நான் பார்த்த பீனிக்ஸ் பறவைகள்... உண்மையில் மகளிர் தினக் கொண்டாட்டங்களை அர்த்தமுள்ளதாக ஆக்குபவர்கள் இவர்களே!

தனது ஆழமான இந்தக் காதல், ஓர் அழகான திருமண வாழ்க்கையை உண்டாக்கும் என்று காத்திருந்தாள் அந்த பெண். அந்த வாழ்வும் வந்தது. திறமையாய் மேளம் கொட்டும் அவள் கணவன் அவளையும் அவள் மூன்று குழந்தைகளையும் நிஜமான
நான் பார்த்த பீனிக்ஸ் பறவைகள்... உண்மையில் மகளிர் தினக் கொண்டாட்டங்களை அர்த்தமுள்ளதாக ஆக்குபவர்கள் இவர்களே!

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் எவரும் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் தனி ரயில் பெட்டியை கவனிக்கத் தவறியிருக்க மாட்டார்கள். தனி உலகம் போல் செயல்படும் அந்த பெட்டியில் இந்த உலகையே சுற்றி வந்துவிடலாம். அப்பெட்டியில் எப்போதாவது பயணிக்கும் ஒரு சிலர். அங்கு, பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதையும், வீட்டிற்கு தேவையான காய்கறிகளை சுத்தம் பண்ணுவதையும், தங்கள் சொந்தக் காரியங்களை வாய்வலிக்க பேசுவதையும் கேலியாக பேசுவர். ஆனால் இந்த செயல்களும், அப்பேச்சுகளும் தான் இப்பெண்களுக்கு தாங்கு சக்தியையும், மீள்திறனையும் உண்டுபண்ணுகிறது. 

நான் பயணித்த அந்த பெட்டியில் பயணித்த பெரும்பாலான பெண்கள் தங்கள் குடும்ப சேவைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் தங்கள் தனிமனித நிலைப்பாட்டிற்காகவும் உழைக்கும் மகளிர். இத்தனை சுதந்திரத்தைப் பெற்ற இவர்கள் வாழ்க்கையிலேயே, இத்தனை நிகழ்வுகளும், அதை எதிர்நோக்க பல்நோக்கு ஆதரவும் தேவைப்படுமாயின்... நான் அனுதினமும் பார்க்கும் வேலை செய்யும் கொத்தடிமைகளாய் இருந்து விடுதலையான பெண்களுக்கு எத்தனை ஆதரவு தேவைப்படும்? 

கொத்தடிமைகளா? இந்த உலகிலா? என்று நீங்கள் சிந்திப்பதை என்னால் உணர முடிகிறது. ஆம். நானும் நம் நாகரிக வளர்ச்சிக்குப்பின் உழைப்பிற்காக கடத்தப்படும் மக்களைப் பார்க்கும் வரை கொத்தடிமை முறையை நம்பினது இல்லை. 

செய்தித்தாள்களை புரட்டும்போது அங்கொன்றும், இங்கொன்றுமாய் காணப்படும் ‘கொத்தடிமைகளாய் இருந்தவர்கள் மீட்பு’ என்ற செய்திக்குப்பின் இருக்கும் மனித உணர்வுகளைப் படிக்க நமக்கு சில சமயங்களில் மனதுமில்லை, நேரமுமில்லை. ஆனால் எனக்கு தெய்வாதீனமாக அந்த வாய்ப்பு அமைந்துள்ளது. தொழில்நுட்பம் பெருகிப்போன இந்த காலத்தில் மனிதனுடன், மனிதன் பேசுவது அரிதாகிவிடுவதால் தனிமனித எழுச்சி மற்றும் வீழ்ச்சியின் சூட்சுமங்கள் பகிரப்படாமலேயே போகிறது. 

அதிலும் நான் இங்கு பகிரவிருக்கிற இந்த பெண்களின் வாழ்வு... சுதந்திரத்தை இழந்து ஏழ்மைக்காக கொத்தடிமையாக்கப்பட்டது.

கொத்தடிமை வாழ்வைச் சட்டப்பூர்வமாகத் தகர்த்தெறிந்த இரும்புப் பெண்மணி கெளரி...

