ருசி கண்ட பூனை...!
இந்திய அரசியல் சரித்திரத்தில் ஓர் இடைச்செருகல் என்று அவரை ஒதுக்குபவர்களும் உண்டு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று நிரூபித்த அரசியல் ராஜதந்திரி என்று பாராட்டுபவர்களும் உண்டு. ஆனால், அவரிடம் கேட்டால


இந்திய அரசியல் சரித்திரத்தில் ஓர் இடைச்செருகல் என்று அவரை ஒதுக்குபவர்களும் உண்டு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று நிரூபித்த அரசியல் ராஜதந்திரி என்று பாராட்டுபவர்களும் உண்டு. ஆனால், அவரிடம் கேட்டால் "நான் ஒரு சாதாரண விவசாயி' என்று தன்னை வர்ணித்துக் கொள்வார். அவர்தான் 76 வயதான ஹர்தனஹள்ளி தொட்டேகௌடா தேவெ கௌடா என்கிற இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவ கௌடா.
1933-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி பிறந்த தேவ கௌடாவின் இளமைப் பருவத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக எதுவுமே கிடையாது. தந்தை தொட்டேகௌடா ஒரு சாதாரண மத்தியதர விவசாயி. பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரியில் படிக்க வசதி இல்லாததால், பொறியியல் பட்டயப்படிப்பு (டிப்ளமா) படித்துத் தேறி, அரசு வேலை எதுவும் கிடைக்காததால் சின்னச் சின்னப் பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தார் தேவ கௌடா.
இந்தியா சுதந்திரம் அடைந்திருந்த நேரம். 1952 தேர்தலில் நண்பர் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட, தேவ கௌடாவும் கதர்ச் சட்டை அணிந்து கொண்டு, கட்சியின் உறுப்பினர் அட்டை வாங்கிக் கொண்டார். அதற்கு முக்கியக் காரணம் அன்றைய காங்கிரஸ் அரசில் ஒப்பந்தங்களைப் பெறுவதுதான் என்பது அவரது அரசியல் எதிரிகளின் கருத்து. கதர்ச் சட்டையும், உறுப்பினர் அட்டையும் கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் வெற்றி பெற உதவியபோது, கூடவே அரசியல் ஆசையும் தொற்றிக் கொண்டது.
1962 பொதுத் தேர்தலில் ஹொளேநரசிப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டபோது, துணிந்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரûஸ எதிர்க்க ஒக்காலிகா சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர் கிடைக்காமல் தவித்த பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, சுயேச்சையாகப் போட்டியிட்ட தேவ கௌடாவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட, தேவ கௌடாவே எதிர்பார்க்காத விதத்தில் அவர் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்று விட்டார்.
தேர்தலில் வெற்றி பெறத்தான் அதிர்ஷ்டம் ஒத்துழைத்தது. அதற்குப் பிறகு தேவ கௌடாவின் அயராத உழைப்பு அவரை அதே தொகுதியில் இருந்து தொடர்ந்து நான்கு முறை, அதாவது 1962, 1967 மற்றும் 1972 மற்றும் 1978 தேர்தல்களில், வெற்றி பெறச் செய்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் தேவ கௌடாவின் வாழ்க்கையிலும் எத்தனை எத்தனையோ மாற்றங்கள்.
1972-ல் வீரேந்திர பாட்டீல் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் அரசு தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு, தேவராஜ் அர்ஸ் தலைமையில் இந்திரா காங்கிரஸ் ஆட்சி பதவிக்கு வந்தபோது, அந்த சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் தேவ கௌடா. அப்போது கர்நாடக சட்ட மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் ராமகிருஷ்ண ஹெக்டே. அதுமட்டுமல்ல, பின்னாளில் கர்நாடக முதல்வர்களாக ஆன பங்காரப்பா, தேவராஜ் அர்ஸ் அமைச்சரவையில் உறுப்பினராகவும், எஸ்.ஆர். பொம்மை மேலவையின் எதிர்க்கட்சித் துணைத்தலைவராகவும் இருந்தனர்.
அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டபோது தேவ கௌடா, ஹெக்டே மற்றும் பொம்மை சிறையில் அடைக்கப்பட்டனர். தேவ கௌடா, சிறைவாசத்தைப் பயன்படுத்திக் கொண்டது வேறுவிதத்தில். புத்தகங்களாகப் படித்துக் குவித்தார். அதுவரை தெரிந்து கொள்ள இயலாமல் போன அத்தனை விஷயங்களையும் கௌடா படித்துத் தெரிந்து கொண்டது அந்த சிறைவாசத்தின்போதுதான்.
ஜனதா கட்சி உருவானபோது, தன்னையும் அதில் தேவ கௌடா இணைத்துக் கொண்டார். இதே காலகட்டத்தில், இந்திரா காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தேவராஜ் அர்ஸ் "கர்நாடக கிராந்தி ரங்கா' என்கிற கட்சியைத் தொடங்கி இருந்தார். அர்ஸ் மறைந்தபோது, பங்காரப்பா அந்தக் கட்சியின் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த நேரம் அது. ஜனதா கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராக ஹெக்டே தேசிய அரசியலுக்குப் போய்விட்டிருந்தார்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜனதா கட்சி 1982-ல் கர்நாடக சட்டசபைக்கான தேர்தலை எதிர்கொள்ளத் தயாரானது. தனது அரசியல் எதிரியான பங்காரப்பாவுடன் கைகோர்த்து, கர்நாடக கிராந்தி ரங்காவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தல் களத்தில் இறங்கினார் தேவ கௌடா. தேவ கௌடா - பொம்மை - பங்காரப்பா ஆகியோரின் கூட்டணிக்கு அவர்கள் சார்ந்த ஒக்காலிகா, லிங்காயத் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இடிகா சமுதாயத்தின் ஆதரவு முழுமையாகக் கிடைத்தபோது வெற்றி பெற்றதில் அதிசயம் என்ன இருக்கிறது?
தேவ கௌடாவின் உழைப்பால் கிடைத்த வெற்றி அது என்பது உண்மையானாலும், பங்காரப்பாவும், பொம்மையும் முதல்வர் பதவியை தேவ கௌடாவுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இந்த மூன்று பேருக்கும் நடந்த முதல்வர் பதவிக்கான போட்டியில், ராமகிருஷ்ண ஹெக்டேயை முதல்வராக்கி முற்றுப்புள்ளி வைத்தது ஜனதா கட்சித் தலைமை. கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் முதல்வர் பதவியை நழுவவிட்ட ஏனைய மூவரும் ஹெக்டே தலைமையிலான அமைச்சரவையின் உறுப்பினர்களாயினர்.
இந்த மூன்று பேரையும்விட வயதில் மூத்தவரும், அரசியல் அனுபவசாலியுமான ஹெக்டே தன்னை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றிக் கொண்டுவிட்டது, கௌடா மற்றும் பங்காரப்பாவின் முதல்வர் பதவிக் கனவைத் தகர்த்தது. தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்த ஹெக்டே அந்த இடத்தில் உட்கார வைத்தது எஸ்.ஆர். பொம்மையைத் தானே தவிர தேவ கௌடாவை அல்ல.
1989-ல் சட்டமன்றத் தேர்தல் வந்தபோது காங்கிரஸில் இணைந்து விட்டார் பங்காரப்பா. ஜனதா தளத்திலிருந்து விலகி, ஜனதா கட்சியின் உறுப்பினராக தேவ கௌடா தொடர்ந்தார். பங்காரப்பாவும் ராஜீவ் காந்தியால் 1990-ல் கர்நாடக முதல்வரானபோது, தேவ கௌடா மனமொடிந்து விட்டார் என்றுதான் கூற வேண்டும். அடுத்த நான்கு வருடங்கள் தேவ கௌடாவின் வாழ்க்கையில் அஞ்ஞாதவாசம்.
1994 தேர்தலுக்கு ராமகிருஷ்ண ஹெக்டே ஒரு வியூகம் வகுக்க முற்பட்டார். பழையபடி, தேவ கௌடாவை கட்சியில் இணைத்துத் தலைவராக்குவதன் மூலம் ஒக்காலிகா மற்றும் லிங்காயத் வாக்குகளை இணைத்து வெற்றி பெறுவது என்பதுதான் அவரது திட்டம். இதற்கு தேவ கௌடாவுக்கு அவர் கொடுக்கத் தயாரானது முதல்வர் பதவியை. தேவ கௌடாவால் நம்பவே முடியவில்லை, அதிர்ஷ்டம் வீடுதேடி வந்து கதவைத் தட்டும் என்று.
