சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

சமூகநீதி கணக்கெடுப்பு நடத்த தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது குறித்து...

சமூகநீதி கணக்கெடுப்பு நடத்த தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.

Updated On :

அவசியமான தரவுகள்

புதிய சமூகநீதி கணக்கெடுப்பு மூலம் எந்தெந்த சமூகங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் பின்தங்கியுள்ளன என்பதைத் துல்லியமாக அறிந்து, அதற்கேற்ப திட்டங்களை வகுக்க முடியும். அதோடு மட்டுமல்லாமல், சமூகங்களின் உண்மையான எண்ணிக்கை மற்றும் அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க இது உதவும். தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டு முறைகளுக்கு நீதிமன்றங்களில் சட்டப் பாதுகாப்பு பெற, இது அவசியம்.

உதயா ஆதிமுலம், திருப்போரூர்.

நம்பகத்தன்மை முக்கியம்

சமூகநீதி என்பது வாய்ப்புகளைச் சமமாகப் பகிர்ந்தளிப்பதிலும், பின்தங்கிய மக்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதிலும் அடங்கியுள்ளது. அந்த வகையில், தமிழக அமைச்சரவையின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும். குறிப்பாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள சமூகங்களை அடையாளம் காணவும், அவர்களின் உண்மையான நிலையை அறிந்து, தேவையான நலத்திட்டங்களை வகுக்கவும் இக்கணக்கெடுப்பு பெரிதும் உதவும். அதேவேளையில், இக்கணக்கெடுப்பு நடுநிலையுடனும் நடத்தப்பட வேண்டும்.

முனைவர் ஸ்ரீ. ஸ்ரீதர், மதுரை.

அரசியல் தலையீடின்றி...

உண்மையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளையும் அரசின் நலத்திட்டங்களையும் சமூகநீதிக் கணக்கெடுப்பால் மேம்படுத்த முடியும். குறிப்பாக, பின்தங்கிய சமூகங்களின் தேவைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய வாய்ப்புகளையும் உரிமைகளையும் வழங்க இது வழிவகுக்கும்.

அதேவேளையில், கணக்கெடுப்பு அரசியல் தலையீடின்றி, வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் நடைபெற வேண்டும். சேகரிக்கப்படும் தகவல்கள் வெறும் அறிக்கையாக இல்லாமல், நடைமுறை வளர்ச்சித் திட்டங்களாகவும் மாற வேண்டும்.

ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.

தவறான முன்னெடுப்பு

ஜாதி வேறுபாடுகளைக் களைந்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். அதை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படக் கூடாது. ஜாதி மற்றும் மத அடையாளங்கள் அற்றவர் என்று சான்றிதழ் பெற விரும்புவோர் ஒருபுறமும், மறுபுறம் ஜாதி அடிப்படையில் உரிமைகளைக் கோருபவர்களுக்கும் இருக்கும் முரண்பாட்டை என்னவென்பது? ஜாதிவாரி கணக்கெடுப்பு தவறான முன்னெடுப்பு.

எஸ். ரவிசங்கர், சென்னை.

சமத்துவம் உருவாகும்

சமூகநீதி கணக்கெடுப்பின்மூலம் ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள மக்களின் எண்ணிக்கையை அறியலாம்; கல்வியறிவு, உயர் கல்வி மற்றும் கல்வி வாய்ப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கண்டறியலாம்; அரசு வேலைகள் மற்றும் உயர் பதவிகளில் ஒவ்வொரு சமூகத்தினரின் பங்களிப்பு குறித்த புரிதல் நமக்குக் கிடைக்கும்;

அரசின் உதவி தேவைப்படுபவர்களைக் கண்டறிந்து அரசின் நலத் திட்டங்களைச் சரியாகக் கொண்டுசேர்க்க உதவியாக இருக்கும். இதன்மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டங்களை உருவாக்கி சமத்துவமான சமுதாயத்தை உருவாக்கலாம்.

மவ்லவீ மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.

