கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. ஒழுங்குக்கு உள்பட்ட பள்ளி வாழ்க்கை, தேர்வு, வீட்டுப் பாடங்களில் இருந்து குழந்தைகள் தாற்காலிக விடுதலை பெறுகிறார்கள். ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் குழந்தைகள் புதியவர்களாகிறார்கள். கொஞ்சம் கறுத்துப் போகிறார்கள். உயரம் கூடிவிடுகிறார்கள்.
உற்சாகம் கொப்பளிக்கும் குழந்தைகளின் கோடை விடுமுறையை எப்படிச் செலவிடுவது என்ற கவலை பெற்றோர்க்கும், குழந்தைகளுக்கும் உண்டு. கோடை வகுப்புகளில் சேர்தல், சைக்கிள், இரு சக்கர வாகனம் பழகுதல், தையல் தொடங்கி கணினி வரையான பயிற்சி வகுப்புகளில் சேருதல், சுற்றுலா செல்லுதல், உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல் வரை ஏராளமான திட்டங்கள் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும்.
குழந்தைகளின் தீர்மானங்களைவிட, வழக்கம்போல் பெரியவர்களே தீர்மானிப்பார்கள். இருபதாண்டுகளுக்கு முந்தைய பெற்றோர்களுக்கு, குழந்தைகளை நோய்நொடி இன்றி வளர்த்துவிட்டாலே போதுமென்றிருந்தது. கொஞ்சம் படிக்க வைத்துவிட்டால் பிழைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.
இன்றைக்குள்ள பெற்றோர்களின் பதற்றமும் பரிதவிப்பும் வேறு. தங்களுடைய பொருளாதார நிலையைத் தாண்டி, குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க நினைக்கிறார்கள்.
தங்களுக்குக் கிடைக்காத அத்தனையும் தங்கள் குழந்தைகளுக்குக் கிடைத்துவிட வேண்டும் என்ற பேராவல், குழந்தைகளின் மேல் எல்லாவற்றையும் திணிக்கச் செய்கிறது.
தம் குழந்தைக்குத் தெரியாமல் உலகத்தில் ஒன்றும் இருக்கக் கூடாது என்ற அர்த்தமற்ற வேகம், நடுத்தர வர்க்கப் பெற்றோரின் நோயாய் இருக்கிறது. விளைவு, குழந்தைகள் ஆசை ஆசையாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் விடுமுறை நாள்களை இவர்கள் இன்னொரு பள்ளிக்கூட நாள்களாக்கிவிடத் திட்டமிடுகிறார்கள்.
அவரவர் வாழ்கின்ற பகுதியில் என்னென்ன வகுப்புகள் நடைபெறுகின்றனவோ, அத்தனையிலும் குழந்தைகளைச் சேர்க்க விரும்புகிறார்கள். திருவிழாக் காலங்களில் திடீரென முளைக்கும் விதவிதமான கடைகளைப்போல், கோடையில் குழந்தைகளைக் கட்டிப்போட எத்தனையோ வகுப்புகள், சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் தொடங்கப்படுகின்றன.
ஆர்வமுள்ள குழந்தைகள், தங்களுக்குப் பிடித்த வகுப்புகளுக்குச் சென்று திறமையை வளர்த்துக் கொள்வது தவறில்லை. எல்லாம் தெரிந்து கொண்டால், எதிர்காலத்துக்குப் பயன்படும் என்று குழந்தையின் விருப்பம், திறமை பற்றிய புரிதலற்று, எல்லா வகுப்புகளுக்கும் குழந்தைகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
போட்டியான உலகத்தில் குழந்தை எப்படியும் பிழைத்துக்கொள்ள வேண்டும் என்ற பெற்றோரின் தவிப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால், தன் குழந்தையின் தனித்திறமை என்ன, ஆர்வம் என்ன, குழந்தை விரும்புகிறதா, இல்லையா என்பதை பெற்றோர்கள் சிந்திக்கிறார்களா? நாம் விரும்புகிறோம் என்பதற்காகவே குழந்தைகள் கட்டாயம் செய்யவேண்டும் என்பது மிகப்பெரிய வன்முறை அல்லவா?
பிறந்து வளரத் தொடங்குகிற குழந்தை அம்மா, அப்பா என்று உச்சரிக்கத் தொடங்கும்பொழுதே, பல பெற்றோர்கள் கேட்கிற கேள்வி, நீ என்னவாகப் போகிறாய்? இரண்டு, மூன்று வயதுக் குழந்தை இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லும்? வாயைப் பெரிதாகத் திறந்து சிரிப்பொன்றை உதிர்க்கும். உடனே நாம் பதில் கூறுவோம், டாக்டராகத்தானே, எஞ்சினியராகத்தானே, கலெக்டராகத்தானே?
