வங்கிக் கடன், காலத்தின் கட்டாயம்
அண்மையில் வெளிவந்துள்ள பாரத ரிசர்வ் வங்கியின் தகவல் அறிக்கையின்படி, ஒட்டுமொத்த வங்கிக்கடன் தொகை ரூ. 16,306 கோடி அளவுக்குச் சரிந்துள்ளது. கடந்த மே மாதம் 8-ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வார காலத்துக்


அண்மையில் வெளிவந்துள்ள பாரத ரிசர்வ் வங்கியின் தகவல் அறிக்கையின்படி, ஒட்டுமொத்த வங்கிக்கடன் தொகை ரூ. 16,306 கோடி அளவுக்குச் சரிந்துள்ளது.
கடந்த மே மாதம் 8-ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வார காலத்துக்கான புள்ளிவிவரங்களின்படி வங்கிகள் வழங்கியுள்ள மொத்தக் கடன் தொகை ரூ. 27,52,056 கோடி.
ஆனால், மே மாதம் 22-ம் தேதியுடன் முடிவுற்ற இரு வார காலத்தில் வழங்கப்பட்டுள்ள மொத்தக் கடன் தொகை ரூ. 27,35,750 கோடியாகக் குறைந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் ஒரே ஒரு முறையே இப்படிச் சரிந்துள்ளது என்று நினைக்க வேண்டாம். நடப்பு நிதி ஆண்டில் இப்படிச் சரிந்திருப்பது இது இரண்டாவது முறை. முன்னதாக, ஏப்ரல் 24-ம் தேதியுடன் முடிவடைந்த 2 வாரங்களில் ரூ. 25,266 கோடி அளவுக்கு வங்கிக் கடன் தொகை சரிந்தது.
இந்த நிதி ஆண்டில், இதுவரை வங்கிக் கடன்தொகை வளர்ச்சி விகிதம் வெறும் 15.9 சதவீதம் ஆகவே உள்ளது. சென்ற ஆண்டு, இதே காலத்தில் 25.3 சதவீதம் அளவுக்கு வங்கிக் கடன் வளர்ந்திருந்தது.
இதற்கு வங்கிகள் கூறும் காரணம், வட்டி விகிதம் மேலும் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், வாடிக்கையாளர்கள், குறிப்பாக தொழில் துறையினர் கடன் வாங்குவதைத் தள்ளிப் போட்டிருக்கக்கூடும் என்பதாகும்.
வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. ஜூலை மாதமே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், தொழில் துறையினர் கடன் வாங்குவதை பட்ஜெட்டுக்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று காத்திருக்கக்கூடும் என்பதே அது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வங்கிக் கடன் சரிவடைந்து வருகிறது என்ற உண்மையை மனதில் கொண்டால், மேலே கூறப்படும் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை.
2007 - 08 நிதி ஆண்டில் வணிகம் மற்றும் தொழில் துறையினருக்கு வங்கிகள் வழங்கிய கடன் தொகை 20.3 சதவீதமாக இருந்தது. ஆனால் 2008 - 09 நிதி ஆண்டில் இந்தத் துறையினருக்கு வங்கிகள் வழங்கிய கடன் தொகை 16.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆக, நடப்பு நிதி ஆண்டில் இதுவரை ஏற்பட்டுள்ள சரிவு, சென்ற ஆண்டு சரிவின் தொடர்ச்சியே தவிர வேறில்லை.
இன்னும் சற்று ஆழ்ந்து நோக்கினால் 2004 - 05, 2005 - 06, 2006 - 07, 2007 - 08 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், 2008 - 09 ஆண்டில் வங்கிகள் வணிகம் மற்றும் தொழிலுக்கு வழங்கிய கடன் தொகை மிகவும் குறைவு. 26 சதவீத வளர்ச்சியிலிருந்து 16.9 சதவீத அளவுக்குச் சரிவு என்பது உண்மையிலேயே கவலை அளிக்கும் விஷயமாகும்.
பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்வதற்குச் சிறந்த வழி, சிறப்பான தொழில் முனைவோருக்கு, ஏற்கெனவே வெற்றிகரமாகச் செயல்படும் தொழில் துறையினருக்கு, துரிதமாகவும், போதிய அளவிலும் கடன்களைக் கொடுத்து உதவுவதுதான். ஆகவே, தேக்க நிலையில் உள்ள பொருளாதாரம் உத்வேகம் அடையச் செய்வதில் வங்கிகளுக்கு முக்கியப் பொறுப்பு உண்டு எனப் பல பொருளாதார வல்லுநர்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள்.
இதே கருத்தை வலியுறுத்துவதற்காக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வங்கித் தலைவர்களை ஜூன் 10-ம் தேதி சந்தித்துள்ளார். அத்துடன் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, பொதுவாகவே தொழில்துறையினருக்குக் கடன் வழங்குதல் குறைந்து வரும் நிலையில், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் அதைவிடக் குறைவு என்றால் மிகையாகாது.
இதற்கு என்ன காரணம்? கடந்த சில ஆண்டுகளாகவே வங்கிகள் மனதில் ஒரு தவறான கருத்து பதிந்துள்ளது. அதாவது, சிறு தொழில்களுக்குக் கொடுக்கப்படும் கடன் உதவி வாராக் கடனாகும் வாய்ப்பு அதிகம் என்பதே அது.
