தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

டிரம்ப்புக்கு இறங்குமுகம்...

கேபிடல் ஹில்ஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளுக்கும் நடந்த இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி, மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

Donald Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Updated On :

கேபிடல் ஹில்ஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளுக்கும் நடந்த இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி, மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. காங்கிரஸ் எனப்படும் 435 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் அவையில் 253 இடங்களையும், மேலவையான செனட்டுக்கு தேர்தல் நடந்த 35 இடங்களில் 20 இடங்களையும் பெற்று ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருக்கும் ஜனநாயகக் கட்சி, டிரம்ப்பின் எல்லா முடிவுகளையும் கேள்வி கேட்கவும், முட்டுக்கட்டை போடவும் அதிகாரம் பெறுகிறது. இதற்கு முன்பு 2009 முதல் 2011 வரையிலான பராக் ஒபாமா ஆட்சியின்போதுதான், இதுபோல இரு அவைகளிலும் ஒரு கட்சி பெரும்பான்மை பலத்துடன் இருந்திருக்கிறது.

தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த மக்களின் தீர்ப்பல்ல என்று அதிபர் டிரம்ப் தெரிவித்திருப்பது நகைப்பை வரவழைக்கிறது. தொடர்ந்து குடியரசுக் கட்சி வெற்றிபெறும் டெக்சாஸ், கான்சஸ், ஓஹையோ, தெற்கு கரோலினா, அயோவா, கென்டக்கி உள்ளிட்ட மாகாணங்களில்கூட ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றிருப்பதில் இருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மீதும் அவரது நிர்வாகத்தின் மீதும் மக்கள் எந்த அளவுக்கு அதிருப்தியில் இருந்திருக்கிறார்கள் என்பது வெளிப்படுகிறது.

1988-க்குப் பிறகு டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் தலாரிக்கே செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்; மிக்ஷிகன் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் எல்.சையத் அமெரிக்க வரலாற்றில் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதலாவது இஸ்லாமியர்; ஜார்ஜியா, ஃபுளோரிடா, விஸ்கான்சின் மாகாணங்களில் முதல்முறையாக கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆளுநர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். டெக்சாஸிலும், கலிஃபோர்னியாவிலும் லத்தீன் அமெரிக்கர்கள் முதல்முறையாக ஆளுநராகி இருப்பதும், நியூ மெக்ஸிகோவில் அமெரிக்கப் பூர்வகுடியான செவ்விந்தியர் ஒருவர் முதல்முறையாக ஆளுநராகி இருப்பதும் வரலாற்றுத் திருப்பம்.

அதிபர் டிரம்ப்புக்கும், குடியரசுக் கட்சிக்கும் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதற்கு மூன்று முக்கியமான காரணங்களைக் கூறலாம். இன்ஃப்ளேஷன் (பணவீக்கம்), ஈரான், இமிக்ரேஷன் (குடியேற்றம்) ஆகிய மூன்று 'ஐ' க்கள்தான் டிரம்ப் நிர்வாகத்தின் மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன. டிரம்ப்பின் நடவடிக்கைகள், அடாவடி அறிவிப்புகள், ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவையும் காரணங்கள்தான் என்றாலும்கூட, மேலே குறிப்பிட்ட மூன்றும்தான் உடனடிக் காரணிகள்.

அமெரிக்க வாக்காளர்கள், விலைவாசி உயர்வு வரம்பு கடக்கும் போதெல்லாம் ஆட்சியாளர்களை அகற்றி இருக்கிறார்கள்.

விலைவாசி உயர்வை முன்னிறுத்தித்தான் 2024 அதிபர் தேர்தலின்போது டிரம்ப் பிரசாரம் செய்தார். ஒரு கேலன் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒன்றரை டாலருக்கும் அதிகம் என்பது, சாமானிய அமெரிக்கர்களுக்குக் கடுமையான சுமை. அதேபோலத்தான் இறக்குமதிக்கான வரியை அதிகரித்ததன் மூலம், எல்லாப் பொருள்களின் விலையும் அதிகரிக்க வழிகோலினார் அதிபர் டிரம்ப். அதன் எதிரொலியாக இப்போது படுதோல்வியை எதிர்கொள்கிறார்.

அதிபர் டிரம்ப்பின் முதலாவது ஆட்சியில் படையெடுப்பு, ராணுவத் தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்பதுடன், 2024 தேர்தலின்போதும் வெளிநாட்டு நிகழ்வுகளில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்கிற கொள்கையை முன்வைத்தார் டிரம்ப். ஈரான் மீதான தாக்குதல், இஸ்ரேலுக்கு அவர் அளித்த வரம்புமீறிய ஆதரவு, உக்ரைன்-ரஷியப் போரில் தலையீடு உள்ளிட்டவை அமெரிக்க மக்களை அவருக்கு எதிராகத் திரும்பச் செய்தன. ஈரான் தாக்குதல்கள், அவரே இப்போது கூறியிருப்பதுபோல, தேர்தல் தோல்விக்கு மிக முக்கியமான காரணம்.

குடியேற்றம் குறித்த அவரது நிலைப்பாடும், குடியேற்றம், சுங்கவரி மற்றும் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகள், வெளிநாட்டவர் போலவே தோற்றமளிக்கும் அமெரிக்க குடிமக்களை வெறுப்படைய செய்திருக்கின்றன; அதன் பிரதிபலிப்பைத் தேர்தல் முடிவில் காண முடிகிறது.

இனிமேல் என்ன நடக்கும்? அதிபர் டிரம்ப்பின் முதலாவது பதவிக்காலத்தில், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரஸ், இரண்டுமுறை பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்து செனட்டில் தோல்வி அடைந்தது. இப்போது, இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருக்கும் நிலையில் அதற்கான முயற்சியில் ஈடுபடலாம். அது சாத்தியமாகும் என்று தோன்றவில்லை. ஆனால், அதிபர் டிரம்ப்பால் முன்புபோல 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்று செயல்பட முடியாது.

அதிபர் டிரம்ப் சூசகமாகத் தெரிவித்திருப்பதுபோல, அவர் 'வீட்டோ' (நிராகரிப்பு) அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் கொண்டுவரும் தீர்மானங்களை முடக்கிவிட முடியும். அதை எதிர்கொள்ள மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மை தேவை. ஜனநாயகக் கட்சியும், வெள்ளை மாளிகையும் பனிப்போரில் இறங்கினால் நிர்வாகம் ஸ்தம்பிக்கும். அதன் விளைவுகள், குடியரசுக் கட்சியைப் பாதிக்குமா, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைப் பாதிக்குமா என்பது 2028 அதிபர் தேர்தல் முடிவுகளில்தான் வெளிப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.