இடைக்காலத் தேர்தலில் அதிபர் டிரம்ப்பின் அதிர்ச்சிப் பின்னடைவு குறித்து...
இடைக்காலத் தேர்தலில் அதிபர் டிரம்ப்பின் அதிர்ச்சிப் பின்னடைவு குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

டொனால்ட் டிரம்ப் - கோப்புப்படம்
ஆபத்தானவர்
அமைதிக்கான நோபல் பரிசு தமக்கே தர வேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான கெஞ்சல்கள், அண்டை நாடுகளுடன் டிரம்ப் கொண்டிருந்த அடாவடித்தனம், நேச நாடுகளிடம்கூட அவர் காட்டிய வரிவிதிப்பு கடுமை போன்றவை அவர் எவ்வளவு ஆபத்தானவர் என்பதை உலகுக்குக் காட்டியது. இதை அமெரிக்க மக்களும் உணர்ந்து இருக்கிறார்கள் என்பதுதான் தேர்தல் முடிவு சொல்லும் வெளிப்படையான செய்தி. தோல்விக்குப் பிறகான அவரது நடவடிக்கையால் உலக மக்களிடத்திலும் அமெரிக்க மக்களிடத்திலும் ஒருவித பய உணர்வு ஏற்பட்டிருப்பது கண்கூடு. அவர் இனிமேலாவது தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
உதயா ஆதிமூலம், திருப்போரூர்.
பாடம் கற்பிப்பு
இடைக்காலத் தேர்தலில் டிரம்ப்புக்குக் கிடைத்த அதிர்ச்சிப் பின்னடைவானது, அதிகாரத்தின் கட்டவிழ்த்த போக்குக்கு மக்கள் எடுத்த ஜனநாயகப் பாடமாகும். ஒரு நாட்டின் தலைவரின் அரசியல் முடிவுகள் அந்த நாட்டுடன் நின்றுவிடுவதில்லை; உலகப் பொருளாதாரம், வர்த்தகம், அமைதி, பாதுகாப்பு என அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அமெரிக்கா மட்டும் முன்னேற வேண்டும்; மற்ற நாடுகள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்ற அணுகுமுறை உலக அமைதிக்கு உகந்ததல்ல. அதிகாரம் நிரந்தரமல்ல; மக்கள் தீர்ப்பே இறுதியானது என்பதை உலகத் தலைவர்கள் உணரட்டும்.
ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.
இந்தியாவுடன் இணங்கலாம்
இடைக்காலத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்ப் இனி முன்புபோல் அதிரடியான கொள்கை முடிவுகளை எடுக்க முடியாது. சீனா, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் பொருளாதார வளர்ச்சிப் போட்டியில் ஈடுபடுவதற்கு இந்தியாவுடனான பொருளாதாரக் கொள்கைகளை இணக்கமாகக் கொண்டுசெல்ல வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா உள்ளது. எனினும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் புதிய சட்டங்களை நிறைவேற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
கே. ராமநாதன், மதுரை.
அதிகார சமநிலை
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் மக்கள் தங்களது வாக்குரிமைமூலம் பதிலளிப்பார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ஆட்சியாளர்களின் அதிகாரத்துக்கு ஜனநாயகம் வழங்கும் மிகப் பெரிய கட்டுப்பாடு மக்களின் வாக்குரிமை. இந்த முடிவு, அமெரிக்க அரசியலில் புதிய அதிகாரச் சமநிலையை உருவாக்கியுள்ளது. ஆளுங்கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டாலும், ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து வலிமையுடன் செயல்படுவது அவசியம். ஆட்சியைப் பிடிப்பது அரசியல் வெற்றி; மக்களின் நம்பிக்கையைப் பெறுவதும் காப்பதுமே உண்மையான ஜனநாயக வெற்றி.
ப. மோகனவேல், காஞ்சிபுரம்.
