பொதுத்துறை வங்கிகளுக்குப் புத்துயிர்
இந்திய வங்கிகளுக்கு, காலம் காலமாக, ஒரு நன்மதிப்பு உண்டு. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களையும், நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பதில் இந்த வங்கிகள் கண்ணும் கருத்துமாக உள்ளன என்பதே அது. சர்வதேச அளவில் ஏற்பட


இந்திய வங்கிகளுக்கு, காலம் காலமாக, ஒரு நன்மதிப்பு உண்டு. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களையும், நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பதில் இந்த வங்கிகள் கண்ணும் கருத்துமாக உள்ளன என்பதே அது. சர்வதேச அளவில் ஏற்படுகிற, கடும் நிதி நெருக்கடிகளின்போதுகூட, இந்திய வங்கிகள் நெருக்கடியின் தாக்கத்திலிருந்து தப்பியுள்ளன.
1990-களின் இறுதியில் ஏற்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நிதி நெருக்கடியின் போதும் சரி; 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ""சப்-பிரைம்'' (தரமில்லா வீட்டுக்கடன்)-ஐத் தொடர்ந்து நேர்ந்த நெருக்கடியின் போதும்சரி, அது இதர நாடுகளைப் பாதித்த அளவு இந்தியாவை நேரடியாகப் பாதித்திடவில்லை.
இதை உணர்ந்துள்ள, சர்வதேசப் பொருளாதார வல்லுநர்கள் இந்திய வங்கிகளின் செயல்திறனைப் பாராட்டத் தவறியதில்லை. மாறாக, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள், இந்திய வங்கிகளின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என வெளிப்படையாக சர்வதேச வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இது ஒருபுறம் இருக்க, ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்: இந்திய பொதுத்துறை வங்கிகளின் மூலதன பலம் சற்றுக் குறைவு என்பதே அது. 1990-களின் தொடக்கம் வரை, வங்கிகளின் மூலதனத்தைப் பற்றி எவரும் அதிகம் கவலை கொண்டதில்லை. அவற்றின் வைப்புத் தொகை (மக்களின் டெபாசிட் தொகை) எவ்வளவு என்பதுதான் அப்போது முக்கியமாகக் கருதப்பட்டது.
பொருளாதாரச் சீர்திருத்தம் தொடங்கிய பிறகுதான், அதாவது, 1992-ல்தான், வங்கிகளின் மூலதனம் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் (8 சதவீதம்) இருத்தல் வேண்டும் என்ற நியதி செயல்படுத்தப்பட்டது. நரசிம்மம் குழுவின் முக்கியமான பரிந்துரைகளில் இதுவும் ஒன்று.
அந்த காலகட்டத்தில், மூலதனம் குறைவாக இருந்த வங்கிகளுக்கு மத்திய அரசே நிதி உதவி வழங்கியது. சில வலுவான வங்கிகள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக, தங்கள் பங்குகளில் ஒரு சிறிய பகுதியை பொதுமக்களுக்கு விற்பதன் மூலம் நிதி திரட்டிக் கொள்ள மத்திய அரசு அனுமதித்தது.
இந்தச் செயல்முறை இப்போதும் தொடர்கிறது. அந்த வகையில்தான், சமீபத்தில், ஐந்து அரசு வங்கிகள் தங்களது மூலதனத்தை உயர்த்திக் கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஐ.டி.பி.ஐ. வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, யூகோ வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவையே அந்த 5 வங்கிகள். இந்த வங்கிகள் 2011-ம் ஆண்டு, மார்ச் மாதம் இறுதிக்குள் தங்கள் மூலதனத்தை 8 சதவீதமாக உயர்த்திக் கொள்வதற்கு ரூ. 6,211 கோடி அளவுக்கு நிதி திரட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு வழிமுறையில் நிதி திரட்டும்.
