கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் அவசர கூட்டம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

"பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்கிற கருத்து சரியானதா, தவறானதா?'

பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதில் தவறொன்றுமில்லை. பத்தாண்டு சிறைவாசம், அவர்களைப் பக்குவப்படுத்தி இருக்கும்.

Updated On :8 ஜனவரி 2014, 1:10 am IST

அறச்சாலைகள்

"பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதில் தவறொன்றுமில்லை. பத்தாண்டு சிறைவாசம், அவர்களைப் பக்குவப்படுத்தி இருக்கும். உணர்ச்சி வேகத்தால் செய்த தவறுகளை உணர்ந்து திருந்தியிருப்பார்கள். சிறைச் சாலைகள் கைதிகளை நல்வழிப்படுத்தும் அறச்சாலைகளாக மாறவேண்டும். கவுன்சிலிங் மூலம் அவர்களின் மனமாற்றத்தை அறிய வேண்டும். அவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும்.

எம்.எஸ். இப்ராகிம், சென்னை.

இரண்டு வகை

பொதுவாகவே பத்தாண்டுகளுக்கு மேல் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளில் இரண்டு வகையுண்டு. ஒன்று கொலைக் குற்றவாளிகள். இரண்டு தீவிரவாதச் செயல்களினால் பலபேர் மரணமடையக் காரணமானவர்கள். சரியான விசாரணை செய்தால் அவர்களை இனம் கண்டுகொள்ளலாம். ஏதோ ஒரு அவசரக் கோலத்தில் நிலை தடுமாறி கொலை செய்திருந்தால், அவர்களின் பத்தாண்டு சிறைவாசம் முடிந்ததும் கட்டாயம் அவர்களுக்கு விடுதலை அளிக்கலாம். தீவிரவாதத்தில் நேரடியாகப் பங்கேற்றவர்களுக்கு மன்னிப்பு என்பதே கூடாது.

கலைப்பித்தன், கடலூர்.

பயம் போகும்

சரியானதா தவறானதா என்பதைவிடவும், விடுதலை என்பது குற்றவாளியின் மனதிலும் மற்றவர்கள் மனதிலும், குற்றச் செயலின் மேல் இருக்க வேண்டிய பயத்தை போக்குவதாய் ஆகக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கைதியின் பத்துவருட சிறைவாழ்க்கையின் நாள்கள், மனோதத்துவ ரீதியில் கணிக்கப்பட்டே விடுதலை தீர்மானிக்கப்பட வேண்டும்.

ப. சிவதாணு பிள்ளை, நாகர்கோவில்.

அவப்பெயரை மாற்றலாம்

கைதிகளின் நடத்தை திருப்திகரமாக இருந்தால், விடுதலை செய்யலாம். மீதியுள்ள ஆயுள்காலத்திலாவது, அவர்கள் தங்கள் குடும்பம் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ மனிதாபிமானத்துடன் அனுமதிக்கலாம். குழந்தைகளுக்கும் குடும்பத்துக்கும் தன்னால் ஏற்பட்ட அவப் பெயரை அவர் விடுதலையாகி மாற்றலாம். தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளையே மன்னித்து மறுவாழ்வு வாழ வழிவகை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் இக்காலத்தில் ஆயுள் தண்டனை பெற்று பத்து ஆண்டுகள் சிறையிலிருந்தவர்களை தாராளமாக விடுதலை செய்யலாம்.

வீ. சுந்தரமகாலிங்கம், திருவனந்தபுரம்.

நியாயமல்ல

இழைத்த குற்றத்திற்கேற்ப தண்டனையை நீதிமன்றம் வழங்குகிறது. தண்டனைக்காலம் முழுவதும் முடித்த பின்பே ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்தல் வேண்டும். அப்போதுதான் மனந்திருந்தி வாழவும், தண்டனை பற்றிய அச்ச உணர்வும் மனதில் மேலோங்கி சரியான பாதையில் வாழ்வு செல்லும், பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக விடுதலை செய்யலாம் என்ற கருத்து சட்டத்துக்கும் நியாயத்தும் புறம்பானதாகும்.

க.மா.க. விவேகானந்தம், மதுரை.

மீண்டும் வசந்தம்

சந்தர்ப்ப சூழ்நிலையால், உணர்ச்சி வசத்தால் தவறிழைக்க நேர்ந்து பின்னர், அத்தவறுக்காக சிறையில் பத்தாண்டுகளாக கண்ணீர் வடித்து தங்களின் வாழ்வை தொலைத்தவர்கள் மனம் திருந்தி எஞ்சியுள்ள காலத்திலாவது நல்லபடியாக வாழ நினைப்பர். அத்தகையவர்களின் மனநிலை மாற்றம் மற்றும் உடல்நிலை, வயது போன்றவைகளின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தால் அவர்களின் வாழ்வு மீண்டும் வசந்தமாகும்.

மா. பழனி, கூத்தப்பாடி.

ஆராய்ந்து அளித்த தீர்ப்பு

ஆயுள் தண்டனை பெறுவதற்கு உரிய குற்றத்தைச் செய்தவர்களுக்குத்தான் அந்தத் தண்டனை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கணக்கில் வழக்குரைஞர்களின் வாதங்களையும் செய்த குற்றத்தையும் ஆழ்ந்து ஆய்ந்தறிந்த பிறகே நீதிபதிகளால் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகின்றது. எனவே, பத்தாண்டுகளுக்கு மேல் சிறையிலிருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது நீதிமன்றப்பணியில் குறுக்கிடுவதும், நீதிமன்ற அவமதிப்பும் ஆகும்.

ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.