சுய பரிசோதனைக் காலம்
ஆட்சியில் இருந்தாலும், கட்சிக்கான செல்வாக்கும் நாடாளுமன்ற அவைகளில் பெரும்பான்மையும் சரிந்திருப்பது அதிபர் டிரம்ப்பின் எதிர்கால அரசியல் திட்டங்களுக்குப் பெரும் சோதனையாக மாறியுள்ளது. இந்தச் சூழல் டிரம்ப்பின் தனிப்பட்ட ஆளுமைக்கு மட்டுமல்லாமல், அவரது கட்சியின் கொள்கைகளுக்கும் ஒரு முக்கியமான சுய பரிசோதனைத் தேவையை உருவாக்கியுள்ளது. அரசியலில் நிரந்தர வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்பதை உணர்ந்து, தனது அடுத்தகட்ட நகர்வுகளை அவர் மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய கட்டாயத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
ஜோதிமணி பாண்டியன், காரைக்குடி.
தாக்கம் தொடரும்
டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை ரத்து செய்யக்கூடிய புதிய சட்ட மசோதாவைக்கூட செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை நிறைவேற்றவும் சாத்தியமுள்ளது. இனி டிரம்ப்பின் முடிவுகள் ஒவ்வொன்றும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். டிரம்ப்பின் இந்த பின்னடைவு இந்தியாவுக்கு சில நன்மைகளையும் பல சவால்களையும் ஏற்படுத்தும். ஈரான் போர் நிறுத்தப்பட்டால் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது. உள்நாட்டில் டிரம்ப்பின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப் பட்டாலும் சர்வதேச அளவில் டிரம்ப்பின் எதிர்பாராத முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஜோ.வே. ஜீவா, திருப்பதிசாரம்.
தெளிவான நிராகரிப்பு
சாதாரண அமெரிக்கர்களைப் பாதிக்கும் எரிவாயு விலை, மளிகைப் பொருள்களின் விலை, மத்திய கிழக்கில் போர் போன்றவைதான் டிரம்ப்பின் இந்தத் தோல்விக்கு மிக முக்கியக் காரணம். இந்த முழுமையான தோல்வி, அதிபருக்கு அளிக்கப்பட்ட ஒரு தெளிவான நிராகரிப்பாகும். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் 43 சதவீத வாக்காளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தவே வாக்களித்ததாகக் கூறியுள்ளனர். அதற்காக அதிபர் டிரம்ப்பை இனி அலட்சியமாகக் கருத முடியாது. இனிமேல்தான் அவர் இன்னும் போர்க்குணம் மிக்க அதிபராக மாறுவார் என்று தோன்றுகிறது.
சின்னஞ்சிறுகோபு, சிகாகோ.
அடாவடி அரசியல்
உலகமயமாக்கல் பொருளாதாரத்தை எல்லா நாடுகளிலும் திணித்து படிப்படியாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நாடுகளையும் அதலபாதாளத்தில் தள்ளியதற்காக அதிபர் டிரம்ப் கொடுத்த விலைதான் இந்தத் தேர்தல் பின்னடைவு. நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைந்ததற்கும் அவரின் அடாவடி அரசியலே அடிப்படைக் காரணம். போர்களும், பிற நாடுகளின் மீது விதித்த வரிகளும், தேவையற்ற தலையீடுகளும் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக நின்றன. இனி எந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் ஜனநாயகக் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கு தன்னை முழுமையாக மாற்றிக் கொள்ள அதிபர் முன்வர வேண்டும்.
ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
மக்கள் விரும்பவில்லை
ராணுவ நடவடிக்கைமூலம் ஈரானைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர எண்ணிய டிரம்ப்பின் முடிவு படுதோல்வியைச் சந்தித்தது. அவருக்குத் தன் பலம் தெரிந்திருக்கலாம்; ஆனால், மற்ற நாடுகளின் பலம் முக்கியமாக ராணுவ நடவடிக்கை எடுத்த ஈரான், பொருளாதார விதிமுறைகளால் கட்டுப்படுத்த நினைத்த இந்தியா போன்ற நாடுகளால் அவரது அதிரடி நடவடிக்கைகள் எதிர்வினையாகி தோல்வியாகின. டிரம்ப்பின் திட்டமிடல், அதிரடி எதுவுமே சரியான முறையில் எடுக்கப்படவில்லை; அவற்றை அமெரிக்க மக்களே விரும்பவில்லை என்பதையே இந்தத் தேர்தல் முடிவு காட்டுகிறது.
இரா. இரவிக்குமார், சென்னை.
