொள்வதென்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? என்று கேட்கப்பட்டிருந்தது.எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, அந்த வயதில் எனக்கொரு பாய் ஃப்ரெண்ட் இருந்திருந்தால் நாங்கள் என்ன செய்திருப்போமென்று நினைக்கிறீர்கள்? மிஞ்சிப் போனால் ஒன்றாகச் சேர்ந்து சினிமாவுக்குப் போயிருப்போம், விடுமுறைகளிலோ அல்லது மாலை நேரங்களிலோ பள்ளிப்பாடங்களில் இருந்தும் தேர்வுகளில் இருந்தும் கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் எங்காவது காஃபீ ஷாப் சென்று அரட்டையடித்து விட்டு திரும்பியிருப்போம். அல்லது சில சமயங்களில் செல் ஃபோன் அரட்டையில் ஈடுபட்டிருப்போம், இதெல்லாமும் யாருடன்? என்றால் எங்களுக்கு ஈர்ர்ப்பு இருக்கும் எங்கள் வயதை ஒத்த ஒரு மாணவனுடன்! பாய் ஃப்ரெண்ட் வைத்துக் கொள்வதென்றால் அந்த வயதில் எங்களுடைய கற்பனையின் எல்லை இவ்வளவு தூரம் தான் செல்லக்கூடியதாக இருந்தது. இதைத் தாண்டி செக்ஸுவல் ரீதியாகப் பழகும் பாய் ஃப்ரெண்டுகளைப் பற்றியெல்லாம் எங்களால் அப்போது யோசிக்கக் கூட முடிந்ததில்லை. ஆருஷியும் அப்படித்தான், ஆருஷி நல்ல ஆரோக்யமான சிறுமி, 14 வயதுக்கே உண்டான துறுதுறு தன்மையால் அவளுக்கு யாராவது ஒரு பையனின் மேல் கிரஷ் (ஈர்ப்பு) இருந்திருந்தால் அது நிச்சயம் அவளது பெற்றோருக்கும் தெரிந்தே தான் இருந்திருக்கும். அவர்கள் அதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டிருந்திருப்பார்கள். அதையெல்லாம் தவறு என அவளைக் கண்டித்து அவளை வெறுக்கும் அளவுக்கு ஆருஷியின் பெற்றோர் அத்தனை பிற்போக்கானவர்கள் அல்ல!

  ஆருஷி கொலை வழக்கில் மீடியாக்களாலும், காவல்துறையாலும் ஜோடிக்கப்பட்ட பல விஷயங்கள் முற்றிலுமாக நமது குடும்ப உறவு அமைப்புகளையே சந்தேகிக்கும் வண்ணம் இருந்தன. பெற்றோருக்கு ஒரே மகளான ஆருஷியை எல்லாப் பெற்றோரையும் போலத்தான் அவளது பெற்றோரும் நேசித்தனர். அவளது பிறந்தநாளுக்கான புத்தம் புது கேமரா வாங்கிப் பரிசளித்த அப்பா, அம்மாவும் அதில் அந்த இரவில் பல புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். கொலைக்கான முதல் நிமிடங்கள் வரை எல்லாமே வெகு சுமுகமாக, நமது ஏனைய குடும்பங்களில் நிகழும் சாதாரண நிகழ்வுகளாகத்தான் இருந்திருக்கின்றன. காலை முதல் இரவு வரை பல்வேறு மருத்துவமனைகளில் பல் மருத்துவர்களாகப் பணியாற்றி விட்டு அசந்து போய் வீடு திரும்பிய பெற்றோர் இரவுச்சாப்பாடு முடிந்ததும் அடுத்து என்ன செய்யக் கூடும்? ஆருஷிக்கும் மறுநாள் பள்ளி இருக்கிறது. தாங்கள் இருவரும் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும். என எப்போதும் போல தூங்கச் சென்றவர்கள் தான் அவர்களும்! ஆனால் அன்றைய விடியல் அவர்கள் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத மாபெரும் கொடூரத்தை அவர்களுக்குப் பரிசளித்து விட்டது.