சிறுவயதில் லட்சிய தாகத்தை விதைப்பது அவசியமே. ஆனால், குழந்தை வளர்ந்து, பரந்து விரிந்த இவ்வுலகைப் புரிந்து, தன் வாழ்வைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கும்பொழுது, குழந்தையல்லவா தீர்மானிக்க வேண்டும், தான் என்னவாக வேண்டும் என்று. குழந்தைகளின் மேல் நம்பிக்கை வைப்பது நம்மால் இயலாத ஒன்று. காரணம், குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள் நாம்.
நாம் வரித்துக்கொண்ட லட்சியத்துக்காக, குழந்தைகளை ஓடச் செய்து, நாமும் உடன் ஓடி, வாழ்நாள் முழுவதும் நாம் விரும்பிய வாழ்வைக் குழந்தைகளை வாழச் செய்யக் கூடாது. நம் குழந்தை என்னவாக மாறப் போகிறது என்பதை குழந்தையே தீர்மானிக்கட்டும். தன் விருப்பத்துக்கும், ஆற்றலுக்கும் ஏற்ற வாழ்வைக் குழந்தை தேர்வு செய்யட்டும். தேர்வு செய்வதற்கான தெளிவையும், துணிவையும் கொடுக்கும் களமாகப் பெற்றோர்கள் இருப்போம்.
நடக்கத் தொடங்கும் குழந்தையைத் தனித்துவிட்டு, அது சுவரைப் பிடித்தோ, தனித்தோ, தட்டுத் தடுமாறி விழுந்து எழுந்து நடப்பதைத் தள்ளியிருந்து பார்ப்பதைப்போல், வளர்ந்த குழந்தையை நம் தோளில் இருந்து இறக்கிவிடுவோம். பெற்றோர்களில் 90 சதவிகிதம் பேரின் குடும்ப வாழ்வு, வேலை எல்லாமே அவர்களின் பெற்றோர் தீர்மானித்ததே; "என்ன செய்வது? காலத்தை ஓட்ட வேண்டியதுதான்' என கடமைக்கு வாழ்ந்துகொண்டிருப்பவர்களே. கடமைக்கு வாழாமல், அரிய இந்த மானுட வாழ்வை விரும்பி வாழச் செய்வோம். இயந்திரங்களின் வழி அவர்களுக்குக் கிடைக்கும் அறிவுக்குச் சமமாகவோ, கூடுதலாகவோ, உறவுகளுடனான வாழ்வியல் அனுபவத்தை உண்டாக்குவது மிக அவசியம். கோடை விடுமுறை, அசலான வாழ்வை அறியச் செய்வதற்கான பொற்காலம்.
இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு, தாத்தாவின் பெயரைக் கடந்து, அடுத்த தலைமுறை தெரிவதில்லை. இருக்கின்ற தாத்தா பாட்டிகளின், குடும்பத்தின் மூத்தவர்களின் உதவியுடன், தங்களுடைய குடும்ப வரலாறை அறிந்துகொள்ளச் செய்யலாம். அவரவர் தலைமுறையில், முக்கிய ஆளுமைகளோ சிறப்பான அறிவுத்திறன் கொண்டவர்களோ இருந்திருக்கக்கூடும். அவர்களைப் பற்றிய விவரங்களைக் குழந்தைகளை விட்டுக் கண்டறியச் செய்யலாம்.
நாட்டின் வரலாறு எழுதுவதற்கு மிகப்பெரிய வரலாற்றாசிரியர்கள் தேவைப்படலாம். அவரவர் குடும்பத்தின் வரலாற்றை எழுதுவதற்கு, அக்குடும்பத்தின் இளைய தலைமுறையினரைவிடத் தகுதியானவர் வேறு யார் இருக்க முடியும்? குழந்தைகள் தாத்தா பாட்டிகளின் கதையுலகத்துக்குள் செல்வதுடன் கதைகளின் வழியே வரலாற்றையும் அறிய முடியும். தொலைக்காட்சி, திரைப்பட முகங்கள் தகர்ந்து, குழந்தைகளின் கனவில் நிஜ கதாநாயகர்கள் வலம் வரலாம்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குல தெய்வம் நிச்சயம் இருக்கும். எல்லா வேண்டுதல்களும், குல தெய்வத்துக்கே என்றாலும், பெரியவர்கள் பலருக்கே அக்குல தெய்வத்தின் வரலாறு தெரியாது. விடுமுறையில் குழந்தைகளைக் குலதெய்வக் கோயில்களுக்கு அழைத்துச் செல்லலாம். குல தெய்வத்தின் வரலாற்றைக் கேட்டறியச் செய்வதன் மூலம், ஓர் ஊரின், ஒரு காலத்தின், ஒரு குடும்பத்தின் வரலாற்றைக் குழந்தைகள் அறிந்துகொள்ளும்.
கடவுளின் வழி சமூக வரலாற்றை அறிந்துகொள்ள சிறு தெய்வங்களைப் பற்றிச் சொல்வதுதான் எளிய, சிறந்தவழி. இன்றைய குழந்தைகளுக்கு அறிமுகமான உறவினர்கள் மிகக் குறைவே. அம்மா}அப்பாவைக் கடந்து, தாத்தா}பாட்டியைத் தெரியும். வேறெந்த நெருக்கமான உறவுகளையும் குழந்தைகள் அறிய முடிவதில்லை.