வியூகம் வென்றது
மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்பதுடன் அவர்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் திட்டங்களையே கொண்டுவந்தார் அதிபர் டிரம்ப். உலக மக்கள் அனைவருக்குமே வெறுப்புணர்வு ஏற்படும் வகையில் அவருடைய செயல்கள் அமைந்தன. இறக்குமதி வரியையும், நுழைவு இசைவு (விசா) கட்டணத்தையும் அதிகரித்தது, ரஷியா-உக்ரைன் போரையும், இஸ்ரேல்-பாலஸ்தீன போரையும், நிறுத்த முனைப்புக் காட்டாதது, இராக் மீது போர் தொடுத்தது உள்ளிட்டவையே அதிபர் டிரம்ப்பின் பின்னடைவுக்கான காரணங்களாகும். எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட வியூகம் வென்றது.
நூ. அப்துல் ஹாதி பாகவி, பட்டினம்பாக்கம்.
கேளாக் காதினராக...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பின்னடைவுக்குக் காரணம், அவரது 'எடுத்தேன், கவிழ்த்தேன்' செயல்பாடுதான். அதிபரின் அடாவடி நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு மக்களே கடிவாளம் போட்டுள்ளனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 'வீட்டோ' என்ற பெயர் பொறித்த தொப்பி அணிந்து காட்சியளித்ததை ஊடகங்கள் வெளியிட்டன. இதிலிருந்தே, அவர் மக்களின் மனசாட்சிக் குரலை 'கேளாக் காதினராகத்தான்' இருப்பேன் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். போர்களுக்கு உதவி செய்வது, பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது உள்ளிட்ட செயல்களே அவரைப் பின்னுக்குத் தள்ளின.
சீனி. மணி, பூந்தோட்டம்.
எதிர்பார்த்ததுதான்
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததுதான். அமெரிக்கர்கள் மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருமே அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாடு, பணி இழப்பு, குடியேற்றக் கொள்கையில் குளறுபடி, பிற நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்கள் அதிபர் டிரம்ப்பின் பின்னடைவுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்த கருத்து, உக்ரைன்-ரஷியா போரில் மறைமுக உதவி என்கிற இரட்டை வேஷம் உள்ளிட்டவை அனைத்தும் அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டன.
பி. சுந்தரம், வெண்ணந்தூர்.
விரும்பத்தகாத உத்தரவுகள்
ஆட்சி அதிகாரம் என்பது இறைவன் அளித்த வரம். அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த பலன்தான் அவருக்குக் கிடைத்த தோல்வி. உலக மக்கள் அனைவருமே அமைதியையே விரும்புகின்றனர். அதற்கு நேரெதிராக அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுகளை அமெரிக்கர்களே விரும்பவில்லை. அந்நாட்டு நீதிமன்றம்கூட அதிபரின் உத்தரவுகளுக்குத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. பல போர்களை நிறுத்தியதால் தனக்கு நோபல் பரிசு தரவேண்டும் என்று வெளிப்படையாகக் கூறிய அதிபர் டிரம்ப், தேவையற்ற போரைத் திணித்து, பழிவாங்க முனைந்தது தவறான முன்னுதாரணம்.
டி. சேகரன், மதுரை.
சர்வாதிகார சிந்தனை
அமெரிக்கா இப்போது ஒரு வல்லரசுதானா என்கிற கேள்வியை உலகம் முழுவதும் எழுப்புவதற்கு வழிகோலிவிட்டனர் அந்நாட்டு மக்கள். உலகை ஆளப் பிறந்தவர்கள் அமெரிக்கர்கள்தான், உலக வளங்கள் அனைத்தும் அமெரிக்காவுக்கே சொந்தம் என்ற சர்வாதிகார சிந்தனையால், அதிபர் டொனால்ட் டிரம்ப் மாபெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் யாரும் டிரம்ப்போல முன்னுக்குப்பின் முரணாகப் பேசி, நய தந்திரமின்றி நடந்துகொண்டதில்லை. அதனால்தான், அவர் செல்வாக்கை இழந்துள்ளார். இந்த இடைக்காலத் தேர்தல் முடிவு, உலக அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்ததுதான்.
எம். ஏ. ஷாஜிமுஹம்மது, நிரவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

