நிதித்துறையில் தொண்டு நிறுவனங்கள்!
பணம் கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்டுள்ள எல்லா நிறுவனங்களையும் நிதி நிறுவனங்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடுகிறோம் அல்லவா? சற்று கூர்ந்து நோக்கினால், நிதித்துறையில் எத்தனை, எத்தனை வகை நிறுவனங்கள்


பணம் கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்டுள்ள எல்லா நிறுவனங்களையும் நிதி நிறுவனங்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடுகிறோம் அல்லவா? சற்று கூர்ந்து நோக்கினால், நிதித்துறையில் எத்தனை, எத்தனை வகை நிறுவனங்கள் உள்ளன என்பது தெளிவாகும்.
ரிசர்வ் வங்கியிடம் முறையாகப் பதிவு செய்துகொண்டு "வங்கி சாரா நிதி நிறுவனங்கள்' குத்தகை மற்றும் தவணை முறை கொள்முதல் நிதி நிறுவனங்கள், தனி நபர்கள், தனியாகவோ, கூட்டுச் சேர்ந்தோ நடத்தும் நிதி நிறுவனங்கள், சீட்டு நிறுவனங்கள் என பலவகை உண்டு. இவை எதிலும் சேராத நிதி நிறுவனம் ஒன்று உண்டு. அதுதான் மியூச்சுவல் பெனிபிட் ஃபண்டு என வழங்கப்படும் பரஸ்பர சகாய "நிதிகள்' ஆகும்.
இவை மற்ற நிதி நிறுவனங்களிலிருந்து வித்தியாசமானவை. சகாய நிதி, சாஸ்வத நிதி என்றும் அறியப்படுகின்றன. பொதுமக்கள் செல்லமாக "ஃபண்டாபீஸ்' என்பார்கள். மத்திய அரசு, கம்பெனிகள் விவகார அமைச்சகத்தால், 1956-ம் ஆண்டு கம்பெனிகள் சட்டம், 620-எ பிரிவின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட "நிதிகள்' இவை. வேறு எந்த ஒரு நிதி நிறுவனத்தையும், மத்திய அரசு அங்கீகரிப்பதில்லை. (நிதி நிறுவனங்களை அங்கீகரிப்பது பொதுவாக ரிசர்வ் வங்கியின் பணி).
இந்த வகை "நிதிகளில்' சில 125 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையில் இயங்கி வருகின்றன. சொல்லப்போனால், இந்தியாவில் உள்ள அனைத்து "ஷெட்யூல்டு' வங்கிகள் தோன்றுவதற்கு முன்னதாகவே, இந்தவித "நிதிகள்' தோன்றி, எளிய மக்களுக்குப் பொருளாதாரச் சேவை செய்யத் தொடங்கிவிட்டன.
காலங்காலமாகத் தங்களது அரும்பணியால் நிலைத்து நிற்கும் இந்த "நிதி' நிறுவனங்கள், தொண்டுள்ளம் கொண்டவர்களால், லாப நோக்கம் இன்றி, சாதாரண மக்களின் நன்மைக்காகத் தொடங்கப்பட்டவை. எனவே, தொண்டு நிறுவனங்களாகவே இயங்கின.
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட "நிதிகள்' இப்போது இந்தியாவில் சுமார் 340 நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட எண்பது சதவீத நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன. இந்தியா முழுவதும் இந்நிறுவனங்கள் பரவி உள்ளன என்றாலும், அவற்றின் எண்ணிக்கை சொற்பம்தான்.
"நிதி' நிறுவனத்தில் ஒருவர் தனது சேமிப்பை டெபாசிட் செய்ய வேண்டும் என்றாலோ அல்லது தனது அவசரத் தேவைக்குக் கடன் பெற வேண்டும் என்றாலோ, "நிதி'யில் பங்கு வாங்கிக்கொண்டு உறுப்பினராக வேண்டும். பங்கின் விலை ரூ. 1 ஆகத்தான் ஆரம்பகாலத்தில் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்புதான் பங்கின் விலையை மத்திய அரசு ரூ. 10-ஆக உயர்த்தியுள்ளது.
எனினும், எளிய மக்களும் "நிதி'களில் பங்கு வாங்கிக்கொண்டு உறுப்பினராகச் சேர்ந்து பயன் அடையலாம். டெபாசிட் செய்ய விரும்பும் அங்கத்தினர்கள் ரூ. 100 மதிப்பிலான பங்குகள் வைத்திருக்க வேண்டும். இதனால் "நிதி'களின் நிதி ஆதாரம் மேலும் வலுவடையும் என்பதே நோக்கம். இந்தப் பங்குகளை "நிதி' அலுவலகத்திலிருந்து உடனுக்குடன் வாங்கிக் கொள்ளலாம்.
