வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சிறுதொழில் வளர்ச்சிக்குத் தேவை எது?

கிரிசில்' (CRISIL) தர நிர்ணய அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. தொழில்துறை, நிதித்துறை எனப் பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்களின் நிர்வாகம், நிதி ஆதாரம், உற்பத்தி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:47 am

எஸ். கோபாலகிருஷ்ணன்

கிரிசில்' (CRISIL) தர நிர்ணய அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. தொழில்துறை, நிதித்துறை எனப் பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்களின் நிர்வாகம், நிதி ஆதாரம், உற்பத்தித் திறன், லாபம் ஆகிய அம்சங்களை ஆய்வுசெய்து, அவற்றின் தரத்தை நிர்ணயிப்பதில் முன்னணியில் உள்ள நிறுவனம் "கிரிசில்'. எனவே, அதன் ஆய்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

 இந்தியாவில் இயங்குகிற சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்குகிற கடன் தொகை, அந்த நிறுவனங்களின் நியாயமான தேவையைவிட மிகவும் குறைவு என்கிறது "கிரிசில்' அமைப்பு. பல்லாயிரக்கணக்கான நிறுவனங்களின் செயல்பாடுகளை, மாதிரி அடிப்படையில் ஆராய்ந்து, மேற்கூறிய கருத்தை வெளியிட்டுள்ளது.

 வங்கிகள், இந்த வகை நிறுவனங்களுக்கு இப்போது வழங்கும் கடன் தொகை எந்த அளவு குறைவு? இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டிய தொகையைவிட | 50,000 கோடி குறைவு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

 வணிக நிறுவனங்களுக்கு நிதி ஆதாரம் என்பது ரத்த நாளம். பொதுவாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும், குறிப்பாக சிறு மற்றும் குறுந்தொழில்களும் போதிய கடனுதவி இல்லாமல் என்ன பாடுபடுகின்றன என்பது எல்லோரும் அறிந்ததே.

 பல்வேறு குழுக்கள் அவ்வப்போது இந்த உண்மையை அரசுக்கும், வங்கிகளுக்கும் வலியுறுத்தி வந்துள்ளன. இப்போது மீண்டும் ஒருமுறை துல்லியமாக, புள்ளிவிவரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின், சிறு, குறுந்தொழில் மற்றும் நடுத்தரத் தொழிலுக்கான அமைச்சகம் மற்றும் தேசிய சிறுதொழில் கார்ப்பரேஷன் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுதான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்போது, அவற்றின் செயல் மூலதனத் தேவையும் அதிகரிக்கும். இந்தக் கூடுதல் நிதித் தேவையில் 25 சதவீதம் நிறுவனத்தினர் திரட்ட வேண்டும். மீதி 75 சதவீதத் தொகையை வங்கிகள் கடனாக வழங்க வேண்டும் என்பது நியதி. இந்த நியதிக்கு மாறாக, சராசரியாக 60 சதவீதத் தொகையை மட்டுமே பெரும்பாலான வங்கிகள் கடனாகத் தருகின்றன. இதனால் கூடுதல் தேவையில் 40 சதவீத செயல் மூலதனத்தை நிறுவனத்தினரே திரட்ட வேண்டியுள்ளது. இதனால் வளரும் நிறுவனங்கள்கூடத் திணறிப் போகின்றன.

 ஆக, சில நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச வங்கிக் கடன் கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ளது. இன்னொருபுறம், வெற்றிகரமாக இயங்கி, வளர்ச்சி அடையும் நிறுவனங்களுக்குக்கூட, தேவையைவிட குறைவாகவே வங்கிக்கடன் கிடைக்கிறது.

 நாட்டில் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த ஆலைப் பொருள்களில், சிறு மற்றும் குறுந்தொழில்களின் உற்பத்தி 45 சதவீதம்.

 அதேபோல், மொத்த ஏற்றுமதியில் சிறு, குறுந்தொழில்களின் பங்களிப்பு 40 சதவீதம். இந்தப் புள்ளிவிவரங்கள் பல முறை வலியுறுத்தப்பட்டுவிட்டன. ஒரு புதிய விஷயம் என்னவெனில், சென்ற நவம்பர் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 26.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

 சர்வதேசப் பொருளாதாரம், வீழ்ச்சியிலிருந்து இன்னும் முழுமையாக மீட்சி அடையவில்லை. போதாக்குறைக்கு ஐரோப்பாவில் பல நாடுகள் புதிதாகச் சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சுணக்கமான நிலையிலும், 26.5 சதவீத அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்திருப்பதற்குக் காரணம், முன் எப்போதையும்விட, இப்போது சிறு தொழில் மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு வழக்கமான 40 சதவீதத்தைவிட அதிகமாக உள்ளது. குறிப்பாக, ஆபரணக் கற்கள், தங்க ஆபரணங்கள், பொறியியல் சார்ந்த சிறிய உதிரி பாகங்கள், கைவினைப் பொருள்கள், தோல் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

 முறையாகப் பதிவு செய்துகொண்டோ அல்லது பதிவு செய்துகொள்ளாமலோ, 2 கோடியே 60 லட்சம் நிறுவனங்கள், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களாகச் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் ஆறு கோடி நபர்களுக்கும் அதிகமாக வேலை வாய்ப்புகள் வழங்கியுள்ளன.

