தமிழக நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் செயல்பாடு குறித்து கருத்து என்ன?
தமிழக நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் செயல்பாடு குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்
போர்க்களமாக...
அண்மையில் நிறைவுபெற்ற தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர், அறிவிக்கப்பட்ட திட்டங்களை எவ்வாறு செய்துமுடிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலாக இருக்கும் என எதிர்பார்த்தால், அதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை. திமுக ஊழல் செய்ததாக அறிக்கைகளை வாசித்து சட்டப்பேரவையை சண்டைப் பேரவையாக மாற்றியதுதான் சாதனை. கூட்டத் தொடரை போர்க்களமாக மாற்றி இருக்கிறார்கள் நாம் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள். சட்டப்பேரவையை சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு மைதானம் போன்று மாற்றியதுதான் தவெக அரசின் சாதனை.
எம். ராஜம்மாள், சென்னை.
நன்றி சொல்லும் மேடை
கூட்டத் தொடரானது அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கான தீர்வு சொல்லும் தொடராக இருந்தால், துறை சார்ந்த அமைச்சர்களின் கவனத்தை ஈர்த்து அதற்கான விளக்கத்தைப் பெற்றிருக்க முடியும். அதை விடுத்து, தனது வெற்றிக்குப் பாடுபட்ட உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லும் மேடையாக சட்டப்பேரவை மாறியது அவலம். நன்றியை நேரில் சென்று சொல்லலாம்; அதற்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். சட்டப்பேரவை செயல்படும் நேரத்தில் மக்கள் சேவை ஆற்றுவதே மக்களுக்கு நன்றி சொல்லும் செயல்பாடாக இருக்கும்.
கோ. லோகநாதன், திருப்பத்தூர்.
சலிப்பு
பொதுவாக பட்ஜெட் கூட்டத் தொடரில் புதிய அறிவிப்புகளும், அது தொடர்பான விவாதங்களும் நடைபெறும். வருவாயைப் பெருக்கும் முன்வடிவுகளும் அவற்றுக்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்படும். இந்தக் கூட்டத் தொடரில் புதிய அறிவிப்புகள் இருந்தாலும், அது குறித்து பேசப்படாமல் மக்களிடையே அந்தச் செய்திகள் முழுமையாக சென்றடையாமல் தனிப்பட்ட விரோதங்களை வெளிக்கொணரும் இடமாக மாறியது சற்றே சலிப்படையச் செய்தது. 1967-இல் அனுபவமின்றி ஆட்சிக்கு வந்த திமுகவைப் போலத்தான், தற்போதைய தவெகவும் இருக்கும் என்பதை திமுகவினர் ஏனோ மறந்துவிட்டனர்.
இராம வேல்முருகன், வலங்கைமான்.
நேரம் வீண்!
28 நாள்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆக்கபூர்வமான விஷயங்களும், தேவையற்ற விஷயங்களும் கலந்தே இருந்தன. தங்கள் தொகுதி சார்ந்த பிரச்னைகளை உறுப்பினர்கள் கவனப்படுத்தியது பாராட்டுக்குரியது. ஆனால், விலைவாசி உயர்வு, அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து சரிந்து வரும் மாணவர் சேர்க்கை, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் பிரச்னைகள் என தீர்வு காணப்பட வேண்டியவை இருக்க, ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டி சட்டப்பேரவையின் பொன்னான நேரத்தை வீணாக்கினர்.
ஜகே. ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை.
இருவருமே காரணம்
தாங்கள் தேர்ந்தெடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் அவை நடவடிக்கைகளை மக்கள் நேரலையில் பார்த்து அலுத்துவிட்டனர். மொத்தத்தில், கடைசி இரண்டு நாள்களைத் தவிர்த்து, மற்ற கூட்டத்தொடர் நாள்களில் நடைபெற்ற அனைத்து நடவடிக்கைகளும் பரவாயில்லை என்பதுதான் பலருடைய கருத்தாக உள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆளும் கட்சியினரும் காரணமாக இருந்தனர். அவையில் எதிர்க்கட்சியினர் தர்னாவில் ஈடுபட்டதை எந்த ஜனநாயகவாதியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மகிழ்நன், கடலூர்.
