தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி, கூட்டணி ஆட்சி- எது மக்களுக்கு நன்மை தரும்? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

News image

தமிழக சட்டப்பேரவை - (கோப்புப்படம்)

Updated On :20 மே 2026, 3:41 am IST

வாக்குறுதிகள்

ஆட்சி அமைக்க கூட்டணி தேவைப்படலாம். ஆனால், கூட்டணி என்பது தேர்தலில் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டது. இப்படி கூட்டணிகள் கொண்டு வெற்றி பெற்ற கட்சிகள், ஒன்றுகூடி கூட்டணி ஆட்சி அமைக்கும்போது அவரவர் கொள்கைகளை, விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை உண்டாகும். அனைத்துக் கூட்டணி கட்சிகளும் சமரசம் செய்துகொள்ள வேண்டும். இதுவே ஒரு கட்சி கூட்டணி இல்லாமல் தனித்து நின்று பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றால், அக்கட்சி தேர்தலின்போது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் .

கே. ஆர். ஜி. ஸ்ரீராமன்,பெங்களூரு.

திருப்திப்படுத்த...

கூட்டணி ஆட்சியானாலும் சரி, தனிப்பெரும்பான்மை ஆட்சியானாலும் சரி எதுவுமே மக்களை உறுதியாக திருப்திப்படுத்த முடியாது. மக்களின் எதிர்பார்ப்பு என்பது, குழந்தைகள் ஒவ்வொன்றாக மாறி மாறி கேட்டு அடம் பிடிப்பது போலத்தான் இருக்கும். இதில், தனிப் பெரும்பான்மை ஆட்சி என்றாலும்கூட தற்போதைய அரசியல் சதுரங்கத்தில் பிளவுபட்டு தனி அணியாக மாறி விடுகிறது. கூட்டணி ஆட்சி என்றால் எப்போது வேண்டுமானாலும் ஆதரவை வாபஸ் பெற முடியும். மொத்தத்தில் நித்திய கண்டம் பூரண ஆயுசுதான்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்.

தன்னிச்சையாக...

தனிப் பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சியமைக்கும்போது அதை யாரும் கேள்வி கேட்க முடியாது; எந்தச் சட்டத்தையும் இயற்றி விடலாம் என்கிற தன்னிச்சையான குணம் தலைதூக்கி விடுகிறது. கூட்டணி ஆட்சியில் நல்ல அனுசரணையும் மற்றவர் குரலுக்கு மதிப்பளிக்கும் குணமும் வெளிப்பட வழி கிடைக்கும். எதிர்க்கட்சிகளை கலந்தாலோசிப்பதால் பேரவையில் அமளி துமளி ஏதுமில்லை. மாற்றுக் கட்சிகளிடையே கருத்தொற்றுமையை வளர்த்து நல்லிணக்கத்தை உருவாக்கி விட்டால், நல்லாட்சி புரிய ஒத்துழைப்பை நல்குவர். எனவே, கூட்டணி ஆட்சியே ஆகச்சிறந்த ஆட்சி முறையாகும்.

ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.

கடிவாளம்

பல்வேறு இன- ஜாதி- மொழி பேசும் மக்கள் வாழ்கிற நாட்டில் கூட்டணி ஆட்சிதான் மக்களுக்குப் பெரிய அளவில் நன்மை தரும். இதில் இரு பெரும் நன்மைகள் உண்டு. ஒன்று, அறுதி பெரும்பான்மை பெற்று அமைகிற ஆட்சியைப் போல ஆட்டம் போட முடியாது. மற்றொன்று, ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் கூட்டணி கட்சிகளினுடைய கருத்து

களைக் கேட்க வேண்டும். கூட்டணி ஆட்சியில், ஆட்சிக்கு தலைமை ஏற்றுள்ள கட்சி, எல்லை மீறும்போது அதைக் கட்டுப்படுத்துகிற கடிவாளங்களாக கூட்டணிக் கட்சிகள் செயல்படும். இதனால் கூட்டணி ஆட்சியில் தவறுகள் குறைவாகவே நடைபெறும்.

முயற்சி முருகேசன், சென்னை.

நல்வழிப்படுத்த...