தனது ஆழமான இந்தக் காதல், ஓர் அழகான திருமண வாழ்க்கையை உண்டாக்கும் என்று காத்திருந்தாள் அந்த பெண். அந்த வாழ்வும் வந்தது. திறமையாய் மேளம் கொட்டும் அவள் கணவன் அவளையும் அவள் மூன்று குழந்தைகளையும் நிஜமான அன்போடு நேசித்தான். இந்த சின்னக் குடும்பம், தங்கள் சக்திக்கு மீறி வாங்கிய ரூபாய் 2500 முன்பணத்திற்காய் தாங்கள் வசித்த அந்த கிராமத்திலேயே கொத்தடிமைகளாய் விலைபோனார்கள். குழந்தை பெற்று தையலிடப்பட்ட அந்த சிறு உடலை தூக்கிக்கொண்டு கணவனுடன் சேற்றிலிறங்கி வேலை செய்யும் பொழுதெல்லாம் சாவையே விரும்பினாள் கௌரி. மருத்துவ செலவிற்காய் வாங்கின இந்தச் சிறு முன்பணம், தன்னையும், தன் குடும்பத்தையும் உணவின்றி உறக்கமின்றி, பிள்ளைகளுக்கு படிப்பின்றி முடக்கிப்போடும் என்று அவள் சிறிதும் சிந்தித்ததில்லை. இந்த அனுதின போராட்டத்தினிடையே தன் பெண்மையை பாதுகாக்கவும் அவள் வெகு பிரயத்தனப்பட வேண்டியதாயிருந்தது. ஒரு பொட்டுத்தூக்கம் நிம்மதியாகத் தூங்கினாளில்லை. எளிதில் பயந்துவிடும் கணவனிற்கும், கூட வேலை செய்யும் ஏழைகளுக்கும் சேர்த்து இவள் தான் அந்த முதலாளியிடம் நியாயத்தை தட்டிக்கேட்க வேண்டியிருந்தது. அப்படி கேட்டபோது வயிற்றிலிடப்பட்ட தையல் பிய்ந்துப்போகும் அளவுக்கு அடித்து துன்புறுத்தப்பட்டாள். அதனையும் துடைத்து திருட்டுத்தனமாக தன் கோரிக்கையை அரசாங்கத்திடம் கொண்டு சேர்த்து, இந்த கொத்தடிமையிலிருந்து விடுதலையாகும் நாளை எதிர்நோக்கி காத்திருந்தபோது... இவர்களின் சூழலை ஆய்வுசெய்ய வந்த அதிகாரிகள் பொய் வழக்கு என்று அறிக்கை தர மேலும் நரகமாகிப்போனது வாழ்க்கை. 

தன் விழுந்துபோன குடிசையிலிருந்து கல்லெறியும் தூரத்தில் வாழும் முதலாளியின் கோபத்திற்கு ஆளானாள். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை தவறு என கூறியதால் செல்வாக்கு மிக்க முதலாளியின் முன்பு புழுவாகிப்போனாள். அவரிடம் செய்த வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் முறையான ‘விடுதலைச்சான்று’ கொடுக்கப்படாததினால் அவளின் போக்குவரத்துகள் கண்காணிக்கப்பட்டன. தன் சொந்த ஊரிலேயே அந்நியமாக்கப்பட்ட உணர்வுடன் வாழ்வதா? இல்லை வயிற்று நோவினால் பாதிக்கப்பட்ட கணவருடனும், மூன்று சுட்டிக்குழந்தைகளுடனும் வேறிடம் சென்று வாழ்வதா?! என்று புரியாது தவித்தாள். தன்னுடன் வேலை செய்தவர்கள் தனக்குத் துணை நிற்பார்கள் என்று கௌரி நம்பிய போது அவர்களோ முதலாளியால் கொடுக்கப்பட்ட துன்பம் தாங்காமல் ஊரைவிட்டு சென்றனர். கௌரி தனது போராட்டம் உண்மை என்று நம்பியதால், தான் ஒரு சாமானியன் என்றாலும் அரசாங்கம் தனக்கு நீதி செய்யும் என்று நம்பி தன்னுடைய விடுதலைக்காய் உறுதியாக நின்று தொடர்ந்து போராடினாள். ஐந்து வருட போராட்டத்திற்கிடையே தன் கணவனையும் தன்னுடன் வேலை செய்த மற்றொரு நபரையும் இழந்தாள். விதவை என்ற பட்டம் அவளது போராட்டத்தை மேலும் வலுவிழக்கச் செய்தது. ஆனால் கௌரி அந்த விதவை வாழ்வை தகர்ப்புகள் எதுவுமின்றி தன்னலமற்று செயல்படும் ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொண்டாள். இவளின் கோரிக்கையால் அரசாங்கம் அவர்கள் விடுதலையை மறுபரிசீலனை செய்ய முடிவுசெய்தது. அந்த விசாரணையில் அவர்கள் அனைவரும் கொத்தடிமைகளாய் இருந்தது உறுதியாகி விடுதலை சான்று தரப்பெற்றனர். தனி மனுஷியாய் ஏழு தனிநபர்களின் சுதந்திர வாழ்விற்கு வித்திட்ட கௌரி, இன்று கொத்தடிமை முறைக்கு எதிரே குரல் கொடுக்கும் சமுதாயத் தலைவியாக உயர்ந்திருக்கிறாள். 