அவைக்கு அழகல்ல!
தமிழ் கொலை செய்யப்பட்டது; ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் தடுமாறினார்கள்; மானியக் கோரிக்கை தொடர்பான ஒரு கேள்விக்குக்கூட பதில் அளிக்காமல் பொதுக்கூட்டத்தில், அரசியல் மேடையில் கட்சி கூட்டத்தில் பேச வேண்டியதை சட்டப்பேரவையில் முதல்வர் பேசியதும், செய்கை செய்ததும் அவைக்கு அழகல்ல. மாண்பை பேணிக் காக்க வேண்டும்; மொத்தத்தில் பல பாடங்களைக் கற்க வேண்டிய நிலையில் ஆளும் அரசு இருக்கிறது. திமுக மீதான எதிர்ப்பு யாரிடமோ இருந்து வந்த மறைமுக உத்தரவா? என்று எண்ணத் தோன்றுகிறது.
மு. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.
சரியான பதில் இல்லை
தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் பொதுமக்கள் நலன் குறித்தும், நிறை-குறைகள் குறித்தும் பேசாத கூட்டத்தொடர் இதுவாகத்தான் இருக்கும். ஆதாரம் இல்லாத அரசியல் குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் பதிவு செய்வதும், அதற்கு வேறு வழியில்லாமல் பதிலளிப்பதுமாக பெரும்பான்மையான நேரம் வீணடிக்கப்பட்டு விட்டது. அத்துடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள், காகிதத்தைப் பார்த்துக்கூட தமிழை சரியாக உச்சரிக்காததும், எண்களை முறையாக வாசிக்கத் தெரியாததுமான நிலை கவலைக்குரியது. எதிர்க்கட்சிகள் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் முதல்வர் உட்பட யாரும் சரியான பதிலைத் தரவில்லை.
பாப்பாக்குடி இரா. செல்வமணி, திருநெல்வேலி.
ஜனநாயகத்தின் வலிமை
பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதங்கள் நடைபெற்றாலும், அரசியல் மோதல்கள் மற்றும் நீண்ட நேர விவாதங்கள் காரணமாக மக்கள் எதிர்பார்க்கும் ஆக்கபூர்வ முடிவுகள் சில நேரங்களில் பின்னுக்குத் தள்ளப்படுவது எதிர்மறையான அம்சமாகும். அதேவேளையில், 28 நாள்களில் 170 மணி நேரம் பேரவை செயல்பட்டு, 14,399 கேள்விகள் எழுப்பப்பட்டிருப்பது ஜனநாயக விவாதத்தின் வலிமையைக் காட்டுகிறது. அவற்றுக்கு அமைச்சர்கள் பதிலளித்து, துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.
ஏமாற்றமானது
முதியோர் நலன், மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்நாள் ஆதாரம், அரசு மருத்துவமனைகள் தர மேம்பாடு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மாவட்டங்களுக்கு சிறப்பு பொருளாதாரத் தொகுப்பு, தமிழ்நாடு நீர் ஆதார பாதுகாப்பு, பொதுப் போக்குவரத்து மேம்பாடு, நடுத்தர வர்க்கத்தினருக்கான திட்டங்கள் என நிறைய அறிவிப்புக்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. சட்டப்பேரவை செயல்பாடு குறித்து சொல்வதென்றால், 130 - க்கும் மேற்பட்ட முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்பதால், நல்ல மாற்றங்களுடன் விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்த்தது ஏமாற்றமளிக்கிறது.
சி. இரத்தினசாமி, பொல்லிக்காளிபாளையம்.