பொருளாதார அடிப்படையில்...

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, நமது மக்களின் வாழ்க்கை முறைகளில் ஜாதி ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. அவற்றைக் களையும் பொருட்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போதே ஜாதி கணக்கெடுப்பையும் நடத்தி, அனைவருக்கும் கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளித்து முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கமும் நடைமுறையும் இதுவரையில் இருந்து வந்தன. அதனால், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. எனவே, இந்தக் கணக்கெடுப்பில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

கலைப்பித்தன், கடலூர்.

அனைவருக்கும் வாய்ப்பு

தமிழக அமைச்சரவை சமூக நீதி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்க முன்னெடுப்பாகும். சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை மற்றும் சமூகப் பங்களிப்பு குறித்த உண்மையான தரவுகளைத் திரட்ட இது உதவும். இதன்மூலம் பின்தங்கிய மக்களின் தேவைகளையும் சவால்களையும் துல்லியமாக அறிய முடியும். சமூக நீதியின் உண்மையான நோக்கம் அனைவரையும் சமமாக நடத்துவது மட்டுமல்ல, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் உரிய வாய்ப்பை உறுதி செய்வதே!

ப. மோகனவேல், காஞ்சிபுரம்.

பாராட்டத்தக்கது

தற்போதைய 69% இடஒதுக்கீடும் அதற்கேற்ப பல்துறை நடைமுறைகளும் பழைய கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளன. புதிய சமூகநீதிக் கணக்கெடுப்பு நடந்தால் ஒவ்வொரு சமூகத்திலும் கல்வி, தொழில், இருப்பிடம், பொருளாதாரம், சுகாதாரம் போன்ற முக்கிய வாழ்வாதாரங்களின் தற்போதைய நிலவரம் தெரியவரும். அதன்படி விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்காக போதிய நலத் திட்டங்களையும், வளர்ச்சிக்கேற்ப புதிய சட்ட நடைமுறைகளையும் அரசு கொண்டு வரஇயலும். மென்பொருள் புதுப்பித்தல்போல தவெக அரசு துறைவாரியாக புதுப்பித்தலை மேற்கொள்வது பாராட்டத்தக்கது.

தே.ச. மங்கை, திருநெல்வேலி.

வரவேற்கத்தக்கது

தமிழகம் முழுவதும் அந்தந்த ஜாதி மக்களுடைய கல்வி, பொருளாதாரம், வேலை, வாழ்க்கைத் தரம் முதலியவற்றை கண்டறிந்து நமக்கிருக்கும் 69 % சதவீத இடஒதுக்கீட்டை தக்க வைப்பதே இதன் நோக்கமாகும். ஒவ்வொரு ஜாதியிலும் இருக்கும் படித்தவர்கள், அரசுப் பணியாளர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள், அரசின் நலத் திட்டங்கள் சென்றடைந்துள்ள விவரங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிய துல்லியமான தரவுகளை சமூகநீதிக் கணெக்கெடுப்பால் பெற முடியும். ஒட்டுமொத்த வளர்ச்சியை உருவாக்கும் சிறந்த நிர்வாகத்தை நடத்த உதவும். வரவேற்கப்பட வேண்டிய முடிவு.

ஜோ.வே. ஜீவா, திருப்பதிசாரம்.

அவசியமானது

மத்திய அரசு சமூகநீதிக் கணக்கெடுப்பை நடத்தி முடித்திருந்தாலும், அக்கணக்கெடுப்பில் பட்டியல் இனத்தவர் தவிர மற்ற இனத்தவர் அனைவரும் இதர பிற்பட்ட வகுப்பினர் என்ற ஓபிசி வரையறைக்குள் வந்துவிடுகின்றனர். தமிழ்நாடு அரசைப் பொருத்தவரை இதர பிற்பட்ட வகுப்பினர் அனைவருக்கும் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69% இட ஒதுக்கீட்டை பல்வேறு இடர்ப்பாட்டையும் தாண்டி தொடர்ந்து தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது.அனைவரும் பலனடைய இந்தக் கணக்கெடுப்பு அவசியம்

அ. கருப்பையா, பொன்னமராவதி.