  ஆருஷியின் பெற்றோருக்கும் தங்களது மகளின் எதிர்காலம் குறித்த பல கனவுகள் இருந்தன. அதற்காக அவர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியெல்லாம் நிகழும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆருஷி கொலையுண்டு கிடந்ததை முதலில் பார்த்தவர் அவரது அம்மா நுபுர் தல்வார். ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து விட்ட அவருக்கு அழக்கூடத் திராணியில்லை. அதற்குப் பின் அங்கே நடந்தவை அத்தனையும் வெவ்வேறு விதமாகப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பலமுறை அலசப்பட்டு விட்டது. ஆனால் எப்படி தெரியுமா? உண்மையை விட்டு பல்லாயிரம் மைல் தூரமாக. ஆருஷி கொலையை ஊடகங்கள் ‘ஆணவக் கொலை @ கெளரவக் கொலை என்று சுருக்க நினைப்பது மிகவும் மோசமான முன்னுதாரணம். வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும், தங்களது முழுவாழ்நாளுக்கான அர்த்தமாகத் திகழ்ந்து கொண்டிருந்த ஒரே மகளை அந்தப் பெற்றோர் ஏன் கொலை செய்ய வேண்டும்? 

  ஒரு பக்கம் 14 வயது ஆருஷிக்கும், 44 வயது ஹேம்ராஜுக்கும் பொருந்தாத வகையில் தவறான உறவிருப்பதை அவளது அப்பா ராஜேஷ் நேரில் கண்டதால் மகளையும், சமையற்காரனையும் கொலை செய்து விட்டார் என்று பிரேக்கிங் நியூஸ்கள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நிமிடத்துக்கொருமுறை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் பத்திரிகைகள் ராஜேஷ் தல்வாருக்கு, மருத்துவமனையில் பணிபுரியும் சக பெண் மருத்துவருடன் தகாத உறவு, அதைக் கண்டுபிடித்து பிளாக் மெயில் செய்ததால் ராஜேஷ், ஹேம்ராஜைக் கொன்று மொட்டைமாடியில் ஒளித்து வைத்து விட்டார் என்றொரு வதந்தி! ஆச்சர்யம் என்னவென்றால் இந்தக் குற்றச்சாட்டுகள் எதற்குமே போதிய ஆதாரங்கள் இல்லை என்பது தான்.

  ஊடகங்களுக்கு ஒரு 14 வயதுச் சிறுமியின் கொலையை எப்படிச் சொன்னால் பரபரப்பாக்க முடியும் என்ற யோசனை தான் இருந்ததே தவிர, அவளுக்கும் எல்லோரையும் போல பாசமான குடும்பம் இருந்திருக்கும், அவளது பெற்றோரும் மற்றெல்லா இந்தியப் பெற்றோரையும் போலவே அன்பான பெற்றோர் தான் என்றெல்லாம் யோசிக்கவே பிடிக்கவில்லை. வெளியிலிருந்து வந்தவர்கள் தான் கொலை செய்திருப்பார்கள் என்று நம்பச் செய்வதைக் காட்டிலும், பூட்டிய வீட்டுக்குள், தாய், தந்தை தனியறையில் உறங்கச் சென்றதும் தனது தனியறையில் கொலையுண்டு கிடந்த 14 வயதுச் சிறுமியை அவளை விட இருமடங்கு மூத்த வீட்டு சமையற்காரனுடன் பாலியல் ரீதியாக இணைத்து வைத்து செய்திகளை உருவாக்கி காற்றில் பறக்கவிட்டால் அது இன்னும் வேகமாகப் பரவி டிஆர்பி ரேட்டிங் எகிறாதோ?! என்று கணக்கிட்டு விட்டார்கள் அவர்கள்! 

  இப்படி நீள்கிறது ஆருஷியின் தோழியின் குற்றச்சாட்டு...

  அவர் பக்கம் பக்கமாக எழுதியிருக்கும் பதிவின் ஒற்றைச் சாரம்சம் மிக எளிதானது;

  ஆருஷி கொலை வழக்கில் ஊடகங்களும், புலனாய்வு மற்றும் வெகு ஜனப்பத்திரிகைகள் என அனைத்துமே

  ‘கொலைக்களத்தில் பிணம் தின்னக் காத்திருக்கும் வல்லூறுகளாக’

  மட்டுமே நடந்து கொண்டனவே தவிர உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சி அவர்களிடத்தில் கொஞ்சமும் இல்லை என்பதே நிஜம்.

