நிறுவன முதலீடுகளில் மக்கள் பங்கு
மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ள புதிய விதிமுறைகளின்படி, பங்குச்சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்களின் பங்கு மூலதனத்தில், பொது மக்களுக்கான பங்கு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொழில் நிறுவனங்களில்


மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ள புதிய விதிமுறைகளின்படி, பங்குச்சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்களின் பங்கு மூலதனத்தில், பொது மக்களுக்கான பங்கு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்பும் பொதுமக்கள், பங்கு மூலதனத்தில் குறைந்தபட்சம் 25 சதவீதம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு பெரும் நிறுவனத்திலும், மூலதனத்தில் நான்கில் ஒரு பாகம் சிறு முதலீட்டாளர்கள், சில்லறை முதலீட்டாளர்கள் ஆகியோருக்குச் சொந்தமாக இருக்கும்.
இதுவரை இந்த அளவு பொதுமக்களின் பங்குகளைப் பெற்றிராத தொழில் நிறுவனங்கள், ஆண்டுக்கு 5 சதவீதம் அளவுக்கு பொதுமக்களுக்குப் பங்குகளை விற்பதன் மூலம், 25 சதவீத இலக்கை அடைய வேண்டும்.
புதிய விதிமுறைகளால் ஏற்படக்கூடிய உடனடி லாபம்: ஒன்று, சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்; பங்குகள் சிலரிடம் குவியாமல் பரவலாக்கப்படும். இரண்டாவதாக, சில நேரங்களில், பங்குச் சந்தையில், முறைகேடான வகையில், பங்குகளின் விலையைச் செயற்கையாக உயர்த்தும் போக்கு உள்ளது. அது இப்போது வெகுவாகக் குறையும். மூன்றாவதாக, இந்த இலக்கை எட்டுவதற்காக, ஒன்று நிறுவனங்களை உருவாக்கிய நிறுவனங்களின் பங்குகளில் ஒரு பகுதியை விற்க வேண்டும்; அல்லது சிறு முதலீட்டாளர்களுக்கு கூடுதல் பங்குகளை விற்க வேண்டும். இதனால், சிறு முதலீட்டாளர்களுக்குப் புதிய, புதிய பங்குகள் கிடைக்கும் என்பது மட்டுமல்லாமல், மிக அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கு வரும் என்பதால், தங்களிடம் உள்ள சேமிப்புப் பணத்துக்குத் தகுந்த பங்குகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.
முக்கியமாக, சிறு முதலீட்டாளர்கள், தங்குதடையில்லாமல், நிறுவனங்களின் பங்குகளை ஓரளவு நியாயமான விலையில் வாங்கவோ, விற்கவோ முடியும். இதனால் பெரும் நிறுவனங்களில், சிறு முதலீட்டாளர்களின் "கை' ஓரளவாவது ஓங்கும்.
அதேநேரம், புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இரண்டு கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.
ஒன்று, புதிதாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்காக, ஒரே நேரத்தில் எண்ணற்ற நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் விற்பனைக்கு வரும்; இதனால் அவற்றின் விலை வீழ்ச்சி அடையும் என்பது, எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுடைய கருத்து. இதைத் தவிர்ப்பதற்காகத்தான், ரூ. 4,000 கோடிக்கு அதிகமான பங்கு மூலதனம் பெற்றுள்ள தனியார் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு, 25 சதவீத இலக்கை எட்டுவதற்கான கால அளவு தளர்த்தப்பட்டுள்ளது.
இதுதவிர, புதிய விதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, சில பொதுத்துறை நிறுவனங்கள், பொது மக்களுக்குப் பங்குகளை விற்கும் செயல்பாட்டைத் (டிஸ் இன்வெஸ்ட்மெண்ட்) தொடங்கிவிட்டன. இந்த வகை நிறுவனங்கள், இப்போதைக்கு 10 சதவீத அளவுக்குப் பங்குகளை பொதுமக்களுக்கு விற்றுவிட்டு, மீத அளவு பங்குகளை அடுத்தகட்டமாக, சிலகாலம் கழித்து படிப்படியாக 25 சதவீத இலக்கை எட்டினால் போதுமானது.
இரண்டாவது, எதிர்த்தரப்பு கருத்து என்னவெனில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்தபடி, 10 சதவீதப் பங்குகளை பொதுமக்களுக்கு வழங்கினால் போதும் என்பதாகும். அவர்கள் மேலும் கூறுவது என்னவெனில், பங்குதாரர்களின் பட்டியல் அதிகரிக்க, அதிகரிக்க வருடாந்திர பொதுக்குழு நடத்துதல், ஆண்டு அறிக்கைகளை பங்குதாரர்கள் அனைவருக்கும் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதற்கு ஏராளமாகச் செலவு ஆகிறது என்பதாகும்.
இதையெல்லாம் பார்க்கும்போது சில "பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள்' மீண்டும் தங்களை "பிரைவேட்' கம்பெனிகளாக மாற்றிக் கொள்ளலாமா என்றுகூட யோசிக்கத் தொடங்கியுள்ளனர் என்கிறார்கள், எதிர்ப்பாளர்கள்.
குறிப்பாக, சில பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவிலிருந்து வெளியேறக்கூடும் என்றும், அப்படி நேரும்பட்சத்தில், இந்திய முதலீட்டாளர்களுக்கு, ஏற்கெனவே கிடைத்த சில உலகத்தரம் வாய்ந்த சிறப்பான பங்குகள் கிடைக்காமல் போகும் என்றும், புதிய விதிகளை எதிர்க்கும் சிலர் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
இந்தப் புகாரை உற்றுநோக்கினால், இது மிகைப்படுத்தப்பட்ட கருத்து என்பது தெளிவாகும். இந்திய மூலதனச் சந்தை ஏற்கெனவே முதிர்ச்சி அடைந்த ஒரு சந்தை என்று உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற சலசலப்புகள் இந்திய பங்குச் சந்தையையோ மூலதனச் சந்தையையோ பாதிக்காது.
