இயற்கையோடு இயைந்து இயற்கையை வழிபட்டு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். தமிழ்த் தொல்காப்பியம் முதற்பொருள் என்றும் கருப்பொருள் என்றும் வகைப்படுத்திப் பொருள் இலக்கணம் வகுத்ததை, வாழ்வுக்கு வளம் சேர்க்கும் பொருள் எனக் கொண்டனர் சமயப்பெரியோர்கள். முதற்பொருளான நிலத்தையும் கருப்பொருள்களான அனைத்தையும் இறையெனக் கருதிப் போற்றினர். நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி, கல்லெல்லாம் சிவலிங்கம் என்று கருதி வழிபட்டனர். எல்லா உயிரிலும் நானே இருக்கிறேன் என்று கண்ணபிரான் உரைத்ததை மதித்து எவ்வுயிரையும் போற்றி வணங்கினர். இப்படி ஒவ்வொரு சமயத்துக்கும் ஒவ்வொருவிதமான நம்பிக்கைகள், மரபுகள்.
இவையனைத்தும் பொய்யோ, புனைகதையோ மூடநம்பிக்கையோ அல்ல. மண்ணும், மரங்களும், தண்ணீரும், இயற்கையும் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் அடிப்படை ஆதாரங்கள், என்றும் பேணிப் போற்றிப் பாதுகாக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் என்று அறிவியல்பூர்வமாக உணர்ந்ததன் அடையாளங்கள். ஆதலால்தான் நம் ஆன்றோர்கள் அவற்றைப் புனிதமெனப் போற்றி வணங்கினர். தலங்கள்தோறும் ஆலயம் எழுப்பி, மூர்த்தங்களையும், தீர்த்தங்களையும், மரங்களையும் பேணி வணங்கினர்.
இத்தகைய வழிபாட்டைத் தமது ஊரோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் தாயகம் எங்கும் பயணம் செய்து வழிபட்டு உய்ந்தனர். இதற்கென்றே தீர்த்த யாத்திரை, தலயாத்திரை என்று புனிதப்பயணம் மேற்கொண்டனர். அவ்வாறு வரும் பயணிகள் தங்கச் சத்திரங்கள் அமைத்தனர். உண்டியும் உறைவிடமும் நல்கினர். யாதும் ஊராக யாவரும் உறவாகப் பேணிய முன்னோர்களுக்குக் காசியும் இராமேசுவரமும் இருகோடிகளாக இல்லாமல் அருகருகே உள்ள நகரங்கள் போல் ஆயின. வைணவ வழிபாட்டில் வடக்கும் தெற்கும் ஒன்றாயிற்று. எல்லாச் சமயங்களுக்கும் இத்தகு மரபு உண்டு. அநேகமாய், பகைமையில்லா வழிபாட்டுநெறி, இறைவழிபாட்டு உணர்வு இந்தியாவை இணைக்கும் உறவு நரம்புகளாயின.
வைணவ ஆழ்வார்களும், சைவநாயன்மார்களும் நாளும் இன்னிசையால் இறைநெறி பரப்பித் திருத்தலங்கள் தோறும் சென்று திருத்தொண்டு புரிந்து வழிபாடு மேற்கொண்டனர். அவையனைத்தும் புண்ணியம் மிகுந்த புனிதத்தலங்கள் ஆயின.
