Enable Javscript for better performance
dinamani.com march contest winners list|மார்ச் மாதப்போட்டியில் பட்டுப் புடவை பெறும் அதிர்ஷ்டசாலிகள்!- Dinamani


தினமணி இணையதளத்தின் மார்ச் மாதப்போட்டியில் பட்டுப் புடவை பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள்!

By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 16th August 2018 03:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0_silkcrepe_silk

 

                                                                               தினமணி இணையதளத்தின் மார்ச் மாதப் போட்டி “காரியம் யாவிலும் கை கொடுப்பாள்’- க்காக கிடைத்த வாசக வரவேற்பு அமோகமாக இருந்தது. போட்டிக்காகத் தங்களது வாழ்வில் ஒளியேற்றிய பெண்கள் குறித்து பலரும் மின்னஞ்சல் வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் எழுதி அனுப்பியிருந்தனர். ஒவ்வொரு கடிதத்தையும், மின்னஞ்சலையும் வாசிக்க, வாசிக்கப் பெண்களை மகாசக்தி ரூபமாகக் கண்ட பாரதியின் கனவு வரிகள் என்றுமே பொய்த்துப் போவதில்லை என்பதை உணர முடிந்தது. ஆம்... பாட்டியென்றும், அம்மாவென்றும், சித்தியென்றும், அத்தையென்றும், சகோதரியென்றும், மகளென்றும், மனைவியென்றும், தோழியென்றும், காதலியென்றும் பெண்கள் தான் எத்தனையெத்தனை ரூபங்களாகத் தங்களுக்குப் பிரியமானவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்காக சலிப்பின்றி உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று யோசிக்கையில் பெருமிதமாக இருந்தது.

எங்களுக்கு வந்த கடிதங்கள் ஒவ்வொன்றுமே வாசிப்பவருக்கு மன உறுதியைத் தரத்தக்க வகையிலான வாழ்வியல் அனுபவப் பாடங்களே எனினும் பரிசு என்பது மூவருக்கு மட்டுமே என்பதால் அந்த மூவர் யார்? அவர்களது கடிதம் எந்த விதத்தில் சிறந்தது என்றும் தெரிந்து கொள்ளத்தான் வேண்டுமில்லையா?! 

தினமணி இணையதளத்தின் மார்ச் மாதப் போட்டி ‘காரியம் யாவிலும் கை கொடுத்தாள்’ லில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல்.

முதல் பரிசு

விஜயலக்‌ஷ்மி,

மதுரை

மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் தமது சித்தியார் குறித்து மின்னஞ்சலில் அனுப்பியிருந்த கடிதம் வாசகர் பார்வைக்கு...

“காரியம் யாவிலும் கை கொடுப்பாள் ”

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை - என்ற பாடல் வரிகள் எல்லோருக்கும் பரிச்சயமான ஒன்று. 

தானும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோம் என்று அறியாத ஒரு மிருகத்திற்கு வாழ்க்கைப் பட்டு, அந்தக் கயவனின் கொடுமை தாளாமல் என்னை இரண்டு மாத குழந்தையாக தன் தாயின் வீட்டுக்கு அழைத்து வந்தாள் என் தாய். 1970 களில் பெண்கள் அவ்வளவாக படிப்பறிவோ, வேலை வாய்ப்போ இல்லாமல் இருந்த காலம். ஆண் துணை இல்லாத குடும்பத்தில் என்னையும், என் தாயையும் காக்க தன் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள் என் தாயின் சகோதரி, என் சித்தி விஜயலக்ஷ்மி. 

தட்டச்சும், சுருக்கெழுத்தும் உயர் நிலையில் கற்றுத் தெரிந்தார்கள். பின் அரசுப் பணியில் சேர்ந்தார்கள். பள்ளிப் படிப்பு முதல் கல்லூரி வரை ஒரு பைசா கூட செலவழிக்காத என் தந்தையின் முன் என் சித்தி எனக்காகவும், என் தாய்க்காகவும் தன் கனவுகளை மாற்றிக்கொண்டார்கள். ஆம். திருமணம் வேண்டாம் என்று தன் குடும்பத்துக்காக முடிவெடுத்துக் கொண்டார். ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாமல் வேலைக்கு போகிறாளா? என்று அன்று கேள்விக்கணைகளை தொடுத்த சமூகம், இன்று எங்களின் உயர்ந்த நிலை கண்டு வாய் பொத்தி நிற்கிறது. ஒரு ஆண் தராத தைரியத்தையம், தொலைநோக்குப் பார்வையையும் தந்தது என் சித்தி மட்டுமே. எனக்கு வேண்டியதை நான் கேளாமல் என் மனக்குறிப்பு அறிந்து அதை பூர்த்தி செய்பவர் என் சித்தி. உன்னால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும் என்று எனக்குள் இருக்கும் உந்துதலை தூண்டிவிட்டவர். 