இன்னும் சொல்லப்போனால், இந்திய மூலதனச் சந்தையின் நெறிமுறைகள் உலகின் சிறந்த, வளர்ந்த நாடுகளின் மூலதனச் சந்தைகளுடன் ஒப்பிடக்கூடியவை. அண்மையில் வெளியிடப்பட்ட, ""ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் பேங்''கின் பங்கு வெளியீடு இதற்குச் சான்று. மூலதனம் திரட்டுவதற்கும் சரி, நிறுவனத்தின் "பிராண்டு' மதிப்பை உயர்த்துவதற்கும் சரி, இந்திய மூலதனச் சந்தையின் பங்களிப்பு பிரசித்தமாக உள்ளது.
இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். நிறுவனங்களின் மூலதனத்தில், பொதுமக்களின் பங்கு கணிசமான அளவில் இருத்தல் வேண்டும் என்ற கோட்பாடு, இந்தியாவில் அப்படி ஒன்றும் புதிய கருத்தோ, புரட்சிகரமான கருத்தோ அல்ல. சமீபகாலமாகத்தான் பொதுமக்களுக்கு 10 சதவீதப் பங்கு என்று இருந்ததே தவிர, முன்னதாக, அதாவது 1990-களுக்கு முன்பு, நிறுவனங்களை நிறுவும் நிறுவனர்கள் 40 சதவீதப் பங்குகளுக்கு மேல் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற உச்சவரம்பு இருந்தது. மீதம் 60 சதவீதம் நிறுவனர்கள் அல்லாத ஏனைய தரப்பினர் வசம்தான் இருந்தது. இதில் சிறு முதலீட்டாளர்களும் அடக்கம்.
என்ன, அந்த காலகட்டத்தில், அனைத்திந்திய நிதி அமைப்புகள் நிறுவனங்களுக்குத் தேவையான கடனுதவியைப் பெரிய அளவில் செய்தன.
தாராளமயமாக்கலுக்குப் பிறகுதான் 40 சதவீத விதிமுறை மாற்றியமைக்கப்பட்டது.
புதிய விதிகளின்படி, ஏறக்குறைய 180 பெரிய நிறுவனங்களின் பங்குகள் உடனடியாகச் சந்தைக்கு வர உள்ளன. இதில் 35 பொதுத்துறை நிறுவனங்கள் அடங்கும்.
பங்குச் சந்தையில் "லிஸ்ட்' செய்து கொண்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 4,500.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை பொதுமக்களுக்கு விற்று நிதி திரட்டும் "டிஸ் இன்வெஸ்ட்மெண்ட்' திட்டத்தின்கீழ் நடப்பு நிதி ஆண்டில் ரூ. 40,000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்று, நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
பொதுத்துறை பங்குகளை விற்றதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் வெறும் ரூ. 1,079 கோடி அளவுக்குத்தான் நிதி திரட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூன் மாதம் 15-ம் தேதியன்று, உலகிலேயே மிகப்பெரிய நிலக்கரி நிறுவனமாகத் திகழும், இந்திய நிலக்கரி கழகம் (சி.ஐ.எல்.) மற்றும் இந்திய செப்பு கழகம் (ஹிந்துஸ்தான் "காப்பர்' லிட்) என்னும் இரு முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் தலா பத்து சதவீதம் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை முடிவு மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசு ரூ. 16,000 கோடி நிதி திரட்ட உள்ளது.
இந்தப் பங்குகள் விற்பனையில், அந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு விலையில் 5 சதவீத கழிவு வழங்கவும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், சிறுமுதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்கு கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கும் 5 சதவீத விலை குறைப்புச் சலுகை வழங்கப்பட உள்ளது.
அடுத்து வரும் மாதங்களில் "செயில்' என்னும் இந்திய உருக்கு ஆணையம், பவர் கிரிட் (மின் உற்பத்திக் கழகம்) மற்றும் மிகவும் மதிப்பு வாய்ந்த நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், என்.எம்.டி.சி. ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வர உள்ளன.
தாராளமயமாக்கலுக்குப் பிறகு, குறிப்பாக "செபி'யின் கண்காணிப்பு மற்றும் நெறிமுறைகளுக்குப் பிறகு, இந்திய மூலதனச் சந்தையின் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால், சிறு முதலீட்டாளர்களின் ஈடுபாடு அந்த அளவு அதிகரிக்கவில்லை.
இந்நிலையில், நிறுவனங்களின் மூலதனத்தில் 25 சதவீதம் பொதுமக்களுடையதாக இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை ஒரு வரப்பிரசாதமாக இருக்குமா? புதிய விதிமுறை மட்டும் போதாது. சிறு முதலீட்டாளர்கள் தாங்கக்கூடிய வகையில் நியாயமான விலையில் பங்குகள் கிடைத்தால் மட்டுமே அவர்களுக்குப் பயன் கிடைக்கும்.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனையில் சிறு முதலீட்டாளர்களுக்கு 5 சதவீத "கழிவு' வழங்கப்படுகிறது. இது பொதுமக்களைக் கவரவில்லை. எனவே, கூடுதல் அளவில் ""விலைக்கழிவு'' வழங்கப்பட வேண்டும்.
முதலீட்டு நடைமுறைகள் நடுத்தர மக்களைச் சென்றடையும் வகையில், நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.
மொத்தத்தில், சிறு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு உரிய சூழலை மேலும் போதிய அளவில் உருவாக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...