இத்தகு புனிதத்தலங்களுக்கே உரிய சிறப்பான அம்சங்கள், ஆங்குள்ள மூர்த்தி, தீர்த்தம் மற்றும் தல விருட்சம் ஆகியனவாகும். தீராத பலநோய்களைத் தீர்க்கக்கூடிய மகத்துவம் புனிதத்தலங்களில் உள்ள தீர்த்தங்களுக்கு உள்ளதாகத் தலபுராணங்கள் கூறுகின்றன. அரிதாய்க் கிடைத்த மானுடப்பிறவியோடு பிறவிப் பிணியைத் தொலைக்கக் கங்கையிலும் காவிரியிலும், கோதாவரியிலும், யமுனையிலும், இராமேசுவரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் முதலான கடல்நீரிலும் இறையுணர்வோடு மூழ்கி எழுந்து அக, புற அழுக்குகளை முழுதாய்க் களைந்தனர். எங்கும் செல்லமுடியாதவர்கள் கூடத் தத்தம் வீட்டுக் கிணற்றுநீரை எடுத்துக்கொண்டு கங்கையாகவும், யமுனையாகவும், கோதாவரியாகவும், சரஸ்வதியாகவும் பாவித்துத் தீர்த்தமாடினர். நம்பிக்கை என்பது ஒருபுறமிருக்க ஒரு காலத்தில் இந்தியப்பெருநாட்டு நிலத்தடி நீர் முழுக்கவும் கங்கை முதலான புண்ணிய நதிகளுக்குச் சமமானதாகவும் இருந்திருக்கவும் கூடும். பெற்ற தாயினும் மேலதாகத் தண்ணீரைப் பேணினர் முன்னோர். தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கலாகாது என்னும் சொலவடை இவ்வழி உருவாக்கம் பெற்றிருக்க வேண்டும்.
மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு எனக் கருதிய முன்னோர்கள் சூழல் பேண ஆலயங்கள் எழுப்பினர். திருக்குளங்கள் தோண்டினர். நந்தவனங்கள் அமைத்தனர். தாகத்தோடு வருவோர்க்குத் தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்து நீரளித்தனர். தங்கும் அன்பர்களுக்காக அன்னசத்திரங்கள் அமைத்தனர். அவர்களின் அற்புத வரலாறுகள் பெரியபுராணத்தில் ஆவணமாக அளிக்கப்பெற்றுள்ளன. அத்தகைய ஆன்றோர்கள் ஆக்கிய அறப்பணிகள் இன்றைக்கு எத்தகு நிலையில் உள்ளன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.
கோடி தீர்த்தம் ஆடிய பலன் தரும் இராமேசுவரத்தலத்துத் தீர்த்தங்கள் சுமார் 22. அருகருகே கிடைக்கும் தீர்த்தங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர். ஒவ்வொரு சுவை. ஒவ்வொரு பலன். இன்றைக்கு எல்லாம் மாறிப் பெரும்பாலும் ஒரேதரமானதாக ஆக்கப்பட்டுப் போயிருக்கிறது. இவற்றில் இரண்டு தீர்த்தங்கள் வற்றிப் போயின. எஞ்சிய தீர்த்தங்களின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளன. நீராட வரும் பக்தர்களில் கூடுதல் நிதியளிப்பார்க்கும் விரும்பி வேண்டுவோர்க்கும் வேண்டும் வண்ணம் நீரை வாரியிறைக்கும் பணியாளர்களைக் கடந்து, தீர்த்தக்கிணறுகளை எட்டிப்பார்த்தால் உள்ளே பிளாஸ்டிக் குடுவைகள், பழந்துணிகள், இன்னும் சில குப்பைகள் மற்றும் சில்லறைக் காசுகளும். அக்னிதீர்த்தம் என்று போற்றப்பெறும் கடல்நீரில் கால் வைக்கவே பயமாக இருக்கிறது. அத்தனை அசுத்தம். கங்கை ஓடும் காசியின் தூய்மை இன்னும் கேள்விக்கிடம். பாலிதீன் பொருள்கள் தடை செய்யப்பட்டாலும்கூட, இன்னும் தனுஷ்கோடித் தலத்தில் பிண்டம் எடுத்துச் செல்ல, பக்தர்கள் பாலிதீன் பைகளைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுபோல் எத்தனையோ தீர்த்தத்தலங்களின் நிலைகள் கவலை தருவனவாக உள்ளன.