""அண்ணா, நீங்கள் மட்டும் என்னை முதல்வராக்கினால், நான் உங்கள் சீடனாக இருப்பது மட்டுமல்ல, உங்களைப் பிரதமராக்காமல் விட மாட்டேன்'' என்பதுதான் தேவ கௌடா நா தழுதழுக்க ஹெக்டேவுக்குத் தந்த வாக்குறுதி. தேர்தல் பிரசாரத்தில், மாநில அரசியலுக்கு நானும், மத்திய அரசியலுக்கு அண்ணா ஹெக்டேயும் என்றும் வீதிக்கு வீதி முழங்கினார் கௌடா.
சட்டமன்றத் தேர்தலில் ஜனதா தளம் வெற்றி பெற்று தேவ கௌடா முதல்வரானார். 1996 மக்களவைத் தேர்தலில் ஹெக்டே மற்றும் பொம்மையுடன் கைகோர்த்துப் பிரசாரம் செய்தபோதும் முன்பு கூறியபடியே மீண்டும் கூறி உறுதிப்படுத்தினார் கௌடா. தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் காங்கிரஸýம், பாஜகவும் ஆட்சி அமைக்க முடியாத நிலைமை. யார் பிரதமர் என்று மூன்றாவது அணியில் கேள்வி எழுந்தபோது, கௌடாவிடமிருந்து பேச்சு மூச்சே இல்லை. ஹெக்டேயின் பெயரை யாரோ முன் மொழிந்தபோது, தேவ கௌடா கேட்ட கேள்வி - "ஹெக்டேயா? யாரவர்? இப்போது அவர் செல்லாக் காசு!''
பிரதமரானபோது, நரசிம்ம ராவின் காலில் விழாத குறை. காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சி அமைத்ததும், நரசிம்ம ராவுக்கு எதிராகக் காயை நகர்த்தத் தொடங்கிவிட்டார். சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவரானபோது, "உங்கள் சொல்படிதான் எனது ஆட்சி' என்று அவரிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு, அடுத்த நாளே புலனாய்வுத் துறையை விட்டு சீதாராம் கேசரிக்கு எதிராகக் கொலை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டு விட்டார்.
தன்னையும் தனது பதவியையும் தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்யத் தயாராக இருக்கும் தேவ கௌடாவிடம் பேசிப் பாருங்கள். "அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை' என்று வசனம் பேசுவார். அவரைப் பொருத்தவரை, போர்க்களத்திலும் அரசியலிலும் தர்ம நியாயங்களுக்கு இடமில்லை.
தேவ கௌடா போகாத கோயில் கிடையாது. அவர் பார்க்காத ஜோஸ்யமும், செய்யாத யாகங்களும் கிடையாது. விபரீத ராஜயோகத்தில் யாருக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அவருக்கு நிச்சயமாக உண்டு. வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக அதைப் பார்த்தவராயிற்றே!
காங்கிரஸýடன் கூட்டணி வைத்திருந்தால் ஒருவேளை ஆறோ, ஏழோ இடங்களில் கர்நாடகத்தில் அவர் வெற்றி பெற்றிருக்க வாய்ப்புண்டு. தனியாகப் போட்டியிடும் தேவ கௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் இருக்கும் இரண்டு இடங்களையே தக்க வைத்துக் கொள்ளுமா என்று கேட்கலாம். நடந்து முடிந்த நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றிருப்பது அவரது கட்சிதானே தவிர மூன்றாவது இடத்தில் வந்த காங்கிரஸ் அல்ல. இதுதான் அவரது தைரியத்துக்குக் காரணம்.
43 எம்.பி.க்களின் ஆதரவுடன் பிரதமரான தேவ கௌடா, ஒரு மாமாங்க காலத்திற்குப் பின் மூன்று அல்லது நான்கு எம்.பி.க்களின் ஆதரவுடன் பிரதமராகி விடலாம் என்று ஆசைப்படுவதில் என்ன தவறு? ருசிகண்ட பூனையாயிற்றே...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...