ஏறுமுகத்தில் ஏற்றுமதி - தொடருமா?
பதிமூன்று மாதங்கள் தொடர்ந்து சரிவில் இருந்த ஏற்றுமதி, கடந்த இரண்டு மாதங்களாக ஏறுமுகம் கண்டுள்ளது. சரிவுக்கான காரணம் சர்வதேசப் பொருளாதார நெருக்கடி என்பது வெளிப்படை. ஆனால் அது நமது பொருளாதாரத்தை நேரடியா


பதிமூன்று மாதங்கள் தொடர்ந்து சரிவில் இருந்த ஏற்றுமதி, கடந்த இரண்டு மாதங்களாக ஏறுமுகம் கண்டுள்ளது. சரிவுக்கான காரணம் சர்வதேசப் பொருளாதார நெருக்கடி என்பது வெளிப்படை. ஆனால் அது நமது பொருளாதாரத்தை நேரடியாகப் பாதிக்கிறது என்பதுதான் முக்கியம். எனவே ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிப்பதற்கான வழிவகைகளை நாம் கண்டறிய வேண்டியது அவசியமாகிறது.
நல்லவேளையாக, நவம்பர் மாதம் 19 சதவீதமும், டிசம்பர் மாதம் 10 சதவீத அளவிலும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. டிசம்பரில் நமது ஏற்றுமதியின் மதிப்பு 1,500 கோடி டாலராக இருந்தது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இன்னமும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்சி அடையவில்லை. அமெரிக்காவைப் பொறுத்தவரை அது எப்போது மீட்சி அடையும் என்று உறுதியாகக் கூறுவது சாத்தியமல்ல என்கிறார்கள் வல்லுநர்கள்.
இந்நிலையில், நமது ஏற்றுமதி அதிகரிக்க வேண்டுமெனில், கணிசமாக இறக்குமதி செய்யக்கூடிய இதர நாடுகளை நாம் தேடிப் பிடிக்க வேண்டும். இதற்கு நமது ஏற்றுமதியாளர்களுக்கு மேலும் சலுகைகள் வழங்க வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு அண்மையில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இத்திட்டம் ஜனவரி 13-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பாரம்பரியமாக இந்தியா ஏற்றுமதி செய்திடும் நாடுகளைத் தவிர, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
ஏற்றுமதி செய்வதில் உலக நாடுகளில் சீனாதான் முதல் இடத்தில் உள்ளது. அந்தச் சீனாவுக்கே, இந்தியாவின் ஏற்றுமதி சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே புதிய சலுகைத் திட்டத்தின் நோக்கம்.
பொறியியல் மற்றும் மின்னணு பொருள்கள், ரசாயனம், ரப்பர், பிளாஸ்டிக் பொருள்கள், அட்டைப் பெட்டிகள், பதப்படுத்தப்பட்ட கோழிமுட்டைத்தூள், விவசாயம் மற்றும் பழத் தோட்டங்களுக்குத் தேவையான கருவிகள், தையல் மெஷின், "வெல்டிங்' கருவிகள் ஆகிய பொருள்களின் ஏற்றுமதி புதிய சலுகைகள் மூலம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இப்போது, இந்தியத் தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களின் உற்பத்தி விகிதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 3 மாதங்களில் உற்பத்தி வளர்ச்சி விகிதம் வெறும் 3.8 சதவீதம் மட்டுமே. அடுத்த 3 மாதங்களில் வளர்ச்சி விகிதம் 9.8 சதவீதமாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டில் தொழிற்சாலை உற்பத்திப் பொருள்கள் 11.3 சதவீதம் அதிகரிக்கும் என்று ஏற்கெனவே திட்டக் குழு கணித்திருந்தது. அந்தக் கணிப்பு கைகூடும் என்றே தோன்றுகிறது. இதுவும் ஏற்றுமதி அதிகரிப்புக்கு ஏதுவாக அமைந்துள்ளது.
இந்நிலையில், பொருளாதார மந்த நிலையைச் சமாளிக்க உதவும் வகையில், மத்திய அரசு சில புத்துயிர் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களை அவசரப்பட்டு நிறுத்திவிடக் கூடாது என்று தேசிய பொது நிதி மற்றும் கொள்கைகள் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் கோவிந்த ராவ் மற்றும் மூத்த பொருளாதார வல்லுநர் நிதின் தேசாய் ஆகியோர் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அண்மையில் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
இதுதவிர, சில குறிப்பிட்ட துறைகளில் ஏற்றுமதி வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படுகின்ற செயல்திட்டங்களும் தொடர வேண்டும். உதாரணமாக, ஜவுளித்துறையில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டத்தைக் குறிப்பிடலாம். இத்திட்டத்தைச் செயல்படுத்த இந்த ஆண்டு ரூ. 4,500 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இதில் ரூ. 3,000 கோடி இந்த ஆண்டுக்காகவும், மீதம் ரூ. 1,500 கோடி ரூபாய் கடந்த ஆண்டு துண்டு விழுந்ததைச் சரிசெய்வதற்காகவும் தேவைப்படுகிறது என்று கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
மேற்கூறிய திட்டம் ஜவுளி ஏற்றுமதிக்கு உந்து சக்தியாக இருப்பதால், புதிய பட்ஜெட்டில் இதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வது அவசியம்.
