டெங்கு வைரஸ் வகைகள்
இந்த வைரஸ், ஃப்ளாவி வைரஸ் (FLAVI VIRUS) என்ற இனத்தைச் சேர்ந்தது. இது, 40 முதல் 60 நானோ மீட்டர் அளவுடையதாக இருக்கும். இந்த வைரஸ் ஒழுங்கற்ற கோள வடிவில் காணப்படும். இதில், ஒரு ஆர்என்ஏ சுருள் இருக்கும். இதைச் சுற்றி கொழுப்பால் ஆன உறை இருக்கும். அதன் வெளிப்புறத்தை ஒரு சவ்வு மூடியிருக்கும். இந்த வைரஸில் பல்வேறு புரதப் பொருள்களும் இருக்கும். இவற்றில் முக்கியமானவை, சி புரதம், எம் புரதம், மற்றும் ஈ புரதம். இவை இல்லாமல், மேலும் 7 சிறு வகை புரதங்களும் இந்த வெளி உறையில் இருக்கும். (NS1, NS2a, NS2b, NS3, NS4a, NS4b, மற்றும் NS5).
இந்த வைரஸில் நான்கு முக்கியப் பிரிவுகள் இருக்கின்றன. இவை முறையே, டெங்கு 1 வைரஸ், டெங்கு 2 வைரஸ், டெங்கு 3 வைரஸ், டெங்கு 4 வைரஸ் (Sero Types) என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஒவ்வொரு வைரஸ் வகையிலும் உட்பிரிவுகள் (Geno Types) உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் மரபணு மூலக்கூறுகளில் மாறுதல்கள் இருக்கும். எனவே, மொத்தமாகப் பார்க்கும்போது, 47 வகையான டெங்கு வைரஸ் பிரிவுகள் (47 strains of Dengue virus) இருப்பது தெரியவரும்.
வைரஸ் எப்படிப் பெருகுகிறது?
கொசுக்கள் கடிக்கும்போது, நமது ரத்தநாளத்தில் இந்த வைரஸ் உட்புகுந்துவிடும். இதன் வெளிப்புறத்தில் உள்ள உறை புரதமான ஈ புரதம்தான் மனித செல்லோடு (ரத்த வெள்ளையணு) ஒட்டிக்கொள்ள உதவும். அதன்பிறகு, செல்லுக்குள் நுழையும் வைரஸ், மனித செல்களில் உள்ள நியூக்ளியஸை பயன்படுத்தி, வைரஸ் உற்பத்திக்குத் தேவையான ஆர்என்ஏ-வாக மாற்றி, அவற்றில் இருந்து புதிய வைரஸ் உருவாக வழி செய்யும். இதனால், ஒவ்வொரு செல்லில் இருந்தும் புதிய வைரஸ்கள் உருவாகி, அருகில் உள்ள செல்களையும் பாதித்து, பெருமளவு பெருகிவிடும்.
மனித உடலுக்குள் வைரஸ் எப்படிப் பரவும்?
டெங்கு காய்ச்சல் ஏடிஸ் வகை பெண் கொசுக்களால்தான் பெரும்பாலும் பரவும் என்றாலும், சில வேளைகளில் டெங்கு பாதித்தவரிடம் இருந்து பெறும் ரத்தம் (ரத்த தானம்) மூலமாகவும் பரவலாம். அதேபோல, கர்ப்பிணிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால், கர்ப்பப்பையில் வளரும் சிசுவும் டெங்குவால் பாதிக்கப்படலாம். ஆனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து நேரடியாக மற்றொரு நபருக்கு டெங்கு காய்ச்சல் பரவுவது கிடையாது.
ரத்த தானத்தைப் போலவே, உறுப்பு தானம் செய்யும்போதும், உறுப்பு தானம் தருபவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால், அவரிடம் இருந்து பெறப்படும் உறுப்பு மூலமாகவும், உறுப்பு தானம் பெறுபவருக்கு அபூர்வமாக டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
இதையும் படிக்க | டெங்கு கடந்து வந்த பாதையும் ஏடிஸ் கொசுவும்! -1
தமிழகத்தில் முதல் நான்கு வகை டெங்கு வைரஸ் வகைகளுமே காணப்பட்டாலும், டெங்கு வைரஸ் 1 (DENV 1) மற்றும் டெங்கு 2 (DENV 2) வகைகள்தான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது தெரியவந்துள்ளது. டெங்கு வைரஸ் 4 (DENV 1) வகை மிகவும் அபூர்வமாகத்தான் காய்ச்சலை ஏற்படுத்துகிறது.