ஆனால், அண்மையில் வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுகள் மேலே குறிப்பிட்ட கருத்துடன் உடன்படவில்லை. மாறாக, உலகளாவிய பொருளாதார மந்தநிலையையும் மீறி, இந்தியாவில் செயல்படும் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் சிறப்பாகவும், லாபகரமாகவும் செயல்படுகின்றன என சர்வதேச நிதி மற்றும் தர நிர்ணய அமைப்பான மார்கன் ஸ்டேன்லி (ஆசியா) யின் தலைவர் ஸ்டீபன் ரோச் ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் ""1991-ம் ஆண்டுவாக்கில் சீனாவும், இந்தியாவும் ஒரே அளவிலான தனிநபர் வருமானம் பெற்றிருந்தன. ஆனால், தற்போது இந்தியாவில் தனி நபர் வாழ்க்கைத் தரத்தைவிட, சீனாவில் வாழ்க்கைத்தரம் மூன்று மடங்கு உயர்வாக இருக்கிறது.
ஆனால், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் என்று வரும்போது, சீனாவை விஞ்சுவதாக இருக்கிறது இந்தியா'' என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்குக் காரணம், இந்தியர்களில் பெரும்பாலானவர்களின் கல்வி அறிவும், நவீன தொழில் நுட்பமும், எதிர்பாராமல் ஏற்படக்கூடிய இடர்பாடுகளை சகிப்புத்தன்மையுடன் எதிர்கொள்ளும் பாங்குமே ஆகும் என்கிறார்.
அத்துடன் அவர் நிற்கவில்லை. இந்தியாவில் சிறிய தொழிற்சாலைகள் தங்கள் மூலப்பொருள்களின் கையிருப்பை குறைந்தபட்ச அளவில் வைத்துக் கொள்வதால், மூலப்பொருள்களில் மூலதனத்தின் ஒரு பகுதி முடங்கிப் போகாமல் பார்த்துக் கொள்கின்றன. இதுபோன்ற செலவுக் கட்டுப்பாடு, செயல்திறன் ஆகியவற்றின் மூலம் லாபத்தைக் காப்பாற்றிக் கொண்டுள்ளனர் என்கிறார் ரோச்.
இந்தியாவின் முன்னணி பொருளாதார ஆய்வு அமைப்பு ஒன்று சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களின் செயல்பாடு குறித்து என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
ஆண்டுக்கு ரூ. 3,000 கோடிக்கு அதிகமாக விற்பனை செய்யும் நிறுவனங்கள்; ஆண்டுக்கு ரூ. 1,000 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை விற்றுமுதல் உடைய நிறுவனங்கள்; ரூ. 500 கோடி முதல் ரூ. 1,000 கோடி வரை விற்பனை செய்யும் நிறுவனங்கள்; ரூ. 500 கோடிக்கு கீழே விற்றுமுதல் உடைய சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என்று நான்கு வகையாகப் பிரித்து ஆய்வு செய்ததில் பெரிய நிறுவனங்களைவிட சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களே, தற்போதைய பொருளாதார மந்த நிலையிலும், தங்களுடைய நியாயமான லாபத்தைக் காப்பாற்றிக் கொண்டுள்ளன என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடும் புயலில் சிக்கிய பெரிய மரங்கள் வேரோடு சாய்வதையும், சின்னஞ்சிறிய நாணல்கள் வளைந்து கொடுத்து தப்பித்துக் கொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோமே!
அத்துடன் பெரும்பாலான சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் 2008 - 09-ம் ஆண்டில் தங்களுடைய உற்பத்தித் திறனை முழுமையாகவும் செம்மையாகவும் பயன்படுத்திக் கொண்டுள்ளன என்றும் மேற்கூறிய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, மோட்டார் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொறியியல் சார்ந்த சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளில் கணிசமானவை கடந்த சில மாதங்களாகப் புதிய ஆர்டர்களைப் பெற்றுள்ளன. இவையெல்லாம், இந்நிறுவனங்கள் பொருளாதாரத் தேக்க நிலையிலிருந்து வெளியே வந்து கொண்டுள்ளன என்பதையே காட்டுகிறது.
சில தினங்களுக்கு முன் பாரத ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உஷா தொராட் கொச்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருப்பது இங்கு நினைவுகூரத்தக்கதாகும்:
""சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் 30 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன; இந்தியாவின் மொத்த உற்பத்திகளில் 39 சதவீதம் அவர்களது பங்களிப்பு; ஏற்றுமதியில் அவர்களது பங்கு 33 சதவீதம்; எனவே வங்கிகள் தங்கள் வழிமுறைகளையும், கண்ணோட்டத்தையும் மாற்றி அமைத்துக் கொண்டு அவர்களுக்குத் தங்கு தடையில்லாமல் கடன் வழங்குவதில் முனைப்புக் காட்ட வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.
இவ்வளவு முக்கியமான சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு - உலக அளவில் பொருளாதாரச் சுணக்கம் உள்ள நிலையில் - உதவிக்கரம் நீட்டி, உறுதுணையாக இருக்க வேண்டியது வங்கிகளின் கடமை மட்டுமல்ல, காலத்தின் கட்டாயமும்கூட.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...