நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செயற்கை முலாம் பூசப்படும் சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்களின் இயற்கை முகம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு செயற்கை முலாம் பூசப்படும் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருவதால் நாளடைவில் இயற்கை கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் வெறும் செயற்கைப் பூங்காக்கள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:58 pm

வி.குமாரமுருகன்

சுற்றுலாத் தலங்களின் இயற்கை முகம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு செயற்கை முலாம் பூசப்படும் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருவதால் நாளடைவில் இயற்கை கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் வெறும் செயற்கைப் பூங்காக்களாக மாறும் நிலை உருவாகி வருகிறது.

  சுற்றுலாத் துறையின் மூலம் பெருமளவு வருமானம் கிடைத்து வருவதால் உலக நாடுகள் சுற்றுலாத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அதிலும் முக்கியமாக சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு நாடும் செயல்பட்டு வருகிறது.

  அதேபோல், தமிழகத்திலுள்ள பிரபலமாகாத சுற்றுலாத் தலங்கள் பலவற்றை பிரபலப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்கி தீவிரமாகச் செயலாற்றி வருகிறது.

  இந்தச் சுற்றுலாத் தலங்களில் கோல்ப் மைதானம், ரோப்கார், படகுத்துறை, பொழுதுபோக்குப் பூங்காக்கள், பயணிகள் தங்கிச்செல்ல ஹோட்டல்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட வேண்டும் என அரசு தீர்மானித்துள்ளது.

  இத்தகைய சுற்றுலாத் தலங்களின் மேம்பாட்டுக்காக கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 18 கோடி ரூபாய் சுற்றுலாத் துறையின் மூலம் செலவிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிலும் மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

  ஆனால், இதில் வேதனை என்னவென்றால் குற்றாலம், முண்டன்துறை, மாஞ்சோலை, அகஸ்தியர் அருவி உள்ளிட்ட இயற்கை சார்ந்த இடங்களில், இயற்கையைப் பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை விட செயற்கையான மைதானங்களையும், செயற்கைப் பூங்காக்களையும், சாலைகளையும் அமைப்பதற்கு மட்டும்தான் சுற்றுலாத் துறை தீவிரம் காட்டி வருகிறது.

  சுற்றுலாத் தலங்களில் ஹோட்டல்கள், பொழுது போக்கு பூங்காக்கள், படகுத்துறை உள்ளிட்டவற்றை அமைக்கத் தேவையான இட வசதிக்கு, இந்த இடங்களிலுள்ள இயற்கை எழில் அழிக்கப்பட்டு வருகிறது.

  இதனால், சுற்றுலாத் தலங்களிலுள்ள மரங்கள், ரம்மியமான அருவிகள், தடாகங்கள் போன்றவை கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இச்சுற்றுலாத் தலங்கள் பிரபலமாகி, கூட்டம் அதிகரிக்கும் பொழுது இருக்கின்ற கொஞ்சநஞ்ச மரமும், மரம் சார்ந்த இயற்கை இடங்களும் அழிக்கப்பட்டு வெறும் சிமெண்ட் கட்டடங்களாக மாறும் அவலமும் அரங்கேறும்.

  அதன் பின்னர் உண்மையான மரங்களுக்கு மாற்றாக செயற்கை மரங்களைச் செய்து சுற்றுலாத் தலங்களில் நட்டு வைக்கவேண்டிய நிர்ப்பந்தமும் உருவாகும்.

  இந்த நிலை தொடர்ந்தால் வருங்காலச் சந்ததியினருக்கு இது மாதிரித்தான் மரம் இருக்கும். காற்று வந்தால் இலை அசையும் என செயற்கை சிமெண்ட் மரங்களைக் காட்ட வேண்டிய அவலமும் ஏற்படும்.

  எனவே, இயந்திர மயமான உலகில் கிடைக்கின்ற சில மணி நேர ஓய்வுக்காக சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பயணிகளுக்கு இயந்திர வாசனையைப் போக்கி, இயற்கையின் வாசனையைச் சுவாசிக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  பிரபலமாகாத சுற்றுலாத் தலங்களைப் பிரபலப்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள முயற்சியைப் போல், ஏற்கெனவே இயற்கை எழில் கொஞ்சும், அழகு மிளிரும் பிரபலமான சுற்றுலாத் தலங்களிலும் சமூக வனத்துறை, எக்ஸ்னோரா போன்ற தொண்டு நிறுவனங்கள், பள்ளிகளில் செயல்படும் பசுமைப்படை ஆகிவற்றைக் கொண்டு இயற்கையைப் பேண அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

  மேலும், சுற்றுலாத் தலங்களைச் சுற்றிலும் குறிப்பிட்ட சுற்றளவுக்குள் உள்ள விளைநிலங்கள், விளைநிலங்களாகவே தொடரும் வகையில் இயற்கை பேணப்பட வேண்டும். அங்கு ரிசார்ட்ஸ் உள்ளிட்ட தங்கும் விடுதிகளைக் கட்ட அரசு அனுமதிக்காமல் இருந்தால் சுற்றுலாத் தலங்களின் இயற்கை மாறாமல் நிலைகொண்டிருக்கும்.

  எனவே இயற்கையின் இயல்பை மாற்றாமல் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த அரசு முன்வந்தால் இயல்பான சிரிப்பை இயற்கை நமக்கு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.