இது ஒரு "போர்' காலம்

"கார்' காலம் குறித்து அறிவோம். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வட கிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்யும். வேண்டியவர், வேண்டாதவர் என்ற எந்தவித பாகுபாடெல்லாம் இல்லாமல் மழை பொழியும். அந்த காலம்தான்
Updated on
3 min read

"கார்' காலம் குறித்து அறிவோம். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வட கிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்யும். வேண்டியவர், வேண்டாதவர் என்ற எந்தவித பாகுபாடெல்லாம் இல்லாமல் மழை பொழியும். அந்த காலம்தான் "கார்' காலம். ஆனால் இப்போது "போர்' (BO RE) காலம். அது என்ன "போர்' காலம்? கார் காலத்தில் மழை பொழிவதுபோல இந்த "போர்' காலத்தில் கல்வி நிறுவனங்களில் திரும்பிய பக்கமெல்லாம் கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள் என பேச்சு மழை பொழிந்து கொண்டிருக்கிறது.

 புதுவருடம் பிறந்து ஜனவரி தொடங்கி விட்டால் போதும். இந்த "போர்' காலமும் ஆரம்பமாகி விடுகிறது. அதுவும் நவம்பர், டிசம்பரில் அதிக மழை பெய்வதுபோல பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களும், மாணவர்களும் விரும்புகிறார்களோ இல்லையோ மழையைப்போல எவ்வித பாகுபாடும் இல்லாமல் இóந்த கருத்தரங்கங்களும், சொற்பொழிவுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

 ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட, அதிலும் பல்கலைக்கழகமாக இருந்தால் ஏழெட்டு கருத்தரங்கங்கள் கூட நடைபெறுகின்றன. ஏன் இந்த கருத்தரங்கங்கள்? ஏன் இந்தச் சொற்பொழிவுகள்? அதை யாராவது ஆர்வமுடன் கேட்கிறார்களா? இதனால் பயன் உண்டா என்றெல்லாம் அதை நேரில் பார்ப்பவர்களுக்குக் கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது ஆகிறது.

 உயர்கல்வியில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும், புதிய ஆராய்ச்சிகள் மற்றும் கருத்து உருவாக்கங்கள் குறித்தும் ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிந்து கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்வதற்காகத்தான் இந்த  கருத்தரங்கங்களும், சொற்பொழிவுகளும். அதற்காக பல்கலைக்கழக நிதி நல்கை (யு.ஜி.சி.) உள்பட மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட உயர் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆண்டுதோறும் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் சில நூறு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கின்றன. உள்நாட்டு அரசுகள் மட்டுமன்றி வெளிநாட்டு நிறுவனங்களும்கூட நிதியுதவி அளித்து வருகின்றன.

 கல்லூரி மற்றும் பல்கலைக்கழக துறைகள் குறிப்பிட்ட பொருள் குறித்து கருத்தரங்கம் நடத்துவதற்கு அதற்கான திட்ட அறிக்கையைத் தயாரித்து சம்பந்தப்பட்ட நிதியுதவி நிறுவனத்துக்கு அனுப்பி நிதியைப் பெற்று கருத்தரங்கங்களை நடத்துகின்றன. கருத்தரங்குகளில் பங்கேற்க சிறப்பு விருந்தினர்கள், குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்ற பேச்சாளர்கள், பங்கேற்பாளர்கள் என சகலவித ஏற்பாடுகளையும் செய்து முடிக்க 3 மாத காலம் தேவைப்படுகிறது. கருத்தரங்கை நடத்தி முடித்த பின்பு, பெற்ற நிதிக்கு முறையாகக் கணக்கு காட்டி அதை சீர்செய்வதற்கு நிதி பெற்ற துறைப் பேராசிரியர்கள் படும்பாடு தனிக்கதை. ஆனாலும், அதை ஆர்வமுடன் செய்து வருகின்றனர். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் இந்தக் கருத்தரங்கங்கள் எல்லாம் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மட்டுமே ஒரே மூச்சில் நடத்தப்படுவதால் பயன் கிடைக்கிறதா, அல்லது பெற்ற பணத்தை நிதியாண்டின் இறுதிக்குள் செலவழித்துக் கணக்கு காட்டுவதற்காக நடத்தப்படுகின்றனவா என்ற கேள்விதான் மனதைக் குடைகிறது.

 வெளிநாடுகளில் இதுபோன்ற கருத்தரங்குகள் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்துக்குள் முடிந்து விடுகின்றன. ஆனால், நம் நாட்டில் பிப்ரவரி, மார்ச் மாதம்தான் இந்த உற்சவம் நடக்கிறது.