இன்று நான் கல்லூரிப் பேராசிரியராக இருந்து அவர் சொன்ன கருத்துக்களைத் தான் என் மாணவர்களுக்கும் பகிர்கிறேன். உங்கள் ரோல் மாடல் யார்? என்று யாரும் கேட்டல் தயங்காமல் ‘என் சித்தி’ என்று தான் கூறுவேன். அந்த அளவிற்கு என் தாயை விட என் சித்தியை நான் முன்னிலைப் படுத்திக் கூறுவேன்.  

நான் பல முறை தோல்வியால் துவண்டிருந்த போதும் சரி, நோய்வாய்பட்டிருந்த போதும் சரி என் மீது பரிதாபம் காட்டி கோழையாக்காமல் இது தான் வாழ்வு, இது தான் யதார்த்தம் என்று தாய்க்கும் மேலாக வாழ்வின் சாசுவத்தைப் புரிய வைத்தார். மாற்றாந்தாயாக பார்வை இல்லாமல் மாசற்ற தாய்க்கும் மேலாக என்னை வழிப்படுத்திய என் சித்தி, என்  வாழ்வின் வழிகாட்டியாக அமைந்தது இறைவன் எனக்கு கொடுத்த வரம். 

இவ்வளவு செய்த என் சித்திக்கு இது வரை பெரிய கைமாறு ஒன்றும் செய்ததில்லை. என் முயற்சியால் அவரை வெளிநாட்டு பயணத்திற்கு விமானத்தில் கூட்டிச் சென்றதில் இன்று வரை ஒரு ஆத்மார்த்த திருப்தி இருக்கிறது. 

எல்லாருக்கும் ஒரு தாய் என்றால் எனக்கு இரு தாய் என்பது நிதர்சனம்.

எம்.  விக்னேஷ் 

எங்களுக்கு வந்திருந்த கடிதங்களில் பலவும் அவரவர் அம்மா, மனைவி, சகோதரி குறித்த கடிதங்களே அதிகமிருந்த நிலையில். சகோதரியின் வாழ்வுக்காக, சகோதரியின் மகனது எதிர்காலத்திற்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்து திருமணமே செய்து கொள்ளாது அவர்களது எதிர்காலத்துக்கு மிகச்சிறந்த உறுதுணையாக இருந்த விஜயலக்‌ஷ்மி ஆச்சர்யப்படுத்துகிறார்.

இரண்டாம் பரிசு

ரா. நளினி,

தாடா கிராமம், ஆந்திரா.

தற்போது ஆந்திர மாநிலம் தாடா கிராமத்தில் வசித்து வரும் 48 வயது நளினியின் கதை... 14 வயதில் திருமணமாகி, 17 வயதில் இரு குழந்தைகளுக்குத் தாயாகி படிப்பறிவற்ற நிலையில், குடிகாரக் கணவரின் சித்ரவதைக்குட்பட்டு, பிறந்த வீட்டினரும் காப்பாற்றாமல் விஷம் அருந்தி செத்து விடச் சொல்லி இகழ்ந்து புறக்கணித்த போதும் மனம் தளராமல் தனது இரு குழந்தைகளின் ஜீவிதத்துக்காவும், முன்னேற்றத்துக்காகவும் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கடின உழைப்பால் உயர்ந்து தன்னைப் போன்ற பிறருக்கு வாழ்வியல் வழிகாட்டியாகத் திகழும் நளினி பாராட்டப்பட வேண்டியவர்.

அம்மா நளினி குறித்து மகள் ப்ரியா எழுதிய கடிதம்...

மூன்றாம் பரிசு

இருதயமேரி, வாரியன்வயல் கிராமம்.

சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் திருநெல்வேலியின் கடைக்கோடி கிராமமான வாரியன்வயலில் வசிக்கும் தன் அம்மா இருதயமேரி குறித்து எழுதியுள்ள நம்பிக்கை மிகுந்த கடிதம்... 

வெற்றி பெற்ற அனைவருக்கும் வழக்கம் போல தினமணி இணையதளக்குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!