தாயம்மாவின் காரிருளான கர்ப்பகாலம்...

கர்ப்பிணி பெண்களுக்குத் தாங்கள் கருவுற்றிருக்கிற காலங்கள் வசந்தகாலம் போன்றது. நமது கலாச்சாரத்திலும் கர்ப்பிணிகளுக்கு தனித்த சலுகைகளும், பிள்ளையாண்டிருக்கிறாள் எனும் பிரதான இடமும், இரக்கமும் இன்றும் கொடுக்கப்படுகிறது. தெரியாதவர்கள்கூட உடன்பிறப்பைப்போல் உரிமைக் கொண்டாடி பாதுகாக்கப்படும் மனிதவாழ்வின் நிகழ்வுதான் கர்ப்பகாலம். 
ஆனால் தாயம்மாவிற்கு இந்த வாழ்வு ரூ.1000-த்திற்கு விலைபோனது. வறுமையின் காரணமாக வாங்கப்பட்ட இந்த முன்பணத்திற்காக விறகு வெட்டும் வியாபாரியிடம் இவளும், இவள் குடும்பமும் கொத்தடிமைத் தொழிலாளர்களாய் விற்கப்பட்டு விட்டனர். வியாபாரி குத்தகைக்கு எடுக்கும் முள் புதர்களிடையே கிடைக்கும் சிறு இடத்தில் தான் சிறு சிசு வளரும் வயிற்றுடன் இவளும் இவளது 1 வயது குழந்தையும் இராத்தங்க வேண்டும். இதற்கிடையில் என்றேனும் மழை பெய்தால் முழு இரவும் சிவராத்திரி தான். பொங்கிச் சாப்பிட வழியில்லாமல் அக்கம் பக்கம் ஊர்களில் மக்கள் கொடுக்கும் மிச்ச மீதியே இவளுக்கு ஊட்டச்சத்து! 

இவர்கள் நாளெல்லாம் செய்யும் வேலைக்கு கூலி, வாரத்திற்கு ஒருமுறைக் கொடுக்கப்படும் ரூ.100 அல்லது ரூ.200 தான். இதற்கிடையில் ஏதேனும் கடனாகப் பெற்றால், வட்டியுடன் அது முன்பணத்தில் இணைக்கப்படும். பத்தாம் வகுப்பு வரை தன் கிராமத்தில் படித்திருந்ததால் தாயம்மா தன் முதலாளி செய்யும் கொடுமையை எதிர்த்துக் கேள்வி கேட்டால் அது இவள் கணவனுக்கே ஆபத்தாய் முடிந்தது. அந்த வாரக்கூலி நிறுத்தப்பட்டு அவனுக்குக் குடிக்க சாராயம் தரப்படும், அடி விழும். இந்த காரணத்தினாலேயே எது நடந்தாலும் அமைதி காக்க கட்டாயப்படுத்தப் பட்டாள் தாயம்மாள். வளரும் சிசுவின் மருத்துவத்திற்காகக்கூட ஆஸ்பித்திரி போக அனுமதி மறுக்கப்பட்டாள். அதை மீறி அவள் செல்ல வேண்டும் என்றால் தனியாகவும், திருட்டுத்தனமாகவும் செல்ல வேண்டும். வேலை நின்றுவிடும், நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தினாலும் இவ்வித காரியங்கள் கண்டறியப்பட்டால் முதலாளியின் இரட்டை அர்த்தங்களைச் கொண்ட கெட்ட வார்த்தைகளுக்கும், உணர்வை உறைய வைக்கிற அச்சுறுத்தல்களுக்குமே ஆளாக நேரிடும். 