பொதுவாக, ஒரு நிதியில் அங்கத்தினராக உள்ளவர்கள் அந்த "நிதி' செயல்படும் பகுதியில் வசிப்பவர்கள்தான். ஆகவே, இந்த "நிதி'கள் உள்ளூர்வாசிகளின் நன்மைக்காக இயங்குகின்றன என்பது இதன் தனிச்சிறப்புகளில் ஒன்று. உலகமய (குளோபல்) நிறுவனங்களுக்கு இடையே, இந்த உள்ளூர் (லோக்கல்) நிறுவனங்கள் தங்கள் பிடிமானத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன என்பதே பெரிய விஷயம்தான்.
"நிதிகள்' இரண்டு வகை சேவைகளை வழங்குகின்றன. ஒன்று, அங்கத்தினர்களிடையே சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கி, அவர்களது வைப்புத் தொகையைத் திரட்டி, அதற்கு நியாயமான வட்டி வழங்குதல்; தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தைவிட "நிதி'கள் கூடுதல் வட்டி தருகின்றன.
இரண்டாவது, தங்க நகை, வீட்டு அடமானம் மற்றும் அதே "நிதியில்' செய்யப்பட்ட டெபாசிட் மீது நியாயமான குறைந்த வட்டிக்குக் கடன் வழங்குகின்றன.
சீட்டு, குத்தகைக் கடன் மற்றும் தவணைக் கொள்முதல் கடன் போன்ற நடவடிக்கைகளில், "நிதிகள்' ஈடுபடுவதும் இல்லை. அதற்கு அனுமதியும் கிடையாது.
நகைக்கடன், வீட்டுக்கடன் ஆகிய முற்றிலும் பாதுகாப்பான கடன்களை மட்டுமே "நிதி'கள் வழங்குவதால் அங்கத்தினர்களின் வைப்புத்தொகை பாதுகாப்பாக உள்ளது.
துரித சேவை, எளிமையான வழிமுறைகள், கனிவான அணுகுமுறை ஆகியவை உறுப்பினர்களை "நிதி'யின்பால் ஈர்க்கின்றன. "நிதி'யில் கல்விக்கடன் வாங்கி, படித்து முன்னேறி, அகில இந்திய அளவில் முத்திரை பதித்தவர்கள் பலர் உண்டு.
வங்கிகளிடமிருந்து "நிதி'கள் கடன் வாங்குவதில்லை. மாறாக, அரசு நியதிகளின்படி, நிதிகளின் மொத்த டெபாசிட் தொகையில் 10 சதவீதத் தொகை, வங்கிகளில் டெபாசிட்டாக வைக்கப்படுகிறது. இதனால், "நிதி'கள் மேலும் வலுவடைய வழி பிறந்துள்ளது.
மத்திய அரசால் அடுத்தடுத்து அமைக்கப்பட்ட பல உயர்நிலை நிபுணர் குழுக்களான, நீதிபதி ஏ.வி. விஸ்வநாத சாஸ்திரி குழு (1960), வங்கிகள் ஆணையம் (1972) ஜேம்ஸ் ராஜ் குழு (1975), பேராசிரியர் சுகுமோய் சக்ரபர்த்தி குழு (1987), டாக்டர் ஏ.சி. ஷா குழு (1992), பி. சபாநாயகம் குழு (2000), ஏ.ஆர். ராவ் குழு (2001) ஆகியவை பரஸ்பர நிதி நிறுவனங்களின் "பரஸ்பரத் தன்மை' எளிய மக்களுக்கு உதவும் உயர்ந்த நோக்கம், சீரிய செயல்பாடு ஆகியவற்றைப் பாராட்டியுள்ளன. அத்துடன் "நிதி'களின் சேவை தொடர்வதற்குப் பல சட்டதிட்டங்களைப் பரிந்துரைத்தன.
"நிதிகளின்' வளர்ச்சிக்கும், வலுவுக்கும் எடுத்துக்காட்டாக, முதல்முறையாக, ஏ.ஆர். ராவ் குழுவில், (2001) "நிதி' நிறுவனங்களின் சம்மேளனமான "சேம்பர் ஆப் நிதியின்' பிரதிநிதிகள் இருவரையும், அங்கத்தினர்களாக மத்திய அரசு நியமித்தது.
நிதிகளை மேலும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு சில புதிய நியதிகளையும் அறிவித்தது. உதாரணமாக, 8-6-1996 முதல் வைப்புத்தொகை திரட்டுவதற்கு, நிதிகள் பத்திரிகைகளிலோ, வேறு வகையிலோ விளம்பரங்கள் செய்யத் தடை விதிக்கப்பட்டது.
