நட்சத்திர கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்த விக்ராந்த், "பிறவி' படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார். விக்ராந்தின் அண்ணன் சஞ்சீவ் இப்படத்தை இயக்குகிறார். இன்னொரு கதாநாயகனாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உதவியாளர் அரவிந்த் நடிக்கிறார். அபிநயா, பார்வதி நிருபன், லீமா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அருள்தாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
""ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வுதான் கதை. அதை குறிக்கும் விதத்தில்தான் "பிறவி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. திரில்லர், ஆக்ஷன், காதல், ரொமான்ஸ் என அனைத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
என் திரை பயணத்தில் அடுத்தகட்ட இடத்துக்கு என்னை அழைத்துச் செல்லும் படமாக இது இருக்கும். திரைக்கதை அமைப்பில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு ஹீரோ கதையா? என கேட்கிறார்கள்... இரண்டு பேருக்குமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சினிமா பயணத்தில் முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறேன். அதற்கான ஆரம்ப புள்ளியாக இது அமையும் என நம்பிக்கையாகக் காத்திருக்கிறேன்'' என்றார் விக்ராந்த்.
டேனியல் பாலாஜி, அர்ச்சனா கவி ஜோடியாக நடிக்கும் படம் "ஞான கிறுக்கன்'. புதுமுகம் இளையதேவன் இயக்குகிறார். ""சில உண்மைச் சம்பவங்கள் படமாகும் போது பெரிய அதிர்ச்சியலைகள் உண்டாகும். அப்படியான ஓர் உண்மை சம்பவம் இதில் படமாகிறது. கிட்டத்தட்ட என் வாழ்க்கையிலும், என் நண்பனின் வாழ்க்கையிலும் நடந்த கதை இது. அதை சினிமா சமரசம் இல்லாமல் எடுக்க முயற்சித்திருக்கிறேன். "அரவாண்' படத்துக்குப் பின் இப்படத்தில் அர்ச்சனா கவி நடிக்கிறார். அர்ச்சனா கவி சம்பந்தப்பட்ட ஒரு காட்சி படத்துக்கு அவசியமானதாக இருந்தது. காட்சியை விளக்கியதும், அதில் ஆபாசம் இருப்பதாகச் சொல்லி அர்ச்சனா கவி நடிக்க பயந்தார். பிறகு காட்சியின் அவசியத்தை விளக்கி நடிக்க வைத்தோம். முன்னதாக எத்தனை விளக்கம் சொன்னாலும் அவர் ஏற்றுக் கொள்வதாக இல்லை. உண்மைச் சம்பவத்துக்கு இது மாதிரியான காட்சி அவசியம் என்று சொன்னோம். பின் ஒரு வார காலத்துக்குப் பின் இதில் நடிக்க சம்மதித்தார். இதையடுத்து அந்தக் காட்சி ஆபாசமில்லாமல் எடுக்கப்பட்டுள்ளது'' என்கிறார் இளையதேவன்.
"வேட்டைக்காரன்' படத்தில் சிறு வேடம் ஏற்றிருந்த சஞ்சீதாபடுகோனே "மன்னிப்பாயா' படத்தின் மூலம் ஹீரோயினாகிறார். தெலுங்கில் நடிக்க சென்ற இவர் இப்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். புதுமுக இயக்குநர் ராஜன் எழுதி, இயக்கும் இப்படத்தில் சித்து கதாநாயகனாக நடிக்கிறார்.
சஞ்சீதா படுகோனே தீபிகா படுகோனேவின் உறவுக்காரரா? என்கிறார்கள் சிலர்... சென்னை வந்திருந்த சஞ்சீதாவிடம் பேசுகையில், "" இருவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்ற ஒற்றுமைதான் இருக்கிறது. வேறு எந்தத் தொடர்பும் கிடையாது. தீபிகாவை நேரில் பார்த்தது கூட கிடையாது. என் குடும்ப பராம்பரியத்துக்கு ஏற்ப எனக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் "வேட்டைக்காரன்' படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தேன். அதன் பின், "பிள்ளையார் தெரு கடைசி வீடு' படத்தில் ஹீரோயினாக நடித்தேன். குறிப்பிடத்தகுந்த வாய்ப்புகள் அமையாததால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தேன். எதிர்பார்த்த வேடம் "மன்னிப்பாயா' படத்தில் கிடைத்திருக்கிறது. வழக்கமான காதல் கதைதான் என்றாலும், சற்று வித்தியாசப்பட்டு நிற்கும்'' என்றார் சஞ்சீதா படுகோனே.