கொசு கடித்து வைரஸ் உடலில் நுழைந்து பெருகி, அடுத்த 2 முதல் 7 நாள்களுக்குள் தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும். சிலருக்கு இது மாறுபடலாம். பெரும்பாலும், 3 முதல் 14 நாள்களுக்குள் தொந்தரவுகள் வந்துவிடும்.
நோய் அறிகுறிகள்
முதல் இரண்டு தினங்களுக்கு நோயாளிகளுக்கு உடல் சோர்வு, தலைவலி ஆகிய தொந்தரவுகள் இருக்கும். சிலருக்கு ஃப்ளூ காய்ச்சல் போன்ற தொந்தரவுகளுடன் டெங்கு காய்ச்சல் ஏற்படலாம். அதனைத் தொடர்ந்து காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல் தொடர்ந்து பல நாள்கள் இருக்கும். 103 டிகிரி முதல் 104 டிகிரி வரைகூட உயரலாம். மேலும், நோயாளிகளுக்கு குமட்டல், வாந்தி ஆகிய தொந்தரவுகளும் ஏற்படும்.
வயிற்று வலி, வயிற்றோட்டமும் ஏற்படலாம். தாங்க முடியாத உடல் வலி, மூட்டு வலி, தசை வலி ஆகிய பாதிப்புகள் ஏற்படும். தோலில் சில சிவப்பு நிறத் தடிப்புகள் (Rash) தோன்றலாம். கண்ணின் பின்பகுதியில் அதிக வலி ஏற்படலாம். இவ்வாறு தோன்றும் காய்ச்சல் 2 முதல் 7 நாள்கள் வரை நீடிக்கும்.
கவனம்
டெங்கு வைரஸ் உள்புகுந்து டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களில் பலருக்கு மேற்கூறிய எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லாமல்கூட இருக்கும். (Asymptomatic). குறிப்பாக, குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஆரம்பத்தில் நோய் அறிகுறி தெரியாமல்கூட இருக்கலாம். எனவே, டெங்கு பாதிப்புள்ள இடங்களில் வசிக்கும் குழந்தைகள், சிறுவர்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வர வேண்டும்.
பெரும்பாலானோருக்கு மூன்று நாட்களுக்குள் காய்ச்சல் குறைந்துவிடும். எனவே, காய்ச்சல் முடிந்தது என்று எண்ணிவிடக் கூடாது. முதல் வாரத்தில் 4, 5, 6-வது நாள்களில் சிலருக்கு ரத்தக்கசிவு பாதிப்பு, உடலில் நீர் கோர்த்தல் பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக, மலம் கருப்பாகப் போகும். குடல் பகுதிகளில் ஏற்படும் ரத்தக்கசிவால் ரத்த வாந்தி, மூக்கில் ரத்தம் வடிதல், பல் - ஈறு பகுதிகளில் ரத்தம் கசிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். மேலும், ரத்தநாள நுண்ணிய தந்துகிக் குழாய்களில் பிளாஸ்மா வெளியேறுவதால் (Pleural Effusion) நுரையீரல் உறைக்கு இடையே நீர் தங்கும். வயிற்றுப் பகுதிகளில் நீர் தங்கும் (Ascites).
ரத்தக் கசிவுகளாலும், நீர்க் கசிவுகளாலும் நோயாளியின் ரத்த அழுத்தம் குறைந்து தாழ்நிலையை அடைந்துவிடும். (Hypotension). நோயாளி, டெங்கு அதிர்ச்சி பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.
எனவேதான், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நபரை குறைந்தது ஒரு வாரம் வரை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். இந்த மேற்கூறிய பாதிப்புகள் எல்லாம், டெங்கு ரத்தக் கசிவு பாதிப்பு (Dengue hemorrhagic Fever), மற்றும் டெங்கு அதிர்ச்சி பாதிப்பு (Dengue Shock Syndrome) ஏற்பட்டுவிட்டது என்பதற்கான அறிகுறிகளாகும்.
