வங்கிகள் இணைய காலம் கனியவில்லை
வங்கிகளை இணைத்து, அவற்றின் எண்ணிக்கையைக் குறைத்து, அவை மேலும் வலுவுடன் திகழ வழி காணும் திட்டம் புதிதல்ல. 1997-லேயே நரஸிம்மம் குழு தனது இரண்டாவது அறிக்கையில் இதனைப் பரிந்துரைத்தது. ஆக, வ


வங்கிகளை இணைத்து, அவற்றின் எண்ணிக்கையைக் குறைத்து, அவை மேலும் வலுவுடன் திகழ வழி காணும் திட்டம் புதிதல்ல. 1997-லேயே நரஸிம்மம் குழு தனது இரண்டாவது அறிக்கையில் இதனைப் பரிந்துரைத்தது. ஆக, வங்கிகள் இணைப்புத் திட்டம், வங்கிச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதி எனலாம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய அரசு பொதுத்துறை வங்கிகளை இணைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியது. மிகப்பெரிய சீனாவின் வங்கிகளைப்போல் இந்திய வங்கிகளும் திகழ வேண்டும் என்று மத்திய அரசு விரும்பியிருக்கக்கூடும். ஆனால், அரசு நேரடியாகச் செயல்பட முடியாத நிலையில் பெரிய சாதனை ஏதும் நிகழவில்லை.
பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் இணைவங்கிகளில் ஒன்றான, பேங்க் ஆப் சௌராஷ்டிரா என்னும் சிறிய வங்கி இணைந்தது. சொல்லிக் கொள்ளத்தக்க இணைப்பு இது ஒன்றே.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் புதிய அரசு மத்தியில் பொறுப்பேற்றவுடன், வங்கிகள் இணைப்புத் திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் கிடைத்துள்ளது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வங்கித் தலைவர்களிடையே பேசுகையில், இத்திட்டத்தின் சிறப்புகளைப் பற்றி குறிப்பிட்டார். வங்கிகள் தானாகவே முன்வந்து, இணைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்றும் அதற்குத் தேவையான உதவிகளை அரசு செய்யும் என்றும் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்துள்ளார். வலிமைமிக்க பெரிய வங்கிகளால் மட்டுமே சர்வதேச அளவில் போட்டியிட முடியும் என்பதே அவரது வாதத்தின் அடிநாதம்.
இந்தியாவைப் பொருத்தவரை, வங்கி இணைப்பு என்ற பேச்சு, அரசுடைமை வங்கிகளைச் சுற்றியே வலம் வருகிறது. காரணம், ஒருசில பெரிய தனியார் வங்கிகள் தவிர, பெரும்பாலான பெரிய வங்கிகள் பொதுத்துறை வங்கிகள் மட்டுமே என்பதுதான். அதேநேரம், இரண்டு பெரிய வங்கிகள் இணைய முன்வரும்போது, அவை எதிர்கொள்ளும் பிரச்னைகள் கொஞ்சநஞ்சம் அல்ல.
வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கங்கள் மட்டும்தான் வங்கி இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன என்று சொல்ல முடியாது.
பொதுவாக அரசின் கொள்கையுடன் ஒத்துப்போகும் வங்கித் தலைவர்கள்கூட இந்த இணைப்புத் திட்டத்துக்கு அவசரம் காட்டத் தேவையில்லை என்றுதான் கருதுகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, முன்னணி அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவராக அண்மைக்காலம்வரை பொறுப்பு வகித்தவர் டாக்டர் கே.சி. சக்ரவர்த்தி. அவர் தற்போது பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவராக இருந்த கடைசி நாள்களில் கூறிய கருத்து இதுதான்: ""வங்கிகள் இணைப்புக்கான காலம் கனியவில்லை''. அவர் மேலும் கூறியது, இப்போதைக்கு, சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய வங்கிகள்தான் உடனடித் தேவை; பெரிய வங்கிகளை உருவாக்குவதற்கு மேலும் மூன்று, நான்கு ஆண்டுகள் காத்திருக்கலாம் என்பதுதான். வங்கிச் சேவை 60 சதவீத மக்களை இன்னும் சென்றடையவில்லை; 80 சதவீத மக்கள் வங்கிக் கடன் வசதியை இன்னும் பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தற்போது பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக உள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் எண்ண ஓட்டத்தில் இதுகுறித்து மாற்றம் வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ.யின் தலைவர் கே.வி. காமத் இன்னும் ஒரு படி மேலே போய், வங்கிச் சீர்திருத்தத்திற்கு இப்போது அவசரம் காட்டத் தேவையில்லை என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, இந்திய வங்கிகளின் மிதவாதத் தன்மையால்தான் இந்தியாவில் நிதி நெருக்கடி மற்ற நாடுகளைப்போல் கடுமையாக இல்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
சரி, வங்கி இணைப்புக்கு பச்சைக் கொடி காட்டுபவர்களின் வாதம்தான் என்ன?
முதலாவதாக, இதன்மூலம் பெரிய, வலுவான வங்கிகளை உருவாக்கலாம். அவை சர்வதேச அளவில் போட்டியிடுவது எளிது என்பதாகும்.
பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற முன்னணி வங்கிகள் இணைந்தால்கூட, அது உலக அளவில் சிறிய வங்கியாகவே இருக்கும் என்பதுதான் உண்மை.
இரண்டாவது வாதம், இணைப்புக்குப் பிறகு அந்தப் பெரிய வங்கிகள் சந்தையில் அதிக அளவிலான மூலதனம் திரட்ட முடியும் என்பதாகும்.
கூர்ந்து நோக்கினால் இதுவும் சாத்தியம் அல்ல என்பது தெளிவாகும். காரணம், அரசுடைமை வங்கிகளில் அரசு மூலதனம் 51 சதவீதத்துக்குக் குறைவாகச் சரிவதை அனுமதிக்க மாட்டார்கள். ஏற்கெனவே, பாரத ஸ்டேட் வங்கியும், இன்னும் பல வங்கிகளும் கிட்டத்தட்ட 51 சதவீத மூலதன அளவில்தான் உள்ளன.
அதேசமயம் வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதற்கான பேச்சே எழவில்லை. காரணம், உலகெங்கும், தனியார் வங்கிகள் திவாலாகாமல் இருப்பதற்கே, அரசின் பெரும் நிதி தேவைப்படும் காலம் இது.
அரசுடைமை வங்கிகளின் அரசு மூலதனத்தை 33.33 சதவீதமாகக் குறைப்பதற்கான மசோதா, பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பொதுத்துறை வங்கிகளை இணைப்பதில் பல நடைமுறைச் சிக்கல்களும் சட்டச் சிக்கல்களும் உள்ளன. அவற்றை எதிர்கொள்வதற்கு, அரசுத் தரப்பில் ஏராளமான பூர்வாங்க நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற ஒப்புதல்கள் ஆகியவை தேவை. இதற்கு கால அவகாசமும் தேவை.
அதுமட்டுமல்ல; ஒரு வங்கி அளவில் மிகப்பெரிய வங்கியாக இருப்பதாலேயே அதன் செயல்திறன் கூடும் என்று சொல்வதற்கில்லை. மாறாக, கூடுதல் தாமதங்களுக்கும் மெத்தனத்துக்கும் அது வழிவகுக்கக் கூடும். அவ்வளவு ஏன்? கடந்த ஓரிரு ஆண்டில், பல பெரிய அமெரிக்க வங்கிகளும், ஐரோப்பிய வங்கிகளும் சரிந்தது எப்படி?
கடந்த காலங்களில் இந்தியாவில் சில வங்கிகள் இணைப்பு நேர்ந்துள்ளன. அந்த வங்கிகளின் அனுபவம் என்ன?
வலுவான பஞ்சாப் நேஷனல் வங்கியும், நியூ பேங்க் ஆப் இந்தியா என்னும் சிறிய வங்கியும் இணைந்தன. இணைப்புக்குப் பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு அது ஒரு பெரும் சுமையாக மாறிய விஷயம் அனைவரும் அறிந்த ஒன்று. அந்தச் சுமையிலிருந்து வெளியேற வலிமைமிக்க பஞ்சாப் நேஷனல் வங்கிக்கே பல காலம் தேவைப்பட்டது.
அடுத்து, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் என்னும் அரசுடைமை வங்கியின் மீது, இணைப்பு என்ற பெயரில், கடும் சரிவுக்கு உள்ளான குளோபஸ் டிரஸ்ட் பேங்க் என்னும் புதிய தனியார் வங்கி திணிக்கப்பட்டது. ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் எதிர்கொண்ட இன்னல்கள் மிக அதிகம்.
ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு கலாசாரம் உண்டு. ஒரு தனித்தன்மை உண்டு. இதுவே அந்த வங்கியின் பலம். இரண்டு வங்கிகள் இணைக்கப்படும்போது, பலம் அதிகரிப்பதைவிட, பலவீனமே மேலோங்கி விடுகிறது.
இரண்டு வங்கிகளில், சிறிய வங்கியின் ஊழியர்கள் மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள்கூட, புதிய சூழலில், பாதுகாப்பு உணர்வைப் பறி கொடுத்து விடுகிறார்கள். இதை பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் சௌராஷ்டிராவின் இணைப்பின்போது பார்க்க முடிந்தது.
இப்போது பாரத ஸ்டேட் வங்கியுடன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தூர் இணைவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இணைப்பு கூடாது என்பது யாருடைய நிலைப்பாடும் அல்ல. ஆனால், அரசுத் தரப்பிலிருந்து இணைப்பைத் துரிதப்படுத்துவதற்கு அதீத ஆர்வம் காட்டுவதைவிட்டு, நாளாவட்டத்தில், இணைப்பு இயல்பாக நேருமானால், அரசு அதற்கு ஆதரவு நல்கலாம்.
தற்போதுள்ள சூழலில், எப்படிப் பார்த்தாலும், இந்திய வங்கிகள் இணைவதற்கு, இன்னமும் காலம் கனியவில்லை என்பதே உண்மை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...