போக்குவரத்து நிறைந்த சாலைகளில் இடையூறாய்க் காட்சியளிக்கும் மிகப் பிரம்மாண்ட டிஜிட்டல் பேனர்கள்; சாலையில் அவற்றை நின்று கவனிக்கும் பொதுமக்கள்; அதனால் நேரும் விபத்துகள் எனப் பிரச்னைகள் நேர்ந்தபோது, தமிழக அளவில் இக் கலாசாரத்தை முறைப்படுத்த முதல்வர் கருணாநிதி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார்.
இதைப் பின்பற்றி, அனைத்து மாநகராட்சி, நகராட்சி அமைப்புகள் உடனடியாகத் தீர்மானங்களை நிறைவேற்றின. மாநகர, நகர எல்லைக்குள் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், மொத்தம் 5 நாள்கள் மட்டுமே சாலைகளில் இருக்க வேண்டும். அரசியல் கட்சியாகட்டும், தனியார் அமைப்புகளாகட்டும் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 நாள்கள் முன்பு டிஜிட்டல் பேனர்களை வைக்கலாம். நிகழ்ச்சி முடிந்த இரு நாளில் அவற்றை வைத்தவர்களே அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அகற்றிவிட்டு, அதற்கான செலவை பேனர் வைத்தோரிடம் வசூலிக்கும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றிய நேரத்தில் மட்டுமே ஓரிரு டிஜிட்டல் பேனர்களை அகற்றும் காட்சிகளும் காணக்கிடைத்தன. அதன்பிறகு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் அத்தீர்மானத்தை முற்றிலுமாக மறந்துவிட்டனர்.
இதனால் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியது டிஜிட்டல் பேனர் கலாசாரம். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தேர்தல் ஆணையம் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளால் இந்த டிஜிட்டல் பேனர்கள் அதிகமாகத் தென்படவில்லை. பொதுக்கூட்ட மேடைகளைச் சுற்றி மட்டுமே இவை அதிகம் இருந்தன. தேர்தல் முடிந்த பிறகு, இவற்றின் வரவு முன்பைவிட அதிகரித்துள்ளன. மிகவும் லாபகரமான தொழில் டிஜிட்டல் பேனர் தயாரிப்பது என்றாகிவிட்டது.
தலைவர்களின் வரவு, பிறந்தநாள், வாழ்த்து, புதிய பொறுப்பேற்பு என எதுவாக இருந்தாலும், பனை மர உயரத்துக்கு டிஜிட்டல் பேனர் வைத்தாலே, கீழ் மட்டத் தொண்டன் முதல் மத்திய அமைச்சர்கள் வரை உள்ளோர் அவர்களது தலைவரின் கவனத்தை ஈர்க்க முடியும் என நம்புகின்றனர். அதன் வெளிப்பாடே இந்த டிஜிட்டல் பேனர் கலாசாரம்.
பேனர் வைப்பதற்கான இடத்தை முன்கூட்டியே பிடித்து விடுவதிலும் இவர்களுக்குள் போட்டி. எப்போதும் வைப்பதற்கு ஏற்பத் தயாரித்து வைத்திருக்கும் டிஜிட்டல் பேனர்களை ஓரிடத்தில் நிலையாக வைத்துவிடுகின்றனர். அதேபோல, தனது இடம் அருகே வேறு எந்தக் கட்சியினரும் இடம் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக, ஒருவரின் பிறந்தநாளுக்கு ஒரே இடத்தில் அடுத்தடுத்து 5 பேனர்கள் வைப்பதையும் காண முடிகிறது.
இந்த கலாசாரம் அரசியல் கட்சியினரிடமிருந்து, அரசு ஊழியர்கள், தனியார் அமைப்புகள் எனப் பலருக்கும் பரவியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் தேர்தல், மாவட்டங்களுக்கு மாநிலத் தலைவர் வருகை என அனைத்துக்கும் டிஜிட்டல் பேனர்களைத் தயாரித்து வைக்கின்றனர்.
இந்த டிஜிட்டல் பேனர்கள் வருவதற்கு முன்பு செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுத்து வந்தனர். ஆனால், அவை பெரிதாகப் பொதுமக்களைப் பாதித்திடவில்லை. போஸ்டர் அச்சடித்து வீடு, கடைச் சுவர்களில் ஒட்டியும், ஓவியம் வரைந்தும் சுவரை நாசம் செய்யும் நிலை தற்போதும் கூட தொடர்கிறது. செலவு குறைவானது என்பதற்காக டிஜிட்டல் பேனர்கள் தயார் செய்து, வீடு, கடைகளையே முற்றிலும் பார்வையிலிருந்து மறைத்து, அவற்றை நிறுத்துகின்றனர். "போஸ்டரை விட பேனர் பெரியது' என்பதைத் தவிர இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.
நிகழ்ச்சிக்கு 20 நாள்களுக்கு முன்பே சாலையோரத்தில் நடைபாதைகளை ஆக்கிரமித்திருக்கும் பேனர்களால், மக்கள் சாலைகளில் இறங்கி நடப்பதும், அதனால் விபத்துகள் நேர்வதும், "யாரையோ மகிழ்விக்க மக்களைத் துயரப்படுத்தும்' நிலை என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.
இதைத் தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் நிறைவேற்றிய தீர்மானம் சிறப்பானதுதான். ஆனால், தீர்மானம் நிறைவேற்றிய உள்ளாட்சி அமைப்புகளே அதைப் பின்பற்றாதபோது, மக்கள் மட்டும் பின்பற்ற வேண்டும் என எதிர்பார்ப்பதும் நியாயமில்லை.
சில உள்ளாட்சி அமைப்புகள் இதைப் பின்பற்றினாலும், இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. "பெரும்பாலான பேனர்கள் முக்கிய அரசியல் பிரமுகர்களுடையவை. காலம் கடந்து நிற்கும் பேனர்களை அகற்றி, அதற்கான செலவை எப்படி வசூலிப்பது?' என்ற கேள்வி எழுகிறது.
சிறிய துண்டுப் பிரசுரமாகட்டும்; மிகப்பெரிய பேனராகட்டும், அதை அச்சடித்த நிறுவனத்தின் பெயரும், தொலைபேசி எண்ணும் நிச்சயம் இடம்பெற வேண்டும் என்ற சட்டம் உள்ளது. 5 நாள்களுக்குப் பிறகும் பேனர்கள் வைத்திருந்தால், அவற்றை அச்சிட்ட நிறுவனமே அகற்றலாம். அதற்கான தொகையையும் பணி அளிக்கும் நபரிடம் பெற்றுக்கொள்ளலாம். காலக்கெடுவை மீறியிருந்தால், அச்சகத்துக்கு உள்ளாட்சி அமைப்புகள் அபராத வாடகை நிர்ணயிக்கலாம்.
அரசியல் கட்சியாகட்டும், தனியார் அமைப்புகளாகட்டும் எவராக இருந்தாலும், டிஜிட்டல் பேனர் வைப்பதற்கான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தாக வேண்டும் என்ற உறுதியான நிலைபாட்டைத் தமிழக அரசு மேற்கொண்டாக வேண்டும்.
இல்லையெனில், அனைத்து மாவட்டங்களிலும், பெரு நகரச் சாலைகளிலும் சட்ட மீறலுக்குச் சான்றாக, அலட்சியத்தின் அறைகூவலாக, தவறான முன்னுதாரணமாக "மிகப் பிரமாண்டமாக' உருவெடுத்து நிற்கும் இந்த டிஜிட்டல் பேனர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