ஜனநாயக நாட்டில் இரண்டுக்குமே இடமுண்டு. தனிப் பெரும்பான்மை ஆட்சி நடக்கும்போது விரைவாக சட்டமியற்றி மக்கள் நலத்திட்டங்கள நடைமுறைப்படுத்த முடியும்; மற்ற கட்சிகளின் ஆதரவுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. விரைவாக முடிவு எடுக்க வாய்ப்புள்ளது; சில நேரங்களில் அது அவசர முடிவாகக்கூட அமையலாம். கூட்டணி ஆட்சி எனும்போது கூட்டணிக் கட்சிகளை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதனால், காலதாமதம் ஏற்படவாய்ப்புள்ளது. அதே வேளையில் ஆளும் கட்சி செய்கிற தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களை நல்வழிப் படுத்துவதும் கூட்டணி ஆட்சியில் சாத்தியம் உண்டு.

உதயா ஆதிமூலம், திருப்போரூர்.

தொண்டுள்ளம்

கூட்டணி ஆட்சி அமையும் நிலையில் பெரும்பான்மைக் கட்சிக்கோ மற்றும் முதல்வருக்கோ எச்சரிக்கை உணர்வு அதிகம் இருக்கும். 'தான்' என்ற போக்கு நிதானமாக மாறும். தனிப் பெரும்பான்மை ஆட்சி புரிபவர் மக்களுக்குத் தொண்டாற்றத்தான் தனக்குப் பதவி கிடைத்திருப்பதாக கருதினால், நிச்சயம் மீண்டும் காமராஜர் ஆட்சிபோன்று அமைவதை மக்களும் அனுபவிக்க முடியும். தனிப்பெரும்பான்மை ஆட்சியோ, கூட்டணி ஆட்சியோ அதன் தலைவர் யார்? முதல்வர் யார்? அவரின் தொண்டுள்ளம் எப்படி? உள்ளிட்ட கோணத்தில் அலசினால் அமையும் நல்ல முதல்வர்களால் எந்த ஆட்சியுமே நன்மை பயக்கும்.

ஆர்.விநாயகராமன், திசையன்விளை.

ஜனநாயகம்

அதிகப் பெரும்பான்மையுடன் அமைந்தால் எதிர்க்கட்சிகள் எவரையும் மதிக்க மாட்டார்கள். தவறு செய்யும்போது தட்டிக் கேட்கும் அளவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். இல்லையேல் கடிவாளம் இல்லாத குதிரையாக ஓடுவது ஜனநாயகத்துக்கு ஆபத்தாக முடியும். கூட்டணி ஆட்சியில் மற்ற கட்சிகளோடு இணைந்து செயல்பட முடியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் பலத்தைக் கொண்டு நிர்ப்பந்திக்கவும் முடியும். பெரும்பான்மை எப்படி இருப்பினும், ஜனநாயகத்தை மதிப்பவர்களால் மட்டுமே நல்ல நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியும்.

ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

குழப்பத்தையே தரும்

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி இருந்தால்தான் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படும்; துணிச்சலாக சில முடிவுகளை எடுத்து நல்லதைச் செய்ய முடியும்; தலைமை முடிவுக்கு கட்டுப்படும் சூழல் நிலவும். ஆனால், கூட்டணி ஆட்சி என்றால் கட்டுப்பாடு தட்டுப்பாடு ஆகும். எந்த நேரத்தில் ஆதரவு வாபஸ் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் எந்தவொரு துணிச்சலான முடிவும் எடுக்க வசதி இல்லாமல் போகும். ஊழலுக்கு வழி வகுக்கும். அரசை விமர்சித்து நாலா பக்கங்களிலும் இருந்து தினம் தினம் பிரச்னை எதாவது ரூபத்தில் வந்துகொண்டே இருக்கும். கூட்டணி ஆட்சி குழப்பத்தையே தரும்.

சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

மக்கள் நலன்

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைவது என்பது அசாத்தியமான ஒன்று. அத்தகைய ஆட்சியை மக்கள் அமைத்துக் கொடுக்கிறார்கள் என்றால், அதில் அனைத்துத் தரப்பு மக்களும் அடங்கியுள்ளனர் என்றே அர்த்தம். இதில் ஜாதி, மதம், ஊழல் அனைத்தையும் தாண்டி ஜனநாயகம் என்ற ஒன்று வெற்றி பெற்றுள்ளதாகவே அர்த்தம். அப்படிப்பட்ட ஆட்சி அமைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவருக்கு கூட்டணிக் கட்சிகள் கொடுக்கின்ற அதிகாரத்தில் பங்கு என்ற அழுத்தம் இருக்காது. பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த தலைவர் முழுமையாக மக்கள் நலனில் மட்டுமே கவனம் செலுத்தலாம்.