பரபரப்பான ஐ.பி.எல். ஊழல் படமாகிறது. சென்னை அணியின் கேப்டனுக்கும், ஒரு திருநங்கைக்கும் நட்பு. அந்த நட்பின் பின்னணியில் கிரிக்கெட்டின் ஸ்பாட் பிக்சிங், ஊழல் தரகர்கள் என திரைமறைவு நிமிடங்களைப் படமாக்குகிறது "கிரிக்கெட் ஸ்கேண்டல்'.
புதுமுகங்கள் நடிக்க, முக்கிய பாத்திரமேற்று இப்படத்தை இயக்குகிறார் திருநங்கை ரோஸ். "" கிரிக்கெட் ஸ்கேண்டல் என்பது கிரிக்கெட்டில் நடக்கும் ஊழலை குறிக்கும். தற்போது நாடெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் ஐபிஎல் ஊழல்தான் படம். கிரிக்கெட் ஊழல் மூலம் இந்தியாவின் பொது மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதுதான் கதை. ஊழல் சம்பந்தமான ஒரு புள்ளியைப் பின் தொடர்ந்து சென்றதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சில ஊழல் பேர் வழிகள் இந்தப் படத்துக்கு தகவல்களும் கொடுத்திருக்கிறார்கள். அவர்களை இண்டர்நெட் மூலமாக தொடர்பு கொண்டு தகவல்களைச் சேகரித்தேன். அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருக்கிறது'' என்கிறார் ரோஸ்.
தமிழ் மற்றும் பல்வேறு கன்னடப் படங்களில் நடித்திருப்பவர் பூஜாகாந்தி. ஏராளமான பட வாய்ப்புகள் இருந்த நிலையில் திடீரென்று அரசியலில் இறங்கினார். பின் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பிஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்தி வந்ததால் தான் நடித்து வந்த 6 படங்களுக்கு கால்ஷீட் தரவில்லை. இதனால் கன்னட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் கோபத்துக்கு ஆளானார். தற்போது மீண்டும் சினிமாவில் கவனத்தை திருப்பியிருக்கிறார். நின்று போய் இருக்கும் படங்களுக்கு கால்ஷீட் தந்தாலும் புது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். கன்னடத்தில் வெளியான "தண்டுபாளையம்', தற்போது தமிழில் "கரிமேடு' என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. கவர்ச்சி ப்ளஸ் போதை பெண்ணாக இப்படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பூஜாகாந்தி. கன்னட வாய்ப்புகள் இல்லாததால், இப்படம் மூலம் தமிழில் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறாராம்.
கடந்த ஒரு மாதமாகவே ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் கொண்டிருக்கிறார் சிம்பு. சமீபத்தில் தியானம் செய்யப் போவதாக இமயமலை புறப்பட்டுச் சென்றார். இதற்கிடையில் நடித்து வந்த இரண்டு படங்களில் நடிக்க முடியாது என்று "ஷாக்' கொடுத்திருக்கிறார். தன் டுவிட்டர் பக்கத்தில் சிம்பு, ""மன ரீதியாக எனக்கு ஓய்வு தேவை. பணம் மட்டுமே எனக்கு நோக்கம் இல்லை. பணம், புகழ், ரசிகர்கள் இந்த மூன்றையும் ஆண்டவன் கொடுத்து விட்டார். இன்னொரு விஷயத்தை சொல்வதற்காக வருந்துகிறேன். "வாலு', "வேட்டை மன்னன்' படங்களில் நடிக்காமல் ஒதுங்க உள்ளேன். இதற்கு தயாரிப்பு நிறுவனத்துடன் எனக்கு ஏற்பட்ட பிரச்னைதான் காரணம்'' என கூறியிருக்கிறார். இந்த அறிவிப்புக்கு பின் தயாரிப்பு தரப்பில் இருந்து சமரசம் பேசப்பட்டது. பின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் பேசியதை அடுத்து அந்த இரண்டு படங்களிலும் நடிப்பதாக சிம்பு ஒப்புக் கொண்டிருக்கிறார். இதன் பிறகு கூறுகையில், ""ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளேன். ஆன்மிகம் என்னை பெருமளவுக்கு மாற்றியிருக்கிறது'' என்றார் சிம்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காரைக்குடி புதிய மாவட்டம்: டிடிவி. தினகரன்

காரைக்குடியில் பேசாமல் சென்றது ஏன்? விஜய்க்கு ப. சிதம்பரம் கேள்வி

தமிழகம் தலைநிமிர அதிமுக ஆட்சி அமைய வேண்டும் : சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன்

காரைக்குடியில் பேசாமலேயே சென்ற விஜய்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