  எனவே ஆருஷி கொலையைப் பொறுத்தவரை மறைக்கப்பட்ட உண்மைகள் தெரியவேண்டும் என்றால் அவிரூக் எனும் பத்திரிகையாளர் ஆருஷி கொலை வழக்கு விசாரணை குறித்து எழுதி வெளியான ‘ஆருஷி’ எனும் புத்தகத்தைப் படியுங்கள். உங்களது பல கேள்விகளுக்கான விடைகள் அதில் மட்டுமே உண்மையாகக் கிடைக்கக் கூடும். என்று முடித்திருக்கிறார் ஆருஷியின் தோழி!

  ஆருஷி கொலை வழக்கை மையமாக வைத்து இதுவரை ரகஷ்யா, தல்வார், தமிழில் ‘நிபுணன்’ என மூன்று திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

  பாலாஜி டெலிஃபிலிம்ஸின் கிரைம் மெகாத் தொடர் ஒன்று ஆருஷி கொலையை மையமாக வைத்து வெளிவந்திருக்கிறதாம்.

  ஆருஷி கொலையைப் பொருத்தவரை  'உண்மை' இன்னும் மறைக்கப்பட்ட மர்மமாகவே நீடிக்கிறது.

  'தல்வார்' திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் அனைவருக்குமே அவளது பெற்றோர் கொலை செய்திருப்பார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போகும். அது மட்டுமல்ல வெகு வேகமாக ஒரு கொலை வழக்கை விசாரித்து முடிக்க நினைக்கும் நமது காவல்துறை மற்றும் நீதிமன்றங்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து மிகப்பெரிய கேள்வி எழும்.

  ஆருஷியின் தாய், நுபுர் தல்வார் 2013 ஆம் ஆண்டில் தனது கணவரது கைதின் பின் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், ஹேம்ராஜ் மீதான குற்றச்சாட்டைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு; அவரளித்த பதில்;

  ஆருஷி கொலைச்சம்பவம் நடந்த அந்த நிமிடம் வரை ஹேம்ராஜுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான அபிப்ராய பேதங்களோ, மனக்கசப்புகளோ இருந்ததில்லை. கொலை நடந்த நாளன்று மதிய உணவு நேரத்தில் கூட ஹேம்ராஜ் எனக்கும், ஆருஷிக்கும், எனது கணவரது சகோதரர் மனைவுக்கும் உணவு பரிமாறி விட்டு, ‘தீதி, ஆருஷி... பாலக் பனீர் சாப்பிட்டுப் பழக வேண்டும். அவள் பீட்சா சாப்பிட்டு உடல்நலனைக் கெடுத்துக் கொள்வதெல்லாம் சரியில்லை’ என்று சகஜமாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். எங்களுக்கிடையிலான உறவு எந்த வகையிலும் விகாரப்படவே இல்லை. அவருக்கு 45 வயது, என் மகள் வயதில் அவருக்கும் குழந்தைகள் உண்டு. மிக நல்ல மனிதர் என்று கேள்விப்பட்டுத்தான் வேலையில் சேர்த்தோம். ஊடகங்கள் வெளியிட்டவற்றைப் பற்றி என்னால் யோசித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. அவற்றில் கொஞ்சமும் உண்மையில்லை. கடவுள் தான் அறிவார் உண்மையை!’ என்கிறார்.

  அது மட்டுமல்ல; ஒரு தகப்பன், பக்கத்து அறையில் உறங்கும் தன் மகளைக் கொலை செய்து விட்டு, மீண்டும் தனது படுக்கையறைக்குத் திரும்பி, அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் தனது மனைவிக்கு சற்றும் சந்தேகமே ஏற்படாத வண்ணம் நிம்மதியாக மீதித் தூக்கத்தை விட்ட இடத்திலிருந்து தொடரமுடியுமா? அவரொன்றும் மிருகமில்லையே?! ஆருஷிக்கு அவர் மிக மிக அன்பான அப்பாவாகத்தான் இருந்தார். என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

  அதே சமயம், ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் மட்டுமே, ஆருஷி கொலையைப் பற்றி ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்றால், இந்தக் கொலையைச் செய்தது ராஜேஷ் தல்வாரைத் தவிர வேறு யாரும் இல்லை. என்ற முடிவுக்கே வரவேண்டியதாகிறது. ஏனெனில் ஆருஷி கொலையைப் பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பாருங்கள்;

  மே 15 க்கும் 16 க்கும் இடையிலான நடு இரவில் கொலை நிகழ்ந்துள்ளது.