தீர்த்தங்களின் நிலை இவ்வாறிருக்கத் திருக்குளங்களின் தூய்மையும் கேள்விக்கிடமானதாகவே இருக்கிறது. பல திருக்கோயில்களில் போதிய கழிவிட வசதிகள் இல்லாத நிலையில், வரும் பக்தர்கள் திருக்கோயில் வளாகங்களையும், திருக்கோயில் நீர்நிலைகளையும் மாசுபடுத்தும் போக்கு பெருகி வருகிறது. பரிகாரம் என்ற பெயரில் பாவத்தைப் போக்குவதாகக் கருதி உடுத்திய ஆடைகளை அப்படியே நீக்கி நீர்நிலைகளில் விடுதல், சோப்பு மற்றும் ஷாம்புகளைப் பயன்படுத்தும்போது அதனைச் சுற்றியுள்ள பாலிதீன் உறைகளை அப்படியே விட்டு விடுதல், உணவுப்பண்டங்களின் மிச்சங்களையும், நீரருந்தியபின் காலியான பிளாஸ்டிக் குடுவைகளையும் குளிர்பானக் கோப்பைகளையும் ஆங்காங்கே போடுதல், குப்பைகளை பாலிதீன் பைகளில் இட்டுப் பிரிக்கவும் முடியாதபடி முடிச்சிட்டு எறிதல் என்று புண்ணியத் தலங்களின் தூய்மைக்குக் கேடு செய்து பண்ணும் பாவங்களை எத்தகைய வழிபாடும் பரிகாரங்களும் போக்கிவிடாது என்பதை இவர்களுக்கு யார் சொல்வது?
இவற்றை அப்படியே எடுத்துண்ணும் சபரிமலைப் பகுதியில் வசிக்கும் யானைகளும், மலையகக் கோயில்களில் வதியும் குரங்குகளும் இன்னபிற உயிரினங்களும் படும் இன்னல்கள் சொல்லி முடியாதவை. போகிற போக்கில் தூக்கி எறியும் கழிவுகள் பிற உயிர்களைப் பறிக்கும் பாவகாரியத்தைப் பண்ணுவதாக இருப்பது எந்த வழிபாட்டில் சேர்த்தி?
இன்னும் பல திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்கள் அர்ச்சனைக்காக மலர்களையும் தேங்காய் பழங்களையும் எடுத்துவரப் பயன்படுத்தும் பைகள் பாலிதீன் பைகளாகவே இருக்கின்றன. ஆலயப் பகுதிகளில் உள்ள கடைகளிலும் அவ்வண்ணமே விற்கவும்படுகின்றன. பயன்படுத்திய பிறகு உடனே ஆலய வளாகத்தினுள் தூக்கி எறியப்படும் அக்கழிவுகளால் மழைநீரோ, அபிடேகநீரோ வெளியேற முடியாத நிலை.
பல நூற்றாண்டுக்காலமாய் நம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த ஆலயங்களை அவற்றின் மதிப்புமிக்க தூய்மையை, போற்றிப் பாதுகாத்த புனிதத்தை, சர்வ அலட்சியமாகப் புறக்கணித்து மாசுபடுத்தும் போக்கு எப்படி ஆக்கம் தரும் வழிபாடாக இருக்க முடியும்? ஆலய நிர்வாகிகளும், அங்கு பணிபுரியும் தொண்டர்களும் என்னதான் தூய்மைப்பணியில் ஈடுபட்டாலும் புனிதநாள்களில், விழாக் காலங்களில் வந்து பெருகும் பக்தகோடிகள் பண்ணும் தூய்மைக் கேட்டை அவ்வளவு சீக்கிரத்தில் அகற்றிவிட முடியுமா என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஆலயங்கள்தோறும் எழுந்தருளியுள்ள மூர்த்திக்குப் பூவும் புனலும் சொரிந்து வழிபட நீர் நிலைகளையும் நந்தவனங்களையும், பசுமடங்களையும் உருவாக்கினர் நம் முன்னோர். அவற்றைப் பராமரிக்க அறக்கட்டளைகளையும் நிறுவினர். அவற்றின் செயற்பாடுகள் இன்றைக்கு எந்த அளவிற்கு உள்ளன என்பதும் கேள்விக்குறி. பல இடங்கள் வணிகவளாகங்களாக மாற்றம்பெற்றுவிட்டன.