இந்த ஏற்பாட்டின்படி, ஐ.டி.பி.ஐ. முன்னுரிமை பத்திர வெளியீடு மூலம் ரூ. 3,119 கோடி நிதி திரட்ட உள்ளது. இதுதான் பெரிய தொகை. அடுத்தபடியாக, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா உரிமைப் பங்கு வெளியீடு மூலம் ரூ. 2,016 கோடி நிதி திரட்ட உள்ளது. மீதமுள்ள மூன்று வங்கிகள் "நான்குமுலேடிவ்' முன்னுரிமை பங்குகள் வெளியீட்டு மூலம் நிதி திரட்டிக் கொள்வார்கள்.
ஆக, மொத்தம் ஐந்து வங்கிகளும் ரூ. 6,211 கோடி நிதி ஆதாரத்தை அதிகரித்துக் கொள்ளும்.
இதில் முக்கியமான அம்சம் என்னவெனில், இப்பெரும் தொகையைப் பெறுவதன் மூலம், பல்வேறு துறைகளுக்கு இந்த வங்கிகள் வழங்கும் கடன் உதவி ரூ. 77,637 கோடி அளவுக்கு கூடுதலாக இருக்கும் என்பதே. இதனால், தொழில் கடன், விவசாயக் கடன், சிறு மற்றும் குறுந்தொழில், வீட்டுக்கடன், வாகனக்கடன், கல்விக்கடன், தனிநபர்கடன் என பல்வேறு துறைகளுக்கு, வரும் மாதங்களில், ஆண்டுகளில், வங்கிக் கடன் வழங்குவது அதிகரிக்கும்.
இப்போது, அரசு அனுமதித்துள்ள கூடுதல் மூலதனமான ரூ. 6,211 கோடியைச் சேர்த்து, கடந்த நான்கு மாதங்களில் வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கூடுதல் மூலதனத் தொகை ரூ. 8,911 ஆகும். கடந்த பல ஆண்டுகளில் அரசுடைமை வங்கிகளுக்கு, இந்த அளவு பெரும் தொகை முன்எப்போதும் அரசு அனுமதித்ததில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இதுதவிர, வங்கி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் முறை ஜூலை முதல் தேதி முதல் மாறுகிறது. இதுவரை நடைமுறையில் இருந்த பி.எல்.ஆர். முறையிலிருந்து "பேஸ்' என்னும் "அடிப்படை' வட்டி விகித முறைக்கு மாறுகிறது.
"பி.எல்.ஆர்.' என்பது "பிரைம் லெண்டிங் ரேட்' என்பதன் சுருக்கமே. அதாவது, பிரதானக் கடன் வட்டி விகிதம். இதன்படி, ஒவ்வொரு வங்கியும் தனது முக்கிய செலவினங்களைக் (டெபாசிட்களுக்கு வங்கி வழங்கும் வட்டி, ஊழியர்களுக்கான சம்பளம் போன்ற செலவுகளை) கணக்கில் எடுத்துக்கொண்டு, மொத்தத்தில் வங்கிக்கு இழப்பு ஏற்படாத வகையில் ஒரு பிரதான வட்டி விகிதத்தை நிர்ணயித்துக் கொள்ளும்.
பிறகு, விவசாயம், ஏற்றுமதி போன்ற முன்னுரிமைத் தொழில்களுக்குப் பிரதான வட்டி விகிதத்திலிருந்து, ஓரிரு சதவீதம் குறைத்து வட்டி விதிக்கப்படும். பெரும் தொழில்களுக்கு ஓரிரு சதவீதம் கூடுதலாக வட்டி விதிக்கப்படும். சராசரியாக, வங்கிகளுக்கு இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்கள்.