நிதிகள் கடன் வழங்குவதை ஒழுங்குபடுத்துவதற்காக, 20-10-1997 முதல் நிதி நிறுவனத்தின் வைப்பு நிதியின் அளவைப் பொறுத்தே ஒருவருக்குக் கடன் வழங்கும் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி, எந்த ஒரு தனிநபருக்கும் அதிகபட்சமாக ரூ. 7.50 லட்சத்துக்கு மேல் கடன் வழங்கத் தடை விதிக்கப்பட்டது. பிறகு, அதிக அளவில் வைப்புத்தொகை கொண்டுள்ள பெரும் "நிதி'கள் ரூ. 15 லட்சம் வரை ஒரு நபருக்குக் கடன் வழங்கலாம் என உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. மிகப்பெரிய தொகைக்கான கடன்களை வழங்குவது, அங்கத்தினர்களின் வைப்புத்தொகைக்குப் பாதுகாப்பாக இருக்காது என்ற கருத்தில் புதிய நியதிகள் அறிவிக்கப்பட்டன.
முக்கியமாக, வங்கிகளைப் போலவே, நிதிகளிலும் ஆதாயம் தராத கடன்களுக்கு அதாவது வாராக்கடன்களுக்கு, நிதிகள் குறிப்பிட்ட சதவீதத் தொகையைத் தங்கள் லாபத்திலிருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதாவது, லாபத்திலிருந்து தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும் என்ற நியதி அறிமுகம் செய்யப்பட்டது.
அதேபோல், கடனுக்கான வட்டித்தொகை வசூலாகாத வரை, அதை லாபமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. இதுபோன்ற புதிய நியதிகள், தொடக்கத்தில் சிரமமாகத் தோன்றினாலும், நாளடைவில் நிதிகளின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த உதவின. இதனால், நிதிகளில் டெபாசிட் செய்துள்ள எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் வைப்புத்தொகை பாதுகாப்பாக உள்ளது என்று நம்பிக்கையுடன் இருக்கலாம்.
பல்வேறு வணிகத் துறைகளில் இருப்பதுபோலவே, நிதித் துறையிலும், "சேம்பர் ஆப் நிதி' (நிதிகளின் சம்மேளனம்) செயல்படுகிறது. நிதிகளின் செயல்பாடுகளைத் தொழில் முறைப்படுத்துதல், மத்திய அரசு அறிவிக்கும் புதிய நியதிகளைச் செவ்வனே செயல்படுத்துவதற்கான செயல்திறனை மேம்படுத்துதல் ஆகிய குறிக்கோளுடன், நிபுணர்களை அழைத்து அங்கத்தினர்களுக்குக் கருத்தரங்கம், பயிற்சிப்பட்டறைகள் ஆகியவற்றை சேம்பர் ஆப் நிதி நடத்துவது வரவேற்கத்தக்கது.
அதேசமயம், அங்கத்தினர்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாகவும் திகழ்ந்து, அங்கத்தினர் - நிறுவனங்களுக்குத் தேவையான சலுகைகளை அரசிடமிருந்து பெற்றுத் தருவதிலும் சேம்பர் ஆப் நிதி முனைப்புக் காட்டுகிறது. இவையெல்லாம் தவிர, கடந்த 25 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு, வெள்ளி விழா காணும் சேம்பர் ஆப் நிதியின் முன் மிகப்பெரிய பொறுப்பு ஒன்று உண்டு.
"நிதி'களின் "பரஸ்பரத் தன்மை' பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அரிய நியதி நசிந்துவிடக் கூடாது. இந்த நியதி எளிய மக்களுக்கு நீடித்து உதவும் வகையில், "நிதி'களின் செயல்பாடுகள் தொழில் முறையில் அமைய வேண்டும். அத்துடன் நிதிகளை 150 ஆண்டுகளுக்கு முன் அமைத்த முன்னோடிகளின் சுயநலமற்ற தொண்டுள்ளத்தை அவ்வப்போது நினைத்துப் பார்க்க வேண்டும். அரசு வகுத்துள்ள நியதிகளை முழுமையாகச் செயல்படுத்துவது மட்டுமல்லாமல், "நிதி'கள் தமக்குத் தாமே ஆரோக்கியமான நெறிமுறைகளை வகுத்துக்கொண்டு, அவற்றைக் கண்டிப்புடன் கடைப்பிடித்து, உறுப்பினர்களும் பொதுமக்களும் தங்களிடம் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். உலகமயமாக்கல் சகாப்தத்திலும், இந்த உள்ளூர் நிறுவனங்களுக்கு இடம் உண்டு என்பதை எடுத்துக்காட்ட வேண்டும்.
இந்த உன்னத நோக்கம் ஈடேறுவதற்கு சேம்பர் ஆப் நிதி அல்லும் பகலும் அயராது பாடுபட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...