விளையாட்டால் வினை தீரும்!
வேகத்திற்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாத 20 - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் சோபிக்க முடியாமல் நடப்புச் சாம்பியன் அந்தஸ்தை தவறவிட்டனர். கடந்த முறை சாம்பியன்


வேகத்திற்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாத 20 - 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் சோபிக்க முடியாமல் நடப்புச் சாம்பியன் அந்தஸ்தை தவறவிட்டனர். கடந்த முறை சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட பாகிஸ்தான், இந்த முறை அதைப் பெற்றுள்ளது.
இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல், மும்பை குண்டுவெடிப்பில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு, உலகளாவிய தீவிரவாத கலாசாரம், அரசியல் நிலையற்ற தன்மை, பாதுகாப்பற்ற நிலை என்று விளையாட்டிற்குச் சம்பந்தமில்லாத பல்வேறு பிரச்னைகளைக் காரணம் காட்டி பல நாடுகளும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்புத் தெரிவித்தன.
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒற்றுமையின்மை, ஊதியப் பிரச்னைகளாலும் தத்தளித்தது. ஆனால், பிரச்னைகளை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தால் மட்டும் தீர்வு காண முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
தாங்கள் எப்படி விளையாடுகிறோம், தங்களின் செயல்பாடும் கிரிக்கெட் விளையாட்டின் மீதுள்ள காதலுமே நாட்டைச் சிறிய அளவிலாவது தலைநிமிர வைக்கும் என்று அவர்கள் நினைத்தனர்.
ஆனால், மற்ற அணிகள் பாகிஸ்தானில் நிலவும் பிரச்னைகள் அந்த அணியிலும் எதிரொலிக்கும்; அவர்களால் ஜெயிக்க முடியாது என்று நினைத்தனர்.
இதை பாகிஸ்தான் அணியின் கேப்டன் யூனிஸ்கானும் உறுதிசெய்து "எங்கள் அணி மீது யாருக்கும் அதிக எதிர்பார்ப்பில்லை; அதனால் நாங்கள் பதற்றம் இல்லாமல் விளையாடுவோம்' என்றார். அதன்படியே அவர்கள் நிதானமாக விளையாடி வெற்றி பெற்றனர். இந்த வெற்றி இன்று உலக நாடுகள் பாகிஸ்தானை சற்று நிமிர்ந்து பார்க்கவைத்துள்ளது.
அதேநேரத்தில், பாகிஸ்தான் வீரர்களின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. பக்கத்து நாடு, ஆசியக் கண்டத்தில் கிரிக்கெட்டிலும், மற்ற துறைகளிலும் வலுவாக இருக்கும் நாட்டுடன் நட்புறவு இல்லாமல் இருப்பது நல்லதல்ல என்று அவர்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர்.
இதை அந்த அணியின் அதிரடி நாயகன் ஷாகித் அப்ரிதி வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
"இரு நாடுகளுக்கிடையே உள்ள பகை உணர்ச்சியை விளையாட்டின் மூலமே தணிய வைக்க முடியும் என இன்னமும் நான் நம்புகிறேன்' என்று அப்ரிதி கூறியுள்ளார். இவரது கூற்றுக்கு அந்நாட்டு அதிபரோ, மற்றவர்களோ கண்டனமோ, மறுப்போ தெரிவிக்கவில்லை. இதை, ஒரு நல்ல ஆரம்பமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலச் சக்கரம் என்பது சுழன்றுகொண்டே இருக்கும். வன்முறையே தீர்வு என நினைத்த மக்கள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து பாடம் படித்து அகிம்சைதான் உலகில் சிறந்தது, தீவிரவாதத்தையும், குண்டுகளையும்விட அமைதியும், அமைதிப் பேச்சு வார்த்தையுமே பிரச்னைகளுக்குத் தீர்வாகும் என்று உணர்ந்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடே ஷாகித் அப்ரிதியின் பேச்சு.
இவ்வாறு விளையாட்டின் மூலமாக இரு நாடுகளின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டால், ஆசியாவின் தலைவலி பெருமளவிற்குக் குறைந்து விடும்.
நாமும் பாதுகாப்பிற்காகச் செலவிடும் தொகையை வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிடலாம்.
அமைதிப் பேச்சுவார்த்தையிலும், அமைதியிலும் நாம் எப்போதும் நம்பிக்கையுடன்தான் இருக்கிறோம்.
அப்ரிதியின் பேச்சு சாதாரணமானதல்ல; இந்தியர்கள் எவ்வாறு கிரிக்கெட்டை தங்களது மதமாக நினைத்து பூஜிக்கிறார்களோ அதே அளவிற்கு பாகிஸ்தானியர்களும் கிரிக்கெட்டை பூஜிப்பவர்கள். அவர்களில் ஒருவரும், கிரிக்கெட்டின் கதாநாயகனுமான அப்ரிதி அவ்வாறு குறிப்பிட்டிருக்கும்போது அந்த வார்த்தை பாகிஸ்தானியர்களின் மனநிலையைக் குறிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இன்றைய நிலையில் பாகிஸ்தானுக்கு அன்பும், ஆதரவும்தான் தேவை. இதை காந்தி தேசமான இந்தியாதான் அளிக்க முன்வர வேண்டும்.
பாகிஸ்தானுடன் நட்புறவுப் பேச்சுவார்த்தை என்பது முள் மேல் விழுந்த துணி போன்றது. அதை நாம்தான் பத்திரமாக மீட்க வேண்டும்.
உலகில் பிரபலமானவர்களை அமைதித் தூதுவர்களாக நியமிப்பது போல இந்தியா, பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் கிரிக்கெட்டை "தூதுவராக' நியமித்துப் பார்க்கலாம்.
இரு நாடுகளும் பொதுவான இடங்களில் போட்டிகளில் மோதிக்கொள்ள ஏற்பாடு செய்யலாம். அடிக்கடி நடைபெறும் போட்டிகள் நட்புறவை வலுவடையச் செய்யும்.
கிரிக்கெட்டை நேசிக்கும் இருநாட்டு மக்களின் மனநிலையும் மற்ற விஷயங்களிலும் ஒத்துப்போகவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா அச்சாரம் போடலாமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...