புதிய "பேஸ்' ரேட் எனப்படும், அடிப்படை வட்டி விகிதம், ஒரு குறிப்பிட்ட சதவீத வட்டிக்குக் குறைவாக வட்டி விகிதம் இருக்காது என்பதாகும். இப்புதிய முறையின் கீழ் வங்கிகள் இப்போதுதான் வழிமுறைகளை வகுத்துக் கொண்டு இருப்பதால், இப்புதிய முறை எந்தெந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கும், வங்கிகளுக்கும் நன்மை பயக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வங்கிச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் அதேநேரம், பொதுத்துறை வங்கிகள் உடனடியாக எதிர்கொள்ளக்கூடிய பிரச்னை, ""மனித வளம்'' சார்ந்த ஒன்று. பொதுத்துறை வங்கிகளில், இப்போது பணிபுரியும் சுமார் 7 லட்சம் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களில், நான்கில் ஒரு பாகம், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளனர். 1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 1970 முதல் 1975 வரை மிகப்பெரிய எண்ணிக்கையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
60 வயது நிறைவு ஆனபின் ஓய்வு பெற்றவர்கள், அதற்கு முன்னதாகவே விருப்ப ஓய்வு பெற்றவர்கள் என 2008-ம் ஆண்டில் 21,500 பேர் ஓய்வு பெற்றனர். 2009-ல் 25,000 பேர் ஓய்வு பெற்றனர். 2010-ல் 28,000 பேர் ஓய்வு பெற உள்ளனர்.
இவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால், புதிதாக நியமிக்கப்பட உள்ளவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணி மிகப்பெரிய அளவிலும், விஞ்ஞான ரீதியிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர் சேவை மற்றும் கடன் வழங்குதல் உள்ளிட்ட அன்றாடப் பணிகளைத் தொய்வில்லாமல் நிறைவேற்ற முடியும். அதிலும் குறிப்பாக, கடன் வழங்கும் பணியில் "ரிஸ்க்' மேலாண்மை, அன்னியச் செலாவணி மேலாண்மை உள்ளிட்ட பல பிரிவுகளில் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தத் தேவை இல்லை.
கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப வழிமுறைகளின் பயன்பாட்டையும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட, சில வங்கித் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படாமல் உள்ளன. உதாரணமாக, அனைத்துக் கிராமங்களிலும், வங்கிச் சேவை கிடைக்கச் செய்தல். வங்கிக் கிளைகளை அனைத்துக் கிராமங்களிலும் அமைப்பது சாத்தியம் இல்லை. எனவே, நடமாடும் வங்கிகள் (மொபைல் வங்கிகள்) என்ற திட்டத்தின்கீழ், நான்கு சக்கர வாகனங்கள் மூலம், அடிப்படை வங்கி வசதிகளை கிராமங்களுக்கு கொண்டு சேர்க்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று செய்திகள் வந்துள்ளன. ஆனால், இது இன்னமும் முழுமையாகச் செயல்வடிவம் பெறவில்லை என்பதே உண்மை.
அதேபோல், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விக்காக பெறும் கல்விக் கடனுக்கு வங்கிகள் வட்டி விலக்கு அளிக்கும் திட்டம் மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், வங்கிகள் இத்திட்டத்தை இன்னும் செயல்படுத்தத் தொடங்கவில்லை.
கல்வி மேம்பாட்டுக்காகவும், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களை கைதூக்கி விடுவதற்காகவும் கொண்டு வரப்படும் இந்த ஆக்கபூர்வமான திட்டத்தை வங்கிகள் கால தாமதம் இன்றி செயல்படுத்த வேண்டும்.
பொதுத்துறை வங்கிகள் கூடுதல் மூலதனம் மூலம் புத்துயிர் பெற்றுள்ள நிலையில், ஒரு விஷயத்தை மனத்தில் கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களையும், நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களைச் செவ்வனே செயல்படுத்துவதும் ஆகும்.
கிராமப்புற விவசாயி முதல் பெரும் தொழில் நிறுவனங்கள் வரை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், வங்கிகளால் பயன் அடையும் வகையில், திட்டங்கள் அனைத்தையும் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். அதுதான் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் தலையாய நோக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...