இடதுசாரிகளின் தயவு இல்லாமலேயே அரசு அமைக்கும் பலத்தை காங்கிரஸ் பெற்றிருக்கிறது. இந்தச் சூழலை முள்கள் இல்லாத ரோஜாக்கள் என்று சிலர் வர்ணிக்கிறார்கள். இதனால் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தும் என்று கருதப்படுகிறது.
பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை வெகுவாகக் குறைப்பது, இவற்றில் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பது, மானியங்களைக் குறைத்துக் கொள்வது, நேரடி மற்றும் மறைமுக வரிகளைக் குறைப்பது ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அரசு விரும்புகிறது.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை இடதுசாரிகள் இப்போது தடுக்க முடியாது. ஆனாலும், வேறு சில தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும், குடியரசுத் தலைவர் உரையிலும் அரசுக்கு நெருக்கடி இருப்பது தெளிவாகத் தெரிந்தது.
மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், உலகம் முழுவதும் இருக்கும் பொருளாதார நெருக்கடி, பெருகிவரும் வேலைவாய்ப்பின்மை, சில கூட்டணிக் கட்சிகள் ஆகியவை முழு வேகத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தடைகளாக இருக்கும்.
தேர்தல் பிரசாரத்தின்போது, சாமானிய மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என காங்கிரஸ் கட்சி உறுதியளித்திருந்தது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், பாரத் நிர்மாண் ஆகிய திட்டங்கள் முன்னிறுத்தப்பட்டன. இந்தத் திட்டங்களை வலுப்படுத்துவதுடன், உணவுப் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களும் தொடங்கப்படும் என குடியரசுத் தலைவர் உரையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிதிநிலையும் இப்போது திருப்தியாக இல்லை. நிதிப்பற்றாக்குறை குறித்து அரசு கவலையில் மூழ்கியிருக்கிறது. 2009-2010 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதமாக இருக்கும் எனவும் வருவாய் பற்றாக்குறை 4 சதவீதமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவை முந்தைய நிதியாண்டில் முறையே 2.5 சதவீதமாகவும், 1 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டிருந்தன. நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையும் வருவாய் பற்றாக்குறையும் அதிகரித்திருப்பதால் முந்தைய பட்ஜெட் மதிப்பீடுகள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி, வருவாய்ப் பற்றாக்குறை 1 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகவும், நிதிப் பற்றாக்குறை 2.5 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும் திருத்தப்பட்டது.
உண்மையில் இந்த மதிப்புகள் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். ஏனெனில், கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 8.5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 6.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதேபோல், கடந்த நிதியாண்டில் 4.9 சதவீத வளர்ச்சி கண்ட வேளாண்துறை, நடப்பு நிதியாண்டில் 1.6 சதவீத வளர்ச்சியைத்தான் எட்ட முடிந்திருக்கிறது. அதேபோல் உற்பத்தித் துறை வளர்ச்சியும் 8.2 சதவீதத்திலிருந்து 2.2 சதவீதமாகச் சரிந்திருக்கிறது.
ஒட்டுமொத்த வளர்ச்சியில் இன்னும் கூடுதல் சரிவு இருக்கும் என்று கருதப்படுவதால், நிதிப் பற்றாக்குறையும் மதிப்பிடப்பட்டுள்ளதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் நிதியைத் திரட்டுவதற்காகப் பொதுத்துறை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்பதற்கு அரசு முயற்சிக்கும்.
இடதுசாரிகளின் மிரட்டல் இல்லை என்பதற்காக இந்தப் பணி சுலபமாக இருக்கும் எனக் கருதிவிட முடியாது. தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ், பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகளை தனியாருக்கு விற்பதை ஆதரிக்காது. பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியை திரிணமூல் காங்கிரஸ் எதிர்க்கும் என அதன் தலைவர் பார்த்தா சாட்டர்ஜி வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். சில்லறை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு எதிராகப் பிரசாரம் செய்து வந்த திரிணமூல் காங்கிரஸ், தனது தேர்தல் அறிக்கையிலும் இந்த விவகாரத்தைச் சேர்த்தது. அரசின் முதலீடு குறைவாக உள்ள நிறுவனங்களில், அரசின் பங்குகளை விற்பதற்கு திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிக்காது என்றும், அரசின் முதலீடு அதிகமாக உள்ள நிறுவனங்களில், பங்குளை விற்கக்கூடாது என்றும் பார்த்தா சாட்டர்ஜி கூறியிருக்கிறார்.
இதேபோல், 2006-ம் ஆண்டில் என்எல்சி பங்குகளை விற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுபோல, தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பதற்கு திமுக எதிர்ப்புத் தெரிவிக்கும். இதனால், 90 சதவீதத்துக்கும் மேல் அரசின் பங்குகள் உள்ள சில பொதுத்துறை நிறுவனப் பங்குகளை மட்டுமே விற்பதற்கு அரசு முயற்சிக்கும் எனத் தெரிகிறது. அதுவும் 90 சதவீதத்துக்குக் கீழ் அரசின் பங்குகள் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக வரி வருவாய் வெகுவாகக் குறைந்திருக்கிறது. இதனால், வரிகளைக் குறைப்பது என்பது சாத்தியமே இல்லை. அதேபோல், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை வலுப்படுத்தப் போவதாக அரசு அளித்த உறுதிமொழியையும் நிறைவேற்ற முடியாது.
அடுத்த 5 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத இந்தியாவை உருவாக்கப் போவதாக அரசு அறிவித்திருக்கிறது. நகரப் பகுதிகளில் இதற்காக போதுமான அடுக்குமாடிகளைக் கட்டுவதற்கும் அரசு திட்டமிட்டிருக்கிறது. கிராமப்புற குடிசைவாழ் மக்களின் நலனுக்காக இந்திரா அவாஸ் யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுவதைப் போன்று நகரப் பகுதி குடிசைவாழ் மக்களுக்காக ராஜீவ் அவாஸ் யோஜனா என்ற திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக குடியரசுத் தலைவர் உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சமூக மற்றும் வேளாண் துறைகளை மேம்படுத்துவதுடன், வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் அரசு உறுதியளித்திருக்கிறது. தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதற்கான சூழலை உருவாக்க அரசு விரும்புகிறது.
இவை நிறைவேற வேண்டுமானால், கடந்த ஆண்டில் வீழ்ச்சியடைந்த உற்பத்தித் துறையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அதற்காக நிறையச் செலவு செய்வதுடன் கொஞ்சம் வருவாய் இழப்பையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அது அவ்வளவு எளிதானதல்ல.
நிதித்துறையைக் கட்டுப்பாடில்லாமல் தாராளமயமாக்கியதன் காரணமாகவே உலகம் முழுவதும் பல பெரிய வங்கிகள் திவாலாகின. இதனால் நிதித்துறையில் இன்னும் சீர்திருத்தம் செய்வது என்பதை மத்திய அரசால் நியாயப்படுத்த முடியாது.
இவைபோக, பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பல மாநில அரசுகள் மத்திய அரசிடம் இருந்து உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. ஆனால், மத்திய அரசோ தேசிய அளவிலான சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் வரியைத் தீர்மானிப்பதும் வசூலிப்பதும் மத்திய அரசு வசம் இருக்கும். தங்களது சுதந்திரம் பறிபோகும் என்பதால் எந்த மாநில அரசும் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்காது.
ஆக, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் முன்னிருக்கும் பணிகள் மிகவும் சிக்கலானவை. பட்ஜெட்டை உருவாக்குவதில் அவர் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. கயிற்றின் மேல் நடப்பது போன்றதுதான் அவரது நிலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.