இதனாலேயே 40 வாரங்களில் 5 முறைக்கும் குறைவாகவே தாயம்மா மருத்துவரிடம் சென்றுள்ளார். தான் காதலித்த பெண் இப்படி துன்புறுகிறாளே என்பதற்காக தன் உடலையும், ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து உழைத்தான் இவள் கணவன் தேவேந்திரன். எப்பாடுபட்டாவது ஒரு நாளைக்கு இரண்டு கடலை மிட்டாய் வாங்கி கொடுத்துவிடுவான். அவனுக்கு திருப்தி அந்த கடலைமிட்டாயில் அவளுக்கு தேவையான விட்டமின்களும், மினரல்களும் கிடைக்கிறது என்று. 

காலை 6.30 மணிக்கு தொடங்கும் வேலை இரவு லோடு ஏற்றும் வரை நீண்டு கொண்டே இருக்கும். இதற்கிடையில் பானையில் குடிக்கும் தண்ணீர் காலியானால் கூட ஊருக்குள் சென்று எடுத்து வர நேரமிருக்காது. முதலாளி இருக்கும்போது பெண்களைத் தனிமையில் விட்டுச் செல்வது பாதுகாப்பில்லாததாய் இருந்தது. கர்ப்பிணியும் அதற்கு விலக்கில்லை. இந்த தொழிலில் 4 வருடங்களும், கர்ப்ப காலத்தில் ஒன்பது மாதங்களும் ஓடிவிட்டன. இந்த ஒன்பது மாதத்தில் எப்போதாவது தான் அந்த வயிற்றினுள் சிறு உணர்ச்சி இருந்திருக்கிறது.

வானத்தில் நட்சத்திரங்களை பார்த்து தூங்கும் ஒரு இரவில் தங்கள் வாழ்க்கையின் ஏக்கம் மேம்பட, தங்களைப்போல அடிமைத்தனத்திலிருந்து விடுதலையான தூரத்து உறவினரின் நினைவு வர... அவரின் உதவியோடு அரசாங்கத்தை அணுகினர். கொத்தடிமை முறையிலிருந்து விடுதலை பெற்றபின்... தாயம்மா முதல் வேலையாக மருத்துவரிடம் சென்றபோது அவரின் வசைப்பாட்டுக்கே ஆளானார். ஆனால் அவரிடம் இவர்கள் அனுபவித்த இன்னல்களை சொல்ல முடியவில்லை. குழந்தை பெறும் தருணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றிருந்த அந்த நேரத்தில் மருத்துவமனையில் ஆறு யூனிட் இரத்தம் ஏற்றபட்டது. ‘அப்போதுதான் பல மாதங்களாக அமைதியாக இருந்த குழந்தை உயிர்ப்பெற்றதாக உணர்ந்தேன்’ என்று தாயம்மா அழுதது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. இன்று தாயம்மா தன் மக்களின் எழுச்சிக்காக வளர்ந்துவரும் தலைவி.

இப்படி பல மக்கள், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் தங்கள் தனிமனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் இழந்து கொண்டிருக்கின்றனர். இப்போது நாம் இதை படிக்கும்போதும் எங்கோ ஒரு அரிசி ஆலையில் சில பெண்கள் தங்கள் தாய்மையை அடகு வைத்திருக்கலாம். ஒரு செங்கல் சூளையில் குறைந்த கூலிக்கு வேலை செய்ய கட்டாயப் படுத்தப்பட்டிருக்கலாம். எங்கோ ஒரு பஞ்சாலையில் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம். 

இதைக் கருத்தில் கொண்டு தங்கள் தாங்கு சக்தியையும், மீள்திறனையும் பிரயோஜனப்படுத்தி கொத்தடிமை தொழில்முறைக்கு ஒரு முடிவு கட்டுவோம் என்றும்; இந்தத் தொழில்முறையிலிருந்து கடைசி நபர் விடுதலையாகும் வரை ஓயமாட்டோம் என்றும் சூளுரைத்துச் செயல்படும் இந்த பெண்களை, நெருப்பில் கருகி இறந்த பின்னும் தன் சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை என்று சொல்லாமல் வேறென்ன சொல்வேன்?! உண்மையில் மகளிர் தினக் கொண்டாட்டங்களை அர்த்தமுள்ளதாக மாற்றக் கூடியவை இவர்களது மீட்சியும், வளமான எதிர்கால வாழ்வுமேயன்றி வேறில்லை.
- ஹெலன் பர்னபாஸ்
சமூக சேவகி
ஐஜேஎம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.