கயிறுமேல் நடைபோடும் ரிசர்வ் வங்கி!
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது நிதி மற்றும் கடன் கொள்கையை பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பராவ் ஜனவரி 29-ம் தேதி வெளியிட்டார். பொதுவாக, நிதி மற்றும் கடன் கொள்கையின் நோக்கங்கள் இரண்டு: ஒன்று, விலைவாச


நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது நிதி மற்றும் கடன் கொள்கையை பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பராவ் ஜனவரி 29-ம் தேதி வெளியிட்டார்.
பொதுவாக, நிதி மற்றும் கடன் கொள்கையின் நோக்கங்கள் இரண்டு: ஒன்று, விலைவாசி மற்றும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்தல். இரண்டு, தொழில், விவசாயம், சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடன் தங்குதடையின்றிக் கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல்.
முன் எப்போதையும்விட இப்போது இந்த நோக்கங்கள் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவை. காரணம், உயர்ந்து வரும் உணவுப் பொருள்களின் விலை; சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியையும் மீறி, இந்தியாவில் காணப்படும் வளர்ச்சி தொய்வடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கி செயல்படுத்திய புத்துயிர் திட்டங்களின் பயனாகத்தான் இப்போதுள்ள வளர்ச்சி சாத்தியம் ஆனது.
இந்நிலையில், பாரத ரிசர்வ் வங்கியின் முன் இருந்த பிரச்னை இதுதான்: வளர்ச்சிக்கு உகந்த வகையில் வட்டிக் குறைப்பு, கூடுதல் கடன் கிடைக்கச் செய்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டால், பணவீக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும். வங்கிக் கடன்கள் வழங்குவது குறைந்தால், வளர்ச்சி தடைபடும்.
எனவே, வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்காமல் பார்த்துக் கொண்டு, அதேசமயம், 2008-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்ட, ''குறைந்த வட்டி, எளிய கடன்'' என்ற அணுகுமுறையிலிருந்து, சற்றே விலகி நிற்க ரிசர்வ் வங்கி தீர்மானித்தது.
இத்திசையில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாகத்தான், சி.ஆர்.ஆர். எனப்படும், வங்கிகள் கட்டாயமாக ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தை, இப்போதைய 5 சதவிகிதத்திலிருந்து 5.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இதுவும் இரண்டு கட்டங்களில் உயர்த்தப்பட உள்ளது. பிப்ரவரி 13-ம் தேதி முதல் .5 சதவீதமும், பிப்ரவரி 27-ம் தேதியிலிருந்து .25 சதவீதமும் உயர்த்தப்பட உள்ளது.
பொதுவாக சி.ஆர்.ஆர். விகிதத்தை உயர்த்தும்போது கால் சதவீதம் அல்லது அரை சதவீதம்தான் உயர்த்துவது பழக்கம். ஆனால், இந்த முறை .75 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம், சுமார் 36,000 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகள் கையிருப்புக் குறையும். அந்தத் தொகை பாரத ரிசர்வ் வங்கியிடம் செலுத்தப்படும். எனவே, வங்கிகள் கடன் வழங்குவதற்காக வைத்திருக்கும் பணத்தில் ரூ. 36,000 கோடி அளவு குறையும் என்பது வெளிப்படை.
ஆனால், இந்த நடவடிக்கைக்குப் பிறகும் வங்கிகளிடம் கணிசமான அளவு உபரிப் பணம் இருக்கிறது என்று பாரத ரிசர்வ் வங்கி திட்டவட்டமாகக் கூறுகிறது.
இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் உள்ளிட்ட முன்னணி வங்கித் தலைவர்கள், தங்கள் பங்குக்கு, என்ன கூறுகிறார்கள் என்றால், வங்கிகள் வழங்கும் கடன்கள் குறையாது என்பதுடன் அடுத்த ஆறு மாதங்களுக்கு வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையாது என்று உறுதிபடக் கூறுகிறார்கள். இது எப்படி சாத்தியம் என்று ஆராய்வோமானால், ஒரு விஷயம் தெளிவாகிறது.
மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் பணச் சந்தையிலிருந்து கடன் திரட்டத் திட்டமிட்டிருந்த தொகையில் கிட்டத்தட்ட 98 சதவீதக் கடனை ஏற்கெனவே திரட்டிவிட்டது. இனி அடுத்த சில மாதங்களில் கடனாகத் திரட்ட வேண்டிய தொகை மிகவும் சொற்பமே. இது ஒன்று.