எச்சரிக்கை நாள்கள்
டெங்கு காய்ச்சலின்போது முதல் மூன்று நாள்கள் காய்ச்சல் இருக்கும். பிறகு, 4 முதல் 6-வது நாளில் காய்ச்சல் குறையும். ஆனால், அப்போதுதான், மிக முக்கியமான ரத்தக்கசிவு, நீர் (பிளாஸ்மா) வெளியேறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே, காய்ச்சல் அதிகமாக இருப்பதைவிட, அதிலிருந்து காய்ச்சல் குறையும்போதுதான் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 7-வது நாளிலிருந்து ரத்தக்கசிவு குறையலாம். பிளாஸ்மா வெளியேற்றமும் குறைந்து 7 முதல் 9 நாள்களில் நோயாளி டெங்கு பாதிப்பில் இருந்து விடுபட வாய்ப்பு ஏற்படும்.
எனவே, ஒருவருக்குக் காய்ச்சல் தொடர்ந்து பத்து நாள்களுக்கு மேல் நீடித்துக்கொண்டே இருந்தால், அது டெங்குவாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.
இதையும் படிக்க | டெங்கு பரவல்: என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்?
ரத்தக்கசிவு (Bleeding), பிளாஸ்மா நீர் வெளியேற்றம் ஏன்?
ரத்தத்தில் டெங்கு வைரஸ் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவற்றுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் புரதங்களை (Antibodies) உடல் உற்பத்தி செய்யும். இதன்காரணமாக, இவை வைரஸ் ஆன்டிஜீனோடு வினைபுரிந்து உடலைப் பாதுகாக்க முனையும். அப்போது எதிர்ப்பாற்றல் புரதத்துக்கு உதவும் காம்ப்ளிமெண்ட் (Complement) என்ற புரத சிறுபொருள்களும் அந்த வினையில் பங்கெடுக்கும். இந்த வினைகளால், தட்டணுவுடன் பல்வேறு எதிர்ப்பாற்றல் புரதங்கள், செல்வினை பொருள்கள் போன்றவை ரத்தநாளங்களில் படியும். இதன்காரணமாகத்தான் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.
வெள்ளை மற்றும் சிவப்பணுக்கள்
டெங்கு வைரஸ் பாதிப்பால், டி வகை வெள்ளையணு செல்கள் தூண்டப்படும். அவை ரத்தத்தில் பல்வேறு ரசாயன கடத்தும் வினைபொருள்களை (Chemical mediators. உதா - cytokines and chemokines) உருவாக்கும். இவற்றின் செயல்பாட்டினால் ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டு, அவற்றில் இருந்து பிளாஸ்மா வெளியேறும். குறிப்பாக, ரத்தநாள தந்துகி குழாய்களிலிருந்து (capillary leakage) பிளாஸ்மா கசிவதால்தான் நுரையீரலைச் சுற்றியும், வயிற்றுப் பகுதியிலும் நீர் சேர்கிறது.
தட்டணுக்கள்
டெங்கு காய்ச்சலின்போது தட்டணுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ரத்தத்தில் காணப்படும் சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளையணுக்கள் போல, மற்றொரு முக்கியமான அணுக்கள்தான் இந்தத் தட்டணுக்கள். இவையும் பிற ரத்த அணுக்களைப்போல எலும்பு மஜ்ஜையிலிருந்துதான் உருவாகின்றன. ஒரு கியூபிக் மிமீ ரத்த்த்தில் சுமார் 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை தட்டணுக்கள் இருக்கும். இந்தத் தட்டணுக்கள் சுமார் 8 முதல் 10 நாள்களுக்கு ரத்தத்தில் செயல்புரியும். அதன்பிறகு மண்ணீரலில் அவை அழிக்கப்படும்.
தட்டணுக்களின் எண்ணிக்கை 4.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், மிகை தட்டணு எண்ணிக்கை பாதிப்பு (Thrombocytosis) என்று அழைப்பார்கள்.
இவ்வகைப் பாதிப்பு, பரம்பரைக் காரணங்களாலோ, இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் ரத்தச்சோகை நோயினாலோ, புற்றுநோய்களாலோ, தொற்று அல்லது மண்ணீரலை அறுவைச் சிகிச்சை மூலம் வெளியேற்றிய காரணத்தாலோ ஏற்படலாம்.