மடைமாற்றும் வேலை
பட்ஜெட் கூட்டத்தொடரில் தவெக அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் அவையின் கண்ணியத்தையோ நாகரிகத்தையோ காப்பாற்றுவதாக இல்லை. ஒவ்வொரு துறை மீதான விவாதத்தின்போது சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிக்காமல் குறிப்பிட்ட நான்கு அமைச்சர்களில் ஒருவர் எழுந்து பேசியது ஏற்புடையதாக இல்லை. பெரும்பாலும் பிரச்னைகளை மடைமாற்றம் செய்யும் வேலைதான் நடந்துள்ளது. சில அமைச்சர்களும் உறுப்பினர்களும் முதல்வரைத் துதி பாடியபோது 'நேரடியாக விஷயத்துக்கு வாருங்கள்' என்று பேரவைத் தலைவர் உத்தரவிட்டது பாராட்டுக்குரியது.
ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
தவிர்த்திருக்கலாம்
பட்ஜெட் கூட்டத் தொடரின் செயல்பாடுகள் மிக மோசமாக இருக்கும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு இல்லாமல் பேரவைத் தலைவர் அனைத்து விஷயங்களையும் சாதுர்யமாகக் கையாண்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப்போல் தற்போதைய முதல்வரும் விதி எண் 110-இன் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். காவல் துறை மானிய கோரிக்கைக்கு முதல்வர் ஜோசப் விஜய் பதில் அளித்தபோது, மிசா குறித்தும், சர்க்காரியா குழு அறிக்கை குறித்து மதிப்பு குறைவாக பேசியதைத் தவிர்த்திருக்கலாம்.
எஸ். மோகன், கோவில்பட்டி.
அரசியல் அனுபவம்
அரை நூற்றாண்டுக்கும் மேலான அரசியல் அனுபவமும், சட்டப்பேரவை அனுபவமும் கொண்ட திமுகவும், ஆறு மாதங்கள்கூட அனுபவம் இல்லாத தவெக அரசும் இந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் ஆகப்பெரிய தலைமுறை முரண் எனலாம். மக்கள் பிரச்னைகள் விவாதிக்கப்பட்ட நேரம் மிக மிகக் குறைவு என்ற போதிலும், ஒரு சில அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் மக்கள் பிரச்னைகளைப் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். கூச்சல், குழப்பம், தனிநபர் விமர்சனங்கள், தட்டுத் தடுமாறிய தமிழ் உச்சரிப்பு போன்றவற்றுக்கு இடையே பேரவைத் தலைவர் மட்டுமே ஒரே ஆறுதல். நேரடி ஒளிபரப்பால் வருங்கால தலைமுறை நல்ல அரசியல் அனுபவம் பெற்றனர்.
க. சக்திவேல், கும்பகோணம்.
கூத்துத் தொடர்
நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் சற்று விசித்திரமானது. திமுக, அதிமுக அல்லாத ஒரு கட்சி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. அவையின் அனைத்து நிகழ்வுகளும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது சிறப்பான நிகழ்வு. கத்தி கூச்சலிட்ட இரண்டு எதிர்க்கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகள், முந்தைய ஆட்சியின் சாதனைகள் குறித்த புகழுரைகள் போன்றவை புளித்த மாவில் சுட்ட தோசை போல இருந்தன. மொத்தத்தில் ஆக்கபூர்வ கலந்துரையாடல்கள் இல்லாத 'கூத்துத் தொடர்' போலவே இருந்தது.
கரு. பாலகிருஷ்ணன், தேவகோட்டை.
கூச்சல் வேண்டாம்
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் செயல்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டியவை. எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பதை மக்கள் பிரதிநிதிகள் மறந்து நீயா? நானா? என வெற்றுக் கூச்சல் போடுவது மக்கள் மத்தியில் வெறுப்பையே ஏற்படுத்தும். எதிர்க்கட்சி என்றால் குறை கூறத்தான் செய்வார்கள். அதை ஆளுங்கட்சி தான் எடுத்த நடவடிக்கைகளைக் கூறி சமாளிக்க வேண்டும். அவர்கள் வேண்டாம் என்றுதான் இவர்களை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். எனவே, ஆளுங்கட்சியினர் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