காரணம், நம்முடைய இடம்பெயர்ந்த வாழ்க்கை முறையே. கோடை விடுமுறையில் உறவினர்களுடன் பழக விடும்போது குழந்தையின் தனிமை நீங்கும்; மாறுபட்ட வாழ்க்கை அனுபவத்தையும் உள்வாங்கும்.
குழந்தைகள் இன்றைக்கு மிகப்பெரிய தனிமையில் உள்ளார்கள். மிகக் குறிப்பாக நகரத்துக் குழந்தைகள், அடுக்ககங்களில் வாழும் குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்தால் மனம் பதற்றப்படும்; கவலை அதிகரிக்கும்.
கிரிக்கெட் மட்டையை வைத்துக்கொண்டு ஒரு குழந்தை, பந்தை சுவரில் அடிக்கும், சுவர் பந்தைத் திருப்பும். குழந்தை பந்தை எதிர்கொள்ளும். இப்படியாக குழந்தையும் சுவரும் பந்து விளையாடும் காட்சியைப் பலரும் காண நேர்ந்திருக்கலாம். எவ்வளவு பெரிய துக்கம் இக்காட்சி.
மனசின் தனிமை கரைந்தோட குழந்தைகளை உறவினர்களுடன் பழக விடலாம். (இதனால் உண்டாகும் உள்ளூர் பிரச்னைகள் தனி) குழந்தை இயற்கையின் ஓர் அங்கம். குழந்தை வளர வளர இயற்கையிலிருந்து அன்னியப்படுத்தப்படுகிறது.
கிராமத்தில் உள்ள அநேகக் குழந்தைகளுக்குக்கூட இயற்கை வாழ்வின் முழுமையான அனுபவம் கிடைப்பதில்லை. நகரத்துக் குழந்தைகளைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இயற்கையுடனான அவர்களுடைய தொடர்பு மிகக்குறைவு. சூரிய உதயத்தையும் நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவையும், மின்விசிறிக்கு வெளியேயும்
காற்று தரும் மரங்களையும், குழந்தைகள் உணரச் செய்யலாம்.
வீட்டுக் குளியலறையில் ஒரு வாளி தண்ணீரில் குளித்து, குடிக்கும் குழந்தைகளை, வாய்க்காலிலும் ஆற்றிலும், கிணற்றிலும் குளிக்கப் பழகலாம். (தண்ணீர் இருந்தால்) செல்லமாய் மீன்கள் கால்களைக் கொறிக்கும் சிலுசிலுப்பான அனுபவத்தைச் சொல்லலாம்.
உப்பும் உறைப்புமான ஒரு வாழ்க்கை நமக்கிருக்கிறது என்ற வேரை குழந்தைகளுக்குக் காட்ட வேண்டும். வாழ்க்கை நகரங்களை நோக்கி நம்மை விரட்டியடித்திருந்தாலும், நம்மின் வேர்கள், ஏதோ ஒரு மரத்தின் கீழ் நீர்க் கசிவைப் போல் ஈரமாயிருப்பதை நம் குழந்தைகள் உணர வேண்டும்.
பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்கின்ற இக்காலத்தில் இவையெல்லாம் சாத்தியமா என்ற கேள்வி எழலாம். நம் விருப்பங்களுக்காகத்தான் குழந்தைகள் என்ற எண்ணத்தை, குழந்தைகளுக்காகத்தான் நாம் என்பதன் உண்மையான பொருளை உணர்ந்தால் நிச்சயம் முடியும்.
குழந்தைகள் அவரவர் அறிவுத்திறமை, வாய்ப்புகளுக்கேற்ப எதிர்காலத்தில் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால், ஒவ்வொரு குழந்தைக்கும் சிறப்பான வாழ்வை வாழத்தெரிந்திருக்க வேண்டும். அதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். குழந்தைகளுக்குத் தேர்வு செய்யக் கற்றுக்கொடுங்கள்.
கற்றலும், கற்றுத்தருதலும் மன உளைச்சல் மிக்க செயலாக மாறியுள்ளமை நம் சமூகத்தின் நிகழ்காலத் துயரம். சுய தேர்வுடன் வரும் குழந்தைகள் நிறைந்த வகுப்பறை மன உளைச்சல்களற்ற வகுப்பறை. வகுப்பறைகள் குழந்தைகளைத் தேர்வுக்குத் தயார் செய்தது போதும். வரும் காலங்களில் வாழ்வைத் தேர்வு செய்யக் கற்றுக் கொடுக்கட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
11-வது முறையாக காட்பாடியில் போட்டியிடும் துரைமுருகன் இன்று வேட்புமனு தாக்கல்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை!
சம்பளமல்ல, நல்ல கதாபாத்திரங்களுக்காகவே காத்திருக்கிறேன்: மிருணாள் தாக்குர்

நாட்டின் பாதுகாப்பைச் சமரசம் செய்யும் காங்கிரஸ்: பிரதமர் மோடி!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