தட்டணுக்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்துக்கும் குறைவாகச் சென்றால், அதை தட்டணுக்களின் எண்ணிக்கை குறைபாடு (Thrombocytopenia) என்பார்கள்.
இத்தகைய எண்ணிக்கை குறைபாடுதான் டெங்கு காய்ச்சலில் ஏற்படுகிறது. அதே நேரத்தில், இதை மட்டும் வைத்து டெங்கு என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், ஒருவருக்குப் பல காரணங்களால் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையலாம்.
1. தட்டணுக்களின் உற்பத்தி குறைவது..
2. தட்டணுக்கள் உற்பத்தி சரியாக இருந்தாலும், அதிகமாக அதிக்கப்படுதல்..
3. மண்ணீரல் வீக்கம் ஆகிய காரணங்களால், ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும்.
தட்டணுக்களின் உற்பத்தி குறைபாடு
பெரும்பாலான வைரஸ் நோய்களினால், குறிப்பாக ப்ளாவி வைரஸ் பாதிப்புகளால் எலும்பு மஜ்ஜை பாதிக்கப்படுவதால், தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
சிலவகை மருந்துகளால் எலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்டு அதன் காரணமாகவும் உற்பத்தி குறையலாம். அது, நுண்ணுயிர்க்கொல்லி மருந்தாகவோ (உதா - chloramphenicol) அல்லது புற்றுநோய்க்கான மருந்தாகவோ (chemotherapy) இருக்கலாம். கதிரியக்கச் சிகிச்சையாலும், ரத்தப் புற்றுநோய்களாலும், மது, வைட்டமின் குறைபாடுகளாலும் (வைட்டமின் பி12, போலிக் அமிலம்) தட்டணுக்கள் உற்பத்தி குறையலாம்.
தட்டணுக்கள் அதிகமாக அழிக்கப்படுதல்
உற்பத்தி முறையாக இருந்தாலும், சில மருந்துகளாலோ (வலிப்புக்கான மருந்துகள் - இதய நோய்க்கான மருந்துகள்) அல்லது உடல் எதிர்ப்பாற்றல் புரத பாதிப்பு நோய்களாலோ அதிகமாகச் சிதைக்கப்படுவதால் (உதா. - ITP - Idiopathic Thrombocytopenic purpura) எண்ணிக்கை குறையலாம்.
மண்ணீரல் வீக்கம்
சிலருக்கு, கல்லீரல் பாதிப்பு நோய்களாலோ (cirrhosis) அல்லது புற்றுநோய்களாலோ (Leukemias / Lymphomas) மண்ணீரல் வீக்கம் ஏற்படும். அதாவது, பெரிதாகும். அப்போது அங்கு தட்டணுக்கள் தஞ்சம் புகுவதால், ரத்தத்தில் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
தட்டணுக்களின் செயல்பாட்டை தடுக்கும் சில மருந்துகளும் இருக்கின்றன. உதா. - Aspirin, Clopidogrel. இதுபோன்ற மருந்துகளை இதய நோயாளிகள் எடுத்துக்கொள்வார்கள். எனவே, டெங்கு காய்ச்சலின்போது இவற்றை இவர்களுக்குக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
தட்டணுக்களின் முக்கிய வேலை
ரத்தத்தில் தட்டணுக்கள் சிறு தட்டுகளாக மிதந்து சென்றாலும், ரத்தநாளம் பாதிக்கப்படும்போது, அதிலிருந்து ரத்தம் கசியாமல் தடுத்து, அதை அடைக்க உதவுகின்றன. எதாவது காரணத்தால் ரத்தநாளம் பாதிக்கப்பட்டால் தட்டணுக்களுக்கு உடனே சிக்னல் வந்துவிடும். அவை உடனடியாகச் செயல்படக்கூடிய தட்டணுக்களாக (activated platelet) மாறி, தங்கள் உடலில் இருந்து நீட்சிகளை உருவாக்கும். இதன்மூலம், அவை ஒரு ஆக்டோபஸ் போல மாறிவிடும். இந்த அமைப்புதான், பாதிப்படைந்த ரத்தநாளத்தை அடைக்க உதவுகிறது. அதாவது, ரத்தம் உறைதலுக்கு உறுதுணையாக இருக்கிறது.
(தொடரும்)