மா. கார்த்தி , ஈரோடு.

வளர்ச்சிக்கான உறுதி

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அரசியல் மட்டுமல்ல; தொழில்நுட்பம், எரிசக்தி, விவசாயம், உள்நாட்டு உற்பத்தி ஆகியவை பொருளாதார நிலைத்தன்மையுடன் நேரடியாக இணைந்துள்ளன. இதுபோன்ற விஷயங்களில் தனி பெரும்பான்மை ஆட்சியால்தான் முடிவுகள் வேகமாக எடுக்கப்படும். கூட்டணி ஆட்சி பல தரப்பினரின் கருத்துகளை கேட்டு செயல்படுவதால், விவசாயம், மக்கள் நலத்திட்டங்கள், எரிபொருள் சுமை குறைப்பு மற்றும் சமூக சமநிலைக்கு முக்கியத்துவம் அளிக்கும். எனவே, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தும் ஆட்சிதான் மக்களுக்குத் தேவை.

ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.

எல்லோருக்குமானது

ஆட்சி என்பது அனைவருக்குமானது. தனிப் பெரும்பான்மையுடன் ஓர் அரசு ஆட்சி செய்யும் என்றால், அந்த அரசு மக்கள் விரோத அரசாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் தன்னிச்சையான முடிவுகளும், சர்வாதிகாரப்போக்கும்தான் இருக்கும். அதே நிலையில் கூட்டணி ஆட்சி என்றால், பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறும்போது சர்வாதிகாரப் போக்குக்கு இடமில்லை. சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவதில் இல்லை; சம வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதாகும். எனவே, கூட்டணி ஆட்சியின் மூலமாகத்தான் அவை நிலைநிறுத்தப்படும்.

ஆர்.ஜெயபிரகாஷ், தேவகோட்டை.

கூட்டணி எளிதல்ல...

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்போது எதிர்க்கட்சி மற்றும் பிற கட்சியினரின் எதிர் செயல்பாட்டுக்கு செவி சாய்க்காமல் மக்களுக்கு ஆதரவான, மக்கள் வளர்ச்சிக்கான எத்தகைய திட்டங்களையும் விரைந்து தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துச் செயல்படுத்துவது எளிது. கூட்டணி ஆட்சியில் அத்திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிலையான ஆட்சியமைக்க தனிப் பெரும்பான்மையையும், உண்மையான ஜனநாயக முறைப்படி மக்களுக்கு ஆதரவான நல்ல திட்டங்களையும் நிறைவேற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியும் சிறந்தது. எந்த வகையாக இருப்பினும் மக்கள் நலனே முக்கியம்.

ப.கோவிந்தராசு, ஊத்தங்கால்.

உறுதியில்லை

தனிப் பெரும்பான்மையுடன் அமைக்கும் ஆட்சியினால் மக்களுக்கு தங்குதடையின்றி நன்மைகள் கிடைக்கும். அதே நேரத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் கட்சி தன் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் செயல்பட முடியும். கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை விட்டுக் கொடுக்காமல் செயல்படுத்த முடியும். கூட்டணி ஆட்சி என்பது ஒரு தவளை மேட்டுக்கு இழுக்கும் மற்றொன்று தண்ணிக்கு இழுக்கும் என்பார்களே- அதுபோல இழுபறியில்தான் செயல்படும். கூட்டணி ஆட்சிதான் நிலையான ஆட்சியாக இருக்கும் என்று உறுதியுடன் கூற முடியாது என்பதற்கு பிகார் உதாரணம்.

பி.சுந்தரம், வெண்ணந்தூர்.

இனி கூட்டணிதான்

இந்தியாவில் பல மதங்கள், பல மொழிகள், பல கலாசாரங்கள் இருப்பதால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சி தத்துவத்துக்கு ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவைத் தவிர, அகில இந்திய அளவில் ஒரு பலமான கட்சி இல்லை. எதிர்க்கட்சிகளிடமும் ஒற்றுமை இல்லை. இனிவரும் காலங்களில் தனிப் பெரும்பான்மையுடனான ஆட்சி என்பது மிகவும் கடினமான ஒன்று. மத்தியில் ஆளும் அரசே கூட்டணி ஆட்சியில்தான் உள்ளது. கூட்டணி ஆட்சியில் எல்லோரிடமும் கருத்துக் கேட்கப்பட்ட பிறகே மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்பதால், அதுவே நன்மை தரும்.

தாமஸ் எட்மண்ட்ஸ், தாம்பரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.