 பெரிய தொழில் நிறுவனங்களில் ஒரு கோடி ரூபாய் மூலதனம் அதிகரித்தால் அதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பது ஒரு நபர் அல்லது இரண்டு நபருக்கு மட்டுமே. காரணம், மூலதனம் அதிகரிக்க அதிகரிக்க, அங்கு தொழில்நுட்ப மேம்பாடும், நவீனமயமாக்கமும் அதிகரிக்கும். ஆனால், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களில், மூலதனம் பத்து லட்சம் ரூபாய் அதிகரித்தால்கூட, 2 அல்லது 3 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும். இது நடைமுறையில் நாம் பார்க்கும் உண்மை.

 சிறு தொழில் மேம்பாட்டுக்காகப் பாரதப் பிரதமர் அமைத்த ஓர் உயர்நிலைக்குழு வங்கிக்கடன் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைப் போக்குதல், உரிய அளவு கடன்தொகையை உரிய நேரத்தில் வழங்குதல், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை தொடர்பான பரிந்துரைகளை வெளியிட்டு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஆகிவிட்டது. இந்தப் பரிந்துரைகள் மேலும் காலதாமதம் இன்றி உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.

 சிறு, குறுந்தொழில் உற்பத்திப் பொருள்களில் 20 சதவீதம் பொருள்களை மத்திய, மாநில அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கை நிலுவையில் உள்ளது. இத்துறை சார்ந்த சம்மேளனங்கள் மட்டும் அல்லாமல் பல்வேறு உயர்நிலைக் குழுக்களும் இதனைப் பரிந்துரைத்துள்ளன.

 இன்னும் சொல்லப்போனால், பல ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொள்கை அடிப்படையில் இந்தக் கருத்தை ஏற்று, சிறு தொழில் துறை உற்பத்திப் பொருளைக் கூடியவரை கொள்முதல் செய்து வந்தன. ஆனால், 1992-ல் பொருளாதாரச் சீர்திருத்தம், தாராளமயமாக்கல் ஆகிய கோட்பாடுகள் அறிமுகம் ஆனபிறகு, சிறுதொழில் உற்பத்திப் பொருள்களை அரசுத் துறையினர் வாங்கிக் கொள்ளும் வழக்கம் அற்றுப்போய்விட்டது. இந்த நடைமுறையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்.

 சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்கள் தரத்தில் உயர்வாகவும், விலையில் குறைவாகவும் இருத்தல் வேண்டும். அப்போதுதான் உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, சீனாவின் மலிவுப் பொருள்களின் குவிப்பை நாம் எதிர்கொள்ள முடியும். இதற்கு முக்கியத் தேவை தொழில் திறன் மற்றும் தொழிலாளர் செயல்திறன் மேம்பாடு ஆகும். இதைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு தேசிய திறன் மேம்பாட்டுக் குழுவை அமைத்துள்ளது. இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் 50 கோடி நபர்களை மேம்பட்ட செயல்திறன் படைத்தவர்களாக உருவாக்குவது என்ற இலக்கை இந்தக் குழு நிர்ணயித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், சிறு தொழில் மற்றும் நடுத்தரத் தொழில், பெருந்தொழில் என அனைத்துத் தரப்பினரையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்காமல், பயிற்சி அளிப்பதில் சிறு தொழில்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

 காரணம், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்குப் பயிற்சி வசதிகள் மிகக் குறைவு. இந்த யதார்த்த நிலையை மனதில் கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது பொருத்தமாக இருக்கும்.

 தமிழ்நாட்டில், சமீபகாலமாக ஐ.டி.ஐ. மாணவர்களின் பற்றாக்குறையால் சிறு, குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான நிறுவனங்கள் மோட்டார் வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வழங்கி வருகின்றன. இப்போது ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சியின் பயனாக, இந்த நிறுவனங்களுக்குக் கணிசமான எண்ணிக்கையில் "ஆர்டர்'கள் கிடைக்கின்றன. ஆனால், போதிய அளவு பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இல்லாத காரணத்தால் குறிப்பிட்ட நேரத்தில், உதிரி பாகங்களைத் தயாரித்து விநியோகம் செய்வது சில நிறுவனங்களுக்கு இயலவில்லை. இதனால், ஆர்டர்கள் கிடைத்தாலும், அவற்றால் பயன் அடைய முடியவில்லை.

 பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் பயிலகங்கள் ஆகியவை அதிகரித்துவரும் இந்த நேரத்தில், ஐ.டி.ஐ. பயிற்சிகளில் மாணவர்களை ஈர்ப்பதற்கு ஏதுவாக, அவர்களுக்குச் சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புகள் வழங்குவது நல்ல பலனைக் கொடுக்கும். இதுகுறித்து மாநில அரசு உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

 ஆக, வங்கிக் கடன் சீர்திருத்தம், தொழில்நுட்ப மேம்பாடு, தொழிலாளர் திறன் மேம்பாடு, தொழிலாளர் நலன், சிறு தொழில் பொருள்களுக்கு அரசுத்துறை ஆதரவு, வரிச் சலுகை என ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை அரசு உருவாக்க வேண்டும். சிறு, குறுந்தொழில் வளர்ச்சிக்கு இது அவசியம் மட்டும் அல்ல; அவசரமும்கூட.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.