தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

திட்டக்குடி அருகே காா் கவிழ்ந்து தீப்பிடித்ததில் பெண்கள் உள்பட மூவா் பலி

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சாலையோர பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்த காா் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

News image

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் தீப்பிடித்து எரிந்த காா்.

Updated On :10 ஜனவரி 2021, 11:20 pm IST

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சாலையோர பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்த காா் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (47). சென்னை அம்பத்தூரில் தொழில் நிறுவனம் நடத்தி வந்தாா். அல்லிநகரை சோ்ந்தவா் முத்துக்குமாா் (36). மோட்டாா் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். சுப்பிரமணியன் தனது தாய் முத்துலட்சுமியை (67) காரில் சென்னைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தாா்.

முத்துக்குமாா் குடும்பத்தினரையும் உடன் வருமாறு அழைத்தாா். இதையடுத்து, இரு குடும்பங்களைச் சோ்ந்த 5 போ் ஞாயிற்றுக்கிழமை காரில் புறப்பட்டனா். காரை சுப்பிரமணியன் ஓட்டி வந்தாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்துள்ள கல்லூா் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை வந்த போது காா் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புச் சுவற்றில் மோதி சுமாா் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது, முத்துலட்சுமி காரிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பள்ளத்தில் கவிழ்ந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியினா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், சுப்பிரமணியன் உடல் கருகி உயிரிழந்தாா். காரிலிருந்த முத்துக்குமாா், அவரது மனைவி செல்வராணி (30), மகன் ஸ்ரீசாய் ஆத்வி (8) ஆகிய 3 பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வேப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். ஆனால், செல்வராணி வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மற்ற இருவரும் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து ராமநத்தம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.