
பயிர்க் கடன்கள் வசூலை நிறுத்திவைக்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டிருப்பது குறித்து...
பயிர்க் கடன்கள் வசூலை நிறுத்திவைக்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டிருப்பது குறித்து வாசகர்களின் கருத்துகளில் சில...

பயிர்க் கடன்கள் வசூலை நிறுத்திவைக்க கூட்டுறவுத் துறை உத்தரவு - பிரதிப் படம்
நம்பிக்கையை உருவாக்கும்
பயிர்க் கடன் வசூலை நிறுத்திவைக்க கூட்டுறவுத் துறையின் உத்தரவு மிகவும் வரவேற்புக்கு உரியது. ஐந்தாண்டுகளில் ஓராண்டு வறட்சி என்பது விவசாயிகளின் பரிதாப நிலை. இந்த நிலையில், நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களை நிர்ப்பந்தித்து வசூல் செய்வது வறட்சியாலும் இயற்கை இடர்களாலும் வெந்திருக்கும் விவசாயிகளின் நெஞ்சங்களில் வேல் பாய்ச்சுவது போலாகும். அதை நிறுத்தும்படியும் புதிய பயிர்க்கடன்கள் வழங்குவதை மேற்கொள்ளவும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்திருக்கும் உத்தரவு விவசாயிகளுக்கு உத்வேகமும் புத்துணர்வையும் நிச்சயமாக அளிப்பதுடன் எல்லா விதத்திலும் நம்பிக்கையை உருவாக்கும்.
இரா. இரவிக்குமார், சென்னை.
தவறான எதிர்பார்ப்பு
ஆண்டுதோறும் பயிர்க் கடன்கள் தள்ளுபடி என்பது வழக்கமாகிவிட்ட நிலையில், இந்த வகை கடன்கள் லாப நோக்கில் பார்க்கப்படுவது கண்கூடு. அதனால், தமிழக அரசு இந்த முறை முழுமையான கடன் தள்ளுபடியைத் தவிர்த்தது வரவேற்கத்தக்கது. தொடர்ந்து விவசாயச் சங்கங்களின் போராட்டங்களும் கோரிக்கைகளும் எஞ்சிய கடன்களை வசூலிப்பதை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் காரணமாயிற்று. கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து அதிக அளவில் பயிர்க் கடன் பெறுதல் தவறானது. இந்த நோக்கத்தைத் தவிர்க்க அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் தள்ளுபடி செய்வது நியாயமானதே.
ஜ.தே.ச. மங்கை, திருநெல்வேலி.
தீர்க்கமான செயல்பாடு
கூட்டுறவு சட்டங்களின்படி கடுமையான முறையில் விவசாயிகளிடம் கடன் வசூலிப்பு என்பது மனிதனின் உடலை அறுத்து உள்ளுறுப்புகளை எடுத்துக் கொள்வது போன்ற நிலைதான். மேலும், விவசாயிகள் வாங்கும் பயிர்க் கடன் என்பது, பிற பெருந்தொழில் செய்வோர் வாங்கும் கடன் தொகையுடன் ஒப்பிடும்போது மிகவும் சொற்பம்தான். அதுவும் பெரும்பான்மையான விவசாயிகள் தங்களது கடனைத் திருப்பிச் செலுத்துவதிலும் மிக நியாயமாகவே இருந்து வருகிறார்கள். எனவே, இப்போதைய சூழ்நிலையில் இந்த நிலைப்பாட்டை அரசின் மிகச் சரியான செயலாகப் பார்க்கலாம்.
சி. இரத்தினசாமி, பொல்லிக்காளிபாளையம்.
இது தீர்வல்ல...
இது விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏற்கெனவே கடன் நெருக்கடியில் இருக்கும் விவசாயிகளிடம் வசூல் கெடுபிடிகள் தொடர்ந்தால், அடுத்த சாகுபடிக்கான முதலீட்டையே அவர்கள் இழக்க நேரிடும். எனவே, வசூலைத் தற்காலிகமாக நிறுத்துவது அவர்கள் ஆசுவாசப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், வசூல் நிறுத்தம் என்பது, கடன் பிரச்னைக்குத் தீர்வு அல்ல. விவசாயியின் வருமானம், விளைபொருளின் விலை, இயற்கைச் சீற்றத்தால் ஏற்படும் இழப்பு, இடுபொருள்களின் விலை ஆகிய அனைத்தையும் கணக்கில் கொண்டு நீண்டகாலக் கடன் தீர்வை உருவாக்க வேண்டும்.
