மெüனமாக மற்றொரு பிரளயத்துக்கு வித்திட்டிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். 1991-ல் ஓர் அமைச்சராக இந்தியப் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் என்ற வார்த்தையை அவர் அறிமுகப்படுத்தினார். தேசம் முதல் பிரளயத்தைச் சந்தித்தது. தாராளமயமாக்கம் என்ற வார்த்தையின் உண்மையான பொருள் தனியார்மயம் என்று தேசம் முழுமையாக உணர்ந்துகொண்டது.
சரியாக 18 ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போது அவருடைய அமைச்சரவை சகா இன்னொரு பிரளயத்துக்கு வழிவகுக்கும்போது வார்த்தையை நேரடியாகவே பிரயோகப்படுத்துகிறார்: ""கல்வியைத் தனியார்மயமாக்குதல்'' என்று.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இப்போதைய ஆட்சியில் மனித வள மேம்பாட்டுத் துறை வழக்கம்போல குறைந்த கவனத்தை ஈர்க்கும் ஒரு துறையாக இருக்கப் போவதில்லை. அமைச்சர் கபில் சிபல் உறுதியாக இருக்கிறார்: ""1991-ல் பொருளாதாரத்தில் நிகழ்ந்த மாற்றம் 2009-ல் கல்வியில் நிகழ வேண்டும்''
கல்விச் சீரமைப்பு குறித்து பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கும் கபில் சிபல், அதீத கட்டுப்பாடுகளை அரசு விலக்கிக்கொள்வதிலிருந்தும் தனியார்மயமாக்குவதிலிருந்துமே கல்வித்துறை மாற்றங்களைத் தொடங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதையே கல்விச் சீரமைப்பு என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பொருளாதாரச் சீரமைப்பைப் பற்றி மன்மோகன் சிங் பேசியபோது இருந்த சூழலைவிடவும் அவருடைய சகா கல்விச் சீரமைப்பைப் பற்றி பேசும்போது நிலவும் சூழல் அவருக்குச் சாதகமாக இருப்பதாகவே தோன்றுகிறது. 1990-களில் பெரும்பான்மை இந்திய அறிவுஜீவி வர்க்கம் மன்மோகனுக்கு சாதகமாக இல்லை. ஆனால், இப்போது அதுவே கபில் சிபலுக்கு சாமரம் வீசும்போது சொல்ல வேறென்ன இருக்கிறது?
முதல்கட்டமாக இந்த அரசு உயர்கல்வியைக் குறி வைத்திருக்கிறது. இந்தியாவில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 11 சதமாக இருக்கிறது. இதை 2012-க்குள் 15 சதமாக உயர்த்த 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை எட்ட 1,500 பல்கலைக்கழகங்கள் நமக்கு வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்தியாவில் இப்போது ஏறத்தாழ 300 பல்கலைக்கழங்களே இருக்கின்றன. இதிலும் மூன்றில் ஒரு பகுதி தனியார் பல்கலைக்கழகங்கள். ஆகையால், இலக்கை எட்டும் தீர்வாக தனியார்மயமாக்கல் முன்வைக்கப்படுகிறது.
மேலும், வெளிநாடுகள் சென்று கல்வி கற்கும் மாணவர்களால் ஆண்டொன்றுக்கு ரூ. 35,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதால் கல்வித் துறையில் அந்நிய முதலீட்டை ஏன் அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்கிறார்கள்.
நாம் கொஞ்சம் மாற்றி யோசிப்போம். உயர்கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை இந்த அளவுக்கு அதிரடியாக - அவசரமாக ஏன் உயர்த்த வேண்டும்? அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வியில் சேர முற்படும்போது போட்டி ஏற்படுகிறது. ஆகையால், அதிக மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். இதைத் தவிர்க்கவும் எல்லோரும் உயர்கல்வி கற்கவும் உயர்கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்துவது அவசியமாகிறது.
நாம் கொஞ்சம் மாற்றி யோசிப்போம். எல்லோரும் ஏன் உயர்கல்வி கற்க வேண்டும்? தயவுசெய்து இந்தக் கேள்வியை கொஞ்சம் விரிவான தளத்தில் - நாட்டின் 93 சதம் பேர் அமைப்புசாரா வேலைகளிலேயே இருக்கின்றனர் என்ற உண்மையின் பின்னணியில் யோசியுங்கள். அதாவது, உயர்கல்வி என்பது உண்மையிலேயே எல்லோருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவையாக இருக்கிறதா அல்லது திட்டமிட்டு ஒரு மாயையாக உருவாக்கப்படுகிறதா? தேசிய தர மதிப்பீட்டுக் குழு (நாக்) என்ன சொல்கிறதென்றால், நம் நாட்டில் இப்போதுள்ள ஆகப் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தரமற்றவை என்கிறது.
இதன் இயல்பான விளைவாக நம் நாட்டில் பத்தில் இருவரே வாங்கும் பட்டத்துக்கேற்ற கல்வித் தகுதியைப் பெறுகின்றனர். அதாவது, முக்கால்வாசிக்கும் மேலானோர் அரைகுறைப் பள்ளிப் படிப்பில் பெற்ற அறிவையும் பெயருக்குப் பெற்ற பட்டத்தையும் கொண்டே வேலைகளைப் பெறுகின்றனர்; அனைத்துத் துறைகளும் இப்படியானவர்களைக் கொண்டே காலம் கடத்துகின்றன.
இந்த உண்மை கண்கூடாக இருக்கும் நிலையில், போலித்தனமாக எல்லோருக்கும் உயர்கல்வி அளிப்பதாலும் பட்டங்கள் அளிப்பதாலும் இடைத்தரகர்களைத் தவிர்த்து யாருக்கு லாபம்? அல்லது பள்ளிப் படிப்பே போதுமான ஒரு வேலைக்கு எதற்காக பட்டம்?
யோசித்துப் பாருங்கள். இப்போதெல்லாம் கல்வித் துறை ஏன் மதிப்பெண்களை வாரிவாரி வழங்குகிறது? போலியாகத் தேர்ச்சி பெற வைக்கிறது? போலியான போட்டியை உருவாக்குகிறது? போலியாக எண்ணிக்கையை உயர்த்த முயல்கிறது?
இந்தக் கேள்விகளின் மதிப்பு சாதாரணமானதல்ல. ரூ. 2.26 லட்சம் கோடி. ஆமாம். 2012-க்குள் இந்தியாவில் பட்டதாரிகளின் எண்ணிக்கை 15 சதமாக வேண்டுமானால், 15-வது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையின்படி அதற்கு இத்தனை தொகை தேவை. இத்தனை பணம் அரசிடம் இல்லாததால்தான் கல்வியைத் தனியார்மயமாக்குகிறோம் என்கிறார்கள்.
ஆகையால், சீரமைப்பு குறித்து பேசுகிறவர்கள் - ரூ. 2.26 லட்சம் கோடியைப் பற்றி பேசுகிறவர்கள் அதே மதிப்பைக் கொண்ட இந்தக் கேள்விகளையும் எதிர்கொண்டு பதிலளிக்க முயலலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

