அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சாமானிய மந்திரம்...

 நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சாமானிய மக்களுக்குச் சகலமும் கிடைக்கச் செய்வோம் என்று எல்லா அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கின்றன. தரமான வாழ்க்கைக்கு வழியில்லாத, உணவு, உடை, உறைவிடம், பாத

Updated On :20 செப்டம்பர் 2012, 7:36 am

 நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சாமானிய மக்களுக்குச் சகலமும் கிடைக்கச் செய்வோம் என்று எல்லா அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கின்றன. தரமான வாழ்க்கைக்கு வழியில்லாத, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக்கூடப் பெற முடியாத, விவசாயக் கூலிகளாகவும், சுமை வியாபாரிகளாகவும் இருக்கின்ற ஏழை மக்களைத்தான் நாம் சாமானியர்கள் என்று குறிப்பிடுகிறோம்.

 ஆனால், அரசியல்வாதிகளைப் பொருத்தவரை, தேர்தல் நேரத்தில் மட்டும் நினைக்கப்பட வேண்டியவர்கள்தான் சாமானியர்கள். தேர்தல் முடிந்து பதவிக்கு வந்துவிட்டால், அடுத்த தேர்தல்வரை அவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்பதுதான் அரசியல் கட்சிகளின் எண்ணம்.

 இப்போதைக்கு சாமானியர்கள் அனைவருமே அரசியல்வாதிகளுக்கு ரொம்ப முக்கியம். நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் என்பதால், சாமானியர் வாக்குகளைக் கவர்வதற்காக இலவசங்களையும் கவர்ச்சித் திட்டங்களையும் அரசியல்வாதிகள் அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

 இப்படி வாக்குறுதிகளை அடுக்கிக் கொண்டே போகும் அரசியல் கட்சிகள், ஆட்சிக்கு வந்த பிறகு சாமானியர்களைக் கண்டுகொள்வதே இல்லை என்பதற்கு கடந்தகால ஆதாரங்கள் நிறையவே இருக்கின்றன.

 அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், 1.2 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வாக்குறுதி அளித்திருக்கிறது. நல்ல விஷயம்தானே என்று இதை நினைக்க முடியாது. ஏனென்றால், 2004-ம் ஆண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் சோனியா, ஆண்டுக்கு 1 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாக்குறுதியளித்தார். நிறைவேற்றப்பட்டதா அல்லது நிறைவேற்றுவதற்கு ஏதாவது முயற்சி நடந்ததா? ம்...ஹூம்.

 இந்த விஷயத்தில் பா.ஜ.க. கூட்டணியும் சளைத்ததல்ல. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு கோடிப் பேருக்கு வேலை தருவோம் என்று வாக்குறுதி அளித்துத்தான் அந்தக் கூட்டணியும் அரியணை ஏறியது. அப்புறம் வழக்கம்போல வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டார்கள்.

 கட்சிகள் வாக்குறுதி அளித்தபடி வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிட்டால் மட்டும் வறுமை ஒழிந்துவிடும் என்று கூறிவிட முடியாது. ஆனாலும், அதைக்கூடச் செய்யவில்லையே. இவர்கள் எப்படி வறுமையை ஒழிப்பார்கள். இன்னும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும், எல்லாக் கட்சிகளும் இதே வெற்று வாக்குறுதியை சொல் பிறழாமல் அப்படியே அளிக்கப் போகின்றன என்பது மட்டும் உறுதி.

 தரமற்ற, தகுதிக்கு ஒவ்வாத வேலையைத்தான் இப்போது பலரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இதனால், சமூகப் பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் பணிபுரியும் மக்கள் தொகையில் 7.6 சதவீதம் பேர் மட்டுமே அமைப்பு சார்ந்த நிறுவனப் பணிகளைச் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் அரசு எடுத்துவரும் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளால், அதிக எண்ணிக்கையில் அமைப்பு சாரா மற்றும் அமைப்பு சார்ந்த பணியாளர்கள் வேலையிழந்திருக்கின்றனர். இதுதான் சாமானியர்களுக்கு அரசு செய்யும் "உதவி'.

 எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, உலக அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால், வேளாண்மை, தொழில்துறை, சேவைத்துறை ஆகிய மூன்றிலுமே கணிசமானவர்கள் வேலையிழந்துவிட்டனர்.

 நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படையான மூன்று முக்கியத் துறைகளில் முதன்மையானது வேளாண்மை. நாட்டுக்கு உணவு தருவதுடன், 60 சதவீத வேலைவாய்ப்பை வழங்குவதும் இந்தத் துறைதான். சில சுயநலவாதிகளின் விருப்பப்படி, வேளாண்துறை இப்போது நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. 1996-97 முதல் 2007-08 வரையிலான 10 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தியின் சராசரி வளர்ச்சி வீதம் 1.3 சதவீதமாக இருந்தது. இதே காலகட்டத்தில் மக்கள் தொகையின் சராசரி வளர்ச்சி வீதம் 1.8 சதவீதமாக இருந்திருக்கிறது. இவற்றைப் பார்க்கும்போது மால்தூஸ் கோட்பாட்டின் எச்சரிக்கைகள்தான் மனதில் எழுகின்றன.

 ஒருபக்கம் வேலையிழப்பு, மறுபக்கம் வேளாண் பொருள்களின் உற்பத்தி வீதம் குறைந்ததால் விலைவாசியில் உயர்வு என சாமானியர்களின் பிழைப்பே கேள்விக்குறியாகி இருக்கிறது. விலைவாசி உயர்ந்தாலும், வேளாண்துறையில் ஈடுபடுவோருக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை. இதனால், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொண்டார்கள்.

 இடையே, அரசு விழித்துக் கொண்டு, சில கடன் தள்ளுபடி போன்ற நிவாரணத் திட்டங்களை அறிவித்தபோதும், தனியாரிடம் கடன்வாங்கிய விவசாயிகளுக்கு இவை எந்தவகையிலும் பயன்படவில்லை. விவசாயிகள் வாங்கிய கடன்களில் வெறும் 27 சதவீதம்தான் வங்கிகள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் வாங்கப்பட்டவை. அவற்றை வாங்கியவர்கள் பெரும்பாலும் பெரிய விவசாயிகள். இதனால், சிறு மற்றும் குறு விவசாயிகளை அரசின் உதவிகள் சென்றடையவில்லை. இந்தச் சிக்கலான பிரச்னை அப்படியே விடப்பட்டது. ஆக்கபூர்வமான வேறு எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.

 ஒருபுறம் கிராமப்புற வங்கிகளை வலுப்படுத்த வேண்டும் என்று அரசு கூறிக்கொண்டிருக்கும் அதே வேளையில், 1993 முதல் 2007 வரை 4829-க்கும் அதிகமான கிராமப்புற வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருக்கின்றன. இப்படி எதையோ பேசுவதும் அதற்கு எதிராகச் செயல்படுவதும்தான் அரசுக்கு வாடிக்கையாகிப் போயிருக்கிறது.

 சாமானிய மக்களுக்கு உதவ வேண்டும் என ஆட்சியாளர்கள் உண்மையிலேயே விரும்புவார்களேயானால், வேளாண்மை, சிறு வணிகம், குறுந்தொழில்கள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க வேண்டும். ஆனால், இவற்றைப் புறக்கணிக்கும் முயற்சிகள்தான் இதுவரை நடந்திருக்கின்றன. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றிப் பேசுபவர்கள், சாதாரண மக்களை மட்டும் தவிர்த்துவிடுவது ஏன் என்றே தெரியவில்லை.

 சமூக மேம்பாட்டுத் துறையிலும் சாமானியர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீத நிதியை சமூக மேம்பாட்டுக்கு ஒதுக்குவோம் என்று குறைந்பட்ச பொது செயல்திட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றவில்லை. உண்மையில், அதில் பாதி அளவுக்குத்தான் இப்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 அதேபோல், நாட்டின் மொத்த உற்பத்தியில் 2 முதல் 3 சதவீதத்தை சுகாதாரத்துறைக்கு ஒதுக்குவோம் என்றார்கள். ஆனால், இப்போது ஒதுக்கப்பட்டிருப்பதோ ஒரு சதவீதத்துக்கும் கீழ். இதனால், சுகாதாரத்துறை முற்றிலுமாகத் தனியார்வசமாகி, வசதியானவர்கள் மட்டுமே தரமான சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நோயுடன் வாழ வேண்டும் அல்லது சாக வேண்டும் என்பதுதான் சாமானியர்களின் நிலை.

 விலைவாசியும் சாமானியர்களுக்குச் சாதகமாக இல்லை. என்னதான், பணவீக்கம் குறைந்துகொண்டே போகிறது என்றாலும், அது விலைவாசியில் எதிரொலிக்கவே இல்லை.

 ஏற்றத்தாழ்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை ஆகியவைதான் அரசியல்வாதிகள் அடிக்கடி உச்சரிக்கும் சொற்கள். ஆனால், ஆட்சியில் இருக்கும்போது, அவர்கள் சொன்னது எதுவும் செயல்வடிவம் பெறுவதில்லை. அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பவேமாட்டோம் என்பதில் நாட்டு மக்கள் அனைவருமே இப்போது உறுதியாகத்தான் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.