பா. நூருல்லாஹ், மதுரை.
குழப்பமான அரசாணை
பயிர்க்கடன்கள் வசூலை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டிருப்பது சரியான முடிவு. இன்றைய சூழ்நிலையில் தென்மேற்கு பருவ மழை பொய்த்துவிட்ட நிலையில் சிறு விவசாயியால் எந்தப் பயிரும் செய்ய முடியாத நிலை உள்ளது. ஒரு பக்கம் பருவ மழை பொய்த்து, விளையும் விவசாயப் பொருள்களுக்கு நியாயமான நிரந்தர விலை இல்லாததும் விவசாயிகளை கஷ்டமான சூழ்நிலைக்குத் தள்ளியுள்ளது. அரசின் விவசாயக் கடன் தள்ளுபடியில் தினம் ஓர் அறிவிப்பு குழப்பமான அரசாணை. அதனால் கடும் பாதிப்பு விவசாயிகளுக்கே; இதுவிஷயத்தில் அரசு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்.
ச. சிவசண்முகம், குளத்துப்பாளையம்.
மனிதாபிமான முடிவு
ஒருபுறம் முழுமையாகவே கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகளின் கிளர்ச்சிகள் தொடர்கின்றன. அரசுத் தரப்பில் கருணையும் விவசாயிகள் தரப்பில் பொறுப்புணர்வும் கலந்திருக்கும் நிலையில், இரு தரப்புக்கும் சேதாரமில்லாத நற்பலன் கிட்டும். ஆனால், "எல்லாம் அவன் செயல்' என்ற நம்பிக்கையும் போய், "எல்லாம் அரசியல் செயல்' என்றாகிவிட்டது. அரசிடம் 60 சதவீத கனிவும், விவசாயிகளிடம் 40 சதவீத பொறுப்புணர்வும் இருந்தால் பருவ காலங்களுக்கேற்ப இரு தரப்பும் இணைந்து செயல்பட வாய்ப்பு உண்டு. எது எப்படியிருப்பினும் பயிர்க்கடன்கள் வசூலை நிறுத்திவைப்பது மனிதாபிமான மிக்கது!
எஸ்.எல்.ஜார்ஜ் அருண், சொக்கன்குடியிருப்பு.
முழுமையானது அல்ல
ஏற்கெனவே பெற்ற பயிர்க் கடனை முழுமையாகச் செலுத்தி, நிலுவையில்லாமல் உள்ள தகுதியான விவசாயிகளுக்கு புதிய பயிர்க் கடன் வழங்க வேண்டும். இந்த உத்தரவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது என்று பொருள் அல்ல; தற்போது வசூல் நடவடிக்கை மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக தற்காலிக கண் துடைப்பா அல்லது முழுமையாக தள்ளுபடி செய்ய பரிசீலனையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், நிலுவையிலுள்ள கடன் வசூலையும் நிறுத்தச் செய்தால்தான் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.
மு. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.
இத்துடன் நிற்கலாகாது
இயற்கைப் பேரிடர்களாலும் விலை வீழ்ச்சியாலும் தவிக்கும் விவசாயிகளுக்கு, பயிர்க்கடன் வசூலைத் தற்காலிகமாக நிறுத்தும் உத்தரவு ஒரு நிம்மதிப் பெருமூச்சாக அமைந்துள்ளது. வட்டிச் சுமையிலிருந்து உழவர்களுக்கு ஓரளவு விடுதலை அளித்து, அவர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் விவசாயப் பணிகளில் ஈடுபட வழிவகுக்கும் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எனினும், அரசு தற்காலிகக் கடன் வசூல் நிறுத்தத்துடன் நின்றுவிடாமல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிரந்தரக் கடன் நிவாரணத்துக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
ஜோதிமணி பாண்டியன், காரைக்குடி.
தள்ளுபடி தேவையில்லை
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களை மனதில் வைத்துத்தான் இந்த வசூல் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. அத்துடன், உண்மையில் பயிர்க் கடன்கள் ஓரிரு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யும் சாதாரண ஏழை விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. மாறாக, ஐந்து ஏக்கர் அல்லது அதற்கு, மேற்பட்ட நிலம் வைத்திருப்போருக்கே அதிக அளவில் கடன் கிடைக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. பயிர்க் கடன்களை எந்த அளவுக்கு வாங்கினாலும், எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அவற்றைத் தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கையில், மேலும் மேலும் கடன் வாங்கும் நிலையும் உருவாகிறது என்பதும் உண்மை.
கலைப்பித்தன், கடலூர்.