திருந்த வாய்ப்பு

பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யலாம். பத்து வருட தண்டனை அவர்களின் மனதில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கும். அதனால் திருந்துவதற்கு வாய்ப்பு அதிகம். மனிதன் திருந்துவதற்குதான் சிறைகள். அங்கேயே வாழ்வதற்கு அல்ல. சிறையில் உள்ள காலங்களில் அவர் குடும்பம் எவ்வளவு சிரமம் அடைந்திருக்கும்? எனவே விடுதலை செய்யலாம்.

மா. கார்த்திகேயன், ஆர்.எஸ். மங்களம்.

குற்றம் பெருகும்

ஒரு வழக்கில் தண்டனை என்பது சாட்சிகளின் அடிப்படையில் உண்மைகளை ஆய்ந்து நீதிபதியால் தரப்படுகிறது. அந்தக் காலம்வரை அந்தக் குற்றவாளிகள் முழுமையாக சிறை தண்டனையை ஏற்றுக்கொள்வதே சரியான நடைமுறையாகும். பத்தாண்டுகளுக்குமேல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கருத்து சரியல்ல. இதனால் நாட்டில் நிச்சயம் குற்றங்கள் பெருகும்.

வலங்கொண்டான், சேலம்.

தகுந்த அறிவுரை

ஆயுள் தண்டனை கைதிகள் எனப்படுவோர் நிரந்தரமாகவே சிறையில் இருக்கப்போகிறவர்கள் அல்லர். சிறையில் இந்தக் கைதிகளின் நன்னடத்தை, இவர்கள் மேற்கொண்ட சிறைச்சாலை தொடர்பான பணிகள், நேர்மை, நாணயம், ஒழுக்கம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இவர்கள் மீது ஓர் அனுதாபம் ஏற்படும்.

இவர்களின் மனநிலையை மனோதத்துவ பரிசோதனை மூலம் அறியலாம். சில பரிசோதனைகள் முடிவுற்ற பின்னர் தக்க அறிவுரைகளுடன் இவர்களை விடுதலை செய்வது தவறல்ல.

கே.என். பாலகிருஷ்ணன், கும்பகோணம்.

வழக்கு ஒரு சடங்கு

பத்தாண்டுகளுக்கு மேலாக என்பது சரியல்ல. இது சரியென்றால் வாதம், பிரதிவாதம் என்பதெல்லாம் தேவையே இல்லையே. எப்படியும் பத்தாவது ஆண்டில் அரசு விடுவித்துவிடும் என்றாகிவிட்டால், வழக்கை ஒரு சடங்காக செய்து முடித்து விடுவார்கள்.

உடல் நலம், நன்னடத்தை என்ற அடிப்படையில் விடுவிப்பது என்றால்கூட அதையும் நீதிமன்றம் வழியாகத்தான் செய்ய வேண்டும்.

மு. தனகோபாலன், திருவாரூர்.

தவறை எண்ணி வருத்தம்

தங்கள் உன்னதமான வாழ்க்கையை சிறைச்சாலையில் கழிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் தவறை எண்ணி எண்ணி நாள்தோறும் வருந்தி கொண்டிருப்பர். தாங்கள் செய்த தவறை கனவில்கூட மீண்டும் காணவிரும்பாதவர்கள். சொல்லப்போனால் தவறே செய்யாத சிலர்கூட தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இப்படிப்பட்டவர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறை வாழ்க்கை என்பதே அதிகம்தான். எனவே இவர்களை தாராளமாக விடுவித்து விடலாம்.

க. சு. ஸலாஹீத்தீன்மழாஹிரி, காயல்பட்டினம்.

தீய சக்திகள்

குற்றவாளிகளை பத்தாண்டுகளுக்குப் பின் ஏன் விடுதலை செய்யவேண்டும்? மீண்டும் கேடு விளைவிக்கவா? பத்து ஆண்டுகள் சோறு போட்டதற்கு பிரதியாக சமுதாயத்திற்கு அவர்கள் என்ன செய்வார்கள்? தீய சக்திகளுக்கு அரசு போட்டது தண்டச்சோறு அல்லாமல் வேறென்ன? அவர்கள் வெளியே வந்து சமூக நன்மைக்காக பிரதிபலன் கருதாது பாடுபடுவதாக உறுதி அளித்தால், விடுதலை செய்யலாம்.

தி. ரங்கசாமி, ஸ்ரீரங்கம்.

அரிய வாய்ப்பு

கொடூர குற்றங்களைத் தவிர்த்து, பிற குற்றங்களின் தன்மையைப் பொருத்தும், நன்னடத்தையைக் கருத்தில் கொண்டும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதில் தவறேதுமில்லை.

அவ்வாறு விடுதலை செய்யப்படும் கைதிகள் தங்களைத் திருத்தி, பண்படுத்தி வாழ்வதற்கான அரிய வாய்ப்பாகவே இதை பயன்படுத்திக் கொள்வார்கள்.

அ. கற்பூரபூபதி, சின்னமனூர்.

வருமானத்துக்கு வழி

மரண தண்டனை வேண்டாம் என்பதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆயுள் தண்டனை பெற்றவர்களையும் பத்து ஆண்டுகள் முடிந்தால் விடுதலை செய்ய வேண்டும் என கூறுவது, குற்றங்கள் அதிகரிக்க வழி வகுத்துவிடும். தண்டனைகள் அதிகமாகும் போதுதான் தவறுகள் குறையும். அப்படி இருக்கும்போது தண்டனையை குறைப்பது தவறுகள் அதிகமாக வழிவகுத்துவிடும்.

தண்டனை காலத்தைக் குறைப்பதைவிட, அவர்களின் தண்டனைக் காலம் முடிந்ததும் நிரந்தரமாக தொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்கான வழிகளை அரசு ஏற்படுத்தலாம்.

ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.