மேலும், விரிவாக்கம் செய்யவேண்டி நந்தவனங்கள் சுருக்கப்பட்டதோடு தமக்குரிய தல விருட்சங்களையும் ஒடுக்கிவிட்டன பல திருக்கோயில்கள். மருத்துவப்பலனும் புனிதத்தன்மையும் கொண்டிலங்கிய அத்திருமரங்கள் பல இடங்களில் உயிர்ப்பின்றி, வெள்ளி அங்கி சாத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பல தம்மைச் சுற்றி வந்து வழிபடுவோர்க்கு என்ன தருவதென்ற கவலையிலேயே உயிர் துறந்து விட்டன போலும். கடம்பவனத்திற்கு நடுவே மலர்ந்த மதுரைத் திருக்கோயில்போல, தமிழகத்தில் எத்தனையோ திருக்கோயில்கள் உள்ளன என்பதும் ஒரு காலத்தில் அடர்வனத்துக்கு நடுவேதான் பல ஆலயங்கள் எழுப்பப்பெற்றன என்பதும் இனிவருங்காலத்தில் நம்பத்தகாதனவாக ஆகிப்போகக்கூடும்.
இத்தகு போக்குகள் இந்துசமய வழிபாட்டுத்தலங்களில் மட்டும் என்றில்லாமல் எல்லாச் சமயத்தலங்களிலும் பெருகி வருகின்றன. அளவுக்கு மீறிய மக்களின் வருகை, போதிய வசதிகள் இன்மை போன்ற யதார்த்தங்களை விடவும் வரும் பக்தர்களின் அலட்சியப்போக்கே இவ்வளவு சீர்கேடுகளுக்கும் பெருங்காரணமாக இருக்கிறது என்பதே உண்மை.
எனவே, வாழ்வுக்கும் வரலாற்றுக்கும் ஆதாரமாக இருந்து அக, புறத் தூய்மை நல்குவனவாக அமைந்த திருக்கோயில்களின், அவை நிலைகொண்டுள்ள திருத்தலங்களின், தூய்மை பேணுவதுதான் வழிபாடுகளில் எல்லாம் தலைசிறந்த வழிபாடு என்று உணரும் போக்கு பக்தர்களின் உள்ளங்களில் முதலில் உருவாக வேண்டும். அதுவே புண்ணியம் யாவினும் சிறந்த புண்ணியம்.
கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்
பொங்குதண் குமரித்துறை ஆடில்என்
ஓங்குமாகடல் ஓதநீர் ஆடில் என்
எங்கும் தூய்மை இல்லை என்பார்க்கு இல்லையே
}என்று அப்பர் பெருமான் திருவாக்கைச் சற்றே மாற்றி வைத்துப் பக்தகோடிகளுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அத்தோடு, பழம்பெருமை வாய்ந்த தலங்களில் நாம் இழந்துவிட்ட நந்தவனங்களையும், இறந்துபோன தலவிருட்சங்களையும் உடன் எழுப்ப ஆவனசெய்ய வேண்டும். பாலிதீன் பொருள்கள் உடனடியாகத் திருக்கோயில் வளாகங்களில் தடை செய்யப்பட வேண்டும்.
போதிய வசதிகளுடன் இலவசக் கழிப்பிட ங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும் உண்டியல் வருமானத்தைக் கணக்கிடும் அறநிலையத்துறை இத்தகு அடிப்படைத் தேவைகளை உடன் நிறைவுசெய்வதோடு வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்குச் சூழல் பேணும் விழிப்புணர்வுக்கு உரிய பயிற்சிகளையும் வழங்க வேண்டும். இல்லையெனில், பல புண்ணியத்தலங்கள் பாவத்தலங்களாக ஆகிப்போகும் அவலத்தில் இருந்து தப்பவே முடியாது. இதற்கு வேறு எந்தப் பரிகாரம் செய்தாலும் தீராது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.