கமலா தாஸ் மேஜிக்

கமலா தாஸ் என்ற பெயரை உச்சரித்தாலே இந்திய-ஆங்கில இலக்கியம் அறிந்தோர் முகத்தில் ஒரு புன்முறுவல் நெளிந்து ஓடும். படைப்பிலக்கியவாதிகளோ நிமிர்ந்து உட்காருவர். பெண்ணியவாதிகளோ இப்படிப்பட்ட ஒரு கவிஞரால்தான் ந
கமலா தாஸ் மேஜிக்

கமலா தாஸ் என்ற பெயரை உச்சரித்தாலே இந்திய-ஆங்கில இலக்கியம் அறிந்தோர் முகத்தில் ஒரு புன்முறுவல் நெளிந்து ஓடும். படைப்பிலக்கியவாதிகளோ நிமிர்ந்து உட்காருவர். பெண்ணியவாதிகளோ இப்படிப்பட்ட ஒரு கவிஞரால்தான் நம் நாய்வால் சமுதாயத்தைச் சீர்திருத்த முடியும் என்று எண்ணி பெருமை கொள்வர். பாதி கவனித்து பாதி கோட்டைவிட்டுக் கொண்டிருக்கும் மாணாக்கர்கூட கண்ணை அகல விரித்து காதை கூர்மையாக்கி கவனிப்பர். அதுவே கமலா தாஸ் மேஜிக்.

  1984-ம் ஆண்டு நோபல் நிறுவனம் தன் பரிசை வழங்குவதற்குப் பட்டியல் தயாரித்துப் பின்னர் குறுக்கியப் பட்டியலை வெளியிட்டது. அதில் உலக இலக்கிய ஜாம்பவான்களான டாரிஸ் லெஸ்ஸிங், நாடின் கோர்டிமர், மார்கரித் யுவர்செனர் ஆகியோரின் பெயர்களோடு கமலா தாஸின் பெயரும் இடம்பெற்றது பெருமைக்குரிய செய்தி. மத்திய சாகித்ய அகாதெமி விருது, கேரள சாகித்ய அகாதெமி விருதுகளோடு ஆசிய நாடுகளிடமிருந்து தன் படைப்பிலக்கியத்துக்காக பல விருதுகளைப் பெற்றவர் கமலா தாஸ்.

  "பெண் விடுதலையை நான் நேற்று எதிர்த்து நின்றவள்தான். இன்றோ நான் அதை ஆதரிக்கிறேன். நாளை நான் என்ன நினைப்பேன், என்ன செய்வேன் என்பது எனக்குத் தெரியாது' என்று ஈவ்ஸ் வீக்லி பத்திரிகைக்காக 1984-ம் ஆண்டு ஷோபா வாரியருக்கு அளித்த நேர்காணலில் நேர்மையாகச் சொல்லியிருக்கிறார். இந்த நேர்மையைத்தான் எழுத்தாளர் தருமம் என்று சொல்ல வேண்டும். காலத்துக்கு ஏற்ற கருத்தைச் சொல்பவனே கவிஞன். காலத்துக்கு ஏற்ற சொற்களைக் கையாள்பவனே எழுத்தாளன். இந்த எழுத்து நேர்மையை கமலா தாஸின் கவிதைகளிலே நாம் பார்க்கலாம்.

  "நரகம்' என்ற கவிதையில் ""அரசு வேலை என்ற ராஜ்ஜியத்தில் நுழைபவர்களே! நம்பிக்கை என்ற சொல்லையே மறந்துவிடுங்கள்'' என்று சொல்வதில் ஆகட்டும் அல்லது "நிர்பந்தங்கள்' என்ற கவிதையில் ""ஞாயிற்றுக்கிழமைகளில் பலரைச் சந்தித்து வர ஆசை, முழு நிர்வாணமாக'' என்று சொல்வதில் ஆகட்டும் "பெரும்பேரு' என்ற கவிதையில் ""அப்படி ஒன்றும் பெரிதாக எனக்கு ஏதும் நடக்கவில்லை. இரண்டு பிள்ளைகள் இரண்டு கருச்சிதைவுகளைத் தவிர'' என்று சொல்வதில் ஆகட்டும். அல்லது ""எனக்கு மட்டும் ஏன் காதல் மீண்டும் மீண்டும் மீண்டும் வருகிறது? வலியைப் போல'' என்று சொல்வதில் ஆகட்டும் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் இனத்திலே கமலா தாஸ் இல்லை என்றே நம்பிக்கை கொள்ளலாம்.

  1934-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புன்னையார்குளத்தில் எம்.வி. நாயருக்கும் பாலாமணி அம்மாளுக்கும் பிறந்தவர் கமலா. அம்மா சிறந்த கவிஞர். தாய்மாமன் நலாபட் நாராயணன மேனன் புகழ் பெற்ற எழுத்தாளர். போதாக்குறைக்கு வீடு நிறைய புத்தகங்கள். கமலா கவிஞர் ஆகிப் போனார். அப்போது அவருக்கு வயது 17. மாதவிக்குட்டி என்ற புனைப்பெயரிலே கமலாவின் படைப்புலகம் விரியத் துவங்கியது. தன்னைவிட 15 வயது மூத்தவரான மாதவ தாஸ் என்பவரை மணந்து கொண்டார். மூன்று மகன்களை ஈன்று எடுத்தார். மாதவிக்குட்டி மலையாளத்தில் எழுதி கேரள மக்களிடையே புகழ் பெற்றிருந்தாலும் கமலா தாஸ் ஆங்கிலத்தில் கவிதை எழுதி இந்தியா முழுவதும் பேசப்படுபவராக விளங்கினாலும் இவரை உலகு அறிய வைத்தது இவர் ஆங்கிலத்தில் எழுதிய "என் கவிதை' என்ற சுயசரிதை நூலே. அப்போது இவருக்கு வயது 42.

  பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் "என்கதை' கமலாவின் அந்தரங்க வாழ்க்கையினையும் இவரோடு ஒட்டி உறவாடிய மனிதர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இப்புத்தகம் கமலாவுக்குப் பெரும் பணத்தையும் கெட்ட பெயரையும் சம்பாதித்துக் கொடுத்தது. ஜப்பான் மற்றும் கனடா நாடுகளில் உள்ள பள்ளிகளில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. " உலகிலேயே பேரழகு எது என்றால் அது பெண்ணின் நிர்வாண உடம்புதான்' என்று தன் அழகியல் தத்துவத்தை பறைசாற்றிய கமலா தாஸ் தன் சுய சரிதை கதை, கவிதை, கட்டுரை, நாவல் என்று தான் எழுதிய எல்லாவற்றிலும் தத்துவத்தை அருமையாகவே விளக்கியுள்ளார்.

  "எனக்கு காதல் எப்போதுமே தேவைப்படுகிறது. வீட்டில் அது கிடைக்கவில்லை என்றால் சற்றே வெளியில் சென்று திருப்தி அடைவதில் ஒரு தவறும் இல்லை' என்று ஷோபா வாரியர் நேர் காணலில் சொன்னதை யாரும் மறுக்க முடியாது. இவர் மனிதம் பாடியதைவிட மனித உடம்பைப் பாடியதே அதிகம். பெண்ணின் தேவைகளும் பெண் உடம்பு கேட்கும் கேள்விகளும் பாடுபொருளாக அமைந்து போனது இவரது படைப்பிலக்கியம்.

  கமலா தனது அறுபத்து ஏழாம் வயதில் ஒரு இளைஞரை மணந்து கொள்ள விரும்பி முஸ்லிம் மதத்தைத் தழுவினார். கமலா சுரய்யாவாக மாறியவர், "உலகிலேயே பெண்களுக்கான சிறந்த ஆடை பர்தாதான்' என்று சொன்னார். அத்தோடு நில்லாமல் பர்தாவையும் அணிந்து கொண்டு "பெண்களுக்கு பர்தா மிகப்பெரிய பாதுகாப்பு. பெண்களுக்கு இஸ்லாம் சிறந்த பாதுகாப்பு அளிக்கிறது. என் வாழ்நாள் முழுவதும் நான் தனிமையில் கிடந்திருக்கிறேன். பல இரவுகளில் நான் என் தலையணையைக் கட்டிப்பிடித்துக் கொண்டே தூங்கி இருக்கிறேன்.

  இப்போது நான் தனிமையில் இல்லை. இஸ்லாம் எனக்கு ஏற்ற தோழனாக இருக்கிறது. இஸ்லாம் மதம் மட்டுமே பெண்களுக்கு அன்பையும், அரவணைப்பையும் கொடுக்கிறது', என்று சொன்னவர் தன் வீட்டில் இருந்த விக்கிரகங்களையெல்லாம் எடுத்துச் சென்று விருந்தினர் அறையில் போட்டுவிட்டார். இதில் தன்னுடைய நண்பன்; காதலன் என்று அவர் அடிக்கடி சொன்ன கிருஷ்ணனின் சிலையும் அடங்கும். பின்னர் இவர் தினமும் 5 வேளை தொழுகையில் ஈடுபட்டார்.

  முழு முஸ்லிமாகவே வாழ்ந்த கமலா சுரய்யா 2006-ம் ஆண்டு கொச்சியில் நடந்த கைராலி புத்தக நிறுவனத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது தான் முஸ்லிம் மதத்தை தழுவியதற்காக வருத்தப்படுவதாகவும் தனது முஸ்லிம் நண்பர்களின் நயவஞ்சகமான செயல்களால் அதிகம் மனம் உடைந்து போனதாகவும் சொன்னார். பல லட்சம் மதிப்புடைய தனது சொத்து, தங்க நகைகள், விலை மதிப்பில்லா தனது வீட்டு நூலகம் எல்லாவற்றையும் அவர்கள் அபகரித்துச் சென்றுவிட்டதாகவும் சொன்னார்.

  மே 31, 2009 அன்று கமலா சுரய்யா தனது 75வது வயதில் பூனாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். தன் சொந்த வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் அருகதையில்லை என்றும் தனது மனம் போனபடி வாழ்வதே வாழ்க்கை என்று வெளிப்படையாகவே சொல்லி சிறந்த முறையிலே தன் வாழ்நாளை செலவிட்ட கமலா, தான் எழுதிய "ஒரு வேண்டுகோள்' என்ற கவிதையில் சொன்னது இங்கே நினைவு கூரத்தக்கது:

  நான் இறந்தபின்

  என் எலும்பையும் சதையையும்

  தூக்கி எறிந்துவிடாதீர்.

  ஒன்றாய் கூட்டி வையுங்கள்.

  அவை சொல்லட்டும்

  தன் துர்நாற்றத்தினால்-

  பூமியில் உயிருக்கு

  என்ன மதிப்பு என்று,

  காதலுக்கு கடைசியில்

  என்ன மரியாதை

  என்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com