வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சிறுதொழில் வானில் ஒளிக்கீற்று?

சிறு, குறுந்தொழில் உற்பத்திப் பொருள்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பொருள்களை மத்திய, மாநில அரசுத் துறைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இத்துறை சார்ந்த சம்மேளனங

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:17 pm

எஸ். கோபாலகிருஷ்ணன்

சிறு, குறுந்தொழில் உற்பத்திப் பொருள்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பொருள்களை மத்திய, மாநில அரசுத் துறைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இத்துறை சார்ந்த சம்மேளனங்கள் மற்றும் பல்வேறு உயர்நிலைக் குழுக்களும் இதை வலியுறுத்தி வந்துள்ளன.

 அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளில்கூட இந்த நியதியை பன்னெடுங்காலமாகப் பின்பற்றி வருகின்றன. இந்த உண்மை பல முறை பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இதுவரை இதைச் செவி சாய்க்காத மத்திய அரசு, நல்லவேளையாக, இப்போது இத்திசையில் செயல்படத் தொடங்கியுள்ளது.

 மத்திய அரசுத்துறை அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதலில், குறைந்தபட்சம் 20 சதவிகிதப் பொருள்களை, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கொள்கை முடிவை மத்திய அமைச்சரவை நவம்பர் மாதம் முதல் தேதி மேற்கொண்டுள்ளது.

 இந்த 20 சதவிகித வரம்பில் 4 சதவிகிதக் கொள்முதல் எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த தொழில் முனைவோரிடமிருந்து செய்ய வேண்டும். பாதுகாப்புத் துறை தொடர்புடைய ஆயுதங்கள், தளவாடங்கள் இந்த 20 சதவிகித வரம்பில் வராது.

 இப்போதுள்ள நிலையில், இந்தக் கொள்முதல் கொள்கை அந்தந்தத் துறைகளும் பொதுத்துறை நிறுவனங்களும் தாமாகவே முன்வந்து செயல்படுத்த வேண்டும் என்கிறது மத்திய அரசு. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்படி கட்டாயமாக்கப்படும்.

 புதிய கொள்கையின்படி, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களிடமிருந்து பொதுத்துறை நிறுவனங்கள் ரூ. 35 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். இதில் ரூ. 7,000 கோடி மதிப்பு வர்த்தகம் எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோருக்குச் சேர வேண்டும் என்ற கூடுதல் தகவலை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் வீரபத்ர சிங் கூறியுள்ளார்.

 இது தவிர, ஏற்கெனவே உள்ள விதிமுறைப்படி 358 பொருள்கள் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களிடமிருந்து மட்டுமே தொடர்ந்து கொள்முதல் செய்யப்படும் என்பதையும் மத்திய அரசு மீண்டும் உறுதி செய்துள்ளது.

 இந்தத் திட்டத்தை முறையாகக் கண்காணிப்பதற்கு வசதியாக, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சகத்தின் செயலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

 இந்தக் ""கொள்முதல் கொள்கை'' தொடர்பான ""குறை தீர்ப்பு மையமும்'' அமைக்கப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 காலம் கடந்தாவது, மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. எனினும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்படி கட்டாயமாக்கப்படும் வரை, இத்திட்டம் சீரிய முறையில், முனைப்புடனும், இதய சுத்தியுடனும் செயல்படுத்தப்பட வேண்டும். இதை உறுதி செய்வதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்தகால அனுபவங்கள் சற்று வினோதமானவை என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

 50 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1959-ம் ஆண்டிலேயே சிறுதொழில்களுக்கு மாநில அரசு கொள்முதலில் விலைச்சலுகை வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த அரசாணையால் பெரிய அளவில் சிறுதொழில் நிறுவனங்கள் பயன் பெறவில்லை. இதை டான்ஸ்டியாவின் தலைவர்கள் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளனர். சிறுதொழில் சங்கங்களின் பல போராட்டங்களுக்குப் பிறகு, அதாவது 1977 முதல் 1990-களின் தொடக்க காலம் வரையிலான காலகட்டத்தில் சிறுதொழில் நிறுவனங்களின் குறைகள் பரிவுடன் பரிசீலிக்கப்பட்டு, அவ்வப்போது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசின் அணுகுமுறையின் விளைவாக சிறுதொழில் நிறுவனங்கள் பயன் அடைந்தன.

 இந்த காலகட்டத்தில், மாநில அரசுத் துறைகள் சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்து கணிசமான அளவில் கொள்முதல் செய்தன.

 அது தவிர, 400-க்கும் அதிகமான பொருள்கள் தமிழ்நாட்டு சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டன.

 வங்கிகளும் 1969-ல் அரசுடைமையாக்கப்பட்டன. அதன்பிறகு சிறு தொழில்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்பட்டது.

 மீண்டும் 1992-ம் ஆண்டுமுதல் உலகமயமாக்கல், தனியார் மயம், தாராளமயமாக்கல் கொள்கைகள் அறிமுகம் ஆயின. சிறுதொழில் நிறுவனங்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் வங்கிகளுக்கு இருந்த ஆர்வம் சிறிது, சிறிதாகக் குறையத் தொடங்கியது.

 ஆக, 1990-களின் தொடக்கம் முதல், இரவும், பகலும் மாறி, மாறி வருவதுபோல், சிறு தொழில்களுக்கு, சில நேரங்களில் அரசு சலுகைகள் கிடைக்கும்; சில நேரங்களில் அந்தச் சலுகைத்திட்டங்களை அமல்படுத்துவதில் அக்கறை குறையும்.

 சில துறைகளில், கிடைக்க வேண்டிய கொள்முதல் ஆணைகள் கிடைக்காமல் இருந்தன. வேறு சில துறைகளில் விலைச்சலுகைகள் வழங்கப்படவில்லை. இதற்கு நீதி தேடி சிறுதொழில் நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயின.

 இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலாக மாநில அரசு சிறுதொழிலுக்குக் கணிசமான அளவு சலுகைகள் வழங்கத் தொடங்கின. அதேபோல், இந்தியாவில் அதிகபட்சமாக சிறுதொழில் நிறுவனங்கள் நலிவடைந்ததும் தமிழகத்தில்தான் என்றால் நம்ப முடிகிறதா? தமிழ்நாட்டில், சிறுதொழில் நிறுவனங்கள், ஐந்தில் ஒன்று என்ற கணக்கில் இழுத்து மூடப்பட்டது.

 இது ஒருபுறம் இருக்க, சீனாவின் மலிவுப்பொருள்கள் இந்தியச் சந்தையில் குவிக்கப்படுகின்றன. பார்வையில் பொலிவு, விலையில் மலிவு என்கிற வகையில் சீனத்துப் பொருள்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன. இதைச் செம்மையாக எதிர்கொள்ள வேண்டுமெனில், சிறு மற்றும் குறுந்தொழில்களின் உற்பத்திப் பொருள்கள் தரத்தில் உயர்வாகவும், விலையில் குறைவாகவும் இருந்தே ஆக வேண்டும். அப்போதுதான், உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, சீனா போன்ற நாடுகளின் கடும் போட்டியைச் சமாளிக்க இயலும்.

 இதற்கு முக்கியத் தேவை, தொழில்திறன் மற்றும் தொழிலாளர்தம் செயல்திறன் மேம்பட வேண்டும். மத்திய அரசின் தேசியத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில், பயிற்சி வழங்கும் முகாம்களில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள், அதிகபட்சமான தொழிலாளர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி வழங்க வேண்டும்.

 தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஐ.டி.ஐ. மாணவர்களின் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதனால், சிறு, குறுந்தொழில்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் மோட்டார் வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வழங்குகின்றன.

 இப்போது ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சியின் பயனாக, இந்த நிறுவனங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆர்டர்கள் கிடைக்கின்றன. ஆனால், போதிய பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இல்லாததால், குறிப்பிட்ட நேரத்தில் உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்குவதற்கு சில நிறுவனங்களால் இயலாமல் போய்விடுகிறது.

 பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் பயிலரங்குகள் அதிகரித்துவிட்டன. இதனால் ஐ.டி.ஐ. பயிற்சி கூடங்களால் பொருத்தமான மாணவர்களை ஈர்ப்பதற்கு ஏதுவாக, அவர்களுக்குச் சலுகைகளும் ஊக்குவிப்புகளும் வழங்க வேண்டும். இதற்கு மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

 வணிக நிறுவனங்களுக்கு, நிதி ஆதாரம் என்பது ரத்த நாளம் போன்றது. சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு போதிய கடனுதவி இல்லாமல், அவை படும்பாடு எல்லோரும் அறிந்ததே. இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய கடன் தொகையைவிட ரூ. 50,000 கோடி அளவு குறைவாகவே கிடைக்கிறது என்பது பல்வேறு ஆய்வறிக்கைகளின் கூற்று. இந்த உண்மையை அரசுக்கும், பாரத ரிசர்வ் வங்கிக்கும், நிபுணர் குழுக்களும் டான்ஸ்டியாவின் தலைவர்களும் அவ்வப்போது எடுத்துரைத்துள்ளனர்.

 தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்போது, அவற்றின் செயல் மூலதனத் தேவையும் அதிகரிக்கத்தான் செய்யும். இந்தக் கூடுதல் நிதித்தேவையில் 25 சதவிகிதம் நிறுவனத்தினர் திரட்டியாக வேண்டும். மீதமுள்ள 75 சதவிகிதத் தொகையை வங்கிக் கடனாக வழங்க வேண்டும் என்பது நியதி.

 இந்த வழிமுறைக்கு மாறாக, ஏறக்குறைய 60 சதவிகிதத் தொகை மட்டுமே பெரும்பாலான வங்கிகள் கடனாக வழங்குகின்றன. அதுவும் உரிய நேரத்தில் வழங்குவதில்லை. காலம் தாழ்ந்துதான் வழங்கப்படுகிறது.

 கூடுதல் தேவையான 40 சதவிகித மூலதனத்தை தொழில்கூடங்கள் சொந்தப் பொறுப்பில் திரட்ட வேண்டி வருகிறது. இந்தச் சுமையும், காலதாமதமும் அவர்களது கழுத்தை நெரிக்கின்றன. இதனால் வளரும் நிறுவனங்கள்கூட திணறி விடுகின்றன.

 ஆக, சிறு, குறுந்தொழில்களுக்கு உரிய அளவில், உரிய நேரத்தில் கடன் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது.

 நாட்டின் உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய மூன்று முக்கிய தளங்களிலும் அரிய பங்காற்றிவரும் சிறு, குறுந்தொழில்கள் எத்தனை, எத்தனை சோதனைகளுக்கு ஆளாகின்றன என எண்ணிப் பார்த்தால் சோகமே மிஞ்சுகிறது.

 நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக உள்ள சிறு, குறுந்தொழில்களுக்கு, மத்திய அரசின் அண்மைய கொள்முதல் கொள்கை முடிவு ஒரு திருப்புமுனையாக அமையும் என நம்புவோம்.

 அதேநேரத்தில் புதிய அரசாணை அடுத்த மூன்று ஆண்டுகளில் சட்டவடிவம் பெறும்வரை, இதில் தொடர்புடைய மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கூடுதல் முனைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் புதிய அரசாணையை அமல்படுத்த வேண்டும். அதன் மூலம், நலிந்துவரும் சிறு குறுந்தொழில்களை கைதூக்கிவிட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.