இதைப்போல், தோல் உற்பத்தி, ஆபரணக் கற்களை பட்டை தீட்டுதல், உணவு பதனிடும் தொழில், கைவினைப் பொருள்கள், வேளாண் பொருள்கள், காபி, தேயிலை, முந்திரி, சணல், நறுமணப் பொருள்கள், கடல் உணவுப் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிகளுக்கு இப்போது வழங்கும் சிறப்பு மானியம் மற்றும் ஊக்கத்தொகை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சிறு மற்றும் குறுந்தொழில்கள் ஏற்றுமதி வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளன. இவற்றின் பங்களிப்பு 40 சதவீதம். எனினும் இவை எதிர்கொண்டுள்ள இடர்பாடுகளை நீக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் முனைப்புக் காட்டவில்லை. மாறாக, சிறு மற்றும் குறுந்தொழில்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. என்னதான் பொதுவான ஏற்றுமதிக்குச் சலுகைகளை மத்திய அரசு வழங்கினாலும், சிறு மற்றும் குறுந்தொழில்கள் செழிக்கவில்லை எனில், ஏற்றுமதிக்கான இலக்கை எட்டுவது சாத்தியம் அல்ல. எனவே, மாநில அரசுகள் இதுவிஷயத்தில் பிரத்யேக கவனம் செலுத்துவது உடனடித் தேவை.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, முதல் முறையாக ஏற்றுமதி செய்ய முன்வரும் துடிப்பான இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய சிறப்புத் திட்டங்களை அறிமுகம் செய்வது நல்ல பலனைத் தரும். நாட்டில் சமீபகாலமாக, ஏற்றுமதித் தொழிலில் புதிதாக ஆர்வமுடன் ஈடுபட முயலும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அவர்களுக்குச் சரியான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை சரியான நேரத்தில் வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும்.
ஏற்கெனவே துறை வாரியாக முப்பதுக்கும் அதிகமான ஏற்றுமதி வளர்ச்சி வாரியங்கள் நாடு முழுவதிலும் செயல்படுகின்றன. புதிய ஏற்றுமதியாளர்கள் இவற்றில் உறுப்பினர்களாகி தேவையான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை எளிதில் பெற்றுக் கொள்ளலாம். உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இறக்குமதியாளர்களின் முகவரிகள் அடங்கிய, புதுப்பிக்கப்பட்ட, டைரக்டரிகளை இந்த வாரியங்களிலிருந்து பெற்றுப் பயன் அடைய வேண்டும்.
அதேபோல், புதிய ஏற்றுமதியாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை இதுபோன்ற டைரக்டரிகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம், உலகம் முழுவதிலும் இயங்குகிற வர்த்தக சபைகள், அரசு தூதரகங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வளர்ச்சிக் கழகங்கள், நூலகங்கள் ஆகியவற்றின் மூலம் அந்தந்த நாடுகளில் உள்ள இறக்குமதியாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். இதன் வாயிலாக, வெளிநாட்டு "ஆர்டர்கள்' புதிய ஏற்றுமதியாளர்களைத் தேடி வரும்.
உலகில் யார், யார் எந்தப் பொருள்களை இறக்குமதி செய்கின்றனர் என்ற தகவலை புதிய இளம் ஏற்றுமதியாளர்கள் "தேடுதல்' இணையதளங்களின் மூலமும் எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்றுமதியில் நம் கையை மீறிய சில சூழ்நிலைகள் உருவாகி அது ஏற்றுமதியைப் பாதிக்கக் கூடும். அந்த வகையில், இப்போது ரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பது ஓர் இடர்பாடு ஆகும். கடந்த 16 மாதங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு, ரூபாயின் மதிப்பு ரூ. 45.35 ஆக உயர்ந்துள்ளது. நீண்ட காலத்துக்குப் பிறகு, இப்போது அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். கடந்த ஓராண்டில், 1,800 கோடி டாலர் அளவுக்கு அன்னிய நிறுவன முதலீடுகள் இந்தியாவுக்குள் வந்துள்ளன. இதுவே ரூபாயின் மதிப்பு உயர்வதற்கு காரணம்.
ரூபாயின் மதிப்பு உயருகையில், ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய தொகை குறைகிறது. மாறாக, ரூபாயின் மதிப்பு குறையும்போது, ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கிறது. இது அனைவரும் அறிந்ததே.
÷நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஏற்றுமதி அதிகரிக்கும் இத்தருணத்தில், ரூபாயின் மதிப்பு உயர்வதால் ஏற்றுமதியாளர்கள் ஏமாற்றம் அடைவதில் வியப்பில்லை.
அதேநேரம், பெட்ரோலியப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதைப் பார்க்கையில், ரூபாயின் மதிப்பு உயர்வதால், மத்திய அரசு செலுத்த வேண்டிய தொகை குறைகிறது. இது நாட்டுக்கு நன்மை. ஆக, ரூபாயின் மதிப்பு உயர்வதால், நன்மை, தீமை இரண்டும் உண்டு.
எனவே, பாரத ரிசர்வ் வங்கி, விரைவில் அறிவிக்க உள்ள, நிதிக் கொள்கை வாயிலாக, ரூபாயின் மதிப்பு மேலும் உயர்வதைத் தடுத்து நிறுத்துமா அல்லது சந்தை சக்திகளின் போக்குக்கு விட்டுவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எது எப்படி இருப்பினும், தற்போது ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக உள்ள பல அம்சங்களை நன்கு பயன்படுத்திக் கொண்டு, ஏற்றுமதியாளர்களும், அரசும் முனைப்புடன் செயல்பட்டு, ஏற்றுமதியைப் பெருக்கிட வேண்டும் என்பதே இப்போதைய தேவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...