மாற்றம் வேண்டும் அரசு மருத்துவமனைகளில்...

உரிய கல்வித் தகுதி இல்லாமல் அலோபதி மருத்துவம் பார்த்ததாக கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ஏறக்குறைய 200- க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய மருத்த
Updated on
2 min read

உரிய கல்வித் தகுதி இல்லாமல் அலோபதி மருத்துவம் பார்த்ததாக கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ஏறக்குறைய 200- க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய மருத்துவ மன்றத்தின் தமிழகக் கிளை அளித்த போலி மருத்துவர்கள் பட்டியலைத் தொடர்ந்து, காவல் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இச்செயல் பாராட்டுக்குரியது.

  ஆனால், அதற்கு முன்னதாக அரசு மருத்துவமனைகள் தமிழகத்தில் எப்படி இருக்கின்றன, அங்கு சுகாதாரம் எவ்வாறு பேணிக் காக்கப்படுகிறது, மருத்துவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர், அடிப்படை வசதிகள் எப்படி உள்ளன என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

  தமிழகத்தில் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையமாகவோ, துணை சுகாதார நிலையமாகவோ அல்லது கூடுதல் சுகாதார நிலையமாகவோ எதுவாக இருந்தாலும் போதிய மருத்துவர்கள் அங்கு இருப்பதில்லை.

  பல கிராமங்களில் செவிலியர்களே மருத்துவர்களாக இருந்து வருகின்றனர். அவ்வாறு உள்ள சுகாதார நிலையங்களில் போதுமான செவிலியர்களும் இருப்பதில்லை. செவிலியர்களோ, உதவியாளர்களோ இருந்தால் போதுமான மருத்துவ உதவி சாதனங்கள் இருப்பதில்லை. இந்த நிலையில்தான், பொதுமக்கள் மருத்துவச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  கிராமங்களில்தான் இந்த நிலை என்றால்,மாவட்டத் தலைமையகங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளின் நிலைமையும் மிக மோசமாகவே உள்ளது.

  இந்த மருத்துவமனைகளில் சுத்தம் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கக்கூடிய நிலையே காணப்படுகிறது.

 இதற்கு மருத்துவமனையை மட்டும் குற்றம் சொல்வது சரியாக இருக்காது. பொதுமக்களும் இதற்கு ஒருவகையில் காரணமாக உள்ளனர்.

  நாம் மட்டும் மருத்துவமனைக்கு வந்து செல்வதில்லை. பலரும் வருகின்றனர். எனவே, மருத்துவமனையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சிகிச்சை பெறும் ஒவ்வொருவரிடம் உருவாக வேண்டும். இந்த இடம் தூய்மைப் பகுதி என்று அறிவிக்கப்பட்டிருந்தால், அந்த இடத்தில்தான் அசுத்தம் அதிகமாக நடைபெறுகிறது.

  குறிப்பாக, மகப்பேறு மருத்துவப் பிரிவு என்றாலே அலர்ஜி அதிகமாகத்தான் இருக்கிறது. மகப்பேறுக்கு முன்னதாகவும், பின்னதாகவும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியதுள்ளது. கர்ப்பிணிப் பெண்களைவிட அவர்களைப் பார்க்க வருபவர்கள் செய்யும் செயல்பாடுகள் மருத்துவமனையை அசுத்தமாக்கிவிடுகின்றன.

  நாம் இருக்கிற நாள்களில் சுத்தமாக வைத்துக் கொள்வோம் என்ற எண்ணம் யாரிடமும் இல்லை. இருக்கிற வரை அசுத்தமாக்கிவிட்டுச் செல்வோம் என்ற நினைப்புதான் மருத்துவமனைக்கு வருகிறவர்களுக்கு இருக்கிறது. பல மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்கள் பலர் தரையில் தங்களது கைக்குழந்தையுடன் படுத்திருக்க வேண்டிய அவலம் இன்னும் உள்ளது.

  மகப்பேறு மருத்துவப் பிரிவில் உள்ள அவலம் ஓர் உதாரணம்தான். மற்றப் பிரிவுகளிலும் இந்த நிலைதான் நீடிக்கிறது. பல்வேறு முக்கியத் துறைகளில் போதிய அளவுக்கு மருத்துவர்கள்கூட இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் அதிகளவில் உள்ளது.

   ஆண்டுதோறும் சுகாதாரத் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. புதிய மருத்துவமனைகள் கட்டப்படுகின்றன. எங்களது ஆட்சிக் காலத்தில் இவ்வளவு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்று கூறும் அரசு,

ஒவ்வொரு அரசு மருத்துவமனையையும் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக தரம் உயர்த்தவில்லை என்றாலும்கூட ஓரளவாவது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.   மூளை நரம்பியல், இருதயப் பிரிவு போன்ற சிறப்பு மருத்துவப் பிரிவு மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, அரசு மருத்துவமனைகளில் நியமனம் செய்ய வேண்டும்.

  இன்றைக்கும் பெரிய அளவிலான சிகிச்சைக்கு ஏழை மக்கள் பல தொலைவு கடந்து மாவட்டத் தலைமையகங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வந்துதான் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிராமப்புறங்களில் ஆரம்ப, கூடுதல், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இருந்தாலும், மருத்துவம் படிக்கும் மாணவர்களும் கிராமப்புறங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தால் அது கிராம மக்களுக்கு மிகுந்த பலனளிக்கும்.

  தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் மையங்களைக் காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுப்பதற்கான கட்டணம் மிகவும் குறைவாகும்.

இதனால், இன்றைக்கும் ஸ்கேன் எடுப்பதற்கு அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, பதிவு வாரியாக ஸ்கேன் எடுப்பதற்கு நோயாளிகள் அழைக்கப்படுகின்றனர். அவசரமாக ஸ்கேன் எடுக்க வேண்டியதற்கு மட்டும் அவசரம் கருதி எடுக்கிறார்கள். மற்றவை எல்லாம் வழக்கம் போலத்தான்.

  சி.டி. ஸ்கேனாக இருந்தாலும், எம்.ஆர்.ஐ. ஸ்கேனாக இருந்தாலும் கூடுதலாக வசதிகள் இருந்தால், நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும்.

 தற்போது உள்ளதைக் காட்டிலும் எல்லா மருத்துவமனைகளுக்கும் கூடுதலான ஸ்கேன் கருவிகள் வசதி செய்து தந்தால், அது பொதுமக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும்.

 போலி மருத்துவர்களைக் கைது செய்வதற்கு முன்னர், அரசு மருத்துவமனைகளின் அடிப்படைத் தேவைகளை அரசு மேம்படுத்த வேண்டும்.

 மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உரிய பயிற்சியை அளிக்க வேண்டும்.

  இவ்வாறு அரசு மருத்துவமனைகளின் தேவைகளை நிறைவேற்றினாலே பொதுமக்கள் போலி மருத்துவர்களிடம் செல்லமாட்டார்கள்.  கல்விக்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதுபோல மருத்துவத்துக்கும் அதிகளவில் முக்கியத்துவம் அளித்து அதிக அளவில் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

  மாற வேண்டியது மருத்துவமனைகள்தான். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது மாநில அரசுதான். இல்லாவிட்டால், ஆண்டுதோறும் போலி மருத்துவர்கள் குறிப்பிட்ட காலங்களில் கைது செய்யப்படுவார்கள். பின்னர், ஜாமீனில் ù வளிவந்து மீண்டும் சிகிச்சையளிக்கத் தொடங்குவார்கள். இது தொடர்கதையாகவே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com