நிலையான தீர்வு

"புலி வருது, புலி வருது' என்று தள்ளிப்போடாமல், நிலவரத்தை நேரடியாக எதிர்கொண்டு தரவுகளை வெளிப்படையாகச் சேகரிப்பதே சிக்கல்களுக்கு நிலையான தீர்வைத் தரும். கணக்கெடுப்பை நடத்தி முடிக்கும்போது, தவறான பிரசாரங்களுக்குமுற்றுப்புள்ளி வைக்கப்படும். எந்தச் சமூகம் எவ்வளவு மக்கள் தொகையைக் கொண்டுள்ளது? அவர்களின் உண்மையான சமூக-பொருளாதார நிலை என்ன? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தரவு கிடைத்துவிடும். உண்மையான தரவுகள் சமூகநீதிக்கு வலு சேர்க்கும்.

ஜோதிமணி பாண்டியன், காரைக்குடி.

சிக்கல்கள் ஏராளம்

தமிழகத்தில் ஜாதிவாரியான கணக்கெடுப்புடன் கூடிய சமூகநீதி விவரங்கள் சேகரிக்கப்படும் போது மக்களிடையே ஜாதி உணர்வைத் தூண்டலாம். மேலும், சமூக கட்டமைப்பில் ஏற்கெனவே இருக்கும் ஜாதி ரீதியிலான பெருமை முனைப்பு அதிகரிக்கக்கூடும்.

இந்தக் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியான பிறகு, அரசியல் கட்சிகள் பெரும்பான்மை ஜாதியினரைக் கவர வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவார்கள். ஒரே ஜாதிக்குள் இருக்கும் ஏராளமான உட்பிரிவுகள்; பெயர்களில் இருக்கும் உச்சரிப்பு வேறுபாடுகள் மற்றும் குழப்பங்கள் காரணமாக துல்லியமான கணக்கெடுப்பு பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

ரமிலா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

வாக்கு வங்கிக்காக...

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கழித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீடு என்று பெரும் சட்டப் பாதுகாப்பு இருந்தும் நம்மால் சமூக நீதியை உறுதி செய்ய இயலவில்லை என்றால் நடத்தப்பட வேண்டியது மீண்டும் ஒரு கணக்கெடுப்பு அல்ல; எங்கே எது தவறாகப் போனது என்பதை அறியவும் அதைச் சரிபடுத்தவும் ஆத்ம சுத்தியுடன் கூடிய ஒரு மீள் ஆய்வே. குறுகிய அரசியல் வாக்கு வங்கி லாப நோக்கங்களுக்காக நடத்தப்படும் எதுவும் மீண்டும் மீண்டும் நீதிமன்றங்களில் வழக்குகளாகவும் செயல்பாட்டு தாமதத்துக்குத்தான் வழிவகுக்கும்.

வெ.க.சந்திரசேகரன், வெள்ளக்கிணறு.

பாகுபாட்டை விதைக்கும்

ஒரு புறம் ஜாதி இல்லை என்கிற தத்துவத்தைக் கூறி, அனைவரும் சமம் எனக் கூறிக்கொண்டு கணக்கெடுப்பு நடத்துவதென்பது வகுப்பு வாத சண்டையைத்தான் தூண்டிவிடும். தென் மாவட்டங்களில் ஏற்கெனவே பேருந்தின் பெயர்களால் ஏற்பட்ட ஜாதிக் கலவரம் அனைவருக்கும் மறக்க இயலாத ஒன்று. ஜாதிகளை மறக்கவிடாமல் வைத்திருப்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும். சிறுபான்மை ஜாதிகளுக்கும் பெரும்பான்மை ஜாதிகளுக்கும் இது நிச்சயம் பாகுபாட்டை விதைக்கும்.

டி. சேகரன், மதுரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.