இரண்டாவதாக, புதிய கடன் கொள்கையில் சி.ஆர்.ஆர். தவிர வேறு வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. உதாரணமாக, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. அதேபோல், வங்கிகள் தங்களிடம் உள்ள உபரித் தொகையை ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்துவிட்டு, அதற்கு வட்டி ஈட்டுவதற்கு வழி செய்யும், 'ரிவர்ஸ் ரெப்பேர்' விகிதத்திலும் மாற்றம் செய்யவில்லை. சுருக்கமாகக் கூறினால், வட்டி விகிதம் மாறவில்லை.
மூன்றாவதாக, பாரத ரிசர்வ் வங்கியின் ஆய்வுப்படி, அடுத்த சில மாதங்களில் வங்கிக் கடன் தேவை 16 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்றும், அதேநேரம், வங்கிகள் திரட்டக்கூடிய டெபாசிட் - வைப்புத்தொகை - 17 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் மதிப்பீடு செய்துள்ளது. தவிர, இப்போது வங்கிகளிடம் ரூ. 70,000 கோடி அளவுக்கு உபரித் தொகை உள்ளதாகவும், இதில் சி.ஆர்.ஆர். மூலம் ரூ. 36,000 கோடி உறிஞ்சப்பட்டாலும், கடன் வழங்குவதற்குத் தேவையான நிதி ஆதாரம் வங்கிகளிடம் உள்ளதாகவும் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆக, வங்கிகள் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான நிதி ஆதாரம் உள்ளது என்றும், அடுத்த 6 மாதங்களில் வட்டி விகிதம் உயராது என்றும் ஆதாரங்களுடன் தான் வங்கிகள் தெரிவிக்கின்றன என்று எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், வங்கிக் கடன்கள் கோரும் வாடிக்கையாளர்களில் 90 சதவிகிதத்தினர் வீட்டுக்கடன், வாகனக் கடன், குறுந்தொழில், சிறு தொழில் மற்றும் நடுத்தரத் தொழில் கடன்கள், தனிநபர் கடன் ஆகியவற்றைக் கோருபவர்கள்தான். சி.ஆர்.ஆர். விகித உயர்வால் அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் தெரிவிக்கிறார்.
ஆகையால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படாது என்பது தெள்ளத் தெளிவாகிறது. சர்வதேச அளவில் பரிசீலித்தோமானால், சீனாவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த நாட்டில் கடன்களுக்கான வட்டிவிகிதம் சில தினங்களுக்கு முன் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிலைமை வேறு. இங்கு ஏற்பட்டுள்ள பணவீக்கம் உணவுப் பண்டங்கள் தொடர்புடையது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தேவையில்லை. உணவுப் பொருள்களின் உற்பத்தி அதிகரித்து, அதிக அளவில் உணவுப் பொருள்கள் விற்பனைக்கு வரும்போது, விலைகள் குறையும் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்படுகிறது. அதேபோல், உணவுப் பொருள் கையிருப்பு நிலை உயரும்போது, பணவீக்கமும் தானாகக் குறையும் என்றும் வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தாமல் விட்டது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால், உலக அளவில் பொருள்களின் விலை உயர்ந்திருப்பதால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து உணவுப் பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. எனவேதான், மொத்த விலை சார்ந்த பணவீக்க விகிதம் மார்ச் மாதம் இறுதியில் 8.5 சதவீதமாக உயரக் கூடும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது.
வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை, பாரத ரிசர்வ் வங்கி மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பது கண்கூடு. முன்னதாக, நடப்பு நிதி ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று மதிப்பீடு செய்திருந்தது. ஆனால் இப்போது அதை மறுபரிசீலனை செய்து, வளர்ச்சி விகிதத்தை 7.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான பலனை அளித்துள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை ஒரே நேரத்திலோ அல்லது துரிதி கதியிலோ விலக்கிக் கொள்ள முடியாது. படிப்படியாகவும், எச்சரிக்கையுணர்வுடனும்தான் அதைச் செய்ய வேண்டும் என்று பாரத ரிசர்வ் வங்கி கருதுகிறது.
புத்துயிர்த் திட்டங்களைத் தொடங்குவது எளிது. ஆனால் அவற்றை முடிவுக்குக் கொண்டு வருவது கடினம். மகாபாரதத்தில் வரும் சக்கர வியூகத்துக்குள் நுழைய முடியும்; ஆனால் வெளியேறுவது மிக மிகக் கடினம். எப்படி வெளியேறுவது என்பதை அறிந்தவர்கள் மிகச் சிலரே என்று சமீபத்தில் பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பராவ் குறிப்பிட்டுள்ளார். எவ்வளவு பொருத்தமான உவமை?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...