நீதிமன்ற உருக்கம்: கைதியின் குழந்தை பசியில் வீறிட்டழுகையில் பாலூட்டி சமாதானப்படுத்தத் தயங்காத பெண் போலீஸ் அதிகாரி!

விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்த குற்றம் சாட்டப்பட்ட பெண்மணி, பெண் போலீஸ் அதிகாரி ஹயோ லினாவின் செயலால் பேச்சிழந்து, தனது நன்றியை வாய் விட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு மிகவும்
நீதிமன்ற உருக்கம்: கைதியின் குழந்தை பசியில் வீறிட்டழுகையில் பாலூட்டி சமாதானப்படுத்தத் தயங்காத பெண் போலீஸ் அதிகாரி!

உலகில் தாயன்புக்கு ஈடு இணையே கிடையாது!

சீனாவின் ஹயோ லினா எனும் பெண் போலீஸ் அதிகாரி, தனது பரிசுத்தமான அன்புணர்வால் இன்று உலகம் முழுவதும் லட்சக் கணக்கானவர்களின் இனம் புரியாத அன்புக்குப் பாத்திரமானவராக மாறியிருக்கிறார். அத்தனை பேரின் அன்பை வெல்ல அப்படி என்ன செய்தார் ஹயோ லினா என்கிறீர்களா? பெரிதாக ஒன்றுமில்லை உலகம் முழுவதுமிருக்கும் தாய்மார்களின் இயல்பான உணர்வுகளை, அவர் சமயம் வந்த போது வெட்கப்பட்டுக்கொண்டோ, சுயநலமாக யோசித்துக் கொண்டே புறக்கணிக்காமல் தேவை வந்த போது வெளிப்படுத்தினார்.  அவ்வளவு தான்.

விவரமாகச் சொன்னால் தான் உங்களுக்குப் புரியக்கூடும்.

செப்டம்பர் 23 ஆம் தேதி, மத்திய சீனாவிலிருக்கும் ஷான்ஜி ஜிங்காங் இண்டர்மீடியேட் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.

அதில் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் மீது நிதி மோசடி வழக்கு சுமத்தப் பட்டிருந்தது. அந்த வழக்கின் மீதான விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்டவரான பெண்மணி அழைத்து வரப்பட்டிருந்தார். அவர், பிறந்து 4 மாதங்களே ஆன கைக்குழந்தையின் அம்மாவும் கூட. நீதிமன்றத்தின் உள்ளே வழக்கின் விசாரணை, அவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 33 பேர்களுடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது. விசாரணைக்காக உள்ளே செல்லும் முன், குழந்தையின் தாயானவர், தன் குழந்தையை பெண் போலீஸ் அதிகாரியான ஹயோ லினாவிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றிருந்தார். இந்நிலையில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, அந்தப் பெண்மணி வெளியில் வர முடியாத ஒரு சூழலில், அவரது கைக்குழந்தை பசியால் வீறிட்டு அழத்தொடங்கியது. 

‘என்ன செய்தாலும் என்னாலோ, எனது உதவியாளர்களாலோ குழந்தையின் அழுகையை நிறுத்தவே முடியவில்லை’ என்கிறார் ஹயோ லினா.

‘நானும் சமீபத்தில் தான் தாயானேன்  என்பதால், என்னால் அந்தக் குழந்தையின் அழுகையைப் புரிந்து கொள்ள முடிந்ததோடு, அதன் அம்மாவின் தாங்க இயலா வருத்தத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. விசாரணையின் இடையில் அவரால் வெளியில் வந்து தன் குழந்தைக்குப் பாலூட்டுவது என்பது இயலாத காரியம், எனவே ரொம்பவும் யோசிக்காமல், உடனடியாக, குழந்தையின் அம்மாவிடம் சென்று குழந்தையின் அழுகையை நிறுத்த அதற்கு நானே பாலூட்டலாமா?! என்று அனுமதி கேட்டேன். அவர் மிகுந்த அன்போடு சந்தோசமாகச் சம்மதித்தார். அந்த வளாகத்தில் இருந்த ஒதுக்குப்புறமான அமைதியான ஓரிடத்துக்கு குழந்தையை எடுத்துச் சென்று அதற்குப் பாலூட்டினேன். அதன் பிறகே அதன் அழுகை நின்றது’. என்கிறார் ஹயோ லினா.

விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்த குற்றம் சாட்டப்பட்ட பெண்மணி, பெண் போலீஸ் அதிகாரி ஹயோ லினாவின் செயலால் பேச்சிழந்து, தனது நன்றியை வாய் விட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் மனமிளகிப் போய் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

இதை ஹயோ லினாவுடன் பணியிலிருந்த சக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் படம் பிடித்து வைக்கவே அதை நீதிமன்றம், ஹயோ லினாவின் பொறுப்புணர்வையும், பேரன்பையும் பாராட்டும் விதமாகத்  தனது அதிகார பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகத்தில் பதிவேற்றியது. அதன் பிறகே ஹையோ லினா, குற்றம் சாட்டப் பட்ட பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டுவது போன்ற புகைப்படங்கள் சீன ஊடகங்களில் வெளிவரும்  வாய்ப்பைப் பெற்றன.

இதைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஹயோ லினா; ‘நான் மட்டுமல்ல; எந்தப் பெண் போலீஸ் அதிகாரியும் கூட அந்த சூழலில் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். அது மட்டுமல்ல, ஒரு தாயாக, எனது குழந்தையையும் பிற தாய்மார்கள் இப்படித்தான் கருணையோடு அணுகுவார்கள் என நம்புகிறேன். என்கிறார்.

தாய்மையுணர்வும், தாயன்பும் வாழ்க!

நன்றி: டெய்லி மெயில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com