வங்கியும் பாதிக்கக் கூடாது
சலுகையானது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டுமே சலுகை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலையும் பாதிக்கப்படாத வகையில் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், கூட்டுறவு அமைப்புகளின் நிதி ஒழுங்கையும் உறுதி செய்வதே சிறந்த அணுகுமுறையாகும். எனவே, வசூல் ஒத்திவைப்புடன் வட்டி சலுகை, கடன் மறுசீரமைப்பு, புதிய பயிர்க்கடன் வழங்குதல் ஆகியவற்றையும் அரசு பரிசீலிக்க வேண்டும். விவசாயிகளைப் பாதுகாப்பதே நமது அரசின் பிரதானக் கடமையாக இருக்க வேண்டும்.
ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.
இடைத்தேர்தலை முன்னிறுத்தி...
உள்ளாட்சிகளில் பெரும் பங்கு வகிக்கக் கூடியவர்கள் விவசாயிகள். அவர்களுடைய ஆதரவு இல்லாமல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல; அதனால் நாங்களும் ஆட்சி செய்தவர்களுக்கு (முந்தைய அரசுகளுக்கு) சளைத்தவர்கள் அல்லர்; மக்களின் வாக்குகளைப் பெறுவது ஒன்றே எங்கள் குறிக்கோள் என்பதை தற்போதைய ஆட்சியாளர்களும் மெய்ப்பித்திருக்கிறார்கள். இது போன்ற அறிவிப்புகள் காலங்காலமாக தொடர்ந்து வரக்கூடியவைதான்; இது ஒன்றும் புதிதல்ல. பயிர்க் கடன்கள் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணம் என்னவென்பது இடைத்தேர்தலுக்குப் பிறகு தெரியவரும்.
முருகன் சிற்றரசன், திருமுட்டம்.
பாராட்டு
சுயநலமில்லாமல், எந்தவித காலநேர கட்டுப்பாடுகளும் இல்லாமல் கடுமையாக உழைத்து உலகுக்கு உணவளிப்பவர்கள் விவசாயிகள். அவர்களுக்கு எவ்வளவு சலுகை அளித்தாலும் வரவேற்கத்தக்கதுதான். வட்டிக்கு வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை பொய்த்துவிட்டால் அத்தனையும் பாழ். எனவே, அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கதே. இது முழுமையான அளவில் போதுமானவையாக இல்லாவிட்டாலும் விவசாயிகளுக்கு அவர்களின் பிரச்னைகளிலிருந்து சற்று இளைப்பாறுதல் தரும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.
பா. தங்கரதிபாஷ்யம், அரியலூர்.
வட்டித் தள்ளுபடி
பயிர்க்கடன் வசூலை நிறுத்திவைக்க கூட்டுறவுத் துறையின் உத்தரவு வரவேற்கத்தக்கது. கடும் வறட்சி, பூச்சித் தாக்குதல் போன்ற இயற்கை பாதிப்புகளால் பயிர் விளைச்சலின்றி தவிக்கும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நிறுத்திவைத்திருப்பது வரவேற்கத்தக்கது. கையில் இருக்கும் சொற்ப பணத்தை வைத்துக்கொண்டு விதைகள், உரங்கள் வாங்க பயன்படுத்திக்கொள்ள உதவும். பயிர்க் கடன் வசூல், நெருக்கடி, மன உளைச்சலிலிருந்து சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்ள பெரிதும் உதவும். விவசாயிகளின் கழுத்தை நெரிக்காமல் இருக்க வட்டியையாவது தற்சமயம் தள்ளுபடி செய்ய வேண்டும்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.
நிதி எங்கே?
வேறு வழியில்லாமல்தான் அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. முழுக் கடன் தொகையையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. ஒவ்வொரு துறையினரும் இப்படி கோரிக்கைகளை வைத்துப் போராடினால், யார் முதல்வராக இருந்தாலும் எதுவும் செய்ய முடியாது. ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற நோக்கில் முன்வைக்கும் வாக்குறுதியின் பின்விளைவாகத்தான் இந்த அறிவிப்பை பார்க்க வேண்டும். காமராஜர் எல்லாவற்றையும் சொல்லாமல் செய்தார். இன்றோ நீங்கள் சொன்னதைச் செய்யுங்கள் என மக்கள் போராடுகிறார்கள். இப்படி எல்லோருக்கும் செய்ய வேண்டுமானால், நிதிக்கு எங்கே செல்வது?
பி. சுந்தரம், வெண்ணந்தூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