 கல்வியாண்டு ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மாணவர் சேர்ப்பு, கல்வியாண்டின் ஆரம்பகட்ட பணிகள் தவிர்த்து வேறு எதுவும் செய்ய இயலாத நிலை. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் மழை (கார்) காலம். எதுவும் செய்ய இயலாது. ஆண்டின் இறுதியில்தான் கருத்தரங்க திட்ட அறிக்கை தயாராகும். அதை நிதியளிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தால் அது பரிசீலிக்கப்பட்டு ஜனவரி, பிப்ரவரியில்தான் நிதி வந்து சேரும். அதனால்தால் பிப்ரவரியிலும், மார்ச் மாதத்திற்குள்ளும் கருத்தரங்கை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்பது கல்வி நிறுவனங்களின் வாதம்.

 குறிப்பிட்ட இரண்டு மாதங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களும் இப்படி கருத்தரங்குகளை நடத்துவதால் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் நிபுணத்துவம் பெற்ற சிறந்த பேச்சாளர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அதனால், யாராவது கிடைத்தால் போதும் என்ற நிலையில் இருப்பவர்களை வைத்து நடத்தப்படும் கருத்தரங்கங்களும் உண்டு.

 அதுபோலத்தான் நல்லதொரு கருத்தரங்கில் பங்கேற்று குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களின் பேச்சை கேட்பதில் பங்கேற்பாளர்களுக்கும் குறிப்பாக இளம் ஆய்வாளர்கள், மாணவர்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது.

 இந்த சிரமங்களால் சில கருத்தரங்கங்களைத் திட்டமிட்டபடி நடத்த முடிவதில்லை. சிறப்பு அழைப்பாளர்களும், நிபுணத்துவம் பெற்ற பேச்சாளர்களும் வராமல் போய்விடுவதும் உண்டு. சில கருத்தரங்கங்களுக்குப் பங்கேற்பாளர்கள் இல்லாமல், இளைய மாணவ, மாணவிகளை அழைத்து வந்து இருக்கைகளை நிரப்பும் நிகழ்வும் நடந்து வருகிறது.

 பொதுவாகவே இத்தகைய கருத்தரங்குகளில் 25 சதவீதம் பேர்தான் இலக்கு மக்களாக இருப்பார்கள். மற்றவர்கள் பெயர் அளவுக்கு வருவோராகத்தான் இருப்பார்கள் என்பதை பேராசிரியர்கள் வெளிப்படையாகவே ஒத்துக் கொள்கின்றனர். ஆராய்ச்சியில் ஈடுபட விரும்புவோருக்கு, பேச்சாளர்களின் கருத்திலிருந்து ஒரு சிறு "பொறி' கிடைக்கும். அதைப் பிடித்துக் கொண்டு அவர்கள் முன்னேறி விடுவது உண்டு. மற்றவர்கள் பதவி உயர்வு, கல்வி நிறுவன அங்கீகாரம் போன்ற ஆவணப்படுத்துதல் காரியங்களுக்காக மட்டுமே இதில் கலந்து கொள்வார்கள் என்கின்றனர்.

 சரி, இந்த கருத்தரங்குகளை எல்லோருக்கும் பயன் ஏற்படும் வகையில் ஆண்டு முழுவதும் நடத்தினால் என்ன?

 மார்ச் மாதத்துக்குள் கருத்தரங்குகளை நடத்தி முடித்து கல்வி நிறுவனங்கள் அனுப்பும் கணக்குகளை நிதியளிக்கும் நிறுவனங்கள் சரிபார்த்து முடிக்கவே அந்த ஆண்டின் இறுதி வரை ஆகிவிடுகிறது. அதற்குப் பிறகுதான் அவர்கள் அடுத்த திட்ட அறிக்கைகளை படிக்கத் தொடங்குவார்கள். அதைப் பரிசீலித்து முடித்து அனுமதி அளிக்க ஜனவரி வந்துவிடும். எனவேதான் அனைத்து கருத்தரங்குகளையும் பிப்ரவரி, மார்ச்சில் நடத்த வேண்டிய கட்டாயம். நிதியளிக்கும் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் இப்படி ஒரு காலச் சக்கரத்தில் சிக்கிக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் பணமாகிய சில நூறு கோடி ரூபாய் நிதியானது அதன் முழுப் பயனை எட்டாமல் விரயமாக்கப்பட்டு வருகிறது.

 இதற்கு என்ன தீர்வு? உயர்கல்வி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும் இந்த நிதியின் முழுப் பயனை அடைய வேண்டுமானால், ஒரு கல்வியாண்டில் ஒதுக்கப்படும் நிதியை அடுத்த கல்வியாண்டின் இறுதிக்குள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் விதிமுறை திருத்தம் அவசியம். அதற்கேற்றார் போல நிதியளிக்கும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களும் தங்களது நிர்வாக அமைப்பு முறையை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com