  அதைக் காலையில் தாமதமாக எழும் வழக்கமுடைய ஆருஷியின் பெற்றோர் தாமதமாகத்தான் காண நேர்கிறது.

  மகள் கொலையுண்டு கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போய் அழும் தம்பதிகளில், ராஜேஷ் எடுத்த எடுப்பில் வீட்டுக்குள் சமையற்காரர் ஹேம்ராஜைக் காணோம் என்றதும், அத்தனை நாட்கள் தங்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்த ஒரு நபர் தான் மகளைக் கொன்றிருக்கக் கூடும் என சந்தேகப்பட்டு அவரைத் தேட காவல்துறையினரிடம் பணமெல்லாம் கொடுத்ததற்கு செய்தி ஆதாரங்கள் உள்ளன.
  இது தவிர, ராஜேஷின் சகோதரர், ஆருஷியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளிவரும் முன்பு, அவளது உடலில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான தடயங்கள் ஏதேனும் இருந்தால் அதை மூடி மறைக்கச் சொல்லி காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் காவல்துறை சந்தேகக் கேள்விகளை எழுப்பி இருந்தது.

  ஆருஷியைக் கொன்றது யார்? எதற்காக ஆருஷி கொல்லப்பட்டாள்? இந்தக் கேள்விக்கான பதிலை ஆருஷியின் ஆவியோ அல்லது கொலையைச் செய்தவர்களோ தான் வந்து சொல்லியாக வேண்டும்.

  ஏனென்றால்...ஏனென்றால் நமது காவல்துறையாலும் சரி, சிபிஐ யாலும் சரி இந்தக் கொலையைச் செய்தவர்களென அவர்கள் சுட்டிக்காட்டிய நபர்களை கூண்டிலேற்றி தண்டனை பெற்றுத்தரப் போதுமான ஆதாரங்கள் சமர்பிக்கப்பட இயலவில்லை என்பதோடு விசாரணையும் பல முட்டுச் சந்துகளில் பயணித்து பல்வேறு விதமான குழப்பக்கதைகளை மட்டுமே றெக்கை கட்டிப் பறக்க வைத்து விட்டு ஒருவழியாக ஓய்ந்து விட்டது.

  இந்த வழக்கில் முதல் தடவை சந்தேக லிஸ்டில் இருந்த ராஜேஷின் கம்பவுண்டர் கன்னையா @ கிருஷ்ணா உள்ளிட்ட பணியாளர்களும் போதுமான ஆதாரங்கள் இல்லை என வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.

  இரண்டாம் முறையாகத் தற்போது ஆருஷியின் பெற்றோரும், அவர்கள் மீதான கொலைக்குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள்.

  அப்படியானால் கொலை செய்தது யார்?

  குற்றவாளியை வெளியில் சுதந்திரமாக உலவவிட்டு விட்டு தங்களுக்குத் தேவையான ருசிகரமான பரபரப்புச் செய்திகளை மட்டுமே ஊடகங்களும், காவல்துறையும் பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதாக்கி கொலை நடந்து இத்தனை ஆண்டுகளாக உண்மையின் முகத்தை மறைத்துக் கொண்டிருந்திருக்கின்றனவா?

  இன் இந்த வழக்கு என்னவாகும்?

  ஒரு நேர்காணலில் ஆருஷியின் தாய், நுபுர் தல்வார் சொல்கிறார்;

  கடைசியில் நீதி வெல்லும் என்று!

  என்று வெல்லும் அந்த நீதி?!

  ஆருஷி கொலையைப் பொருத்தமட்டில், மக்கள் மன்றத்தில், உண்மையான குற்றவாளி பிடிபடும் வரை அந்த வழக்கு சாகாவரம் பெற்ற வழக்குகளில் ஒன்றாகவே கருதப்படும். 

  இந்த வழக்கில் மறு விசாரணை நடைபெறுமா? நிஜக் குற்றவாளிகள் சிக்குவார்களா? இதற்கெல்லாம் பதில் காலத்தின் கைகளில் மட்டுமே!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai